சிறுதானியங்களின் பலன்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை இணைந்து சிறுதானிய உணவுத் திருவிழாவை ஜனவரி 28, 29 -ல் ஆவடிக்கு அருகே உள்ள திருவேற்காடு சிவன் கோவில் மைதானத்தில் நடத்தியது.

ஜனவரி 28, சனிக்கிழமை அன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்வில் பங்கேற்று அமைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது, ``சிறுதானியங்கள் மூலம் வரையப்பட்ட உலகின் மிகப்பெரிய சிறுதானிய லட்சினை மற்றும் நாளொரு சிறுதானிய உணவு என 365 வகையான சிறுதானிய உணவுகள் சமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இரு உலக சாதனைகள் இங்கு செய்யப்பட்டதன் மூலம் திருவேற்காடு பகுதி புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் ஆலயத்தோடு சேர்த்து இந்த உலக சாதனை சிறப்புகளையும் பெறுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
குதிரைவாலி கிச்சடி, கம்பு கட்லட், வரகு மல்லி பொங்கல், கேழ்வரகு கேக் போன்ற சிறுதானிய உணவுகள் எல்லாம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருக் கிறது. சிறுதானியங்களால் இந்தப் பொருள்களை நாம் இன்று புதிதாகக் கேள்விப்படுகிறோம் என்றால் அதற்கு இந்த சிறுதானிய திருவிழா பெரியளவில் காரணமாக இருக்கிறது.

ஒரு முறை உபயோகித்த எண்ணெயை மறுமுறை உபயோகிப்பதால் பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெயை பெரிய ஹோட்டல்களிலிருந்து பறிமுதல் செய்து அதை மறுசுழற்சி மூலம் பயோடீசலாக உற்பத்தி செய்யும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் முதலில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதேபோல் சற்றே குறைப்போம் என்ற திட்டமும் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் முதலில் தொடங்கப்பட்டது. சற்றே குறைப்போம் என்பது உணவில் சற்று உப்பின் அளவு, சர்க்கரையின் அளவு, எண்ணெயின் அளவைக் குறைப்போம் என்ற விழிப்புணர்வு மற்றும் முகாம்கள் ஆகும்.

திருவள்ளூரில் தொடங்கிய முகாம்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 6,672 சற்றே குறைப்போம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் வீணாகும் உணவுப் பொருள்களை பசித்தவர்களுக்கு கொண்டு போய் சேர்ப்போம் என்ற திட்டத்தைத் தொடங்கினோம். பெரிய பெரிய திருமண நிகழ்வுகளில் மீதமாகும் உணவுகளை சேகரித்து தன்னார்வலர்களைக் கொண்டு அந்த உணவுகளை பசித்தவர்களுக்கு விநியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் பான் பராக், போதைப் பொருள்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. 2013-ம் ஆண்டில் இருந்து பான் பராக் போன்ற போதைப்பொருள்களை இளைஞர்கள் உட்கொள்வதால் புற்றுநோய் போன்ற பெருநோய்கள் வருகிறது. இதிலிருந்து இளைஞர்களைக் காக்கும் நோக்கோடு 2013-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் போதைப்பொருள்களுக்கு அரசின் தடை நீட்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், உயர் நீதிமன்றம் அந்தத் தடைக்கு விலக்கு தந்திருக்கிறார்கள்.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு முதலமைச்சர் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மிக விரைவில் அந்த மேல்முறையீட்டு மனு தொடரப்பட இருக்கிறது. பான்பராக் போன்றவை உணவுப்பொருள் பட்டியலில் இருக்கிறது என்று தடை நீக்கப்பட்டிருக்கிறது என்றாலும், உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உணவு பாதுகாப்புத்துறை என்று ஒன்று இருப்பது மக்கள் பிரதிநிதிகள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் கூட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை உணவு பாதுகாப்புத்துறை என்ற ஒரு துறை இருப்பதே தெரியாது. ஆனால், உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் பல்வேறு சாதனைகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன.
குதிரைவாலி, வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்கள் சாதாரணமான தட்பவெப்ப நிலைகளில் வளருவதில்லை. எல்லா இடங்களிலும் அவை விளைவதில்லை. கேழ்வரகு, கம்பு, சோளம் போன்றவை எல்லா இடங்களிலும் விளையும். ஆனால், குதிரைவாலி, வரகு, சாமை, தினை போன்றவையெல்லாம், தரைக்கு மேலே 400 அடிக்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில்தான் விளைகின்றன.
சிறுதானியங்களைப் பெருமளவில் விளைவிப்பவர்கள் மலைவாழ் மக்களாகத்தான் இருக்கிறார்கள். ரசாயன உரங்கள் எதுவும் இன்றி இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மட்டுமே மலைமக்களால் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. சிறுதானியங்களை உட்கொள்வதன்மூலம் நாம் திடகாத்திரமான உடல் நலனைப் பெறுகிறோம். மற்றொருபுறம் ஏழ்மை நிலையில் மலைகளில் வாழும் மக்கள் மிகப்பெரிய வாழ்க்கையை வாழாமல் சிறுதானியங்களை விளைவித்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து நாம் அதிக அளவில் சிறுதானியங்களை கொள்முதல் செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். சிறுதானியங்கள் உட்கொள்வதால் நமது உடல் நோயற்ற உடலாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. சிறுதானியங்களை முறையாக மக்கள் பயன்படுத்திட வேண்டும். இந்த தி.மு.க ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிலும்கூட சிறுதானிய பயிரிடுதலை ஊக்கப்டுத்துவோம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது" என்றார்.