Published:Updated:

நம்ம ஹீரோ எலானோவுக்குப் பெரிய விசிலை அடிங்க!

நம்ம ஹீரோ எலானோவுக்குப் பெரிய விசிலை அடிங்க!
நம்ம ஹீரோ எலானோவுக்குப் பெரிய விசிலை அடிங்க!

‌தமிழகக் கால்பந்து ரசிகர்களின் சமீபத்திய ஹீரோ பிரேசில் வீரர் எலானோ புளூமெர். சென்னையின் கால்பந்து அணிக்காக, மூன்று மாதம் விளையாட 10 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு லீக்கில் டாப் கோல் ஸ்கோரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர். 'நான்தான் சென்னை அணியின் மேட்ச் வின்னர்' என்று உரக்க சொல்லியிருகிறார் எலானோ. பெரிதும் எதிர்பார்க்கபட்ட டேல் பிரோ (del piero), டிரஸ்குட் (trezgut), அங்கிலா (ankela) எல்லாம் விளையாட்டில் சொதப்பி ரசிகர்களை ஏமாற்ற, எந்தவித முன் அறிமுகமும் இன்றி, களம் இறங்கி இதுவரை 7 கோல்கள அடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் எலானோ.

கோவா உடனான முதல் போட்டியில் சுமார் 25 அடி தூரத்தில் இருந்து ஃபிரி கிக்கில் கோல் அடித்த போதுதான், ஒட்டு மொத்த ரசிகர்களும் யாருடா இவன்? என்று எலானோவை லைம் லைட்டுக்குள் தள்ளினார்கள். ஏனெனில், டேவிட் பெக்காம், ரோபர்டோ கார்லஸ் போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இதுவரை அடித்துப் பார்த்த, பனானா (banana) கிக்கை துல்லியமாக அடித்து அசத்தியிருந்தார். அதன்பின் ஃபிரி கிக் வாய்ப்பு வரும்போதேல்லாம் அதைக் கோலாக்கினார் எலானோ. இப்பொது சென்னைக்கு எதிரான போட்டி என்றாலே எதிர் அணியினர் எலானோவை எப்படிக் கட்டுபடுத்துவது என்றுதான் முதலில் வியூகங்கள் அமைக்கிறார்களாம்.

நம்ம ஹீரோ எலானோவுக்குப் பெரிய விசிலை அடிங்க!

அனைவரும் மாஸ் என்று நினைக்கும் எலானோவின் வாழ்க்கை, கொஞ்சம் சோகம் நிறைந்தது. கால்பந்து உலகில் நட்சத்திரமாகத் தேவைப்படும் எல்லாத் தகுதிகள் இருந்தும், எலானோவால் அந்த உயரத்துக்குச் செல்ல முடியவில்லை. இருந்தும் இதுவரை அவர் செய்த சாதனைகள், எந்தச் சாதனைகளுக்கும் சளைத்தது இல்லை. சென்னையின் நட்சத்திர வீரராக இருப்பது போல் பல அணிகளுக்கு நட்சத்திர வீரராக இருந்துள்ளார் எலானோ. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அணிகள் சான்டோஸ் மற்றும் பிரேசில்.

பிலே தொடங்கி நெய்மார் வரை பிரேசிலின் பெரிய ஜாம்பவான்கள் அத்தனை பேரும் தங்கள் கால்பந்து கரியரை இந்த அணியில் இருந்துதான் ஆரம்பித்தார்கள். எலானோவையும் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தது சான்டோஸ் அணிதான். மூன்று வருடம் சான்டோஸ் அணிக்காக விளையாடி 34 கோல்கள் அடித்தார் எலானோ. அவரது இந்த ஆட்டத்தைக் கண்டு உக்ரைன் நாட்டு கிளப் ஒன்று, அவரை ஒப்பந்தம் செய்தது. அங்கும் அவர் நட்சத்திர வீரராக வலம் வர 2006ஆம் ஆண்டு நார்வேவுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். பிரேசிலைப் பொறுத்தவரை உள்ளூர் கிளப் அணிகளுக்காக விளையாடினால் மட்டுமே பிரேசிலின் தேசிய அணிக்காக விளையாட தேர்வு செய்வார்கள்.

அதைத் தகர்த்து வெளிநாட்டு கிளப்புக்காக விளையாடி பிரேசிலின் தேசிய அணியில் இடம் பிடித்த முதல் வீரரும் எலானோதான். அதன்பின் உலகின் தலைச்சிறந்த கிளப்களில் ஒன்றான இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் சிட்டி அணிக்காக நான்கு வருட காலத்துக்கு ஒப்பந்தம் செய்யபட்டார். எலானோ 2007- 2008 சீசனில் விளையாடிய ஆட்டத்தை எந்த மான்செஸ்டர் சிட்டி ரசிகர்களாலும் மறக்க முடியாது. சீசன் ஆரம்பத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் மேனேஜர் செவன் எரிக்சன், 'இனிமேல்தான் நீங்கள் எலானோவின் சுய ரூபத்தைப் பார்க்க போகிறீர்கள்' என்று செம லீடுகள் கொடுக்க ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே ரசிகர்களும் அப்படி என்ன விளையாடி அசத்த போகிறார் என ஆவலானார்கள். அதற்கேற்ப அந்தச் சீசனில் எலானோ விளையாடியது பேய் ஆட்டம்.

