Published:Updated:

கால்பந்தின் `ஆஸ்கர்’ வென்ற முதல் பெண்... வாழ்த்துகள் அடா ஹெகெர்பெர்க்!

கால்பந்தின் `ஆஸ்கர்’ வென்ற முதல் பெண்... வாழ்த்துகள் அடா ஹெகெர்பெர்க்!
கால்பந்தின் `ஆஸ்கர்’ வென்ற முதல் பெண்... வாழ்த்துகள் அடா ஹெகெர்பெர்க்!

கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக, நார்வே நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை அடா ஹெகெர்பெர்க் மகளிருக்கான `பாலன் டி ஓர்’ பெற்றுள்ளார்.

பாலன் டி ஓர் - கால்பந்தின் ஆஸ்கர். ஆகச் சிறந்த வீரர்கள் மட்டுமே வைத்திருக்கும் பொக்கிஷம். கால்பந்து உலகின் மிகப்பெரிய கௌரவம். கடந்த 10 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் லாங்குவேஜ் மட்டுமே படித்துக்கொண்டிருந்தது அந்த விருது. அதற்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று மெஸ்ஸி, மற்றொன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2007-ம் ஆண்டுக்குப் பிறகு சம்பிரதாயமாகவே மற்ற வீரர்கள் இதற்குப் போட்டியிட்டார்கள். விருது விழாவும் அப்படித்தான் நடந்தது. 10 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த வருடம், புதிய கரங்களை அடைந்துள்ளது பாலன் டி ஓர் விருது. ரொனால்டோ - மெஸ்ஸி இருவரின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, புதியதோர் சகாப்தத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் குரோஷிய கேப்டன் லூகா மோட்ரிச்! 

ஆனால், அது மட்டுமே இந்த விருது விழாவின் சிறப்பு அல்ல. முதல் முறையாக இந்த விருது வீராங்கனை ஒருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த முதல் விருதை வென்றவர் - நார்வே வீராங்கனை அடா ஹெகெர்பெர்க்! 23 வயதேயான அடா ஹெகெர்பெர்க், லயான் கால்பந்து க்ளப்புக்கு விளையாடி வருகிறார். ஃபுட்பால் குடும்பப் பின்னணியால், சிறுவயதிலிருந்தே  கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராக வளர்ந்தார் அடா.

15 வயதிலேயே, 19 வயதுக்குட்பட்டோருக்கான நார்வே கால்பந்து அணியில் `ஸ்ட்ரைக்கராக’ பயணத்தைத் தொடங்கியவர், உடனடியாக சீனியர் அணியில் இடம் பிடித்தார். கிடைத்த வாய்ப்பைத் தக்கவைத்து கொண்ட அவர், அணியின் முக்கிய வீராங்கனையானார். 2013 ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பைக் காலிறுதியில், ஃபிஃபா தொடர்களில் தன் முதல் கோலைப் பதிவு செய்தார். அந்த முக்கியமான கோல் அடித்தபோது அவரது வயது 18! அதன்பின் அவரது வளர்ச்சி யாரும் எதிர்பாராதது.

ஆரம்ப காலத்தில், நார்வேயைச் சேர்ந்த பெண்கள் கிளப்புக்கு விளையாடிவந்தவரை 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது, பிரான்ஸின் டாப் கிளப்பான லயான். விளையாடிய முதல் சீசனிலேயே, 22 போட்டிகளில் 26 கோல்கள் அடித்து அணியின் டாப் ஸ்கோரரானார். மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரில், கடந்த 2015 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லயான் அணி சாம்பியன் பட்டம் வெல்ல அடாவின் பங்களிப்பு முக்கியக் காரணம்! 2015-16 சீசன் முதல், ஒவ்வொரு பெண்கள் லீக்-1 சீசனிலும் இவர்தான் டாப் ஸ்கோரர். 2017-18 சீசனில், 20 போட்டிகளில் 30 கோல்களும், பங்கேற்ற 9 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 15 கோல்களும் அடித்து அசத்தியுள்ளார். 

2016-ம் ஆண்டு ஐரோப்பியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை, 2017 பிபிசி வழங்கிய மகளிர் கால்பந்து வீராங்கனை விருதுகளைப் பெற்றுள்ளார் அடா. `மகளிருக்கான முதல் பாலன் டி ஓர் விருதைப் பெற அடா மிகவும் தகுதியானவர்' எனக் கால்பந்து வட்டாரத்திலிருந்து வாழ்த்துகள் குவிந்துள்ளன

2019 பிரான்சில் நடைபெறும் மகளிருக்கான உலகக் கால்பந்து கோப்பையில், நார்வே அணியில் அடா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. மகளிர் கால்பந்து அணியில் இருக்கும் பிரச்னைகளான பாலியல் ஒடுக்குமுறை காரணமாக, நார்வே தேசிய அணியிலிருந்து விலகுவதாக அடா அறிவித்திருந்தார். அடாவின் அறிவிப்பு கால்பந்து வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பைத் தொடரில், அடா பங்கேற்காமல் போனால், நார்வே அணிக்குப் பின்னடைவாக அமையும். 

நார்வே கால்பந்து அணியில் மட்டுமல்லாமல், 2018 பாலன் டி ஓர் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சையைக் கிளம்பியது. விருது வழங்கும் விழாவில், அடாவிடம் ``உங்களுக்கு Twerk (கவர்ச்சியாகக் கருதப்படும் நடனம்) ஆடத் தெரியுமா” என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்வி பெரும் சர்ச்சைக்குள்ளானது. சமூக வலைதளங்களில் இந்தப் பிரச்னை வைரலாகி, பல வாதங்களைக் கிளப்பி வருகிறது. 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலன் டி ஓர் விருதுகள் வரலாற்றில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மகளிருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மகளிர் கால்பந்து முன்னேறவும், வளர்ச்சியடையவும் ஊக்குவிப்பதாக அமையும். இந்நேரத்தில், பெண்கள் கால்பந்தில் பல முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகளும் நடந்து வருவது வருத்தம்தான். 

உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அடாவின் ஆட்டம், இளம் வயதிலியே கால்பந்து நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ``ஆண்கள் விளையாடும் கால்பந்திலிருந்து என்னை வேறுபடுத்திப் பார்த்ததில்லை. ஒரே விளையாட்டை விளையாடுகிறோம். ஒரே கனவைக் காண்கிறோம்..தன்னம்பிக்கை கொள்ளுங்கள்” என இளம் வீராங்கனைகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார் இந்த சாம்பியன்!

அடுத்த கட்டுரைக்கு