மான்செஸ்டர் யுனைடட் அணியின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்துக்குச் சென்று, அவர்கள் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறும் மிக அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர் 4 இளம் இந்திய கால்பந்து வீரர்கள். United We Play என்ற மான்செஸ்டர் யுனைடட் அணியின் கிராஸ்ரூட் திட்டத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அந்த நால்வரில் சென்னையைச் சேர்ந்த பிரியரஞ்சனும் ஒருவர்.
இந்தியாவில் கால்பந்துக்கும் கிரிக்கெட்டுக்குமான இடைவெளி மலையளவு இருக்கிறது. உலக அரங்கில் பேசப்படும் திறமைகள் இன்னும் இந்தியாவில் வரவில்லை. சொல்லப்போனால், ஆசிய அளவிலேயே பல போட்டிகளில் இந்தியா தடுமாறவே செய்கிறது. எண்பதுகளுக்கு முன்பு பல திறமையான வீரர்கள் இருந்திருந்தாலும், அதன்பிறகு அப்படியே கால்பந்து காணாமல் போனது. அதன்பிறகு பாய்ச்சூங் பூடியா, ஐ.எம்.விஜயன், ராமன் விஜயன், சுனில் சேத்ரி என சிலரே நட்சத்திரங்களாக ஜொலித்தனர். இந்தியாவில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் வராமல் போனதற்கு முக்கியக் காரணம் சிறப்பான 'கிராஸ்ரூட்' திட்டங்கள் இல்லாதது. இந்திய கால்பந்தில் கிராஸ்ரூட் அளவில் ஒரு மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து அணியும், அப்போலோ டயர்ஸ் நிறுவனமும்.
அப்போலோ டயர்ஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஒருங்கிணைந்து அகில இந்திய அளவில் மேற்கொள்ளும் ஒரு செயல்திட்டம் - United We Play. இந்தியாவின் திறமையான இளம் கால்பந்து வீரர்களைக் கண்டறியும் நோக்கில் நடத்தப்படும் இத்திட்டம் இரண்டாவது சீசனாக இந்தியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மான்செஸ்டர் யுனைடட் ஜாம்பவான் டிமடர் பெர்படோவ் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
19 இடங்களில் முதற்கட்ட 'விர்சுவல்' வொர்க் ஷாப்கள் நடத்தப்பட்டன. அதன்பிறகு 12 இடங்களில் மாஸ்டர்கிளாஸ் வகுப்புகள் நடத்தப்பட்டன. கடைசியாக இரண்டு கட்டமாக, 8 இடங்களில் மைதானங்களில் வொர்க் ஷாப்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 5000 சிறுவர்கள் இதில் கலந்துகொண்டனர். United We Play திட்டத்தின் ஒரு பகுதியாக, மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து பள்ளிகளின் பயிற்சியாளர்கள் மூலம் இந்திய கால்பந்து பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் மூலம் முதல் கட்ட தேர்வு நடந்தது. இரண்டாம் கட்டத் தேர்வு மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து பள்ளிகளின் பயிற்சியாளர்கள் தலைமையிலேயே நடக்க, அதிலிருந்து 4 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். மான்செஸ்டர் யுனைடட் அணியின் ஜாம்பவான்கள் 7 பேருக்கு மத்தியில் இந்தத் தேர்வு நடந்தது.
வெற்றியாளர்கள்: ஆர்.எஸ்.பிரியரஞ்சன் - சென்னையைச் சேர்ந்த 16 வயதான பிரியரஞ்சன், 8 வயதிலிருந்து கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார். இவர் ரைட் பேக் பொசிஷனில் விளையாடக்கூடியவர். இவர் தவிர்த்து மேகாலயாவின் ஃபெடரிக் குர்பா, சண்டிகரின் ரொனால்ட் சிங், புனேவின் குனால் யோலீ ஆகியோரும் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சிறுவர்கள் நால்வரும் மான்செஸ்டர் யுனைடட் அணியின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து பள்ளிகளின் பயிற்சியாளர்களிடம் நேரடி பயிற்சி பெறுவார்கள். போட்டி அனுபவம், பயிற்சி போன்றவற்றை அறிந்துகொள்வதோடு, மான்செஸ்டர் யுனைடட் ஜாம்பவான்கள் பலரோடு உரையாடும் அரிய வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த நிகழ்வில் இந்திய வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மான்செஸ்டர் யுனைடட் அணியின் ஜாம்பவான்கள் பீட்டர் ஸ்மெய்கல், நெமாஞா விடிச், மைக்கேல் சில்வஸ்டர், லூயிஸ் சாஹா, குவின்டன் ஃபார்ச்சூன், வெஸ் பிரவுன், ரானி ஜான்சன் ஆகியோர் இந்த வீரர்களைப் பாராட்டினர். இரண்டாம் கட்டத் தேர்வில் இவர்களும் முக்கிய அங்கம் வகித்தனர்.