Published:Updated:

உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் சேலஞ்சர்ஸ் கோப்பை... நாசரேத் சாம்பியன்!

உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் சேலஞ்சர்ஸ் கோப்பை... நாசரேத் சாம்பியன்!
உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் சேலஞ்சர்ஸ் கோப்பை... நாசரேத் சாம்பியன்!

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சியில் நடைபெற்ற ‘சேலஞ்சர்ஸ் கோப்பை’ கால்பந்து தொடரை, மர்காஷியஸ் சீனியர் அணி கைப்பற்றியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள இளம் கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், நாசரேத் சேலஞ்சர்ஸ் அகாடமி சார்பில் கால்பந்து தொடர் நடத்தப்பட்டது. வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து 12 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொண்டன. 


டிசம்பர் 27-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. முடிவில் எஸ்.இ.சி கேரளா அணியும், நாசரேத் மர்காஷியஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் இறுதிப் போட்டியைத் தொடக்கி வைத்தார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இதனால், டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் யார் என தீர்மானிக்கப்பட்டது. ஷூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் நாசரேத் மர்காஷியஸ் சீனியர் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி தேவசகாயம், வெற்றி பெற்ற அணிக்குக் கோப்பையை வழங்கினார்.

உள்ளூர் வீரர்களின் கால்பந்து ஆர்வத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட `சேலஞ்சர்ஸ் கோப்பை’யின் முதல் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது. திறமையான இளம் கால்பந்து வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் விளையாடி வருகின்றனர். சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அவர்களுக்கு, இதுபோன்ற தொடர்கள் நல்ல வாய்ப்பாக அமையும்.