Published:Updated:

இந்திய கால்பந்து அணியில் 5 தமிழக வீராங்கனைகள்; 23 பேர் கொண்ட அணியில் 22% தமிழ்ப்பெண்களே!

Tamil Nadu Women dominates Indian Footbal
News
Tamil Nadu Women dominates Indian Footbal

வேலை கிடைக்குமா, எதிர்காலம் இருக்குமா என்று யோசிக்காமல் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருக்கிறார்கள் தமிழக கால்பந்து வீராங்கனைகள். விளையாட்டு அமைப்புகளும், அரசும் இவர்களின் திறமையை சரியாக, சமயத்துக்கு கௌரவித்தால் வருடத்துக்கு 2-3 வீராங்கனைகள் கூட இந்தியாவுக்கு அறிமுகம் ஆவார்கள்.

AFC பெண்கள் ஆசிய கோப்பைக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் 5 தமிழக வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணித் தேர்வுக்காக நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்த இந்துமதி, சந்தியா, சௌமியா, கார்த்திகா, மாரியம்மாள் என ஐந்து வீராங்கனைகளும் இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறார்கள்.

2022 AFC ஆசிய கோப்பை தொடர் இந்தியாவில் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. மும்பை ஃபுட்பால் அரீனா, நவி மும்பை டி.ஒய் பாடீல் ஸ்டேடியம், புனே சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் என மும்பையைச் சுற்றியுள்ள 3 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி, சீனா, சீன தைபே, இரான் அணிகளோடு A பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில்தான், தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை கால்பந்து என்பது வடகிழக்கு பகுதியோடு சுருங்கிபோய்விட்டது. அதிலும் குறிப்பாக பெண்கள் கால்பந்தில் மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், 23 வீராங்கனைகள் கொண்ட அணிக்கு தமிழகம் 5 பேரைக் கொடுத்துள்ளது. அதாவது 22 சதவிகிதம். அதிகபட்சமாக மணிப்பூர் வீராங்கனைகள் 7 பேர் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக இருப்பது தமிழ்நாடு தான். ஒடிசா, ஹரியானா என காலம் காலமாக இந்திய அணிக்கு வீராங்கனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் மாநிலங்களை விட இப்போது தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த வீராங்கனைகளும்கூட சாதாரணமானவர்கள் அல்ல. இந்துமதி கதிரேசன் - இந்திய அணியை சில போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியிருக்கிறார். நடுகளத்தின் மிகமுக்கிய அங்கமாக விளங்குகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சீனியர் நேஷனல்ஸ் தொடரில் டாப் கோல் ஸ்கோரர் என்ற பட்டத்தோடு சூட்டோடு சூடாக அணியில் இணைந்திருக்கிறார் சந்தியா. இந்திய அணிக்காக விளையாடியிருக்கும் 10 போட்டிகளில் 8 கோல்கள் அடித்திருக்கிறது இந்த கோல் மெஷின். சௌமியாவும், கார்த்திகாவும் சமீபத்தில் நடந்த அனைத்து தேசிய கேம்ப்களிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். அணியோடு தொடர்ந்து பயணித்து வருகிறார்கள். மாரியம்மாள் - இன்னும் சில ஆண்டுகளில் 'இந்தியாவின் மார்தா' என்று ஊடகங்கள் எழுதும். இந்திய கால்பந்தின் மிகப்பெரிய நம்பிக்கை அவர். இந்த வீராங்கனைகள் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக பெண்கள் கால்பந்து பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 2018-ல் சீனியர் நேஷனல்ஸ், ஜூனியர் நேஷனல்ஸ் தொடர்களை அடுத்தடுத்து வென்று அசத்திய நிலையில், தேசிய அணிக்காக ஒவ்வொரு வருடமும் குறைந்து ஒரு வீராங்கனையாவது அனுப்பிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. ஆண்கள் கால்பந்து அட்ரஸே இல்லாமல் இருக்கும்போது, தமிழ்நாடு கால்பந்து சங்கம் எதற்கென்றே தெரியாமல் இருக்கும்போது, பெண்கள் கால்பந்து மட்டும் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு வென்ற கோப்பைகளுக்கான மரியாதையையே கடந்த மாதம்தான் கொடுத்தது தமிழ்நாடு அரசு. ஆனால், இவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் நின்றுவிடவில்லை. வேலை கிடைக்குமா, எதிர்காலம் இருக்குமா என்று யோசிக்கவில்லை. தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருக்கிறார்கள். விளையாட்டு அமைப்புகளும், அரசும் இவர்களின் திறமையை சரியாக, சமயத்துக்கு கௌரவித்தால் வருடத்துக்கு இரண்டு மூன்று வீராங்கனைகள் கூட இந்தியாவுக்கு அறிமுகம் ஆவார்கள். மணிப்பூரின் ஆதிக்கத்தை அடக்கி, இந்திய கால்பந்தின் சூப்பர் பவராகவும் உருவெடுப்பார்கள்!