Published:Updated:

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மொரினியோவை வீழ்த்த முடியுமா?!
மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

பிரீமியம் ஸ்டோரி

ளத்தில் வீரர்கள் முறைத்துக்கொண்டு நிற்கிறார்கள். டச் லைனுக்கு அருகில் இரு அணியின் பயிற்சியாளர்களும் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். இரு அணியின் ரசிகர்களும் அரங்கத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானம் அந்த மாலை உஷ்ணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்கள் முன்பு மரியாதையின் மறுபெயராய் இருந்த ரசிகர்கள் இப்போது, இன்னொருவரின் ஈகோவைக் கிளறிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைதியாய் பழைய நினைவுகளுக்கு மரியாதை கொடுத்துக்கொண்டிருந்தவர், திடீரென்று கோபத்தின் உச்சத்துக்குச் செல்கிறார். சிவப்பு உடையணிந்திருந்த ரசிகர்களிடம் ஒருவகையான இயலாமை. அது அந்தப் பயிற்சியாளரின் பிரதிபலிப்பாகவும் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு உணர்வு. ஆட்டம் நடந்த 98 நிமிடமும் இப்படி உணர்வுகள் மாறி மாறி வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. வெற்றியின் களிப்பும், தோல்வியின் ஏமாற்றமும் மட்டும் நிறைந்ததா கால்பந்தா களம்?!

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

கேம் ஸ்டார்ட்ஸ்...

கடந்த அக்டோபர் 20-ம் தேதி செல்ஸீ, மான்செஸ்டர் யுனைடட் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி சிறந்த கால்பந்தையும் தாண்டி, பல்வேறு உணர்வுகளைக் கடத்தியது. முதல் பாதியில் செல்ஸீ ஆதிக்கம் செலுத்தியதால், ஆட்டம் ஒருதலைப்பட்சமாகத்தான் இருந்தது. அரணாக விளங்கிய செல்ஸீ டிஃபண்டர்களை யுனைடட் வீரர்களால் தாண்டமுடியவில்லை. தொடக்கத்தில் விங்கில் கொஞ்சம் வேகம் காட்டினாலும் போகப்போக அது குறைந்தது. நடுகளத்தில் வழக்கமான செல்ஸீ அதிக்கம் தொடர்ந்தது. போக்பா, மேடிச் கூட்டணியால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

சாதாரணமாகவே ஆட்டம் காணும் யுனைடட் டிஃபன்ஸ் ஹசார்ட் ஆடிய ஆட்டத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் கண்டது. நல்லவேளையாக மொராடா, வில்லியன் இருவரும் சுமாராக ஆடியதால் ஓரளவு தப்பித்தது. போகப்போக கொஞ்சம் நிலைத்து ஆடத்தொடங்கியது. ஆனாலும், Aerial பால்களில் ரொம்பவும் தடுமாறியது. அதனால் செல்ஸீக்குக் கிடைத்த முதல் கார்னரிலேயே கோல் வாங்க நேர்ந்தது. போக்பா, ருடிகரை சரியாக மார்க் செய்யாமல்விட, எளிதாக ஹெடர் கோல் அடித்தார் ருடிகர். அமைதியாக 1-0 என முடிந்தது முதல் பாதி ஆட்டம். இரண்டாவது பாதி... அந்த 45 நிமிடம்... எத்தனை களேபரங்கள்..! அதைப்பற்றியெல்லாம் பேசும் முன் இந்த செல்ஸீ -மான்செஸ்டர் யுனைடட் ரைவல்ரியை அறிவது அவசியம்.

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

ஃப்ளாஷ்பேக் 1...

மான்செஸ்டர் யுனைடட் அணியின் மேனேஜர் - ஜோஸே மொரினியோ முன்னாள் செல்ஸீ மேனேஜர். ஆறு சீசன்கள் அந்த அணியை வழிநடத்தியவர். 3 முறை பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்று தந்தவர். அதுவும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணிக்கு முதல் டிவிஷன் பட்டம் வென்றுகொடுத்தவர். இந்தப் போட்டி நடந்த ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் முன்பெல்லாம் 'ஸ்பெஷல் 1' என்றெழுதிய பேனர்கள் ஒவ்வொரு கேலரியிலும் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்பெஷல் ஒன் பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கும். ஆனால், இந்த 3 ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

