Published:Updated:

நெய்மர், கவானி இல்லை... பாரிஸைக் கரைசேர்ப்பாரா எம்பாப்பே?! சாம்பியன்ஸ் லீக் பிரிவ்யூ #UCL

நெய்மர், கவானி இல்லை... பாரிஸைக் கரைசேர்ப்பாரா எம்பாப்பே?! சாம்பியன்ஸ் லீக் பிரிவ்யூ #UCL

டி மரியா, ஜூலியன் டிராக்ஸ்லர் போன்றவர்கள் கைகொடுத்தால் எம்பாப்பேவால் மாயம் நிகழ்த்த முடியும். ஆனால், புதுரத்தம் பாய்ச்சப்பட்ட யுனைடட் அதற்கு முட்டுக்கட்டை போட வாய்ப்புண்டு.

நெய்மர், கவானி இல்லை... பாரிஸைக் கரைசேர்ப்பாரா எம்பாப்பே?! சாம்பியன்ஸ் லீக் பிரிவ்யூ #UCL

டி மரியா, ஜூலியன் டிராக்ஸ்லர் போன்றவர்கள் கைகொடுத்தால் எம்பாப்பேவால் மாயம் நிகழ்த்த முடியும். ஆனால், புதுரத்தம் பாய்ச்சப்பட்ட யுனைடட் அதற்கு முட்டுக்கட்டை போட வாய்ப்புண்டு.

Published:Updated:
நெய்மர், கவானி இல்லை... பாரிஸைக் கரைசேர்ப்பாரா எம்பாப்பே?! சாம்பியன்ஸ் லீக் பிரிவ்யூ #UCL

2018-19 சாம்பியன்ஸ் லீக் சீசனின் நாக் அவுட் சுற்றுகள் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகின்றன. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றிலேயே பல முன்னணி அணிகள் நேருக்கு நேர் மோதுவதால், எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - மான்செஸ்டர் யுனைடட் அணிகள் மோதுகின்றன. நாளை சமபலம் வாய்ந்த டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், பொருஷியா டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நெய்மர், கவானி, ஹேரி கேன், ரியூஸ், மரேகா எனத் தங்களின் முக்கிய வீரர்கள் இல்லாமல் பல அணிகள் களமிறங்குவதால், இந்தச் சுற்றில் அந்த அணிகளின் அணுகுமுறைகள் மாறக்கூடும். இந்த வாரம் நடக்கும் நான்கு போட்டிகளைப் பற்றிய அலசல்.

மான்செஸ்டர் யுனைடட் vs பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 

13/02/2019,  1.30 am

இரண்டு வாரங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் `பி.எஸ்.ஜி ஈசியா ஜெயிச்சிடும்' என்றுதான் எல்லோரும் சொல்லியிருப்பார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். தொடர்ந்து 11 போட்டிகளில் தோற்காமல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது யுனைடட். இடைக்கால மேனேஜராக ஓல் கன்னர் சோல்ஸ்கர் பதவியேற்றபிறகு அணியின் பர்ஃபார்ம் வேற லெவல். போக்பா, ரேஷ்ஃபோர்ட், மார்ஷியல், லிண்டலாஃப் என எல்லோருமே சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் காயங்களால் அவதிப்படும் பி.எஸ்.ஜி-யை எதிர்கொள்கிறது யுனைடட்.

கவானி - நெய்மர் - எம்பாப்பே என மிரட்டல் முன்களத்தால் மிரட்டிக்கொண்டிருந்த பி.எஸ்.ஜி, இந்தப் போட்டியில் கவானி, நெய்மர் இருவருமே இல்லாமல் களமிறங்கப்போகிறது. கணுக்கால் காயத்தால் ஏப்ரல் வரை நெய்மர் ஓய்வில் இருக்க, இரண்டு நாள்கள் முன்பு இடுப்பில் காயமடைந்து வெளியேறினால் கவானி. சாம்பியன்ஸ் லீக் வென்றே ஆகவேண்டுமென்று டேனி ஆல்வ்ஸ், புஃபான் போன்ற ஜாம்பவான்களை ஒப்பந்தம் செய்த அணி, இப்போது முன்களத்தில் பலவீனமடைந்துள்ளது. இருந்தாலும் டி மரியா, ஜூலியன் டிராக்ஸ்லர் போன்றவர்கள் கைகொடுத்தால் எம்பாப்பேவால் மாயம் நிகழ்த்த முடியும். ஆனால், புதுரத்தம் பாய்ச்சப்பட்ட யுனைடட் அதற்கு முட்டுக்கட்டை போட வாய்ப்புண்டு. அசத்தலான ஆட்டம் காத்திருக்கிறது.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள் : பால் போக்பா, கிலியன் எம்பாப்பே.

ரோமா vs போர்டோ 

13/02/2019, 1.30 am

தொடர்ந்து 26 போட்டிகளில் தோற்காமல் ஸ்டெடியோ ஒலிம்பிகோ மைதானம் செல்கிறது எஃப்.சி போர்டோ. அந்த அணியின் டாப் ஸ்கோரர் மௌசா மரேகா ஆடாதது அவர்களுக்குப் பெரிய பலவீனம். குரூப் பிரிவில் பெரிய போட்டி இல்லாமல் எளிதாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அந்த அணிக்கு, இந்தப் போட்டி கடும் சவால் அளிக்கும். கடந்த முறை பார்சிலோனாவையே பதம் பார்த்த ரோமாவைச் சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான். முன்னாள் ரியல் மாட்ரிட் வீரர்கள் இகர் கசியஸ், பெபே ஆகியோர் முழு ஃபார்மில் இருந்தால் மட்டுமே ரோமாவின் முன்களத்தைக் கட்டுப்படுத்த முடியும். 

சொந்த மண்ணில் விளையாடுவது ரோமா அணிக்கு மிகப்பெரிய பலம். சீரி ஏ தொடரில், இந்த மைதானத்தில் விளையாடிய 11 போட்டிகளில் 28 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறது அந்த அணி. அதனால் இன்றும் கோல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், ரோமாவும் சமீபத்தில் வீரர்களின் காயங்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. செங்கிஸ் அண்டர், டியேகோ பெரோட்டி, மார்டின் ஓல்சன் போன்ற முன்னணி வீரர்கள் இன்று விளையாடுவது சந்தேகம்தான். ஆனாலும், ஈடன் செகோ, எல் ஷாராவி, பேட்ரிக் ஷிக் அடங்கிய முன்களம் போர்டோவை பதம் பார்க்கும். 

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள் : ஈடன் செகோ, ஃப்ரான்சிஸ்கோ சோரஸ்.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் vs பொருஷியா டார்ட்மண்ட்

14/02/2019, 1.30 am

ஸ்பர்ஸ் : ஹேரி கேன் இல்லை

டார்ட்மண்ட் : ரியூஸ் இல்லை

ஸ்பர்ஸ் : டெலே அல்லி இல்லை

டார்ட்மண்ட் : லூகாஸ் பிஸ்செக் இல்லை

இரண்டு அணிகளுமே மிகமுக்கியமான வீரர்கள் இல்லாமல்தான் மிகமுக்கியமான இந்தப் போட்டியில் களமிறங்கப்போகின்றன. இருந்தாலும் எரிக்சன், சன், ஜேடன் சேன்சோ, மரியோ கோட்சே போன்ற வீரர்கள் இருப்பதால் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. ரியூஸ் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்றாலும், அதைச் சரிசெய்யும் அளவுக்கு டார்ட்மண்ட் அணியில் பேக் அப் வீரர்கள் இருக்கிறார்கள். 

ஸ்பர்ஸ் அணிக்கு அந்த பேக் அப்தான் பிரச்னை. நடுகளம் ரொம்பவே பலவீனமாக இருக்கிறது. ஹேரி கேன் இடத்தில் சன், மௌரா ஆடினாலும், இங்கிலாந்து கேப்டனின் இடத்தை அவர்களால் முழுமையாக நிரப்ப முடியவில்லை. எரிக் டையரும் காயமடைந்திருப்பதால் ஹேரி வின்க்ஸ், சிசோகோ இணை 90 நிமிடமும் ஆடவேண்டிய சூழல் ஏற்படும். இப்படியான சூழலில், டார்ட்மண்ட் அணியை `அவே கோல்' அடிக்கவிடாமல் இருப்பதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன். அதனால் தன் அணியை, பொசடினோ  3-4-3 ஃபார்மேஷனில் களமிறக்கவே வாய்ப்பு அதிகம். இளம் இங்கிலாந்து வீரர் ஜேடன் சேன்சோ, இங்கிலாந்து மண்ணில் விளையாடும் முதல் சீனியர் ஆட்டம் என்பதால், இங்கிலாந்து ரசிகர்கள் நிச்சயம் இந்தப் போட்டியை மிஸ் செய்ய மாட்டார்கள். 

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள் : கிறிஸ்டியன் எரிக்சன், ஜேடன் சான்சோ.

அயாக்ஸ் vs ரியல் மாட்ரிட்

14/02/2019, 1.30 am

இந்த வாரம் நடக்கும் போட்டிகளிலேயே நம்மால் முடிவைக் கணிக்க முடிந்த ஆட்டம் இதுதான். `மாட்ரிட் டெர்பி'யில் அத்லெடிகோ அணியை வீழ்த்திவிட்டு நம்பிக்கையுடன் அம்ஸ்டெர்டாம் பயணிக்கிறது ரியல். பென்சிமா அசத்தல் ஃபார்மில் இருக்க, லூகஸ் வஸ்க்யூஸ், வினிசியஸ் ஜூனியர் இருவரும் விங்கில் அவருக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். சீசன் தொடக்கத்தில் சொதப்பித் தள்ளிய மாட்ரிட் டிஃபன்ஸ் இப்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருப்பது மாட்ரிட்டை இன்னும் பலமாக்குகிறது.

அடுத்த சீசனில் பார்சிலோனா அணிக்காக ஆடப்போகும் ஃப்ரேங்கி டீ ஜாங், தன் எதிர்கால வைரிகளை இப்போது பதம் பார்க்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. கேப்டன் மாதிஸ் டீ லைட், டேலி பிளைண்ட், டக்லிஃபியாகோ அடங்கிய பின்களம் மாட்ரிட் வீரர்களுக்கு சவால் கொடுக்கும். ஆனால், முழு பலத்துடன் ஆடும்பட்சத்தில் ரியல் மாட்ரிட் நிச்சயம் வெல்லவேண்டிய போட்டி இது.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள் : ஃப்ரேங்கி டீ ஜாங், கரிம் பென்சிமா.

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm