Published:Updated:

மாயமா... மரணமா? அர்ஜென்டினா கால்பந்து வீரர் சலாவின் நிலை என்ன?! #EmilianoSala

நேற்று, பிரான்ஸ் கடற்கரையில் சீட் குஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சலா பயணித்த விமானத்தின் சீட் குஷன் போல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட, சலா இறந்துவிட்டாரோ என்ற அச்சம் நிலவி வருகிறது! 

மாயமா... மரணமா? அர்ஜென்டினா கால்பந்து வீரர் சலாவின் நிலை என்ன?! #EmilianoSala
மாயமா... மரணமா? அர்ஜென்டினா கால்பந்து வீரர் சலாவின் நிலை என்ன?! #EmilianoSala

ர்ஜென்டினாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர், எமிலியானோ சலா. கடந்த ஜனவரி 21-ம் தேதி பிரான்ஸின் நான்டிஸ் நகரிலிருந்து வேல்ஸில் இருக்கும் கார்டிஃப் நகருக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்தபோது, விமானம் திடீரென மாயமானது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன. மூன்று நாள்கள் விமானத்தின் எந்தத் தடயமும் கிடைக்காததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸ் கடற்கரையில் சீட் குஷன்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. அவை சலா பயணித்த விமானத்தின் சீட் குஷன்போல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட, அவர் இறந்துவிட்டாரோ என்ற அச்சம் நிலவிவருகிறது! 

ஸ்ட்ரைக்கராக விளையாடுபவரான சலா, தொடக்க காலகட்டத்தில் போர்ச்சுக்கல் லீக்கில் விளையாடினார். அதன் பிறகு 2012-ம் ஆண்டு பிரெஞ்சு அணியான போர்டியாக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்காததால் ஓர்லியன்ஸ், நியார்ட் மற்றும் சீன் அணிகளுக்காக லோன் முறையில் விளையாடினார். 2015-ம் ஆண்டில்தான் அவருக்கு நிரந்தரமான வாய்ப்பு கிடைத்தது. நான்டஸ் அணி இவரை ஒரு மில்லியன் யூரோவுக்கு வாங்க, விரைவில் அந்த அணியின் முக்கிய வீரர் ஆனார். அந்த அணிக்காக 133 போட்டிகளில் 48 கோல்கள் அடித்துள்ள அவரை, இந்த மாதம்தான் 15 மில்லியன் யூரோ கொடுத்து ப்ரீமியர் லீகின் கார்டிஃப் சிட்டி அணி ஒப்பந்தம் செய்தது. 

தனது பழைய அணியான நான்டஸ் அணியினரைப் பார்த்து விடைபெற்ற பிறகு, ஜனவரி 21-ம் தேதி கார்டிஃப் நகருக்கு `Piper Malibu' எனும் சிறிய ரக தனியார் விமானத்தில் பைலட் டேவிட் இபாட்சனுடன் புறப்பட்டார் சாலா. `இரவு 10 மணி அளவில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது' என பிரெஞ்சு உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரி அறிவித்த நிலையில், அவர்கள் ஆங்கிலக் கால்வாயின், கர்ன்ஸி என்னும் தீவிலுல் உள்ள Casquets lighthouse என்னும் இடத்தில் விழுந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. அன்று இரவே கார்டிஃப் சிட்டி அணியின் சேர்மன் மெஹ்மத் தல்மான் விமானம் தொலைந்தது வருத்தமளிப்பதாகவும், `அவர் உயிருடன் இருப்பார் என இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறோம்' என்றும் தெரிவித்தார். 

ஹெலிகாப்டர் மூலம் சுமார் 15 மணி நேரம் தேடியதில் ஏமாற்றமே மிஞ்சியது. ``விமானம் தண்ணீரில் விழுந்திருந்தால் உயிர்பிழைக்க வாய்ப்பு மிகக் குறைவு. 3,000 சதுர கிலோமீட்டர் ஆங்கிலக் கால்வாயைச் சுற்றி நடந்த தேடுதலில் அந்தப் பகுதியில் உள்ள நீர்ப் பகுதிகளில் விமானத்தின் பாகங்கள் ஒன்றும் தென்படவில்லை" எனத் தேடுதலுக்குப் பிறகு அதிகாரிகள் கூறினர்.

கண்ணீருடன் அன்று பேட்டியளித்த அவரது தந்தை ``நேரம் செல்லச் செல்ல பயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை என்னிடம் தூதரகமோ, கால்பந்து க்ளப்போ யாருமே தொடர்புகொள்ளவில்லை. தேடுதல் பணிகளை முடுக்கிவிட வேண்டும்" என்றார். அன்று இரவு வரை நடந்த தேடுதல் பணிகள், எந்தப் பலனையும் அளிக்கவில்லை. தேடுதல் பணி, அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதன்கிழமை காலை, மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. தெற்கு பிரான்ஸின் முக்கிய வீதிகளிலும், மைதானத்தின் முன்பும் சாலாவுக்கு மெழுகுவத்தி ஏந்தி, ரசிகர்கள் பிராத்தனை செய்தனர். அன்று மாலை விமான அதிகாரிகள், ``அவர் பயணம் செய்தது ஒரு இன்ஜின் மட்டுமேகொண்ட சிறிய ரக விமானம். அதைக்கொண்டு இவ்வளவு தூரம் பயணிப்பது கடினமான செயல். கடும் குளிரில் அந்த ரக விமானங்களை இரவு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது. ஆனால், இங்கே அது கவனிக்கப்படவில்லை. இதற்குமுன் இத்தகைய ரக விமானங்கள் கடந்த ஆண்டுகளில் பலமுறை விபத்துகளைச் சந்தித்துள்ளன" என்றனர். 

ஜனவரி 24-ம் தேதி, கர்ன்ஸி போலீஸ் அளித்த பேட்டியில், ``280 சதுர கிலோமீட்டர் அளவில் பல விமானங்களைக்கொண்டு நடந்த தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை" என்றனர். 80 மணி நேர விமானத் தேடுதலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால், தேடுதலை நிறுத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து கால்பந்து ரசிகர்கள், வீரர்கள் பலரும் `சலாவைத் தேடும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்' என்று தொடர்ந்து வலியுறுத்தினார். சலாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் தனியார் தேடுதல் குழுவை நாடினர். 3 லட்சம் யூரோ கொடுத்து ஆழ்கடல் பகுதிகளில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், அந்த சீட் குஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டன! சலா உயிருடன் திரும்ப வேண்டும் என்று கால்பந்து ரசிகர்கள் பிராத்தனை செய்துகொண்டிருக்க, இதுபோன்ற செய்திகள் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன.