நெய்மர், கவானி இல்லாத நிலையிலும் எம்பாப்பேவின் அசத்தல் ஆட்டத்தால், மான்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்தி கெத்து காட்டியிருக்கிறது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். அதுமட்டுமல்லாமல் பால் போக்பாவின் ரெட் கார்டு, இரண்டாவது லெக் போட்டியில், பி.எஸ்.ஜி-க்குக் கூடுதல் பலமாகவும் அமையப்போகிறது. யுனைடட் தோற்ற அடுத்த நாள், மற்றொரு பிரீமியர் லீக் அணி டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிகளில், ரோமா, ரியல் மாட்ரிட் அணிகள் 1 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன. இந்த வாரம் நடந்த 4 சாம்பியன்ஸ் லீக் (UCL) போட்டிகளிலும், முதல் பாதியில் கோல்களே விழவில்லை. இரண்டாவது பாதியில் 11 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அந்தப் போட்டிகளைப் பற்றிய மினி அலசல்.
மான்செஸ்டர் யுனைடட் 0 - 2 பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்
பிரெஸ்னல் கிம்பெம்பே - 53'
கிலியன் எம்பாப்பே - 60'
முதல் பாதியில் இரண்டு அணிகளுக்குமே பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், அட்டாகிங் தேர்டில் அவ்வளவாகப் போட்டி இல்லாமல்தான் இருந்தது. பெரும்பாலும் இரண்டு அணிகளின் நடுகளங்கள்தாம் ஆட்டத்தை நகர்த்திக்கொண்டிருந்தன. மார்கினோஸ், டேனி ஆல்வ்ஸ் போன்ற டிஃபண்டர்களையே தாமஸ் டக்கல் நடுகளத்தில்தான் ஆடவிட்டிருந்தார். ரேஷ்ஃபோர்ட், லிங்கார்ட், மார்ஷியல் ஆகியோரின் வேகம் அவ்வப்போது பாரிஸ் டிஃபண்டர்களை சோதித்தது. ஆனால், தியாகோ சில்வாவின் அனுபவம் அவர்களைக் காப்பாற்றியது. போதாக்குறைக்கு ரெஃப்ரீ மஞ்சள் அட்டைகளை வாரி வழங்கிக்கொண்டிருந்தார். முதல் பாதியில் மட்டும் 5 யெல்லோ கார்டுகள். அதில் ஒன்று, வெரட்டியை ஃபவுல் செய்ததற்காக போக்பாவுக்கு. முன்னாள் மான்செஸ்டர் யுனைடட் வீரர், டி மரியா பந்தைத் தொட்டாலே, ரசிகர்கள் அவரைத் தூற்ற, ஓல்ட் டிராஃபோர்ட் பரபரப்பாகவே இருந்தது.
இரண்டாவது பாதி தொடக்கத்திலிருந்து பி.எஸ்.ஜி அட்டாக் செய்யத் தொடங்கியது. அதன் பலனாக, 15 நிமிடங்களில் மொத்த ஆட்டத்தையும் தங்கள் வசப்படுத்தினர். 53-வது நிமிடம் கிடைத்த கார்னரைப் பயன்படுத்தி, டி மரியா இரண்டாவது போஸ்ட்டுக்கு கிராஸ் போட, அதை அற்புதமாக கோலாக்கினார் கிம்பெம்பே. சுதாரித்து, யுனைடட் கவுன்ட்டர் கொடுப்பதற்கு முன்பே கவுன்ட்டர் அட்டாக்கில் அவர்களை ஆஃப் செய்தது பாரிஸ். இடது விங்கில் வேகமாக டிரிபிள் செய்து டி மரியா, பாக்சுக்குள் கிராஸ் செய்ய, மின்னலெனப் பாய்ந்து வந்து அதைக் கோலாக்கினார் எம்பாப்பே.
இரண்டு கோல்களால் துவண்டிருந்த யுனைடட் ரசிகர்களை, மேலும் சோகத்தில் ஆழ்த்தினார் போக்பா. டேனி ஆல்வ்ஸ் மீது ஃபவுல் செய்ய, இரண்டாவது மஞ்சள் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இரண்டு அவே கோல்கள். போக்பா இல்லை. இரண்டாவது சுற்று சொந்த மைதானத்தில், பி.எஸ்.ஜி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதி!
ரோமா 2 - 1 போர்டோ
நிகோலோ சானியோலா - 70',76' ஆட்ரியன் லோபஸ் - 79'
இந்த ஆட்டத்திலும் முதல் பாதியில் எந்த கோல்களும் அடிக்கப்படவில்லை. முதல் 70 நிமிடம் எந்த கோல்களும் காணாத ஆட்டம், 9 நிமிடங்களில் 3 கோல்கள் கண்டது. இந்த சீசனில் இதுவரை மொத்தமே 3 கோல்கள் மட்டுமே அடித்திருந்த சானியோலா, ஆறு நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 2 கோல்கீப்பர்களும் ஆட்டம் முழுதும் பிசியாகவே இருந்தனர். அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தபோதும், டிஃபண்டர்கள் எதிரணி வீரர்களை மார்க் செய்யாமல் கவனக்குறைவாக இருந்ததால், அந்தக் குறுகிய இடைவெளியில் 3 கோல்கள் அடிக்கப்பட்டுவிட்டன. 1 கோல் பின்தங்கியிருந்தாலும், 1 அவே கோல் அடித்திருப்பதால், போர்டோ இன்னும் காலிறுதி கோதாவில் ஒரு கால் வைத்து நிற்கிறது.
