Published:Updated:

17 தமிழக வீரர்கள், 5 ஸ்பானிஷ் வீரர்கள், 1 பயிற்சியாளர்... சென்னை சிட்டி சாம்பியன் ஆன கதை!

3-வது நிமிடத்திலேயே கோலடித்தது பஞ்சாப். முதல் பாதியின் முடிவில் பின்தங்கியே இருக்கிறது. ஆனால், யாரும் சோர்ந்துவிடவில்லை. கொஞ்சம் கூட மனம் தளரவில்லை. கடைசி 35 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து சாம்பியன் ஆனது சென்னை சிட்டி!

17 தமிழக வீரர்கள், 5 ஸ்பானிஷ் வீரர்கள், 1 பயிற்சியாளர்... சென்னை சிட்டி சாம்பியன் ஆன கதை!
17 தமிழக வீரர்கள், 5 ஸ்பானிஷ் வீரர்கள், 1 பயிற்சியாளர்... சென்னை சிட்டி சாம்பியன் ஆன கதை!

இந்தியாவின் முதன்மையான கால்பந்து தொடரான ஐ-லீக் கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்திருக்கிறது சென்னை சிட்டி எஃப்.சி! கடந்த சீசன்வரை புள்ளிப்பட்டியலில் இரண்டாம் பாதியில் போராடிக்கொண்டிருந்த அந்த அணி, இந்த சீசனின் முதல் வாரத்திலிருந்தே டாப் ஸ்பாட்டில் அமர்ந்து பட்டையைக் கிளப்பியது. யாரும் எதிர்பார்க்காத ஓர் அணி, இந்தக் கோப்பையை வெல்ல காரணம் என்ன, ஒரு பயிற்சியாளர், 5 ஸ்பானிஷ் வீரர்கள்! 

இந்த சீசன், சென்னையைப் போல் வேறு எந்த அணிக்கும் மோசமாகத் தொடங்கியிருக்காது. கோவையில் நடந்த சீசனின் முதல் போட்டியில், இரண்டாவது நிமிடத்திலேயே கோலடித்து சென்னை சிட்டிக்கு பேரதிர்ச்சி கொடுத்தது இந்தியன் ஏரோஸ். ஆனால், இந்தத் தொடருக்குத் தேவையான நம்பிக்கையையும் எனர்ஜியையும் அந்தப் போட்டியிலேயே பெற்றது சென்னை சிட்டி. 4-1 என இந்தியன் ஏரோஸ் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் அமர்ந்தவர்கள், மோகன் பாகன் அணியுடன் டிரா, ஈஸ்ட் பெங்காலுக்கு எதிராக வெற்றி என மிரட்டினார்கள். 

சில போட்டிகளில் கொஞ்சம் சொதப்பி வெற்றியைத் தவறவிட்டிருந்தாலும், தங்களின் தாகத்தை அவர்கள் குறைத்துக்கொள்ளவில்லை. சீசனின் கடைசிப் போட்டி. வெற்றி பெற்றால் கோப்பை என்ற நெருக்கடியான நிலை. இப்போதும் பேரதிர்ச்சி. 3-வது நிமிடத்திலேயே கோலடித்தது பஞ்சாப். முதல் பாதியின் முடிவில் பின்தங்கியே இருக்கிறது. ஆனால், யாரும் சோர்ந்துவிடவில்லை. கொஞ்சம் கூட மனம் தளரவில்லை. கடைசி 35 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து சாம்பியன் ஆனது சென்னை சிட்டி!

இந்த சரித்திர வெற்றிக்கு முதல் காரணம், அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்ற அக்பர் நவாஸ். சிங்கப்பூரைச் சேர்ந்த நவாஸை, பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தபோது, யாரும் இப்படியான மாற்றத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அணி வீரர்களில், அவர்கள் பொசிஷன்களில், ஆட்ட அணுகுமுறையில், சென்னை அணியின் ஆட்டிட்யூடில்... அனைத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். ஐ-லீக் தொடருக்கு முன்பான சென்னை அணியின் 3 மாத ப்ரீ சீசனில், தனக்கான ஆயுதங்களைத் தயார் செய்தார் நவாஸ். 

அணியில் இருக்கும் சுமார் ரக வீரர்களை வைத்து, முடிந்தவரை முயற்சி செய்வோம் என்று களமிறங்கவில்லை அவர். ஒவ்வொரு பொசிஷனுக்கும் தனக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானித்தார். பொதுவாக நம் ஊரில், ஃபுல் பேக் ஆடும் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கமாட்டார்கள். ஆனால், நவாஸ் அதையும் எதிர்பார்த்தார். ஃபுல் பேக்குகள், எதிரணியின் பாக்ஸ் வரை சென்று கிராஸ் போட்டுவிட்டு, உடனடியாக தங்கள் பாக்சுக்கு வந்து டிஃபண்ட் செய்யவேண்டும் என்று விரும்பினார். ஏற்கெனவே இருக்கும் வீரர்களை அதற்கு தயார் செய்யாமல், 90 நிமிடமும் களத்தில் சுழலக்கூடிய, கிராஸ், பாஸ் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடுகள வீரர்களை ஃபுல் பேக் பொசிஷனுக்குத் தயார் செய்தார். இப்படி ஒவ்வொரு பொசிஷனிலும், வீரர்களின் குணத்திற்கு ஏற்ப, அவர்களின் பொசிஷனை மாற்றினார். 

துறுதுறுவென துடிப்பாக ஓடும் நடுகள வீரர் அஜித் குமார் லெஃப்ட் பேக் ஆனார். உயரமாகவும் திடமாகவும் இருக்கும் அட்டாகிங் மிட்ஃபீல்டர் பிரவிட்டோ, ஹோல்டிங் மிட்ஃபீல்டராக மாற்றப்பட்டார். நல்ல உயரமும், ஏரியல் பலமும் கொண்ட நடுகள வீரர் கௌரவ் போரா சென்டர் பேக் பொசிஷனில் விளையாடினார். கிராசிங்கில் கில்லியான எட்வின் சிட்னி டிஃபன்ஸின் வலது ஏரியாவில் கில்லியானார். உயரமும், உடல்வாகும் கொண்ட முன்கள வீரர் ஜோசப் கப்லான் நடுகளம், விங் எனப் பல ஏரியாக்களில் புதிய அனுபவம் பெற்றார். இந்த பொசிஷன் மாற்றங்கள், அணியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 

நவாஸ் செய்த இன்னொரு மிகப்பெரிய விஷயம் - 5 ஸ்பெய்ன் வீரர்களை, சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்தது! கோல்கீப்பர் நௌசத் சான்டானா, டிஃபண்டர் ராபர்டோ ஸ்லாவா இருவரும் பின்களத்தில் பலம் கூட்ட, பெட்ரோ மான்சி, நெஸ்டர் கார்டிலோ, சேண்ட்ரோ ராட்ரிக்யூஸ் அடங்கிய மூவர் குழு, பற்ற அணிகளின் பின்களத்தைப் பதம் பார்த்தது. இவர்களின் ஸ்பானிஷ் ஸ்டைல் ஃபுட்பால், ஐ-லீக் தொடரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் கோல் மழை பொழிந்தது. 20 ஆட்டங்களில் 49 கோல்கள் அடித்தது சென்னை சிட்டி. கடந்த 9 சீசன்களில் இதுதான் டாப் கோல் ஸ்கோரிங் ரெக்கார்டு.

முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் அடித்து மிரட்டிய பெட்ரோ மான்சி, இந்தத் தொடரின் டாப் ஸ்கோரர். சாண்ட்ரோ 9, நெஸ்டர் 8 கோல்கள் அடித்து டாப் - 10 இடங்களுக்குள் வந்தனர். மான்சி கோலடிக்க, நெஸ்டர் அசிஸ்ட் செய்வது, நெஸ்டர் கோலடிக்க சாண்ட்ரோ அசிஸ்ட் செய்வது என, முன்களத்தில் இவர்கள் நிகழ்த்திய மாயம்தான் சென்னையை சாம்பியனாக்கியது. 

இவர்கள் மட்டும் கோலடிப்பதில் கவனம் செலுத்தாமல், சக இந்திய வீரர்களோடு இணைந்து ஆடியதுதான் அந்த அணியின் மிகப்பெரிய வெற்றி. ரொமேரியோ, ரஞ்சித் என யார் நல்ல பொசிஷனில் இருந்தாலும் யோசிக்காமல் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கின்றனர். பயிற்சியிலும் சரி, களத்திலும் சரி இந்திய வீரர்களுடன் ஒவ்வொரு நுட்பங்களையும் ஆலோசிக்கின்றனர். இந்திய வீரர்களுடன் மிகச் சிறப்பான கெமிஸ்ட்ரியை ஏற்படுத்திக்கொண்டனர். இப்படியான ஸ்பெய்ன் வீரர்களை, இதுவரை இந்தியாவுக்குள்ளேயே பிரபலமடையாமல் இருந்த சென்னை சிட்டி அணிக்கு ஒப்பந்தம் செய்யவைத்தது நவாஸ் செய்த மிகப்பெரிய விஷயம்.

என்னதான் எல்லாம் ஒரு சேர அமைந்துவிட்டாலும், சில தவிர்க்க முடியாத சிக்கல்கள் ஓர் அணியைப் பாதித்துவிடும். ஸ்டார் வீரர் ஒருவர் திடீரெனக் காயமடைந்துவிடுவார். தொடர்ந்து ஆடும் வீரரால், முன்பைப் போன்ற தாக்கம் ஏற்படுத்த முடியாமல் போகும். வேகம் குறைந்துவிடும். தொடர்ந்து விளையாடாத ஒரு வீரர் கோபித்துக்கொள்ளும்போது, அணியின் கெமிஸ்ட்ரி சீர்குலையும். இவற்றையும் சரியாகக் கையாளவேண்டும். இந்த விஷயத்திலும் பாஸ் மார்க் வாங்கினார் நவாஸ்

நடுகளத்தில் ஆடிய வீரர்களைத் தொடர்ச்சியாக ரொடேஷன் முறையில் மாற்றிக்கொண்டே இருந்தார். தடுப்பாட்ட வீரர்கள், கோல்கீப்பர்களுக்கும் கூட ஒருசில போட்டிகளுக்கு ஓய்வளித்தார். இடையிடேயே ஸ்பேனிஷ் வீரர்களையும் போட்டிக்கு ஒருவர் வீதம் கொஞ்சம் ஓய்வளித்தார். முடிந்தவரை அனைத்து இந்திய வீரர்களையுமே பயன்படுத்தினார். அதனால் வீரர்கள் துடிப்பாகவும், சங்கடங்கள் எதுவும் இல்லாமலும் விளையாடினார்கள். ஒரு கட்டத்தில், அவரது அதீத ரொடேஷன், தடுப்பாட்டத்தை பலவீனமாக்கினாலும், கடைசி கட்டத்தில் மீண்டும் அதை இறுக்கப் பிடித்துவிட்டார் நவாஸ்.

இந்த வெற்றியை சென்னை என்ற பெயருக்காக மட்டும் கொண்டாடினால் போதாது. இது உண்மையிலேயே சென்னையின், தமிழகத்தின் கால்பந்துக்குக் கிடைத்த வெற்றி. மற்ற சென்னை விளையாட்டு அணிகளைப்போல் பெயரளவில் மட்டும் ஊர்ப் பெயரைச் சுமக்காமல், 17 தமிழக வீரர்களை ஒப்பந்தம் செய்து, உண்மையிலேயே தமிழக அணியாகவே இருக்கிறது சென்னை சிட்டி. இறுதிப் போட்டியில் ஆடிய எட்வின் சிட்னி, மைக்கேல் ரெஜின், ஸ்ரீராம், அஜித், ரொமேரியோ ஐந்து பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர்த்து, பாண்டியன், பிரவிட்டோ, விஜய் போன்றவர்களும் தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சாம்பியன்கள் ஆக்கியதுதான் சென்னை சிட்டி அணியின் மிகப்பெரிய வெற்றி.