Published:Updated:

'கால் பதிக்கும் இடமெல்லாம் நான் ராஜா!' - `சாம்பியன்ஸ் லீக் கிங்’ ரொனால்டோவின் மிரட்டல் கம்பேக்

இங்கிலாந்தின் தங்க அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார், மாட்ரிட் சாம்ராஜ்ஜியத்தை ஐரோப்பாவின் தன்னிகரற்ற சக்தியாக மாற்றினார். இப்போது, பழமை வாய்ந்த இத்தாலிய மகுடத்தை தன் கைகளில் ஏந்தியிருக்கிறார். இதன்மூலம் அவர் சொல்வது ஒரு விஷயம்தான். அவர் கால் பதிக்கும் இடத்திலெல்லாம் அவரே ராஜா!

'கால் பதிக்கும் இடமெல்லாம் நான் ராஜா!' - `சாம்பியன்ஸ் லீக் கிங்’ ரொனால்டோவின் மிரட்டல் கம்பேக்
'கால் பதிக்கும் இடமெல்லாம் நான் ராஜா!' - `சாம்பியன்ஸ் லீக் கிங்’ ரொனால்டோவின் மிரட்டல் கம்பேக்

அலையன்ஸ் மைதானம் முழுதும் ஆரவாரம் அடங்கவில்லை. சுமார் 40,000 ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் கண்களில் அதிர்ச்சி, சிலர் கண்களில் ஆச்சர்யம், சிலர் கண்களில் கண்ணீர். கண்கள் வேறு வேறு பாஷைகள் பேசினாலும், அவர்கள் உதடுகள் முணுமுணுத்தது ஒரே பெயரைத்தான் டுரின் நகரை மையம் கொண்டிருந்த அந்தப் பெயரை, உலகெங்கும் அள்ளிக்கொண்டுபோனது மத்திய தரைக் கடலில் கிளம்பிய ஈரக்காற்று. கால்பந்தின் சொர்க்கபூமி பிரேசில் முதல் இந்தியாவின் மூலை முடுக்குவரை, கோடிக்கணக்கணக்கானவர்களின் வாட்சப், ஃபேஸ்புக் ஸ்டேடஸாக மாறியது அந்தப் பெயர். கிறிஸ்டியானோ ரொனால்டோ... கால்பந்துக் களத்தை இன்னும் ஆட்சிபுரிந்துகொண்டேதான் இருக்கிறது இந்தப் பெயர்!

'அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கு எதிராக மூன்று கோல் வித்யாசத்தில் ஜெயிப்பதெல்லாம் நடக்காத காரியம்...' -  வல்லுநர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோரும் அதைத்தான் நினைத்தார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதில் தவறேதும் இல்லை. ஐரோப்பாவின் மாபெரும் அரணை உடைப்பது எளிதில்லை. அதிலும் 90 நிமிடங்களில் 3 முறை என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது ஒன்று. அதுவும் கடைசி 5 போட்டிகளில் (463 நிமிடங்கள்) ஒரு கோல் கூட வாங்காமல் அசுர பலத்தோடு இருக்கும்போது, யுவன்டஸ் கம்பேக் கொடுப்பதற்கெல்லாம் ஏது வாய்ப்பு? யுவன்டஸ் ரசிகர்களே நம்பிக்கை இல்லாமல்தான் மைதானத்துக்குள் நுழைந்திருப்பார்கள். 

முதல் சுற்றில் 2 கோல்கள் வாங்கியபோது கிறிஸ்டியானோ ரொனால்டோ சரியாக விளையாடவில்லை. ஆட்டம் முடிந்து விரக்தியில் வெளியேறினார். பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, போட்டியின் முடிவைத் தீர்மானித்துவிட்டார் அந்த ஜாம்பவான். வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தபோதே ரசிகர்களை உரக்கக் கத்தச் சொல்லி உற்சாகப்படுத்தினார். தனக்குள் இருந்த மொத்த எனர்ஜியையும் ரசிகர்களுக்குக் கடத்தினார். ஆட்டம் தொடங்கிய முதல் நொடியிலிருந்து அத்லெடிகோவை உளவியல் நெருக்கடிக்கு உட்படுத்தினார்கள் யுவன்டஸ் ரசிகர்கள். தங்கள் வீரர்களின் கால்களில் பந்து சுழன்றபோது வெறித்தனமாக கத்திக்கொண்டிருந்தார்கள். மாட்ரிட் பின்வாங்க, பின்வாங்க, கோல் போஸ்ட் நோக்கி படிப்படியாக முன்னேறியது யுவன்டஸ். ரொனால்டோவின் கைகள், காற்றில் மேலெழும்பி ரசிகர்களை இன்னும் உந்திக்கொண்டே இருந்தது. 

