Published:Updated:

``அவரும் ஒருநாள் இத்தாலிக்கு வருவார்!''- ரொனால்டோ நம்பிக்கை

``அவரும் ஒருநாள் இத்தாலிக்கு வருவார்!''- ரொனால்டோ நம்பிக்கை
``அவரும் ஒருநாள் இத்தாலிக்கு வருவார்!''- ரொனால்டோ நம்பிக்கை

போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ ரியல்மாட்ரிட் அணியிலிருந்து விலகி இத்தாலியின் யுவான்டஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இவரை ஒப்பந்தம் செய்ய யுவான்டஸ் 100 மில்லியன் யூரோ செலவழித்தது. ரொனால்டோவுக்கு இணையான வீரராகக் கருதப்படும் மெஸ்ஸி தொடர்ந்து பார்சிலோனா அணிக்காக ஸ்பெயினில் விளையாடி வருகிறார். `மெஸ்ஸியை மிஸ் செய்கிறீர்களா' என்று ரொனால்டோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவரும் ஒருநாள் இத்தாலி வருவார். இத்தாலி கிளப்பில் இணையுமாறும் தன்னைப் போல புதிய சவால்களை மெஸ்ஸி ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று ரொனால்டோ பதிலளித்துள்ளார்.

``எனினும் ஸ்பெயினில் மெஸ்ஸி மகிழ்ச்சியாக இருந்தால் அதற்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். போர்ச்சுகல், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி என்று நான் வலம் வந்துவிட்டேன். ஆனால், மெஸ்ஸி இன்னும் ஒரே நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்ஸி ஒரு அற்புதமான வீரர். இனிமையான மனிதர். இத்தாலியில் நான் யாரையும் மிஸ் செய்ததாக  உணரவில்லை. ஒருவேளை மெஸ்ஸிக்கு அத்தகைய உணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

10 ஆண்டுகளுக்கு முன் யுவன்டஸ் அணியின் பரம எதிரிகளான இன்டர்மிலன், ஏ.சி.மிலன் போன்ற அணிகள் பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்ததாக இருந்தன. ஏ.சி.மிலன் அணியில் ரொனால்டினோ, ககா போன்ற புகழ்பெற்ற வீரர்கள் விளையாடினர். ஆனால், இந்த அணிகள் சமீபகாலமாக சரிவைச் சந்தித்துள்ளன.  மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு யுவன்டஸ் அணியின் பரமஎதிரிகளிடம் பணம் இல்லை என்பதே உண்மை.

அண்மையில் `பல்லான் டி ஓர் விருது' அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த விருதைப் பெறுவதில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு குரோஷிய அணியின் கேப்டன் லூக்கா மோட்ரிச் விருதைப் பெற்றார். கால்பந்து உலகில் ரொனால்டோ, மெஸ்ஸியின் ஆதிக்கம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதையே இது காட்டுகிறது.