எலானோ எப்போதும் மத்திய களத்தில் விளையாடியே பழக்கபட்டவர். அந்தச் சீசனில் மட்டும் தற்காப்பு, தாக்குதல் என எல்லாப் பகுதிகளிலும் வெளுத்து கட்டினார். அவர் என்ன களத்தில் ஆடுபோகிறார் என்பது போட்டி ஆரம்பிக்கும் வரை எலானோவுக்கும், சக வீரர்களுக்கும் தெரியாது. கடைசி நேரத்தில் எரிக்சன் என்ன திட்டம் வைத்தியிருக்கிறாரோ, அந்த இடத்தில் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லுவார். அந்த அளவுக்கு மேனேஜர்களின் செல்ல பிள்ளையாக வலம் வந்தார்.

மான்செஸ்டர் அணியில் விளையாடிய போது எலானோ தனக்கு வழங்கிய ஒரே ஒரு பெனால்டி வாய்ப்பைக் கூடத் தவறவிட்டது இல்லை. இதுவரை, பிரேசிலுக்காக விளையாடிய 50 போட்டிகளில் எலானோ ஒன்பது கோல்கள் அடித்துள்ளார். 2010 உலகக் கோப்பை அணியின் மத்திய கள ஆட்டகாராகக் களமிறங்கிய எலானோ, கொரியாவுக்கும், ஐவரி கோஸ்ட் அணிகளுக்கும் எதிராக நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிகான கோல் அடித்து அசத்தினார். அப்போது, பிரேசில் ரசிகர்கள் 'இந்த உலகக் கோப்பையின் நாயகன் எலானோதான். அவர்தான் பிரேசில் கோப்பை கைப்பற்ற வைப்பார்' என்று பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐவரி கோஸ்ட்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் கோல் அடித்த கையோடு எதிர் அணி வீரர் மீது முட்டி கீழே விழுந்தார்.

அதுதான், எலானோ வாழ்க்கையில் பிரேசிலுக்காக ஆடிய கடைசி உலகக் கோப்பை போட்டியாக அமைந்தது. அந்தக் காயத்தில் இருந்து எலானோவால் உலகக் கோப்பை முடியும் வரை மீண்டு வர முடியவில்லை. அதன் பிறகு பிரேசிலுக்காகவும், மற்ற கிளப்களுக்காகவும் ஆடிய போட்டிகளில் பெரிதாகச் சோபிக்கவில்லை. எலானோவுக்கு, அலெக்சான்ட்ரா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தையும் உள்ளார்கள். 2011ஆம் ஆண்டில் மனைவியுடன் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவரைப் பிரிந்து சில மாதம் நீவியா ஸ்டெல்மென் (Nivea Stelmann) என்னும் பிரேசில் நடிகையுடன் சுற்றினார். பின்பு, தமிழ் சினிமாக்களில் வருவது போல் தன் மனைவியை மறக்க முடியவில்லை என்று அவருடனே சேர்ந்தார்.

அதன் பிறகு இந்தியா பயணம். ''ஐ.எஸ்.எல். லீக் உங்களுக்கு எப்படி இவ்வளவு ராசியாச்சு?'' என்று கேட்டால். ''மைதானத்தில் சென்னை ரசிகர்கள் கொடுக்கும் கரகோஷம்தான் என்னை மேலும் மேலும் சிறப்பாக விளையாட துண்டுகிறது. இனி எல்லா ஐ.எஸ்.எல். சீசனிலும் விளையாட முடிவெடுத்துள்ளேன்" என்கிறார்.

எலானோவின் ஒட்டு மொத்த வாழ்கையில் அவருக்குப் பெரிய பாராட்டையும் சந்தோஷத்தையும் தந்தது அநேகமாகச் சென்னை ரசிகர்களாகதான் இருக்கும். அதற்குச் சான்று எலானோ பெயர் பதித்த ஜெர்ஸியை போட்டுகொண்டும், மைதானத்தில் குவியும் ரசிகர்களும், எலானோ போட்டோ பக்கத்தில் நின்று கல்லூரி பெண்கள் எடுக்கும் செல்பியே. எலானோவோ, தோனியோ இந்தியாவில் கிரிக்கெட், பூட்பால், சினிமா என எந்தப் போட்டி வந்தாலும் ஹீரோ நம்ம சென்னைதான்.

- கு.அஸ்வின்