2015-ம் ஆண்டு செல்ஸீ அணியின் மேனேஜர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் மொரினியோ. அவர் அந்தப் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவது அது இரண்டாவது முறை. அதனால் முன்பிருந்த நேசம் அவருக்கு இல்லை. இரண்டாவது வெளியேற்றம் அவரது ஈகோவை அசைத்துப்பார்த்தது. அதன்பின் யுனைடட் மேனேஜரானார். 2016-ம் ஆண்டு எதிரணி மேனேஜராக ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் வந்தார். எவ்வளவு எமோஷனலாக இருந்திருக்கும். அந்தப் போட்டியில் 4-0 என யுனைடடை பஞ்சராக்கியது செல்ஸீ. ஆன்டோனியோ கான்டே தலைமையில் செல்ஸீ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்ததால், படுதோல்வி அடைந்த மொரினியோவைக் கலாய்த்தனர் சில செல்ஸீ ரசிகர்கள். தன் ஈகோ உடைக்கப்பட, எமோஷன்களை தள்ளிவைத்து வெறியானார் கால்பந்து உலகின் டெரர் மேனேஜர். பிரஸ் மீட்களில் வழக்கமாக எதிரணி மேனேஜர்களைப் பொறித்துத் தள்ளுபவர், செல்ஸீ ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லத் தொடங்கினார். அவர்களுக்குக் கோப்பை வென்று கொடுத்தது யாரென்று ஞாபகப்படுத்தினார். ஆனால், அடுத்த சீசனிலும் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் தோல்வியடைய, அவரது ஈகோ நொறுங்கிக்கொண்டே இருந்தது.

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

ஃப்ளாஷ்பேக் 2...

மான்செஸ்டர் யுனைடட் அணியின் பயிற்சியாளராகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் பிரீமியர் லீக் கோப்பை வெல்லவில்லை. மான்செஸ்டர் சிட்டி, செல்ஸீ கோப்பை வென்றுவிட்டன. லிவர்பூல் முன் எப்போதையும்விட பலமாக இருக்கிறது.

இந்த சீசனிலும் இந்த 3 அணிகள்தான் டாப் பொசிஷனில் இருக்கின்றன. மூன்று அணிகளும் பிரீமியர் லீகில் இன்னும் தோற்கவேயில்லை. 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 டிரா, 23 புள்ளிகள் என சம நிலையில் இருக்கின்றன. ஆனால், யுனைடட்? 8 போட்டிகளில் வெறும் 13 புள்ளிகள் பெற்று எட்டாம் இடம். கத்துக்குட்டி போர்ன்மௌத், வோல்வர்ஹாம்ப்டன் அணிகளெல்லாம் இவர்களுக்கு மேல் ஆறாவது, ஏழாவது இடங்களில்!

டாட்டன்ஹாம் அணியிடம் தோற்றது பரவாயில்லை. சுமாரான வெஸ்ட் ஹாம்,  பிரிட்டன் அணிகளிடம் தோற்றிருந்தது. லீக் கோப்பையில் கத்துக்குட்டி டெர்பியிடமும் தோற்க, எல்லா இடங்களிலும் மொரினியோவுக்கு எதிரான முழக்கம். போக்பாவுடனான உறவில் விரிசல் ஏற்பட, மொரினியோ எப்போது வெளியேற்றப்படுவார் என்று காத்திருந்தது ஒரு கும்பல். ஒருவேளை மீண்டும் பிரிட்ஜில் 4-0 என தோற்றால் உடனடியாக டிஸ்மிஸ்தான்.

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

பேக் டு தி பிரிட்ஜ்...

மொரினியோ தன் பதவியைப் பாதுகாத்துக்கொள்ள தோற்காமல் இருக்கவேண்டும். மொரினியோ தன் தன்மானத்தைக் காத்துக்கொள்ள தோற்காமல் இருக்கவேண்டும். மொரினியோ தான் ஸ்பெஷல்  என்பதை மீண்டும் நிரூபிக்க... இந்த செல்ஸீ கூட்டத்தின் முன் நிரூபிக்க வெற்றி பெற்றாகவேண்டும். இது வெறும் இரு பெரிய அணிகள் மோதும் இன்னொரு பிரீமியர் லீக் ஆட்டம் இல்லை. மரியாதையையும், தன்மானத்தையும் மீட்கவேண்டிய போராட்டம். இரண்டாவது பாதியில் மொரினியோ போராடத் தயாரானார். ரெட் டெவில்ஸ் வீரர்களும் தயாரானார்கள்.

நடுகளத்தைத் தாண்டாத யுனைடட் பாஸ்கள் செல்ஸீ 'தேர்டில்' பறந்துகொண்டிருந்தன. எப்போதும் 100 சதவிகித ஆட்டத்தைக் கொடுக்கும் செல்ஸீ மிட்ஃபீல்டர் ஜார்ஜினியோ தடுமாறினார். செல்ஸீ வீரர்களின் பாஸ்கள் மிஸ்ஸாகின. 'சர்ரி பால்' அரங்கேறவில்லை. இந்த சீசனில் அவர்கள் இதுவரை ஆடிய ஆட்டம் மறைந்தது. செல்ஸீ பயிற்சியாளர் மரிசியோ சர்ரி உக்கிரமாகிறார். சொதப்பும் தன் வீரர்களை நோக்கி உரக்கக் கத்துகிறார். 55-வது நிமிடம், செல்ஸீ வீரர்களின் குழப்பம் அவர்களது பாக்ஸுக்குள் தொடர்கிறது. ஒரு சரியான கிளியரன்ஸ் செய்யாததன் விளைவு, ஆட்டத்தை சமன் செய்கிறார் ஆன்டனி மார்ஷியல். செல்ஸீ ரசிகர்கள் அடங்கிப்போகிறார்கள். மொரினியோ, செல்ஸீ லோகோ போட்ட இருக்கையில் கால்கள் நீட்டி ஆசுவாசமாக அமர்கிறார். ஸ்பெஷல் ஒன் பாடல் யுனைடட் ரசிகர்கள் இருந்த திசையில் ஒலிக்கத் தொடங்குகிறது.

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

யுனைடடின் ஆதிக்கம் அதோடு நின்றுவிடவில்லை. 73-வது நிமிடத்தில், டேவிட் லூயிஸ் செய்த ஒரு தவறு இரண்டாவது யுனைடட் கோலுக்கு வழிவகுக்கிறது. போட்டிக்கு முன்பு "எங்கள் அணி முன்னிலை பெற்றால் நான் கொண்டாடமாட்டேன்" என்று சொல்லியிருந்தார் மொரினியோ. என்னதான் வெற்றி முக்கியமாக இருந்தாலும், பழைய வரலாறு அவரை உறுத்திக்கொண்டிருந்தாலும், தான் முன்பு நேசித்த இடத்தில் மீண்டும் சர்ச்சைகள் எழுப்ப அவர் விரும்பவில்லை. அன்று தன்னை ஆதரித்த ரசிகர்களின் உணர்வுகளை சீண்ட விரும்பவில்லை. சொன்னதுபோலவே அமைதியாய் இருந்தார். எப்போதும் அவர் கண்களில் இருக்கும் ஈகோ அப்போது இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இருக்கை, அவரது சாந்தமாக வைத்திருந்தது. அந்த நீல நிறம் அவரை அமைதிப் படுத்தியிருந்தது.

மாடா = ரெஸ்பெக்ட்!

இரண்டாவது கோலடித்து இரண்டு நிமிடங்கள் கழித்து மாற்றப்படுகிறார் யுவான் மாடா. பொதுவாக ஒரு அணி முன்னணியில் இருக்கும்போது, நன்றாக விளையாடி வெளியேறும் வீரருக்கு அந்த அணியின் ரசிகர்கள் ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுப்பார்கள். ஆனால், மாடாவுக்கு மொத்த அரங்கமும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது. பின்னணியில் இருக்கும் ஒரு பலம் வாய்ந்த வைரி அணியின் ரசிகர்களிடம் அந்த மரியாதையை சம்பாதிப்பது பெரிய விஷயம். மாடா அதை உரித்தாக்கினார். ஏனெனில், 4 ஆண்டுகள் முன்புவரை அவர் செல்ஸீ வீரர். ஆனால், எல்லா முன்னாள் வீரர்களுக்கும் இந்த மரியாதை கிடைத்துவிடாது. டி புருய்னே, சலா போன்றவர்கள் இந்த மரியாதையை அனுபவித்தது இல்லை. ஆனால், அவர்களை விட சுமாரான மாடாவுக்கு அது கிடைத்தது. ஏனெனில், இன்றும்கூட அவர் அந்த நீல ரசிகர்களின் அங்கமாகத்தான் பார்க்கப்படுகிறார். விளையாடிய 4 ஆண்டுகளில், 2 முறை அணியின் 'பிளேயர் ஆஃப் தி சீசன்' விருது வென்றவர். செல்ஸீ ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். அவரை எளிதில் வேறு ஆளாக செல்ஸீ ரசிகர்களால் பார்த்திட முடியாது. மொரினியோவுக்கு எதிராக முகத்தைத் திருப்பியவர்களால், மாடாவுக்கு எதிராக முடியவில்லை. இதுதான் தன் வாழ்நாளில் மாடா பெற்ற மிகப்பெரிய வெற்றி!

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

பேக் டூ மொரினியோ...

மொரினியோவிடமிருந்து வெகு நேரம் கேமராக்கள் விலகி நிற்க முடியாது. அவரே நினைத்தாலும்கூட முடியாது. வெகுநேரம் அமைதியாக இருந்தவரை உசுப்பேற்றியது செல்ஸீ அடித்த ஈக்வலைசர். ஸ்டாப்பேஜ் டைமில் ராஸ் பார்க்லி கோலடித்து ஆட்டத்தை சமனாக்க, டச் லைனில் இருந்த செல்ஸீ துணை பயிற்சியாளர் மார்கோ இயானி ஆர்ப்பரித்து யுனைடட் டக் அவுட் ஏரியாவைத் தாண்டினார். சும்மா இருக்காமல் மொரினியோவைப் பார்த்துக் கத்த, அதுவரை அமைதிகாத்த ஸ்பெஷல் ஒன் சூடானார். டக்கென்று எழுந்து இயானியை விரட்டிப்போய் சண்டையிட்டார். நடுவர்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் என டக் அவுட் அருகே குவிய, மொரினியோவை சாந்தப்படுத்தினார் செல்ஸீ மேனேஜர் சர்ரி.

அதே பழைய மொரினியோவைப் பார்த்தவர்கள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப்போனார்கள். வெற்றி, தோல்வி, ஆதரவு அதையெல்லாம் தாண்டி, அவரது ஈகோவைத் தொட்டுவிட்டால் அவ்வளவுதான். அவர் வெடித்துவிடுவார். இப்படி இதற்கு முன் மொரினியோ பொங்கியபோதெல்லாம், செல்ஸீ மேனேஜராக டக் அவுட்டின் இடதுபுறம் இருப்பார். இப்போது வலதுபுறம். மொரினியோவைக் கொண்டாடும் செல்ஸீ ரசிகர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை. மொரினியோ அமைதியாக உட்காரும்வரை ஒருவிதமான படபடப்பு நிலவிக்கொண்டே இருந்தது.

மொரினியோவை வீழ்த்த முடியுமா?!

இது ஓயும்போது, களத்தில் வீரர்கள் மோதிக்கொள்ளத் தொடங்கினர். நடுவர்களை, வீரர்களை என மாறி மாறி சமாதானம் செய்து ஆட்டத்தின் கடைசி விசிலை நடுவர் மைக் டீன் அடித்தபோது, அந்த மைதானத்துக்குள் பலவகையான உணர்வுகள். வெற்றி பறிபோய்விட்டதே என்ற சில யுனைடட் ரசிகர்களின் கவலை, மொரினியோவுக்கு ஆதரவளித்த சில யுனைடட் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, 'ஒருவழியாக ஆட்டத்தை டிரா செய்துவிட்டோம்' என்ற சில செல்ஸீ ரசிகர்களின் நிம்மதி, மொரினியோ - செல்ஸீ உறவை நினைத்து கவலைப்பட்ட சில செல்ஸீ ரசிகர்களின் ஏக்கம்... இவற்றைத் தாண்டி மீண்டும் கேமராவை ஈர்த்தார் மொரினியோ.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் 4-0 என தோற்றபோது மூன்று விரல்களைக் காட்டி, தோல்விக்குப் பின்னும் கெத்தாக வெளியேறிய அதே மொரினியோ. தன்னைக் கலாய்த்த, வெறுப்பேற்றிய, Judas (துரோகி) என்ற பழித்த செல்ஸீ ரசிகர்களுக்கு அந்த மூன்று விரல்களைக் காட்டி, ‘‘உனக்கு நான்தான் 3 பிரீமியர் லீக் ஜெயித்துக் கொடுத்திருக்கேன். வேறு யாராவது 4 கோப்பைகள் ஜெயித்துக் கொடுத்தால் என்னை ஜூடாஸ் என்று கூப்பிடு’’ என்று சொன்ன அதே மொரினியோ. செல்ஸீ - மான்செஸ்டர் யுனைடட்  யுத்தம், மொரீனியோ - செல்ஸீ யுத்தமாக மாறிவிட்டது. ஆனால், இந்தப் போட்டிகளின் முடிவுகள் எப்படியிருந்தாலும், செல்ஸீ யுனைடடை வீழ்த்தினாலும், மொரினியோவை, அவர் ஈகோவை யாராலும் வீழ்த்த முடியாது!

- மு.பிரதீப் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு