Published:Updated:

``கடந்தமுறை இரண்டாமிடம்; இந்த முறை சாம்பியன்” - அசத்திய பெங்களூரு எஃப்.சி

``கடந்தமுறை இரண்டாமிடம்; இந்த முறை சாம்பியன்” - அசத்திய பெங்களூரு எஃப்.சி
``கடந்தமுறை இரண்டாமிடம்; இந்த முறை சாம்பியன்” - அசத்திய பெங்களூரு எஃப்.சி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாகப் பெங்களூரு அணி சாம்பியனாகியுள்ளது. ஐ.எஸ்.எல் தொடரின் ஐந்தாவது சீசன், நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூரு - கோவா அணிகள் மோதின. எக்ஸ்ட்ரா டைம் வரை சென்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


கடந்த சீசனில், அறிமுகமாகி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டி வரை முன்னேறிய பெங்களூரு அணி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தொடர்ச்சியாக, இந்த சீசனிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய கோவா, இரண்டாவது முறையாக இந்த சீசனிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வந்தனர். 90 நிமிடங்கள் முடியும் வரை, இரு அணிகளும் கோல் அடிக்காததால், கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராகுல் பெக்கே கோல் அடித்தார். போட்டியின் இறுதி வரை, கோவா அணியில் கோல் அடிக்க முடியவில்லை.


போட்டி முடிவில், 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி சாம்பியனானது. இதுகுறித்து பேசிய பெங்களூரு அணி கேப்டன் சுனில் செத்ரி, ``கடந்த ஆண்டு ஃபைனலில் தோற்றோம். இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால், சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என ஆசைப்பட்டோம். இப்போது அது உண்மையானது. நாங்கள் திரும்ப வந்துவிட்டோம்” என்றார்.


இந்த சீசனில், அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில், கோவா அணி வீரர் ஃபெரான் கொரோமினாஸ் (16) முதல் இடம் பிடித்து ’கோல்டன் பூட்’ விருதைப் பெற்றார். பெங்களூரு அணி கோல்கீப்பர் குரு ப்ரீத் சந்துவுக்கு ‘கோல்டன் க்ளவ்’ விருது வழங்கப்பட்டது.