Published:Updated:

மெஸ்ஸி, ரமோஸ் ஒரே அணியில்... மான்செஸ்ட்டர் யுனைடெட்டில் ரொனால்டோ - அணி மாறியவர்கள் யார், யார்?

Messi & Ronaldo | மெஸ்ஸி

2021-22 கால்பந்து சீசன் தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளைவிட இந்த முறை ஒவ்வொரு தொடரும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. காரணம், இந்த சீசனில் நடந்திருக்கும் டிரான்ஸ்ஃபர்கள்.

மெஸ்ஸி, ரமோஸ் ஒரே அணியில்... மான்செஸ்ட்டர் யுனைடெட்டில் ரொனால்டோ - அணி மாறியவர்கள் யார், யார்?

2021-22 கால்பந்து சீசன் தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளைவிட இந்த முறை ஒவ்வொரு தொடரும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. காரணம், இந்த சீசனில் நடந்திருக்கும் டிரான்ஸ்ஃபர்கள்.

Published:Updated:
Messi & Ronaldo | மெஸ்ஸி
மெஸ்ஸி, ரொனால்டோ, ரமோஸ், லுகாகு என மிகப்பெரிய தலைகள் வேறு அணிக்கு ஒப்பந்தமாகியிருக்கின்றனர். நேற்று அதிகாலை டெட்லைன் முடியும்வரை டிரான்ஸ்ஃபர் விண்டோ பரபரப்பாகவே இருந்தது. இந்த ஆண்டு எந்தெந்த வீரர்கள் எங்கு போயிருக்கிறார்கள், எந்த டிரான்ஸ்ஃபர்கள் பெரிதாகப் பேசப்படுகின்றன?

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றால் அது நிச்சயம் மெஸ்ஸியின் டிரான்ஸ்ஃபர் தான். தன் வாழ்நாளில் பார்சிலோனா ஜெர்ஸியைத் தவிர வேறு எதையும் அணியாதவர், வேறு வழியின்று பார்காவுக்கு குட்பை சொல்ல நேர்ந்தது. கண்ணீர் மல்க விடைகொடுத்திருந்திருந்தாலும் ஓரிரு நாள்களிலேயே பாரிஸ் விமான நிலையத்தில் புன்னகைத்தார் இந்த அர்ஜென்டீன ஜாம்பவான். சீனியர் அரங்கில் 17 சீசன்கள் பார்சிலோனாவுக்கு ஆடிய மெஸ்ஸி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக இந்த சீசன் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

PSG அணி மெஸ்ஸியை மட்டும் இந்த சீசனில் வாங்கிவிடவில்லை. இத்தனை காலம் மெஸ்ஸியோடு ஒண்டிக்கு ஒண்டி நின்று சண்டை செய்துகொண்டிருந்த ரியல் மாட்ரிக் கேப்டன் செர்ஜியோ ரமோஸையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த அணி. அதுமட்டுமல்லாமல், நெதர்லாந்து தேசிய அணியை யூரோ 2020 தொடரில் வழிநடத்திய ஜார்ஜினியோ வைனால்டம், அந்த யூரோ தொடரின் சிறந்த வீரர் விருது வென்ற கியான்லூயி டொன்னரும்மா என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதில் கொடுமை என்னவெனில், இவர்கள் அனைவருமே free transfer மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள். பத்து பைசா செலவில்லாமல் பல சூப்பர் ஸ்டார் வீரர்களை இம்போர்ட் செய்திருக்கிறது PSG. விங்பேக் அஷ்ரஃப் ஹகிமி மட்டுமே 60 மில்லியன் யூரோ கொடுத்து அந்த அணியால் வாங்கப்பட்டார்.

மெஸ்ஸிக்கு அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் டிரான்ஸ்ஃபர். யுவன்டஸ் அணியிலிருந்து ரொனால்டோ வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டதும் அவர் எங்கு செல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அவருக்கு ஊதியம் கொடுக்குமளவுக்கான அணிகள் PSG, மான்செஸ்டர் சிட்டிதான். அதனால், ரொனால்டோ PSG அணிக்குச் செல்வாரா; மெஸ்ஸி, ரொனால்டோ ஒரே அணிக்கு ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்பெல்லாம் இருந்தது. ரொனால்டோ மான்செஸ்டர் சிட்டி அணிக்குச் செல்லப்போவதாக உடனே தகவல்கள் பரவின. கடைசியில் மிகப்பெரிய ட்விஸ்டாகி மீண்டும் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார் CR7. 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த அணியோடு இணைந்திருக்கிறார்.

ரொனால்டோ மட்டுமல்லாது, இளம் வீரர் ஜேடன் சான்சோவை 85 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியது மான்செஸ்டர் யுனைடட். மேலும், ரொனால்டோவின் பழைய ரியல் மாட்ரிட் டீம் மேட்டான டிஃபண்டர் ரஃபேல் வரேனையும் அந்த அணி வாங்கி பலமான ஒரு அணியாக உருவெடுத்திருக்கிறது.

இந்த 2021-22 சீசனின் காஸ்ட்லியான டிரான்ஸ்ஃபர் என்றால், ஜேக் கிரீலிஷை மான்செஸ்டர் சிட்டி வாங்கியதுதான். ஆஸ்டன் விலா அணியின் கேப்டனாக கலக்கிக்கொண்டிருந்த கிரீலிஷை, சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து வாங்கியிருக்கிறது சிட்டி. அதைவிட 2.5 மில்லியன் பவுண்டு குறைவாக செலவிட்டு, லுகாகுவை வாங்கியிருக்கிறது செல்சீ. அவரை மீண்டும் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய 97.5 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டிருக்கிறது செல்சீ நிர்வாகம்.

Jack Grealish
Jack Grealish
AP

மெஸ்ஸியை இனாமாகத் தாரைவார்த்துக் கொடுத்த பார்சிலோனா, சில வீரர்களை செலவே செய்யாமல் ஒப்பந்தம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நெதர்லாந்து ஸ்டார் ஸ்டிரைக்கர் மெம்ஃபிஸ் டீபே ஒருவழியாக அணியில் இணைந்துவிட்டார். அதேபோல் மான்செஸ்டர் சிட்டியின் லெஜண்டரி ஸ்டிரைக்கர் அகுவேரோ, இளம் டிஃபண்டர் எரிக் கார்சியோ ஆகியோரும் free transfer முறையிலேயே பார்சிலோனாவுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

அந்த அணியின் முக்கிய வைரியான ரியல் மாட்ரிட், பேயர் மூனிச் அணியிலிருந்து டேவிட் அலாபாவை ஒப்பந்தம் செய்திருக்கிறது. மிகச் சிறந்த இளம் வீரராகக் கருதப்படும் எடுவார்டோ கமவிங்காவை 35 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறார்கள். அவருக்கு வயது 18 தான். அத்லெடிகோ மாட்ரிட் அணியோ யாரும் எதிர்பாராத வகையில் ஆன்டுவான் கிரீஸ்மேனை கடைசி நாளில் லோனில் வாங்கியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பார்சிலோனாவுக்குச் சென்ற கிரீஸ்மேன், மீண்டும் தன் பழைய அணிக்கே திரும்பியிருக்கிறார்.

Antoine Griezmann
Antoine Griezmann
AP

புண்டஸ்லிகாவில், வழக்கம்போல் ஜெர்மனியின் சிறந்த வீரர்களை வளைத்துப் போடும் வேலையை இந்த சீசனும் செவ்வனச் செய்தது பேயர்ன் மூனிச். RB லெய்ப்சிக் அணியின் இளம் பயிற்சியாளர் ஜூலியன் நகில்ஸ்மேனை போன சீசனின்போதே ஒப்பந்தம் செய்தவர்கள், இப்போது அந்த அணியின் 2 வீரர்களையும் வாங்கியிருக்கிறார்கள். டிஃபண்டர் டயோட் உபமகானோ மற்றும் மிட்ஃபீல்டர் மார்சல் சபிட்ஸர் ஆகியோர் பேயர்ன் மூனிச் அணியில் இணைந்துள்ளனர்.

இத்தாலியில்தான் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியான டிரான்ஸ்ஃபர்கள் எதுவும் நடக்கவில்லை. இத்தாலி அணிக்காக யூரோவில் கலக்கிய மானுவல் லொகடெல்லியை லோனில் வாங்கியிருக்கிறது யுவன்டஸ். அதேபோல், ஜோஸே மொரினியோ பயிற்சியாளரான பின் சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறது ரோமா அணி. அதில் முக்கியமானது 34 மில்லியன் பவுண்டுகளுக்கு ஸ்டிரைக்கர் டேமி ஆபிரஹாமை வாங்கியது.

Tammy Abraham
Tammy Abraham
AP

இதெல்லாம் வெற்றிகரமாக நடந்த டிரான்ஸ்ஃபர்கள். ஒருசில அணிகள் சில பெரிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனை 100 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலாகவும் கொடுத்து வாங்க முயற்சித்தது மான்செஸ்டர் சிட்டி. ஆனால், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி, அதற்கு இசைந்து கொடுக்கவில்லை. அதேபோல், கால்பந்தின் அடுத்த மெஸ்ஸி & ரொனால்டோ என்று கருதப்படும் கிலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட் ஆகியோரின் டிரான்ஸ்ஃபர்களும் நடக்கவில்லை. எம்பாப்பேவை வாங்க 220 மில்லியன் யூரோ என்ற நினைத்துப் பார்க்க முடியாத தொகை கொடுக்க ரெடியாக இருந்தது ரியல் மாட்ரிட். PSG மறுத்துவிட்டது. ஹாலண்ட் கிடைக்காததால் மீண்டும் லுகாகுவை வாங்கியது செல்சீ.

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ முடிந்துவிட்டாலும், ஜனவரியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.