Published:Updated:

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

`உங்க ஃபேவரிட் பிளேயர் யாரு' என்ற கேள்விக்கு `மெஸ்ஸி' என்று பதில் சொன்னார். கால்பந்து பார்க்கும், விளையாடும், பெரும்பாலானோர் சொல்லும் பைனரி பதில்தான் இதுவென்று நினைத்திருந்தேன். ஆனால், அவரது ஆட்டத்தைப் பாரர்க்கும்போது ஏற்பட்ட வியப்பு..! மெஸ்ஸியைப் போல்... அதே `லெஃப்ட் ஃபூட்', மின்னல் வேகம்

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!
இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

அவள் விகடன் விருது விழா... சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருகிறார்கள் அந்த 20 சாதனைப் பெண்கள். பெண்கள் அல்ல, சிறுமிகள். தேசிய ஜூனியர் கால்பந்துத் தொடரின் சாம்பியன்களான தமிழக ஜூனியர் அணி. தங்களைச் சூழ்ந்த கேமராக்களை அதிசயமாகப் பார்த்த அந்தக் கண்களில் அவ்வளவு வெகுளித்தனம். போட்டோ செஷன் நடந்த மேடையில் ஏற்றப்படுகிறார்கள். திடீரென்று பரபரப்பு... அரங்கினுள் நுழைந்த நடிகை ஜோதிகா, அவர்களைக் கடந்து அழைத்துச்செல்லப்படுகிறார். தங்களை போட்டோ எடுக்கிறார்கள் என்பதையும் மறந்து, ``ஏ ஜோதிகாடீ..." என்று கத்துகிறார்கள். தாங்கள் சாம்பியன் என்ற எண்ணம் இல்லை, அவர்கள் நிற்கும் அரங்கின் உயரம் தெரியவில்லை, சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து, தமிழகத்தின் கவனம் பெறப்போகும் அவர்களும் `செலிபிரிட்டிகள்தான்' என்று புரியவில்லை. 13, 14 வயதுச் சிறுமிகளிடம் வெளியான அந்தக் குழந்தைத்தனத்தில் வெற்றியின் மமதைகளெல்லாம் உடைந்துகொண்டிருந்தன. 

மேடை ஏறி, விருதை வென்றுவிட்டார்கள். மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்துக் கொண்டாடிய தருணம், தாங்கள் ஏதோ சாதித்துவிட்டோம் என்பதை உணர்கிறார்கள் அந்தப் பெண்கள். கடலூர், திருவாரூர், நாமக்கல் என்று ஒவ்வோர் ஊரின் கிராமங்களிலிருந்து வந்த அந்தப் பெண்களுக்கு, அது வாழ்நாள் தருணம். குழந்தைத்தனமெல்லாம் மறைந்து, நெகிழ்ச்சியில் நனைந்து அசைவின்றி நிற்கிறார்கள். `டீம்ல இருந்து யாராவது முன்னாடி வந்து, இந்த வெற்றியைப் பத்திப் பேசுங்க' - தொகுப்பாளரின் அந்தக் கேள்வி அமைதியை இன்னும் அடர்த்தியாக்கியது. கால்பந்தோடு பேசி வாழ்பவர்களுக்கு மைக் பிடிக்கும் தைரியம் வரவில்லை. 20 பேரையும் வரிசையாகப் பார்க்கிறார் பயிற்சியாளர் கோகிலா. எந்தக் கால்களும் அசையாமல் இருக்க, ஒரு சிறுமி மட்டும் முன்வருகிறாள். தைரியமாக மைக் பிடித்துப் பேசுகிறாள்... `என் பெயர் மாரியம்மாள்'.

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

இந்த மேடையில், இந்தத் தருணத்தில் மட்டுமல்ல... ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு களத்திலும் அணிக்காக முன்வருபவர் மாரியம்மாள். ஜூனியர் நேஷனல்ஸ் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம். பலமான ஹரியான அணியோடு. ஆட்டம் 1-1 எனச் சென்றுகொண்டிருக்கிறது. கோல் வித்தியாச அடிப்படையில் ஹரியான முன்னிலையில். வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாடு காலிறுதிக்குள் நுழையமுடியும். அப்போதும் முன்வந்தார் மாரியம்மாள். வெற்றி மிகமிக அவசியமாக இருந்த அந்த நேரத்தில், அதைச் சாத்தியப்படுத்தியது இவர் அடித்த கோல்தான். 2-1. காலிறுதிக்குள் நுழைந்தது தமிழ்நாடு. அணியைக் காலிறுதிக்குள் அழைத்துச் சென்றார் மாரியம்மாள். 

அந்த கோல் மட்டுமல்ல, 5 போட்டிகளில் மொத்தம் 12 கோல்கள். அந்தத் தொடரின் டாப் ஸ்கோரரே இவர்தான். இவரது வேகத்துக்கு, எந்த எதிரணிகளாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. நடப்புச் சாம்பியன் மணிப்பூரை ஃபைனலில் எதிர்கொண்டபோது, `50-50 ஆட்டமாக இருக்கும்' என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், 4-1 என மணிப்பூரைப் பந்தாடியது தமிழக அணி. மாரியம்மாளின் வேகம், அனுபவ மணிப்பூர் வீராங்கனைகளைத் திக்குமுக்காடவைத்தது. முதல் முறையாக தேசிய ஜூனியர் போட்டியில், சாம்பியனானது தமிழ்நாடு. மாரியம்மாள் - அந்த வெற்றியின் மிகப்பெரிய உந்து சக்தி! 

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

``என் பெயர் மாரியம்மாள். எங்க அப்பா நெசவுத்தொழில் பண்றாரு" என்று அந்த 16 வயதுப் பெண் விருது மேடையில் சொன்னபோது, அவர் சிறு வயதில் கால்பந்து விளையாடிய வீதிகளுக்குள் நுழைந்திருந்தேன். ஆம், எட்டாவது படிக்கும்வரை அவர் விளையாடியது வீதிகளில்தான். மைதானம் சென்றதில்லை. மேட்ச் ஆடியதில்லை. ஃபுட்பால் பூட் அணிந்ததில்லை. நாமக்கல் மாவட்டம் சங்ககிரியில் நெசவுத் தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள் அவரது பெற்றோர்கள். வறுமை இல்லை. ஆனால், தாங்கள் வாங்கும் தினசரி வருமானத்தில், காலணிக்கு 500 ரூபாய் ஒதுக்கும் வசதியில்லை. வெறும் காலில், புழுதிகள் பறக்க, கற்களை மிதித்துக்கொண்டேதான் கால்பந்தோடு ஓடினாள் அந்தச் சிறுமி.

கால்பந்து ஆடிக்கொண்டிருந்த தன் அண்ணனைப் பார்த்து, அவர் பந்தை எடுத்து வீதிகளில் உதைக்கத் தொடங்கினார். அங்கிருக்கும் தன் சக தோழிகளோடுதான் மாரியம்மாளின் கால்பந்துப் பயணம் தொடங்கியது. பந்து காலில் கிடைத்தால், அதை உதைத்துக்கொண்டே வேகமாக வீதி நெடுக ஓடுவார். அவரது ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, பெற்றோரிடம் போராடி அவரை நாமக்கல் விளையாட்டு விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்கிறார் மாரியம்மாளின் அண்ணன். இது நடந்தது 3 ஆண்டுகள் முன்பு. இந்தியக் கால்பந்தின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கப்போகும் அந்தச் சிறுமி, முதல் முறையாக பூட் அணிகிறாள்... முதல் முறையாகக் கால்பந்து மைதானத்துக்குள் நுழைகிறாள். 

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

டெக்னிக்கலாக எதுவும் தெரியாமல் இருந்த அவரை, முழுமையான வீராங்கனையாக மாற்றுகிறார் பயிற்சியாளர் கோகிலா. 3 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் இவரது ஆதிக்கத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவரது பெயர் இல்லாத ஸ்கோர் ஷீட்டே இருக்காது. எல்லோரும் சொல்வார்களே `கோல் மழை' என்று... அதை நிகழ்த்திக்காட்டுவதில் இவர் எக்ஸ்பர்ட்! தேசியப் போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சியாளராக கோகிலாவே நியமிக்கப்பட, அங்கும் தன் வித்தைகளைக் காட்டிவிட்டார் மாரி. 

`உங்க ஃபேவரிட் பிளேயர் யாரு' என்ற கேள்விக்கு `மெஸ்ஸி' என்று பதில் சொன்னார். கால்பந்து பார்க்கும், விளையாடும், பெரும்பாலானோர் சொல்லும் பைனரி பதில்தான் இதுவென்று நினைத்திருந்தேன். ஆனால், அவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது ஏற்பட்ட வியப்பு..! மெஸ்ஸியைப் போல்... அதே `லெஃப்ட் ஃபூட்', மின்னல் வேகம், அந்த வேகத்திலும் கால்களுக்கு நடுவிலேயே சுழன்றுகொண்டிருக்கும் பந்து, எவ்வளவு தூரத்திலிருந்தும், எந்த ஆங்கிளிலிருந்தும் கோல் போஸ்ட்டை டார்கெட் செய்யும் அந்த இடது கால் ஷூட்டிங்... அதை டெம்ப்ளேட் பதிலாக நினைத்தது தவறென்று புரிந்தது. அந்தக் களத்தில், தன் ஒவ்வொர் அசைவிலும் அந்த மகத்தான வீரனின் மினியேச்சராகச் சுழன்றுகொண்டிருக்கும் அந்தச் சிறுமிக்கு, வேறு யாரும் பிடித்திட வாய்ப்பில்லை. 

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

இந்த வளர்ச்சிக்கெல்லாம் அவர் காரணமாகக் காட்டுவது, தன் பயிற்சியாளரைத்தான். ``எனக்கு கோச்தான் எல்லாமே. ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்க்கு உள்ள வந்தப்போ, பெருசா ஒண்ணுமே தெரியாது. அவங்கதான் எல்லாமே சொல்லிக்கொடுத்தாங்க. என்னோட கேம் பார்த்துட்டு, நான் நல்ல விளையாடவும், எனக்குனு ரொம்ப நேரம் செலவு பண்ணுவாங்க. நான் இந்தளவுக்கு வந்ததுக்கு அவங்க மட்டும்தான் காரணம். மேட்ச் ஆடும்போது, அவங்க மட்டும் பக்கத்துல இருந்தா போதும், என்ன வேணா செஞ்சிடுவேன். எப்போமே அவங்க சொல்றத நான் தட்டாமக் கேட்பேன். ட்ரிப்பிள் பண்ணுனு சொன்னா பண்ணுவேன். ஷூட் பண்ணி ஆடுனா அதைச் செய்வேன். ஆனா, இந்தியா டீம் ஆடிட்டு வந்தப்புறம் கொஞ்சம் கேக்குறது இல்ல" என்று சொல்லி சிரித்துக்கொண்டே, செல்லமாக தன் கோச்சைப் பார்க்கிறார். அவர் கண்களில் மகிழ்ச்சியும், பெருமிதமும்.

ஆம், மாரியம்மாள் தமிழக வீராங்கனை மட்டுமல்ல. இந்திய வீராங்கனை! நேஷனல்ஸ் தொடரில் இவர் ஆடிய ஆட்டம், உடனடியாக இந்திய அணி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது. பூட்டான் (18 வயதுக்குட்பட்டோர் அணி), தாய்லாந்து (19 வயதுக்குட்பட்டோர் அணி) என்று பறந்தார். பல சீனியர் வீராங்கனைகள் இருந்தபோதிலும், தன் அற்புதமான ஆட்டத்தால் அணியில் வாய்ப்பைப் பெற்றார். 5 போட்டிகளில் 2 கோல்கள். அங்கும் தன் தடத்தைப் பதித்துத் திரும்பியிருக்கிறார் இந்தச் சிறுமி. தேசியப் பயிற்சி முகாமில், வழக்கம்போல் மொழிப் பிரச்னை. யாருடன் பேசுவதென்று தெரியாமல் இருந்தவருக்கு, அவரது கேம் நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. 

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

``யார்ட்ட பேசுறதுனே தெரியாமதான் இருந்தேன். ஆனா, என்னோட கேம் பாத்துட்டு அவங்களாவே வந்து பேச ஆரம்பிச்சாங்க. எல்லோரும் ஏற்கெனவே இந்திய அணிக்காக ஆடினவங்க. நான்தான் புதுசு. டீம்குள்ள போறது கஷ்டமா இருந்துச்சு. பழகக் கொஞ்ச நாள் ஆச்சு. அங்க இருந்த நாள்கள் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, என் கேம்கு நல்லா யூஸ்ஃபுல்லா இருந்துச்சு" என்று சொல்லும் மாரியம்மாள் வார்த்தைகளில் மட்டுமல்ல, தன் ஆட்டத்திலும் மிகப்பெரிய முதிர்ச்சியைக் காட்டுகிறார். 

இந்திய அணியில் இவரோடு ஆடுபவர்கள் சீனியர்கள். அந்த அணியின் கேம் பிளான் வேறு மாதிரி இருக்கும். சீனியர்களைச் சுற்றித்தான் ஆட்டம் நகரும். அங்கு மாரியம்மாளின் ரோல், சீனியர்களுக்கு சப்போர்ட் செய்வது. பந்து கிடைக்கும்போதெல்லாம், ட்ரிப்பிள் செய்ய முடியாது. பாஸ் செய்யவேண்டும். ஷூட் செய்ய முடியாது, பொசஷன் தக்கவைக்கவேண்டும். அங்கு இவர் தனி ஆளாக ஆடிட முடியாது. தான் ஆடியதற்கு முற்றிலும் வேறு ஆட்டம். ஆனால், அந்தப் புது ரோலிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அதனால்தான் அவரால் அங்கு 5 போட்டிகளில் விளையாடவும் முடிந்தது. 

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

பல சர்வதேச வீரர்களுக்கு இந்த இடத்தில்தான் பிரச்னை. கிளப் போட்டிகளில் ஒருவிதமான கேம் பிளானில் விளையாடுவார்கள். தேசிய அணிக்குப் போகும்போது வேறு கேம் பிளானில் ஆடவேண்டும். அங்குச் சொதப்பிவிடும். அந்த சிஸ்டம் அவர்களுக்கு செட் ஆகாது. ஆனால், இந்தச் சிறுமியின் திறன் அபாரம். தேசிய அணிக்குத் தேவையான ஸ்டைலில் ஆடுகிறார். இங்கு வந்தால், உடனடியாக தன் பழைய ஆட்டத்தைக் காட்டுகிறார். இதுதான்... இதுதான் அவரது மிகப்பெரிய பலம்! 'வேறு மாதிரியான ஆட்டம் ஆடுறது பிரச்னையா இல்லையா, அது உங்க ஆட்டத்தைப் பாதிக்கலையா' என்று கேட்டால், ``அங்க நான் ஜூனியர். என் இஷ்டத்துக்கு ஆட முடியாது. சீனியர்களுக்கு சப்போர்ட் பண்ணணும். ஆனா, இங்க நான் சீனியர். நான்தான டீம முன்னாடி எடுத்துட்டிப்போகணும்" என்கிறார். 16 வயதுப் பெண்ணிடம் கேட்ட அந்த வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கத்தான் செய்தன. 

``நாம என்ன சொல்றமோ, அதை அப்படியே செஞ்சிடுவா. அதுதான் அவளோட பிளஸ். தமிழ்நாட்டுல அண்டர்-21 டீம்குக்கூட இவளால இப்போ விளையாட முடியும். அவ்ளோ டேலன்ட். என்ன திறமை இருந்தாலும், ரொம்ப ஒழுக்கமான பொண்ணு. ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணுவா. ஒரு அத்லெட்டோட வெற்றி இந்த இரண்டு விஷயத்தைப் பொறுத்துத்தான் அமையும். அதுதான் மாரியையும் ஜெயிக்க வெச்சிருக்கு. இடது கால்ல சூட் பண்ற மாதிரி, வலது கால்லயும் ஷூட் பண்ணா, இன்னும் நிறைய கோல் ஸ்கோர் பண்ணலாம். அதேமாதிரி பந்தை ரிசீவ் பண்றதுல கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணணும். அதெல்லாம் பண்ணிட்டா பெரிய பெரிய உயரம் போவா" என்று உற்சாகமாகப் பேசுகிறார் பயிற்சியாளர் கோகிலா. 

இடது கால் ட்ரிப்பிள்.. மின்னல் வேகம்... பெர்ஃபெக்ட் ஷூட்டிங்... மாரியம்மாள் எனும் மெஸ்ஸி!

கடைசியாக மாரியம்மாளிடம் ஒரு கேள்வி கேட்டேன்...

``உங்கள் லட்சியம் என்ன?"

`இந்திய சீனியர் டீம்கு விளையாடணும், பெரிய கிளப்களுக்கு விளையாடணும், ஆசியக் கோப்பையில் ஜெயிக்கணும்' - இப்படியான பதில்களைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால், தன் பதிலால் மீண்டும் வியக்கவைத்தாள் அந்தச் சிறுமி!

``கோச் ஆகணும். நிறைய ஃபுட்பால் பிளேயர்களை உருவாக்கணும்"

அதைக் கேட்டபோது எழுந்த வியப்பு, இதை எழுதி முடிக்கும்வரை அடங்கவில்லை. இனி எழுதத் தொடங்குகிறேன் மாரியம்மாள்களுக்கான கேள்வியை..!