Published:Updated:

ஜெரார்டு, நீ வீரனுக்கும் மேல..! கிளப் விசுவாசத்தின் சாட்சியம் #MakeUsDream

ஜெரார்டு, நீ வீரனுக்கும் மேல..! கிளப் விசுவாசத்தின் சாட்சியம் #MakeUsDream
ஜெரார்டு, நீ வீரனுக்கும் மேல..! கிளப் விசுவாசத்தின் சாட்சியம் #MakeUsDream

நெட்ஃபிளிக்ஸுக்குப் போட்டியாக `அமேசான் ப்ரமை்’ விளையாட்டுத் தொடர்பான ஆவணங்கள் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது போல! சமீபத்தில், நெட்ஃபிளிக்ஸில் வந்த `Becoming Champions’- சீரிஸை விட, ஸ்டீவன் ஜெரார்டு பற்றிய ப்ரைம் வீடியோவின் `Make us Dream’ ஆவணப்படத்துக்கு நல்ல வரவேற்பு. `Becoming Champions’ உலகக் கோப்பை வென்ற நாடுகளின் கலாசாரம், வாழ்வியில், அவர்கள் வெற்றிக்கதையைப் பேசியது. `Make us Dream’ அப்படி அல்ல. இரண்டுமே கால்பந்து ரசிகர்களுக்குப் பரிச்சயமான கதை என்றாலும், `Make us Dream’ IMDB ரேங்கிங் ரேஸில் முந்தியிருக்கக் காரணம், கிளப் விசுவாசம் எனும் அந்த ஒன்லைன்! #MakeUsDream

இத்தனைக்கும் ஸ்டீவன் ஜெரார்டு – கால்பந்து வீரர்களில் `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) இல்லை. இங்கிலாந்து கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த மிட்ஃபீல்டர் லிஸ்ட்டிலும் இல்லை. அவர் ப்ரொஃபைலில் ப்ரிமீயர் லீக் பட்டம் இல்லை; உலகக் கோப்பை இல்லை. ஆனால், ஒரு விஷயத்தில் எல்லா லெஜண்டுகளையும் ஓரங்கட்டிவிட்டார். அது, வளர்த்து விட்ட இடத்தை மறக்காதது! 

`Make us Dream’ - அதீத மிகைப்படுத்தல் இல்லாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்திருக்கிறது. அதனால்தான், மற்ற ஸ்போர்ட்ஸ் ஆவணங்களிலிருந்து இது வேறுபடுகிறது. ஷூ வாங்க வசதியில்லாத வறுமை, அணியில் இடம் கிடைக்கப் போராட்டம், துரத்தும் தோல்விகள், ஒரு வழியாகவெற்றி, கடைசியில் சாம்பியன் என்ற கிளிஷேவில் சிக்காமல், ஒருவித கழிவிரக்கத்துடன் நாயகன் விடைபெறுவதைப் போல முடித்திருப்பதிலேயே, இந்த ஆவணம் அப்ளாஸ் அள்ளுகிறது. 2005 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் லிவர்பூல் சாம்பியன் பட்டம் வென்றதோடு எண்டு கார்டு போட்டிருந்தால், இந்தப் படம் பத்தோடு பதினொன்றாக இருந்திருக்கும். ஆனால், அப்படி முடிக்கவில்லை இயக்குநர் சாம் பிளேர். (`மாரடோனா 86’ என்ற ஆவணப்படத்தை இயக்கியவர்).

`ஒருவன் தன் காதலியை மாற்றிவிடுவான். மனைவியைக்கூட மாற்றி விடுவான். ஆனால், ஒருபோதும் தனக்குப் பிடித்த கிளப்பை மாற்றவே மாட்டான்’ என்றொரு பேச்சு ஐரோப்பிய கால்பந்து உலகில் உண்டு. அதை மெய்ப்பிக்கும்விதமான காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளம். `You'll Never Walk Alone’ என்ற வாசகம் ஏந்தி வரும் ரசிகர்களுக்கும், லிவர்பூல் கிளப்புக்கும் இடையிலான பந்தம் ஓர் அழகியல் பதிவு. 2005 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலைப் பார்க்க துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செஞ்சட்டை சகிதமாகப் படையெடுத்து வரும்போதும், அந்த ஃபைனலில் இடைவேளைக்கு முன்பே மூன்று கோல்கள் வாங்கிய தங்கள் அணியை ஊக்கும்விதமாக`You'll Never Walk Alone’ என்று ரசிகர்கள் பாடும்போதும் தட் கூஸ்பம்ப் மொமென்ட்! 

அன்று அங்கு அந்த ரசிகர்கள் மட்டும் அந்த உற்சாகத்தைக் கொடுக்காமல் இருந்திருந்தால், இடைவேளைக்குப் பின் லிவர்பூல் மூன்று கோல்கள் அடிப்பதும், ஷூட் அவுட்டில் லிவர்பூல் வென்று சாம்பியன் பட்டம் வெல்வதும் சாத்தியமா எனத் தெரியவில்லை. ஒரு காலத்தில், குறிப்பாக 1970, 1980-களில் பில் ஷேங்க்லி, பாப் பெய்ஸ்லி மேனேஜராக இருந்தபோது 11 லீக் டைட்டில், ஏழு யூரோப்பா கோப்பை எனக் கொடிகட்டிப் பறந்தது லிவர்பூல். அன்று முதல் இன்று வரை, டைட்டில் வென்றாலும் இல்லாவிட்டாலும், `என்ன நடந்தாலும் உங்களுக்குத் துணை நிற்போம்’ என ரசிகர்களின் கிளப் விசுவாசத்தைக் காட்டிய விதமும், `ஹில்ஸ்பாரா’ நெருக்கடியில் ரசிகர்கள் இறந்ததும், அதிலிருந்து மீண்டு வந்த நினைவுகளும், காட்சிகளும் நெகிழ்ச்சித் தருணங்கள். 

பதின்ம வயதிலிருந்து லிவர்பூல் ஜூனியர் பாசறையில் பாலபாடம் பயின்று, மாற்று வீரராக லிவர்பூல் ஜெர்ஸி அணிந்து, பின் கேப்டனாகி, இங்கிலாந்து பிளேயிங் லெவனில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஜெரார்டு நினைத்திருந்தால், இந்நேரம் இன்னும் பல சாம்பியன்ஸ் லீக், பிரிமியர் லீக் டைட்டில், லா லிகா, சீரி ஏ பட்டங்களை வென்றிருக்கலாம். ஆனால், அவரை ஆன்ஃபீல்டிலிருந்து நகரவிடாமல் தடுத்தது ரசிகர்களின் பேரன்பு. 

90-களில் பிரிமியர் லீக் கமர்சியல் அவதாரம் எடுத்தது. சர் அலெக்ஸ் பெர்குசன் தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் வேற லெவல் ஃபார்மில் இருந்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பணத்தை வாரி இறைத்தன கிளப்கள். வெளிநாட்டிலிருந்து ஸ்பான்சர் குவிகிறது. ஸ்டார் பிளேயர்களுக்குக் கோடிகளைக் கொட்டுகின்றன கிளப்கள். ஆனால், லிவர்பூல் அப்படியில்லை. சுணக்கம் காட்டுகிறது. கேம் பிளான் மாறுகிறது. ஆட்டத்தின் வீரியம் கூடுகிறது. இப்படி இருந்தால் எப்படி டைட்டில் ஜெயிக்க முடியும்? இந்தமாதிரியான நேரத்தில்தான், 2005-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றது லிவர்பூல். 

அந்த வெற்றிக்குப் பின், `இதுதான் தருணம்’ என வேறு கிளப்புக்கு மாறலாம் என யோசிக்கிறார் ஜெரார்டு. ஆம், யோசிக்க மட்டுமே செய்தார். அதற்குள், `கடைசியில் பணம் ஜெயித்துவிட்டது’ என ஜெரார்டு பெயர் பொறிக்கப்பட்ட ரியல் மாட்ரிட் ஜெர்ஸியை எரிக்கத் தொடங்கிவிட்டது ஒரு குரூப். `ஜெரார்டு லிவர்பூல் அணியின் முதுகெலும்பு. இன்ஜின் இல்லையெனில் கார் எப்படி இயங்கும்... அவ்வளவுதான்’ என ஆன்ஃபீல்டு மைதானத்தின் கன்னத்தில் கைவைத்து, காத்துக் கிடந்தது இன்னொரு குரூப்.

ஜெரார்டு முடிவெடுக்கத் தடுமாறுகிறார். பணமா, புகழா... ரசிகர்களின் அன்பா, வாழ்க்கை கொடுத்த கிளப்பா என ஏகப்பட்ட குழப்பங்கள். தந்தையிடம் பேசுகிறார். `அப்பா, எனக்கு இவ்வளவு ஆஃபர் வந்திருக்கிறது. கிளப் மாறலாமா என யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ எனக் கேட்கிறார். அதற்கு அவர் தந்தை, `முடிவு உன் கையில். ஆனால், இங்கு ரசிகர்கள் உன் மீது அன்பு செலுத்துவதைப் போல மற்றவர்கள் அன்பாக இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!’ என்றார். தந்தையின் இந்த பதில் ஜெரார்டை கிளப் மாறும் முடிவை மறுபரிசீலனை செய்யவைத்தது. மனதுக்கும், மூளைக்கும் நடக்கும் சண்டையில் மனது சொல்வதைக் கேட்டவர்கள் ஜெயிப்பார்கள். ஜெரார்டு மனது சொன்னதைக் கேட்டார். 

மற்ற கிளப்களின் அசுர வளர்ச்சி, வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும்போது ஒவ்வொரு வீரராக, அணியிலிருந்து வெளியேற ஆரம்பித்தார்கள். `லிவர்பூல் இன்னொரு நாலைஞ்சு வருஷம் இருக்குமா?’ என இங்கிலாந்து அணியில் இருந்த நெருக்கமான வீரர்களே ஜெரார்டை கேலி செய்கிறார்கள். பால்ய நண்பன் மைக் ஒவன் ரியல் மாட்ரிட்டில் சேர்ந்தபோது மனமுடைந்தார். அவரைத் தொடர்ந்து கொடினியோ, மாசெரனோ, அலோன்சா, கடைசியாக சுவாரஸ் என எல்லோருமே லிவர்பூலில் இருந்து குட்பை சொல்லி கிளம்பும்போதும், `நீ இன்னும் கிளம்பல’ என்ற கேள்வியைக் கேட்காமல் கேட்டுவிட்டுச் சென்றனர். 

2013- 2014 சீசனில் பிரிமியர் லீக் பட்டம் வெல்ல லிவர்பூல் கிளப்புக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. மான்செஸ்டர் சிட்டியை வென்றபின், எல்லோரும் சாம்பியன் கனவில் மிதக்க ஆரம்பித்தனர். அதற்கு தடையாக இருந்தது செல்சி. இந்த முக்கியமான போட்டிக்கு முன் ஜெரார்டு காயமடைந்தார். இருந்தாலும், எப்படியும் தன் வாழ்நாளில் ஒரு பிரிமியர் லீக் பட்டம் வென்றுவிட வேண்டும் என `பெயின் கில்லர்’ போட்டு விளையாடினார். கடைசி நேரத்தில் அவர் தவறுதலாகச் சறுக்கிக் கீழே விழுந்துவிட, செல்சீ வீரர் அந்தப் பந்தை வாங்கி, கோல் அடிக்க, லிவர்பூல் தோல்வி. மான்செஸ்டர் சிட்டி அந்தமுறை சாம்பியன். ஆக, ஜெரார்டு கனவு தகர்ந்தது.

`என்ன நடந்தாலும் இந்த மண்ணோடு போகட்டும்’ என சொந்த மண்ணை விட்டு வெளியேற மறுப்பவர்களைப் போல, 2005-க்குப் பின் வேறு கிளப்புக்கு மாறுவதை நினைத்தே பார்க்கவில்லை ஜெரார்டு. இந்த இடத்தில்தான் ஜெரார்டு மற்ற வீரர்களிலிருந்து தனித்துத் தெரிகிறார்.

சரி, இந்தப் படத்தில் குறையே இல்லையா? இருக்கிறது. பொதுவாக, தனிநபர் புராணம் பாடும் இந்த மாதிரி ஆவணப்படங்களில், சம்பந்தப்பட்ட வீரரின் நண்பர்கள், பயிற்சியாளர்கள், உடன் விளையாடியவர்கள், எதிரணி வீரர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் பேசுவது போன்ற `பைட்’ இருக்கும். இதில் அப்படியான காட்சிகள் இல்லாதது மைனஸ். பெற்றோர், மனைவி பேசும் காட்சிகள் வெறும் வாய்ஸ் ஓவரில் கடந்து செல்வது பெரிதாக இம்ப்ரஷ் செய்யவில்லை. அவர்களது முகமே நமக்குப் பதிவாகவில்லை. மற்றபடி, `Lifeline for liverpool’ என அல்டிமேட் வர்ணனைகளை அதன்போக்கில் காட்டியது சிறப்பு.

பொதுவாக, மான்செஸ்டர் யுனைடெட் மேஜேனர் ஜோஸே மொரினியோ வீரர்களைப் புகழ்வது அரிது. அவரே மனம்திறந்து புகழ்ந்த வீரர்களில் ஜெரார்டும் ஒருவர். ``செல்சியில் நான் மேனேஜராக இருந்தபோது ஜெரார்டை வாங்க முயற்சி செய்தேன். பலிக்கவில்லை. இன்டர் மிலனில் இருந்தபோது முயன்றேன். பலிக்கவில்லை. ரியல் மாட்ரிட்டில் இருந்தபோது முயன்றேன் பலிக்கவில்லை. என்றுமே அவர் எனது அருமை எதிரி. அவருக்கு அருமையான கிளப், அற்புதமான ரசிகர்கள் கிடைத்தது. அதனால்தான் அவர் லிவர்பூலை விட்டு மாறவில்லை. இது ஒரு வித உணர்வு. காலத்துக்கும் நீடித்து நிற்கும் உன்னதமான உணர்வு’’ என்றார் மொரினியோ.

Yes... You'll never walk alone Gerrard!