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3 - 0 பொருஷியா டார்ட்மண்ட்
ஹியூங் மின் சன் - 47'
ஜேன் வெர்டோங்ஹன் - 83'
ஃபெர்னாண்டோ யொரென்டே - 86'
இரண்டு அணிகளுமே பல முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கியதால், `சேஃப் கேம்' ஆடுவதில்தான் கவனம் செலுத்தின. அதிலும் குறிப்பாக, அவே கோல் விடக்கூடாது என்பதில் ஸ்பர்ஸ் மேனேஜர் பொசடினோ தெளிவாக இருந்தார். அதனால், பென் டேவிஸ், டேனி ரோஸ் என இரண்டு லெஃப்ட் பேக் வீரர்களுமே காயமடைந்தபோதிலும், வெர்டோங்ஹனை லெஃப்ட் விங் பேக்கில் களமிறக்கி, அதுபோக 3 சென்டர் பேக்குகளையும் ஆடவைத்தார். முதல் பாதியில் ரொம்பவே தடுப்பாட்டம் ஆடியது ஸ்பர்ஸ். புலிசிச், கோட்சே, சான்சோ இணையால் வெம்ப்ளியில் எந்த மாயமும் நிகழ்த்த முடியாமல் போனது.
டாட்டன்ஹாம் அணிகூட முன்கள வீரர்கள் இல்லாமல்தான் சிரமப்பட்டது. ஆனால், டார்ட்மண்ட் ஃபார்வேர்டு, விங்கர், டிஃபண்டர் என ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு வீரர் இல்லாமல், தங்களின் டிரேட் மார்க் கேம் ஆடமுடியாமல் தடுமாறியது. குறிப்பாக, அவர்களின் தடுப்பாட்டம் ரொம்பவே திணறியது. இரண்டாவது பாதியில் அது அவர்களுக்கு ஆபத்தாக முடிந்தது. இரண்டாம் பாதி தொடங்கி, இரண்டே நிமிடத்தில் அவர்களுக்கு ஷாக் கொடுத்தார் சன். வெர்டோங்ஹன் கொடுத்த கிராஸை மெர்சலாக காற்றில் பறந்து கோலாக்கினார். அந்த கோல் அடிக்கப்பட்டதும், இன்னும் தடுப்பாட்டம் ஆடியது ஸ்பர்ஸ்.
பெல்ஜியம் அணிக்காக லெஃப்ட் பேக் பொசிஷனில் ஆடியுள்ள வெர்டோங்கன், நேற்று இடது விங் பேக் பொசிஷனில் மிரட்டினார். சன் கோலுக்கு அசிஸ்ட் செய்தவர், 83-வது நிமிடம், முன்கள வீரரைப் போல் பாக்சுக்குள்ளேயே சென்று கோலடித்தார். இதிலிருந்து மீள்வதற்குள் கார்னர் மூலம் வந்த கிராஸை ஹெடர் செய்து, அணியின் மூன்றாவது கோலை அடித்தார் யொரென்டே. அடுத்த சுற்றுப் போட்டிக்கு கேன், டெலே அல்லி ஆகியோர் வந்துவிடக்கூடும் என்பதால், ஸ்பர்ஸ் காலிறுதிக்குப் போவது உறுதி.
அயாக்ஸ் 1 - 2 ரியல் மாட்ரிட்
ஹகிம் ஜியேச் - 75' கரிம் பென்சிமா - 60'
மார்கோ அசேன்சியோ - 87'
`ஒருவேளை தோற்றுவிடுவோமோ' என்று ஒவ்வொரு மாட்ரிட் ரசிகர்களையும் அலறவிட்டது அயாக்ஸ் அணி. மாட்ரிட் வீரர்களின் ஃபினிஷிங் சுமாராக இருக்க, மறுபக்கம் ரமோஸ் - நாசோ கூட்டணிக்குப் பெரும் மிரட்டல் விட்டது அயாக்ஸ் முன்களம். முதல் பாதியில் அயாக்ஸ், பழைய மாட்ரிட் போல் ஆட, மிகப்பெரிய அதிர்ச்சிக்குக் காத்திருந்தனர் கால்பந்து ரசிகர்கள்.
ஷாட்கள் : அயாக்ஸ் - 19, ரியல் மாட்ரிட் - 12
பாஸ்கள் : அயாக்ஸ் - 434, ரியல் மாட்ரிட் - 430
வாய்ப்புகள் : அயாக்ஸ் - 17. ரியல் மாட்ரிட் - 12
இப்படி எல்லா ஸ்டேட்களிலும் அயாக்ஸ் டாப். ரமோஸ், நாசோ இருவரும் உருண்டு பிரண்டு அவர்களைத் தடுக்கவேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் அயாக்ஸ் கோலும் அடித்துவிட, VAR வந்து மாட்ரிட்டைக் காப்பற்றவேண்டியிருந்தது. இளம் வீரர் வினிசியஸ் தன் பங்குக்கு முயற்சி செய்தும், எந்த ஷாட்டையும் கோலாக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியில் ஒருவழியாக பென்சிமா கோலடிக்க, 15 நிமிடங்களில் ஜியேச் மூலம் பதிலடி கொடுத்தது அயாக்ஸ். ஆட்டம் போகப் போக, மாட்ரிட் வீரர்கள் அட்டாக் செய்துகொண்டே இருந்தனர். ஆனால், சரியான ஃபினிஷிங் இல்லாததால் எதையும் கோலாக்க முடியவில்லை. ஒருவழியாக கார்வகால் கிராஸை 87-வது நிமிடத்தில் அசேன்சியோ கோலாக்க, பெருமூச்சுவிட்டது மாட்ரிட். 1 கோல்தான் வித்யாசம் என்றாலும், 2 அவே கோல்கள் அடித்திருப்பதால், இரண்டாவது சுற்று அவர்களுக்குப் பெரிய சவால் கொடுக்க வாய்ப்பில்லை.
ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm