Published:Updated:

கார்டன் பேங்ஸ் - பீலேவை பிரமிக்கவைத்த நாயகன்! #RIPGordanBanks

பந்து பெனால்டி ஏரியாவைத் தாண்டி நின்ற பீலேவுக்குச் செல்ல, காற்றில் பறந்த ஹெடர் செய்கிறார் கால்பந்தின் கடவுள். பந்து `ஃபார் போஸ்ட்' அருகே செல்கிறது. உடனடியாக `கோல்' என்று ஆர்ப்பரிக்கிறார் பீலே. ஆனால்...

கார்டன் பேங்ஸ் - பீலேவை பிரமிக்கவைத்த நாயகன்! #RIPGordanBanks
கார்டன் பேங்ஸ் - பீலேவை பிரமிக்கவைத்த நாயகன்! #RIPGordanBanks

ங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் கார்டன் பேங்ஸ் நேற்று காலமானார். இங்கிலாந்து வென்ற ஒரே உலகக் கோப்பையான 1966 தொடரில், அந்த அணியின் தூணாய் விளங்கியவர் பேங்ஸ். அவர் இங்கிலாந்தின் தலைசிறந்த கோல்கீப்பர் மட்டுமல்ல, தன் காலகட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த கோல்கீப்பராகவும் விளங்கியவர். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தன் 81-வது வயதில் மறைந்தார். 

கோல் கம்பத்துக்கு நடுவே பேங்ஸ் நின்றால், அந்த அணி 12 வீரர்களுடன் ஆடுவது போல்தான் இருக்கும். இரண்டு போஸ்ட்டுகளுக்கும் இடையே மின்னலெனப் பாய்வார். எதிரணி வீரர் பந்தை எந்தப் பக்கம் அடிப்பார், பந்து எப்படிச் சுழன்று திசை மாறும் என ஒவ்வொன்றையும் தன் உள்ளுணர்வுகளால் மிகச் சரியாகக் கணிப்பார். அவரது பொசிஷனிங் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். கோல் கம்பத்தின் நுனியை நோக்கிப் பந்து பயணித்தாலும், ஸ்பைடர் மேனாய், சூப்பர் மேனாய் பாய்ந்து சென்று தடுத்துடுவிடுவார். பிரேசில் முன்கள வீரர்களைப் பார்த்து எப்படி ரசிகர்கள் சிலாகிப்பார்களோ, அதுபோலவேதான் இந்த கோல்கீப்பரையும் சிலாகிப்பார்கள். ஃபிபா வழங்கும் `ஆண்டின் சிறந்த கோல்கீப்பர்' விருதை 6 முறை வென்றவராயிற்றே!

இங்கிலாந்து கால்பந்தைப் பொறுத்தவரை இன்னுமே 1966 உலகக் கோப்பைதான் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன்பிறகு, அவர்களுக்கு அப்படியொரு வரலாற்று வெற்றி கிடைக்கவில்லை. எல்லா வீரர்களுக்கும் அந்த உலகக் கோப்பைதான் அடையாளம். ஆனால், பேங்ஸ் மட்டும் 1970 உலகக் கோப்பையால் அடையாளம் காணப்படுபவர். அந்த உலகக் கோப்பையில் அவர் செய்த ஒரு save, இன்னும் கால்பந்து வரலாற்றின் பொக்கிஷமான தருணமாக விளங்குகிறது. 

மெக்ஸிகோ. 1970 கால்பந்து உலகக் கோப்பை. பிரேசில் vs இங்கிலாந்து. வலது விங்கில் அட்டாக் செய்கிறது பிரேசில். புயல் வேகத்தில் டிரிபிள் செய்த ஜெர்ஜினியோ, பாக்சுக்குள் நுழைகிறார். `ஃபர்ஸ்ட் போஸ்ட்'டின் அருகே, இங்கிலாந்து டிஃபண்டர்களால் மார்க் செய்யப்படாமல், ஃப்ரீயாக நிற்கிறார் பிரேசில் முன்கள வீரர் டோஸ்டோ. அதனால் முதல் போஸ்ட் அருகிலேயே நிற்கிறார் பேங்ஸ். ஆனால், மேலே தூக்கி கிராஸ் போடுகிறார் ஜெர்ஜினியோ, பந்து பெனால்டி ஏரியாவைத் தாண்டி நின்ற பீலேவுக்குச் செல்ல, காற்றில் பறந்த ஹெடர் செய்கிறார் கால்பந்தின் கடவுள். பந்து `ஃபார் போஸ்ட்' அருகே செல்கிறது. உடனடியாக `கோல்' என்று ஆர்ப்பரிக்கிறார் பீலே. ஆனால், பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்று வெளியே விழுகிறது. பீலேவால் நம்பமுடியவில்லை. பிரேசில் வீரர்களால் நம்பமுடியவில்லை. ரசிகர்களால்... ஏன் இங்கிலாந்து வீரர்களாலும்கூட நம்பமுடியவில்லை. கார்டன் பேங்ஸ்..!

பந்து டோஸ்டோவின் தலைக்கு மேல் பறந்த மறுநொடி, முதல் போஸ்ட்டி இருந்து மின்னலென அடுத்த போஸ்ட் நோக்கி ஓடுகிறார் பேங்ஸ். போஸ்ட்டின் மையப்பகுதிக்கு வந்துவிட்டார். ஆனால், பீலேவின் புல்லட் ஹெடர் பாய்ந்து கோல் நோக்கி வருகிறது. உடனடியாக டைவ் அடித்து கைகளால் தடுக்கிறார். இந்த இடத்தில்தான் அவரது முழுத் திறமையும் தெரியும். பொதுவாக இதுபோன்ற சூழல்களில் கோல்கீப்பர்கள், கால்களை முழுதாக நீட்டி ஒற்றைக் கையை விரிப்பார்கள். ஆனால், பந்துக்குக் கொடுக்கப்பட்ட விசை, அவர்களையும் மீறி, கையில் பட்டாலும் கோல் போஸ்ட்டுக்குள் விழும். ஆனால், பேங்ஸ்... இரண்டு கைகளையும் நீட்டினார். கையை நீட்டியதோடு மட்டுமல்லாமல், பந்து deflect ஆகவோ, rebound ஆகவோ கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். வாலிபாலை அடிப்பதுபோல், இரண்டு கைகளாலும் பந்தை மேலே தட்டிவிட, கிராஸ் பாரைத் தாண்டி வெளியே விழுந்தது. கால்பந்து உலகின் மிகச் சிறந்த சேவ்களில் ஒன்று..! 

``என்னை யாரும் உலகக் கோப்பை வென்றதற்காக அடையாளம் காட்டுவதில்லை, அந்த save கால்பந்து உலகில் என்னுடைய அடையாளமாகிவிட்டது" என்று பேங்ஸே ஒருமுறை கூறினார். 2002-ம் ஆண்டு, 100 சிறந்த விளையாட்டு நிகழ்வுகளில், அந்த Save-ஐ, 41-வதாக ஓட்டளித்துத் தேர்வு செய்தனர் பிரிட்டன் மக்கள். அந்த அளவுக்கு, அது அவர்களின் நினைவை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த save, ஒரு சோறு பதம்தான். தன் ஒவ்வொரு போட்டியிலும் இதுபோல் பல வித்தைகள் நிகழ்த்தியவர் அவர். 1966 உலகக் கோப்பையில் இங்கிலாந்து விட்டது வெறும் மூன்றே கோல்கள். பலம் வாய்ந்த உருகுவே, அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக கிளீன் ஷீட்கள். அந்த அளவுக்கு அணியின் அரணாக விளங்கினார் பேங்ஸ். அவர் பீலேவை பிரமிக்கவைத்ததில் ஆச்சர்யமே இல்லை!

``என் வாழ்க்கையில் நான் எத்தனையோ கோல்கள் அடித்துள்ளேன். ஆனால், என்னிடம் பலரும் கேட்டது, நான் அடிக்காத அந்த ஒரு கோல் பற்றித்தான்" என்று அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த பீலே, பேங்ஸ் மறைவுக்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்தார். ``அந்தப் பந்து கோலாகாதது ஒருவகையில் நல்லதுதான். அதுதான் ஒரு நல்ல நட்புக்குத் தொடக்கப்புள்ளியாய் அமைந்தது. பேங்ஸ் அந்த save-க்காக மட்டுமல்ல, அவரது குணத்துக்காகவும் நிச்சயம் நினைவுகூரப்படவேண்டியவர். அவரது இழப்பு எனக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது" என்றார். 

பீலே சொன்னதுபோல், அந்த ஒரு நிகழ்வுக்காக மட்டுமல்ல, தன் குணத்துக்காகவும் பேங்ஸ் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார். அவர் நினைவுகள் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்!