Published:Updated:

துரைப்பாக்கத்தில் ஒரு ஃபிபா மைதானம்! இது சென்னையா?!

தமிழ்நாட்டின் முதல் ஃபிஃபா தரத்திலான செயற்கை புல்தரை மைதானம் இப்போது சென்னையில்.. இது எஃப்.சி மெட்ராஸ்  அணியின் ஹோம் கிரவுண்ட்

துரைப்பாக்கத்தில் ஒரு ஃபிபா மைதானம்! இது சென்னையா?!
துரைப்பாக்கத்தில் ஒரு ஃபிபா மைதானம்! இது சென்னையா?!

பெரு நகரங்களில் இப்போது ஃபுட்சால்தான் டிரெண்ட்! கடந்த சில ஆண்டுகளிலேயே, ஐந்துக்கும் மேற்பட்ட ஃபுட்சால் மைதானங்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளன. சாதாரண கால்பந்து மைதானத்தைப் போல இல்லாமல், காம்பேக்ட் ஸ்பேஸில் விளையாடுவதுதான் ஃபுட்சால் ஆட்டத்தின் பியூட்டி.  சென்னை துரைப்பாத்தில் புதிய மைதானம் திறந்துள்ள தகவல் கேட்டு, ஸ்பாட்டுக்கு போனோம்.  `இன்னொரு ஃபுட்சால் கிரவுண்டா’ என நினைத்துப் போனால், அங்கு ஆச்சர்யம்!


”ஹோம் ஆஃப் எஃப்.சி மெட்ராஸ்” என்ற சுவரொட்டி நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்தால், முழு கால்பந்து மைதானம் நம் கண் முன்னே. பிரமாண்டமான கால்பந்து மைதானத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருந்தது. மெஸ்ஸி, ரொனால்டோ, பெக்காம், நெய்மர், சுனில் சேத்ரி என கால்பந்து நட்சத்திரங்களின்  புகைப்படங்கள் கொண்ட சுவரொட்டிகள் ஒவ்வொரு துருவத்தையும் அலங்கரிக்கின்றன. கால்பந்தை உயிராய் நேசிப்பவர்கள், புது மைதானத்தை ரசித்து ரசித்து பார்த்து கொண்டிருக்க, இந்த மைதானத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? பயிற்சியாளர் அரிந்தம் பிஸ்வாஸுடன் பேசினோம். 

``ஃபிஃபா தரத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை புல்தரை மைதானம் இது. எஃப்.சி மெட்ராஸ்  அணியின் ஹோம் கிரவுண்ட். பல முயற்சிகளுக்கு பிறகு, ஒரு முழுமையான கால்பந்து மைதானம் உருவாகியுள்ளது. இந்த முயற்சியால், திறமையான பல கால்பந்து வீரர்களின் விளையாட்டை மேலும் பட்டைத்தீட்டலாம்” என்றார்.

எஃப்.சி மெட்ராஸ் ஃபுட்பால் க்ளப், 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கால்பந்து விளையாட்டின் மீதான காதலால், கார்ப்பரேட் பணியில் இருந்து விலகிய இரண்டு நண்பர்களால் உருவானதுதான்  எஃப்.சி மெட்ராஸ் க்ளப். அரிந்தம் பிஸ்வாஸ், ஜோசப் வாஸ் ஆகியோரின் கால்பந்து கனவு, இன்று ஒரு க்ளப்பை நிர்வாகிக்கும் அளவு வளர்ந்துள்ளது. கால்பந்து பயிற்சி அகாடெமியாக ஆரம்பிக்கப்பட்ட எஃப்.சிமெட்ராஸ், இப்போது 20-க்கும் மேற்பட்ட இடங்களில்  பயிற்சி அளித்து வருகிறது. 


கால்பந்து மீதான ஈடுபாடு கொண்ட இருவர் சேர்ந்து பணியாற்றும்போது, கனவுகளும் பெரிதாகத்தானே இருக்கும்! திறமையான கால்பந்து வீரர், வீராங்கனைகளைக் கண்டெடுத்து, இந்திய அணிக்கு விளையாடத் தேர்ச்சி பெறும் அளவுக்குப் பயிற்சியளிப்பதே இவர்களின் ஒரே கனவு. “ஐரோப்பிய நாடுகளில் 4 முதல் 6 வயதிலேயே கால்பந்து பயிற்சிகள் தொடங்குகின்றன. ஆறு வயதில் இருந்து பயிற்சி செய்தால் மட்டுமே, U-13, U-15 எனப் படிப்படியாய் முன்னேறி, இந்திய அணிக்காக விளையாட முடியும். வலுவான இந்திய அணியையும் உருவாக்க முடியும்” என்றார் பயிற்சியாளர் அரிந்தம்.

இவர்களின் கனவுகள் நிஜமாகத் தேவை, ஒரு மைதானம்! ``கடந்த 12 ஆண்டுகளாக, மெட்ராஸ் எஃப்.சி க்ளப்புக்கு என நல்ல மைதானம் இல்லாதது பெரிய குறை. பல முயற்சிகளுக்குப் பிறகு, ஸ்பான்சர்களின் உதவியோடு இப்போது ஒரு ஹோம் கிரவுண்ட் உருவாகியுள்ளது.  சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட டிரெஸ்ஸிங் ரூம், கேலரி அமைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த விளையாட்டு மைதானத்தில், கால்பந்து வீரர்கள் பயிற்சி செய்ய ஆயுத்தமாக உள்ளனர். 

மணிப்பூர், சிக்கிம், கேரளா, தமிழ்நாடு என மற்ற மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 திறமையான சிறுவர்கள், எஃப்.சி மெட்ராஸ்  க்ளப்பின் பிரத்யேக கால்பந்து பயிற்சி திட்டத்தில் இணைந்துள்ளனர். 3 மற்றும் 7 ஆண்டுகள் கொண்ட இந்த ரெசிடென்ஷியல்  திட்டத்தில், கால்பந்து - கல்வி என இரண்டும் அடங்கும்.  ``இந்த 35 சிறுவர்களும் ஐ-லீக், ஐ.எஸ்.எல் தொடங்கி இந்திய கால்பந்து அணிக்காக விளையாடத் தேர்ச்சி பெறும் வரை முன்னேறுவார்கள்.” என உறுதியாகச் சொல்கிறார் அரிந்தம்.

சென்னையைப் பொறுத்தவரை, கால்பந்துக்கு  ஒரேயொரு  நல்ல மைதானம் மட்டுமே உள்ள நிலையில், இப்போது மற்றுமொரு கிரவுண்ட் உருவானது கால்பந்து ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.  ”எஃப்.சி மெட்ராஸ் க்ளப்பின் ஹோம் மைதானமாக மட்டும் இருக்காது. கால்பந்து விளையாடவும், பயிற்சி மேற்கொள்ளவும் விரும்பும் மற்ற அணிகளும் இந்த மைதானத்தைப் பயன்படுத்தலாம்” என்றார் எஃப்.சி மெட்ராஸின் மற்றொரு நிறுவனரான ஜோஸப்.

2018 தேசிய ஜூனியர் கால்பந்து போட்டியில், தமிழ்நாடு சாம்பியன். இதில் கவனிக்கப்பட வேண்டியது, சாம்பியன் பட்டம் வென்றது தமிழ்நாடு மகளிர் அணி.  கால்பந்து விளையாட்டில், தமிழக மகளிரும் சாதனைகள் படைத்து வரும் இந்த வேளையில், எஃப்.சி மெட்ராஸ் க்ளப்பிலும் 50க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார் ஜோஸப். பேசிக் கொண்டிருக்கையில், பயிற்சி ஆட்டத்தில் கோல் அடித்த இளம் வீரர், மெஸ்ஸியின் சுவரொட்டியைப் பார்த்து முத்தம் கொடுத்தபடி தன் கோலை கொண்டாடினார். எனக்குத் தோன்றியது ஒன்றுதான், ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளிலும் இந்திய கால்பந்தில் பல சாம்பியன்களைக் காண்பது உறுதி.