Published:Updated:

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’- சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!
`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’- சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத், அஷ்வினுக்குப் பிறகு இப்போதெல்லாம் ஒரு தமிழக வீரருக்குக்கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பெயருக்கு ஒருவர் ஸ்குவாடில் இருக்கிறார். தமிழ் தலைவாஸ், சென்னை ஸ்மேஷர்ஸ்... எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரில் மட்டும்தான் சென்னையும் தமிழும்..! 

சென்னை சிட்டி எஃப்.சி, யாரும் எதிர்பாராத வகையில் ஐ-லீக் தொடரின் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. முந்தைய இரண்டு சீஸன்களிலும் சேர்த்தே 8 வெற்றிகள் மட்டும் பெற்றிருந்த அந்த அணி, இப்போது சாம்பியன் பட்டத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அணி வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி, தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அணி சாம்பியன் ஆகப்போகிறது என்பதுதான் இதில் கவனிக்கவேண்டிய விஷயம். 

இரண்டு முறை ஐ.எஸ்.எல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எஃப்.சி அணிக்காக விளையாடியுள்ள தமிழக வீரர்கள் இருவர் மட்டுமே! அதிலும், ஒருவர் அணியிலிருந்து போன பிறகுதான் இன்னொருவர் விளையாடினார். கால்பந்து மட்டுமல்ல, மற்ற விளையாட்டுகளிலும் சென்னை அணிகளின் நிலை இப்படித்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத், அஷ்வினுக்குப் பிறகு இப்போதெல்லாம் ஒரு தமிழக வீரருக்குக்கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பெயருக்கு ஒருவர் ஸ்குவாடில் இருக்கிறார். தமிழ்த் தலைவாஸ், சென்னை ஸ்மேஷர்ஸ்... எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரில் மட்டும்தான் சென்னையும் தமிழும்! 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

சென்னை சிட்டி எஃப்.சி, இதற்கெல்லாம் விதிவிலக்கு. ஒவ்வோர் ஆட்டத்தின் பிளேயிங் லெவனிலும் குறைந்தபட்சம் நான்கு தமிழக வீரர்களாவது களமிறங்குகிறார்கள். அவர்களுக்கு காயம் ஏற்பட்டால், அந்த இடத்தை நிரப்ப இன்னொரு தமிழக வீரர் தயாராக இருக்கிறார். மற்ற தமிழக அணிகளைப்போல் ஒன்று, இரண்டு என இல்லாமல் மொத்தம் 17 தமிழக வீரர்களை உள்ளடக்கியுள்ளது அந்த அணி. விளைவு, இப்போது தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலிருந்தும் ஒரு ஐ-லீக் சாம்பியன் உருவாகப்போகிறார். 

ஐ-லீக், ஐ.எஸ்.எல் என இரு தொடர்கள், சென்னையை மையமாகக்கொண்ட இரு அணிகள் இருக்க, தரமான கிரிக்கெட் மைதானங்கள் பல இருக்கும் இந்த மாநகரில் ஒரேயொரு சிறந்த கால்பந்து மைதானம் மட்டும் இருக்க, சென்னையிலிருந்து வெளியேறியது அந்த அணி. சென்னை சிட்டி எஃப்.சி, கேர் ஆஃப் கோயம்புத்தூர்! ஆனாலும், அங்கு தங்களுக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டுள்ளது அந்த அணி. ஐ.எஸ்.எல் போல் இரவு ஆட்டங்கள் இல்லை. பகலில், மாலை நேரங்களில்தான் போட்டிகள் நடக்கும். இருந்தாலும் சென்னையை ஆதரிக்கக் குவிகின்றனர் கோவை ரசிகர்கள்!

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

தமிழக கால்பந்தின் முகங்களாக மாறியிருக்கும் சென்னை சிட்டியின் தமிழ்ப் பசங்களை கோயமுத்தூரில் சந்தித்தோம். `தமிழக வீரர்களைப் பேட்டியெடுக்க வேண்டும்' என்று அணி நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன். கிரீன் சிக்னல் கிடைத்ததும் கோவை பயணம் தொடங்கியது. வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று காத்திருந்தேன். காலை உணவு முடித்து, அனைவரும் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கல்லூரி விடுதியில் நண்பர்கள் கலாய்த்துக்கொண்டு செல்வதுபோலவே, ஒருவரை டார்கெட் செய்து கலாய்த்துக்கொண்டே ரூமுக்குச் சென்றனர். கோல்கீப்பிங் பயிற்சியாளர் சதீஷ் வீரர்களை அழைத்துவந்தார். வந்த ஆறு பேரையும் பார்த்தால் அப்படியே கல்லூரி மாணவர்கள் போலத்தான்!

ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருப்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், ஹாஸ்டலில் இருப்பதுபோல் கேஷுவலாக உடையணிந்திருந்தனர். சிறிது நேரம் முன்பு, ரூமுக்குச் செல்லும்போது நடந்துகொண்டிருந்த கலாய்க்கும் படலம், இப்போதும் தொடர்ந்தது. அறிமுகம் செய்துகொண்டு சோபாவில் அமர்ந்தோம். ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு வாட்ஸ்அப் ஸ்மைலியைப் பிரதிபலித்தது. பிரவிட்டோ சீரியஸாக அமர்ந்திருக்க, அமைதியாக அளவெடுத்துச் சிரித்தார் ரொமாரியோ. அஜித், விஜய் இருவரும் தங்கள் பெயர் சொன்னவிதத்திலேயே, சென்னைப் பசங்க என்பதைச் சொல்லினர். உரையாடலை ரிக்கார்ட் செய்ய, செல்போனை முன்னால் வைத்ததும், வைவா தேர்வில் அமர்ந்திருக்கும் இன்ஜினீயரிங் மாணவர்போல் பார்த்தார் ரஜீவன். பாண்டியன்... வேண்டாம். அந்த ரியாக்‌ஷன்களின் கலவையை இன்னும் டீகோட் செய்ய முடியவில்லை! 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm

கடந்த இரண்டு சீஸன்களிலும் 8-ம் இடம் மட்டுமே பிடித்த அந்த அணி, இப்போது புத்துயிர் பெற்றிருப்பதன் காரணம், அணியின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ். அவர் அணியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றி வீரர்களிடம் கேட்டேன்.

``அவர்தான் டீமோட மொத்த மாற்றத்துக்கும் முக்கியக் காரணம். சீஸன் தொடங்கிறதுக்கு முன்னாடியே முழு பிளானோடு வந்துட்டார். அவரோட கோச்சிங் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி, நல்லா தெரிஞ்ச ஸ்பானிஷ் பிளேயர்களை ஒப்பந்தம் செய்தார். அவங்களுக்கு ஏத்தமாதிரி எங்களை விளையாடவெச்சார். எந்த டீமும் மூணு மாசம்லாம் ப்ரீ சீஸன் போக மாட்டாங்க. ஆனா, நாங்க மூணு மாசம் ப்ரீ சீஸன் பிராக்டீஸ் பண்ணோம். ஒவ்வொருத்தரைப் பத்தியும் தெரிஞ்சுக்க, அவங்க கேம் ஸ்டைலைப் புரிஞ்சுக்க அதுதான் உதவுச்சு" என்று தங்கள் பயிற்சியாளரின் முதல் நடவடிக்கையைப் பற்றிச் சொன்னார் ரொமேரியோ. 

மூணு மாத ப்ரீ சீஸன் என்பதே கொஞ்சம் ஆச்சர்யமளிக்கும் விஷயம்தான். ஆனால், அங்கு அவர் செய்த விஷயங்கள்தான் இன்னும் ஆச்சர்யம். இந்த அணியின் வீரர்கள் பலர் இப்போது `அவுட் ஆஃப் பொசிஷனில்'தான் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மிட் ஃபீல்டர்களான அஜித், எட்வின் சிட்னி இருவரும் இப்போது ஆடுவது ஃபுல்பேக் பொசிஷனில்! அட்டாகிங் மிட் ஃபீல்டரான பிரவிட்டோ ராஜு, சென்னை சிட்டியில் ஹோல்டிங் மிட் ஃபீல்டர். இப்படி வீரர்களை அணிக்குத் தேவையான பொசிஷன்களுக்கு மாற்றியிருக்கிறார் அக்பர் நவாஸ். எட்வின் சிட்னியின் கிராஸ்களையும், அஜித்தின் வேகத்தையும் மிகச் சரியாக ஃபுல்பேக் பொசிஷனில் பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல் பிரவிட்டோவின் உயரத்தையும், உடல் பலத்தையும் கருத்தில்கொண்டு அவரை `பாக்ஸ் டு பாக்ஸ்' ஆடவைத்திருக்கிறார். அந்தப் புதிய பொசிஷன்களில் அந்த வீரர்களைச் சிறப்பாகச் செயல்படவும் வைத்ததுதான் அவரது மாஸ்டர் க்ளாஸ்! 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

``அதுமட்டுமில்லாம ஸ்பேனிஷ் பிளேயர்ஸ் பத்தியும் சொல்லணும். எங்களுக்கு நிறைய கத்துக்கொடுக்குறாங்க" என்று அணியின் மையமாக விளங்கும் மான்சி, சேண்ட்ரோ, நெஸ்டர், ஸ்லாவா போன்ற ஸ்பெயின் வீரர்கள் பற்றிப் பேசத் தொடங்கினார் பிரவிட்டோ. ``ஸ்பானிஷ் கேம் ஸ்டைல் ரொம்ப வித்தியாசமானது. நம்ம இஷ்டத்துக்கு ஆட முடியாது. பாலை நம்ம கன்ட்ரோல்ல வெச்சிருக்கணும். அதெல்லாம் அவங்க அவ்ளோ கூலா நமக்குச் சொல்வாங்க. எப்போ பாஸ் போடணும், எப்போ டிரிப்பிள் பண்ணணும்னு எல்லா இடங்கள்லயும் ஹெல்ப் பண்வாங்க" என்று பிரவிட்டோ சொல்லும்போதே, ``அவங்கள் மாதிரி ஒரு செட் மத்த டீம்கு கிடைக்குமானு தெரியல" என்கிறார் ரொமேரியோ. 

``பெரும்பாலான வெளிநாட்டு வீரர்களெல்லாம் அவங்க கோல் அடிக்கிறது, அசிஸ்ட் பண்றதுலதான் கவனமா இருப்பாங்க. ஆனா, இவங்க அப்படி இல்ல. பாக்ஸுக்குள்ள போயிட்டு நமக்கு பாஸ் பண்ணுவாங்க. நாம நல்லா ஆடணும், டெவலப் ஆகணும், கோல் அடிக்கணும்னு நினைப்பாங்க. அதெல்லாம்தான் அவங்களுக்கும் எங்களுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகக் காரணம்" என்றார் அவர். இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போன்ற தொடர்களிலேயே வீரர்களுக்கு இடையில் மொழிச் சிக்கல் ஏற்படும். ஸ்பானிஷ், இத்தாலிய வீரர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அவ்வளவு சரளமாகப் பேச மாட்டார்கள். ஆனால், இங்கு அந்தப் பிரச்னையும் இல்லை. ``எல்லோருமே சூப்பரா இங்கிலீஷ் பேசுவாங்க. நோ லாங்குவேஜ் பிராப்ளம்" என்று சிரிக்கிறார் ரஜீவன். 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

களத்திலேயே அதிக எனர்ஜி தேவைப்படுவது ஃபுல்பேக்குகளுக்குத்தான். டிஃபன்ஸ், அட்டாக் என இரண்டு பாக்ஸுக்கும் இடையே ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். அப்படியான பொசிஷனுக்குப் புதிதாக இருந்தாலும், தன் வேலையைப் பர்ஃபெக்டாகச் செய்துகொண்டிருக்கிறார் அஜித். அதிலும், விளையாடிய 14 போட்டிகளிலும் 90 நிமிடமும் முழுமையாக விளையாடியிருக்கிறார்.

``புது ரோல் கஷ்டமா இல்லையா?" என்று கேட்டதற்கு,

``ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஆனா, இப்போ ரொம்ப நல்லா இருக்கு. புதுசா ஒரு விஷயம் பண்ணப் புடிச்சிருக்கு. இந்தச் சவாலையெல்லாம் ஏத்துக்கிட்டாத்தானே வளர முடியும்" என்று சொல்லும் அஜித்தின் பேச்சில் அவ்வளவு பாசிடிவிட்டி!

இவர்கள் எல்லோரும் ப்ரீ சீஸனில் சிறப்பாகச் செயல்பட்டு அணிக்குள் நுழைய, கிட்டத்தட்ட ஆறு மாதம், எந்தப் பெரிய போட்டியிலும் விளையாடாமல் அணிக்குள் ஃபிட்டாகியிருக்கிறார் பாண்டியன். சென்னையில், சென்னையின் எஃப்.சி அணியோடு சந்திக்கவேண்டியவரை, கோவையில் சென்னை சிட்டி அணியோடு சந்தித்தேன். இந்த சீஸன் தொடங்கியபோது இங்கிருந்து சென்னையின் எஃப்.சி-க்குச் சென்றவர், மீண்டும் `லோன்' மூலமாக, இந்த அணிக்கே திரும்பியிருக்கிறார். சென்னை, கோவை என இரண்டு நகரங்களின் ரசிகர்களையும் பார்த்த அவரிடம், அதைப் பற்றியே பேசினேன். 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

``நீங்க நினைக்கிறதவிட இங்க நிறைய ஃபுட்பால் ஃபேன்ஸ் இருக்காங்க. இந்த ஏரியாவைச் சுத்தி எக்கச்சக்க காலேஜ், ஸ்கூல்ஸ் இருக்கு. கேரளா சுற்றுவட்டாரத்தில் இருந்து நிறைய பேர் இங்க வந்து படிக்கிறாங்க. அதனால ஒவ்வொரு மேட்சுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். அதுமட்டுமில்லாம, நாங்க இங்க விளையாடுறது, இந்த ஏரியால இருக்க சின்ன பசங்கள ஃபுட்பால் நோக்கி நகர்த்தும். வெறும் சென்னைக்குள்ள மட்டுமே இல்லாம, மத்த ஏரியாவுலயும் ஃபுட்பால் வளரணும்ல. இன்னொரு வகையிலையும் இங்க வந்தது நல்லதுதான்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க இருந்திருந்தா, ரெண்டு டீமுக்குமே ஃபேன் பேஸ் பிரிஞ்சிருக்கும். ஏற்கெனவே அங்க ரெண்டு ஃபேன் க்ளப் இருக்கு. அது மூணா, நாலா போயிருக்கும். நல்லா இருந்திருக்காது. ஆனா, இப்போ இது புது ஃபேன் பேஸை உருவாக்கியிருக்கு" என்கிறார் பாண்டியன். 

அவர் சொல்லி முடித்ததுமே அங்கு இருக்கும் ஃபேன் க்ளப்கள் பற்றிச் சொன்னார் அஜித். ``ரோரிங் லயன்ஸ், சதனர்ஸ்னு ரெண்டு ஃபேன் குரூப் இருக்கிறாங்க. எல்லா மேட்சுக்கும் வந்துடுவாங்க. செம எங்கரேஜிங்கா இருப்பாங்க. நான் எல்லா மேட்சும் 90 நிமிஷமும் ஆடுறேன்னா அதுக்கு அவங்களும் ஒரு காரணம். கடைசியில் ஆட்டம் முடிய முடிய செமயா நம்மல உற்சாகப்படுத்துவாங்க" என்று அவர்களைப் பாராட்டுகிறார். 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

எல்லோருக்கும் கோவை முழுமையாகப் பிடித்துப்போக, விஜய்க்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். ``எங்க ஏரியாலலாம் வீட்டாண்ட ஒரே ரவுசா இருக்கும். 12 மணி முட்டும் ஒரே கசாமுசானு இருக்கும். ஏரியா பசங்க யாராது அப்டியே போனா, அவங்களுக்கு டிஸ்டர்ப் கொடுத்திட்டு, கிண்டல் பண்ணிட்டு, பசங்ககூட பந்தாடீட்டு... ஜாலியா இருக்கும். இங்கெல்லாம் 7, 8 மணியானாலே எல்லாம் க்ளோஸ் ஆயிடுது. எங்க ஏரியாவ ரொம்ப மிஸ் பண்றேன்" என்று ஏங்கினார் விஜய். அந்த வார்த்தைகளில் வடசென்னை வாசமும், கண்களில் வியாசர்பாடி பாசமும் அதிகமாகவே தெரிந்தன. 

ஆனால், இந்த இடத்தில் தான் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் உணரத் தவறவில்லை. ``எங்க ஏரியாவுல எவ்ளவோ நல்ல பிளேயர்லாம் இருக்காங்க. ஆனா, எல்லோருக்குமே சான்ஸ் கிடைக்கல. எனக்குக் கிடச்சத நான் நல்லா யூஸ் பண்ணிக்கிட்டா, நிறைய பசங்க வெளிய வருவாங்க. அதுக்காக இன்னும் பெருசா வரணும்" என்கிறார்.

``நார்த் மெட்ராஸ்னாலே ஒரு அடையாளம் இருக்கு. ஒண்ணு பந்தாடிடணும்... இல்லைன்னா அக்யூஸ்ட்னுடுவாங்க. அதுக்காகவாவது பந்தாடுற பசங்க நிறைய மேல வரணும்" என்கிறார். இந்தத் தேசம் பூசியிருக்கும் அரசியல் அடையாளங்களை விளையாட்டு எப்படிக் கலைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அந்த வார்த்தைகள் மிகப்பெரிய உதாரணம்! 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

மதிய உணவுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், போட்டோஷூட்டுக்கு `கிட்' அணிய எல்லோரும் ரூமுக்குச் சென்றனர். பிரவிட்டோ, ரஜீவன் இருவரையும் கொஞ்சம் இழுத்துப்பிடித்து அமரவைத்தேன். இருவர் பேச்சிலும் தமிழும், மலையாளமும் கலந்து வீசின. கேரளத்தையொட்டி இருக்கும் கன்னியாகுமரி கிராமங்களான இரவிப்புத்தன்துறை, மார்த்தாண்டன்துறை இவர்களின் சொந்த ஊர். இருவரும் மீனவக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கால்பந்தைத் திருவிழா வைத்துக் கொண்டாடும் அந்த ஊரில், சென்னையில் இருப்பதுபோன்ற வசதிகள் எதுவுமே இல்லாத அந்த ஊரில், இவர்களின் எழுச்சிக்குப் பிறகு ஏகப்பட்ட அகாடமிகள் திறக்கப்பட்டுள்ளன. 

கேரள எல்லை என்பதால், செவன்ஸ் கேம் ஆடிப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள். ``எங்க செவன்ஸ் மேட்ச் நடந்தாலும் போயிடுவோம்" என்று சொல்பவர்களுக்கு, அதுதான் இப்போது கைகொடுக்கிறது. ``செவன்ஸ் மேட்ச்லலாம் ஒரே பொசிஷன்ல ஆடிட்டி இருக்க முடியாது. திடீர்னு வேற பொசிஷன் ஆடணும். விங்க்ல இருந்து மிட்ஃபீல்ட் போகணும். அதெல்லாம் நல்லா பழகிடுச்சு. அதனாலதான், இப்போ வேற பொசிஷன்லயும் நல்லா ஆட முடியுது" என்கிறார் ரஜீவன். 

`பேர்ல மட்டுமில்லை... டீமே தமிழ்ப் பசங்கதான்!’-  சென்னை சிட்டி எஃப்.சி கெத்து!

பேசிக்கொண்டிருக்கும்போதே எல்லோரும் வந்துவிட, போட்டோ எடுக்கும் லொகேஷனுக்குச் சென்றோம். இடம் பார்த்து, லைட்டிங் செக் செய்வதற்குள் பிரவிட்டோ, ரஜீவன் இருவரும் வந்து சேர்ந்தனர். இந்த குரூப்பிலேயே மூத்தவரான ரஜீவன்தான் எல்லோருக்கும் செல்லம்! எல்லோரும் அவரை வம்பிழுக்க, அவரும் தனி ஆளாக அவர்களைச் சமாளித்தார். தனித்தனியாக போட்டோக்கள் எடுத்து முடித்த பிறகு, அனைவரையும் சேர்த்துவைத்து எடுப்பதுதான் பெரும்சவாலாக இருந்தது. ஒவ்வொருவரும் வேறு வேறு போஸ் கொடுக்கவேண்டும். கேஷுவலாக இருக்க வேண்டும். ஆனால், அதில் அந்த கேஷுவல் லுக் கொண்டுவருவதுதான் சிரமாக இருந்தது. 

ஸ்டர்ரிஜ், டிபாலா, டி மரியா, ரொனால்டோ, போக்பா என ஒவ்வொருவரின் செலிபிரேஷன்களையும் இவர்கள் இமிடேட் செய்துகொண்டிருக்க, செம ரகளையானது. அதிலும் ரஜீவனுக்கு டி மரியாவின் `ஹார்டின் போஸ்' சரியாக வராமல், அவர் விரல்களால் டைமண்ட் ஷேப்பில் ஏதோ காட்ட, எல்லோரும் வெடித்துச் சிரித்தார்கள். `இது என்னோட ஸ்பெஷல்' என இன்னுமும் கூலாக பதில் சொன்ன ரஜீவனைப் பார்க்க பிரமிப்பாகவே இருந்தது. ஒருவழியாக போட்டோக்கள் எடுத்து முடித்தோம். உணவுக்குப் பிறகு பிராக்டீஸ் செஷன் இருந்ததால், எல்லோரும் விரைந்து செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொருவருக்கும் விடைகொடுத்துவிட்டு, `கப் அடிச்சதுக்குப்புறம் வர்றோம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அவர்கள் இப்போதே சாம்பியன்களாகத்தான் தெரிந்தார்கள்!

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm

அடுத்த கட்டுரைக்கு