ரொனால்டோ ரசிகர்களை உற்சாகப்படுத்த, அவர்கள் தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்த, பந்து யுவன்டஸ் வீரர்களிடமே வசப்பட்டிருந்தது. அத்லெடிகோவின் பெனால்டி ஏரியாவிலேயே வட்டமிட்டது. இரண்டு விங்கில் இருந்தும் கிராஸ்கள் பறந்துகொண்டே இருந்தன. ஆனால், ஒவ்வொன்றும் அத்லெடிகோ மாட்ரிட் வீரர்களால் வெளியேற்றப்பட்டன. டிஃபன்சில் சுவராக நிற்கும் டியேகோ கோடின், ஒவ்வொரு கிராசையும் தன் ஹெடரால் கிளியர் செய்துகொண்டிருந்தார். கோடின் - கிமினஸ் கூட்டணியைத்தாண்டி எந்தப் பந்தும் செல்ல முடியவில்லை. ஒருமுறை அவர்களைக் கடந்து கோல் போஸ்டுக்குள் விழுந்த கோலை, 'ஃபவுல்' எனச் சொல்லி நிராகரித்தார் நடுவர். ஆனால், யுவன்டஸ் மனம் தளரவில்லை. 

ஜாம்பவான்களின் திறமை, நடுகளத்தில் இருந்து பந்தைக் கடத்திவந்து அனைவரையும் ஏமாற்றி கோலாக்குவதில் மட்டும் இல்லை. ஒரு பந்து எங்கு வருகிறது என்பதைச் சரியாகக் கணித்து, எதிரணி வீரர்களுக்கு முன் அங்கு நிற்பதிலும் இருக்கிறது. சுமார் 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெனால்டி பாக்சுக்குள், ஒரு கிராஸ் எந்த புள்ளிக்கு வரும், என்ன உயரத்தில் வரும் என்று எல்லோராலும் கணித்திட முடியாது. அப்படி முடிந்தால், எல்லோருமே நூற்றுக்கணக்கில் கோல் அடித்துவிடுவார்கள். உலகத்தரம் வாய்ந்த ஒருசில வீரர்களால் மட்டுமே அதைத் துல்லியமாகக் கணித்திட முடியும். கிறிஸ்டியானோ ரொனால்டோ, அதில் டிஸ்டிங்ஷன் வாங்கியவர். 

20 மீட்டர் தொலைவில் அந்த கிராஸ் அடிக்கப்படும்போதே, அது எந்த போஸ்டுக்கு அருகில் வரும், எந்த உயரத்தில் வரும் என்பதை அவரது கண்கள் கணக்கிட்டுவிடும். அதற்கேற்ப மின்னல் வேகம் எடுக்கும் கால்கள், பந்து சரியான இடத்துக்கு வரும்போது, புவியூர்ப்பு சக்தியை ஏமாற்றி, சில நொடிகள் அவரைக் காற்றில் பறக்கச் செய்யும். கேல்சியம் ஃபாஸ்பேட்டோடு கொஞ்சம் இரும்பும் சேர்த்து செய்யப்பட்ட எலும்புகள் கொண்ட அந்தத் தலை புல்லட் வேகத்தில் பந்தை கோலுக்குள் செலுத்தும். இந்த இடைப்பட்ட வேளையில் அவரது மூவ்மென்ட்களைப் பார்த்து, கணித்து, அவரைத் தடுத்த ஒருசில டிஃபண்டர்கள், ஜாம்பவான் லிஸ்டில் இருப்பவர்கள் மட்டுமே! 

ரொனால்டோவின் அந்த ஜீனியஸ் மூவ்மென்ட்களால், இரண்டு முறை ஏமாந்தது அத்லெடிகோ மாட்ரிட். 27-வது நிமிடம், இடது விங்கில் இருந்து இரண்டாவது போஸ்டுக்கு பெர்னார்டேஷி போட்ட கிராஸை, புயலாகப் பாய்ந்து, யுவான்ஃப்ரானைத் தாண்டிக் குதித்து ஹெடர் செய்து கோலாக்கினார் சி.ஆர்-7. முதலில், பெர்னார்டேஷி பந்தை வாங்கியபோது, ரொனால்டோ 18 யார்டு பாக்சுக்கும் வெளியேதான் இருந்தார். அந்த இத்தாலிய வீரர் இடது விங்கை நோக்கி நகர்ந்தபோதே, கிராஸை எதிர்பார்த்து பெனால்டி ஏரியாவுக்குள் ஓடினார் ரொனால்டோ. கிராஸ் போஸ்டை நோக்கி வந்தபோது, ரொனால்டோ பின்னால் வருவதை யுவான்ஃப்ரான் அறிந்திருக்கவில்லை. அவர் பந்தை கிளியர் செய்ய நினைத்து ஓட, அடுத்த இரண்டு நொடிகளில், அவர் எதிர்பாராதது நடந்துவிட்டது. 

இரண்டாவது கோல், அதைவிட அதி அற்புதம். வலது விங்கில் இருந்து ஜோ கேன்சலோ போட்ட கிராஸ், பெனால்டி ஏரியாவுக்குள் நுழைந்தது. டியேகோ கோடின், ஜோஸே கிமினஸ் இருவருக்கும் இடையே வருகிறது. இருவரும் குதிக்கிறார்கள். கோடின் தலைக்குமேல் செல்கிறது பந்து. இருவருக்கும் நடுவில் பாய்ந்து, மீண்டும் ஹெடர் செய்கிறார் ரொனால்டோ. பந்தை அட்டகாசமாக டைவ் அடித்துத் தடுக்கிறார் கோல்கீப்பர் ஓப்லாக். ஆனால், அதற்கு முன்பாகவே பந்து கோல் எல்லையைத் தாண்டிவிட்டது. அது சாதாரண ஹெடர் இல்லையே. துப்பாக்கியிலிருந்து கிளம்பிய தோட்டாவாகத்தானே கோல் போஸ்டுக்குள் நுழைந்தது. அதை எப்படித் தடுப்பது?! யுவன்டஸ் 2, அத்லெடிகோ 0. யுத்தம் சமநிலைக்கு வந்தது. 

அதன்பிறகும் யுவன்டஸ் ஆதிக்கம் அடங்கவில்லை. 86-வது நிமிடம் ஆட்டம் மொத்தமாக முடிவுக்கு வந்தது. இதுபோன்ற பெரிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள், ரொனால்டோவின் பெனால்டி இல்லாமலும் முடிவுக்கு வந்ததில்லை. 2014 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை, இதே அத்லெடிகோவுக்கு எதிராக பெனால்டியோடு முடித்துவைத்தார். 2016 ஃபைனலின் டை பிரேக்கரும், இவரது பெனால்டியோடுதான் முடிந்தது. இப்போதும் அத்லெடிகோ மாட்ரிட்டை தன் பெனால்டியால் வீழ்த்தினார் ரொனால்டோ. முதல் இரண்டு கோல்களையும் சாதாரணமாகக் கொண்டாடியவர், இப்போது தன் டிரேட் மார்க் ஸ்டைலில் காற்றில் பறந்து கொண்டாடினார். அலையன்ஸ் மைதானம் சிலிர்த்தது. 

ஆனால், இந்த வெற்றி 100 சதவிகிதம் ரொனால்டோவால் மட்டும் சாத்தியப்பட்ட வெற்றியல்ல. விளையாடிய மற்ற 12 வீரர்களுமே சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தனர். அதிலும் குறிப்பாக யுவன்டஸ் அணியின் நடுகளம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. அத்லெடிகோ வீரர்களிடம் பந்து போகாமல் பார்த்துக்கொண்டதுதான் இந்த வெற்றியின் மிகப்பெரிய காரணம். அந்த வேலையை எம்ரே சேன், ப்யானிக், மடூய்டி மிகச் சிறப்பாகச் செய்தனர். எதிரணி வீரர்களை 'Press' செய்துகொண்டே இருந்தனர். பாஸ்கள் துல்லியமாக இருந்தன. டிஃபண்டர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடியதற்கு, அத்லெடிகோவுக்கு ஒரு கார்னர்கூட கொடுக்காமல் இருந்ததற்கு நடுகளத்தின் பங்களிப்பு முக்கியமானது. 

அதேபோல் ஃபுல்பேக் வீரர்கள். டிஃபன்ஸ், அட்டாக் என இரண்டிலும் கச்சிதமாக செயல்பட்டனர் ஸ்பின்னசோலா, கான்சலோ இருவரும். அவர்களோடு பெர்னார்டேஷியும் சேர்ந்து கிராஸ் மழை பொழிந்தனர். மொத்தம் 38 கிராஸ்கள்! அதிலும் குறிப்பாக பெர்னார்டேஷியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. முதல் கோலுக்கு அசிஸ்ட் செய்தவர், மூன்றாவது கோலுக்கான பெனால்டியை வென்றுதந்தார். அதற்கு இடைப்பட்ட வேளையிலும், தன் டிரிபிள்களாலும், கிராஸ்களாலும் தொடர்ந்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார். 

90 நிமிடங்களின் முடிவில், யாரும் எதிர்பாராததை நிகழ்த்திக்காட்டியது யுவன்டஸ். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றின் மிகச் சிறந்த கம்பேக் ஒன்றை அரங்கேற்றினார் கிறிஸ்டியானோ. ஒரு 34 வயது வீரருக்கு 100 மில்லியன் யூரோக்கள் கொடுத்தது முட்டாள்தனமான முடிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகையின் ஒவ்வொரு யூரோவுக்குமான பதிலை ரொனால்டோ கொடுத்துக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் தங்க அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார், மாட்ரிட் சாம்ராஜ்ஜியத்தை ஐரோப்பாவின் தன்னிகரற்ற சக்தியாக மாற்றினார். இப்போது, பழமை வாய்ந்த இத்தாலிய மகுடத்தை தன் கைகளில் ஏந்தியிருக்கிறார். இதன்மூலம் அவர் சொல்வது ஒரு விஷயம்தான்... `கால் பதிக்கும் இடத்திலெல்லாம் நானே ராஜா!’