பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

‘கோல்’லாகலம் 2018!

 ‘கோல்’லாகலம் 2018!
பிரீமியம் ஸ்டோரி
News
‘கோல்’லாகலம் 2018!

மு.பிரதீப் கிருஷ்ணா

செயற்கைக்கோள்கள் ரஷ்யாவைக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. உலக கேமராக்கள் மாஸ்கோவை உற்றுக் கவனிக்கின்றன. ஐந்து கண்டங்களில் இருந்தும் விமானங்கள் ரஷ்யாவுக்குப் பறந்துகொண்டிருக்கின்றன. பெரிய நாடு, உலகின் மிகப்பெரிய திருவிழாவுக்குத் தயாராகிவிட்டது.  2018  ஃபிஃபா உலகக்கோப்பை.... தொடங்கிவிட்டது!

கால்பந்து உலகக்கோப்பை மட்டும் ஏன் இத்தனை கோடி ரசிகர்களால் இத்தனை தீவிரமாகப் பார்க்கப்படுகிறது? காரணம், இது வெறும் விளையாட்டு அல்ல; உணர்வுகள் மோதிக்கொள்ளும் ஆடுகளம். ஒரு போட்டி, ஒரு கேலரி, அந்தப் பார்வையாளனுக்குப் பல உணர்வுகளை, பல அனுபவங்களைக் கொடுத்திடும். ஏனெனில், அங்கு அமர்ந்திருக்கப்போவது இரு நாடுகளைச் சேந்தவர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் நிறைந்திருக்கும்!

 ‘கோல்’லாகலம் 2018!

`ஆக்படா’ உடையணிந்த நைஜீரிய ரசிகர் கூட்டம், கோல் போஸ்ட்டின் பின்னால் அமர்ந்து `ககாகி’ இசைக்கருவியை ஊதிக்கொண்டிருக்கும். அவர்களோடு போட்டிபோட்டு `வுவுசலா’ கருவியை ஊதுவான் தென்னாப்பிரிக்க ரசிகன். இவர்களின் இசைக்கு நடுவே நெய்மர் களத்தில் செய்யும் மாயங்களுக்கு ஈடாக `இலு’ டிரம்களைத் தட்டித் தெறிக்கவிடுவான் பிரேசில் வெறியன். ரசிகர்களின் குரல்களையும் கரகோஷத்தையும் தாண்டி, பல தேசங்களின் இசை அங்கே கலந்து ஒலிக்கும். அது மானுட குலத்தின் சங்கீதம்.

எங்கோ மூலையிலிருந்து இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் ரஷ்யாவுக்குப் படையெடுக்கக் காரணம் இவைதான். அந்த அனுபவம் வேறு எங்கும் கிடைத்திடாது. 

ரஷ்யா 2018


2010-ம் ஆண்டு நடந்த ஓட்டெடுப்பில் போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, ரஷ்யா இந்த உலகக்கோப்பை உரிமத்தைப் பெற்றது. உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவிகிதம் பேர் பார்க்கும் இந்தத் தொடரை நடத்த, இதுவரை 78,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது ரஷ்யா. போட்டியை நடத்தும் ரஷ்யாவோடு, தகுதிச்சுற்றுப் போட்டிகளின் மூலம் 31 அணிகள் தேர்வாக, 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. நான்கு முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, 2014 உலகக்கோப்பையில் மூன்றாவது இடம் பிடித்த நெதர்லாந்து, `கோபா அமெரிக்கா’ சாம்பியன் சிலி எனப் பல முக்கிய அணிகள் இந்தத் தொடருக்குத் தகுதிபெறத்தவறின. ஐஸ்லாந்து, பனாமா போன்ற கத்துக்குட்டிகள் முதல்முறையாக உலகக்கோப்பைக்குள் நுழைந்தன.

ஐந்து முறை சாம்பியனான பிரேசில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெஸ்ஸியின் அர்ஜென்டினா, அனுபவ ஸ்பெயின், இளம் பிரான்ஸ், `டார்க் ஹார்ஸ்’ பெல்ஜியம் என இந்த முறை கோப்பைக்கான போட்டியில் அதிக அணிகள் வரிசைகட்டுகின்றன. 

தேசத்தின் கௌரவம்

இந்த உலகக்கோப்பையை நடத்துவது ரஷ்யாவுக்குக் கடமை மட்டுமல்ல, கௌரவமும்கூட. ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தடைசெய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கு, தொடக்கத்திலிருந்தே பல சோதனைகள் தொடர்ந்தன. தொடரின் உரிமம் பெற்ற 2010-ம் ஆண்டு, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 80 டாலர் வரை இருந்தது. ஆனால், நாளுக்குநாள் அதன் மதிப்பு குறைந்துகொண்டேபோக, 2015-ல் 45 டாலராகச் சரிந்தது. அடுத்த வருடம் 30 டாலர் வரை குறைந்தது. இதனால் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்தன. ஸ்பான்ஸர்கள் பிடிப்பது கஷ்டமானது. ஆனாலும்,  நிதிநெருக்கடியைச் சமாளித்து உலகக்கோப்பைக்கான திட்டங்கள் தொடர்ந்தன.

2016 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டதில், ரஷ்யாவின் இமேஜுக்குப் பலமான அடி. அதைச் சரிசெய்ய, இந்த உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்திக்காட்டவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுத்தது ரஷ்யா. 74,000 கோடி ரூபாயாக இருந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டு 4,000 கோடி ரூபாயை உயர்த்தியது. ரசிகர்கள் சிரமமில்லாமல் வந்து போக வசதிகளை அதிகப்படுத்தியது. கூடவே பாதுகாப்பு விஷயத்திலும் கறாராக இருக்கிறது ரஷ்யா. 31,000 பாதுகாப்பு வீரர்கள், போட்டிகளின்போது காவலில் ஈடுபடவுள்ளனர். அதுமட்டுமன்றி, ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் ஃபேன் ஐ.டி., அவர்கள் அத்துமீறி நடந்தால் உடனடி நடவடிக்கை பாய்வதற்கு உதவும்.

இந்த உலகக்கோப்பையை எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் வெற்றிகரமாக முடித்துக்காட்ட, வெறித்தனமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் ரஷ்யர்கள். எது எப்படியோ, நமக்குப் பெரிய கொண்டாட்டம் களத்தில் காத்திருக்கிறது!

கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள்:

கால்பந்து தெரியாதவர்கள்கூட மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற நட்சத்திரங்களின் பர்ஃபாமன்ஸை நிச்சயம் பார்ப்பார்கள். ஆனால், அவர்களைத் தாண்டி நாம் கவனிக்கவேண்டிய சில வீரர்கள்...

 ‘கோல்’லாகலம் 2018!

பாலோ டிபாலா - அர்ஜென்டினா

அர்ஜென்டினாவின் அடுத்த தலைமுறை ஆட்டக்காரர் டிபாலா. இப்போதே இவரை `ஜூனியர் மெஸ்ஸி’ என்றுதான் அர்ஜென்டினாவில் அழைக்கிறார்கள். வேகம், டெக்னிக், பர்ஃபெக்‌ஷன் என அனைத்தும் நிறைந்த கம்ப்ளீட் வீரர். தன் அபார ஆட்டத்தால் நிச்சயம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார்.

 ‘கோல்’லாகலம் 2018!

டேவிட் டி கே - ஸ்பெயின்

ஸ்பெயின் அணியின் அரண். இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 கோல்கீப்பர். இவரைத் தாண்டி கோலுக்குள் நுழைய அந்தப் பந்து பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும். ஒற்றை ஆளாக மான்செஸ்டர் யுனைடெட் அணியைக் காப்பற்றுபவர், ஸ்பெயினின் சிறந்த டிஃபன்ஸோடு சேர்ந்து இரும்புக்கோட்டையாக மாறிவிட்டார். ஸ்பெயின் மீண்டும் சாம்பியனாக, இவர் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்.

 ‘கோல்’லாகலம் 2018!

ஹேரி கேன் - இங்கிலாந்து

எப்போதுமே சுமாராக ஆடும் இங்கிலாந்து அணியின் இன்றைய சூப்பர் ஸ்டார் ஹேரி கேன். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரீமியர் லீகில் கோல்மழை பொழிந்துகொண்டிருக்கிறார். எங்கு இருந்தாலும் கோல் போஸ்டைக் குறிவைப்பதில் வல்லவர். சமீப காலங்களில் இங்கிலாந்து வீரர் ஒருவர், இவர் அளவுக்குப் பேசப்படவில்லை. அதனால்தான் 24 வயதே ஆகியிருந்தும் இவரை கேப்டனாக்கினார் பயிற்சியாளர் சவுத்கேட்.

 ‘கோல்’லாகலம் 2018!

ஆன்டோனி கிரீஸ்மேன்  - பிரான்ஸ்

2016 யூரோ கோப்பையின் கோல்டன் பூட் வின்னர். இந்த முறை இளம் பிரான்ஸ் அணியின் வேகத்தோடு இவரது அனுபவமும் டெக்னிக்கும் சேரவிருப்பதால், நிச்சயம் எதிரணியின் கோல் பாக்ஸை முற்றுகையிட்டுக்கொண்டே இருப்பார். முன்களத்தில் எந்த ரோலில் களமிறங்கினாலும் ஜொலிக்கக்கூடியவர். 

 ‘கோல்’லாகலம் 2018!

முகமது சலா - எகிப்து

எங்கிருந்து கிளம்பினார் எனத் தெரியவில்லை. ஆனால், இந்த வருடம் மொத்தக் கால்பந்து உலகையும் அதிரவைத்துவிட்டார் சலா. தன் வேகத்தாலும் டெக்னிக்காலும் எதிரணி டிஃபண்டர்களைப் பந்தாடியவர், ப்ரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் என எல்லா ஏரியாக்களிலும் முத்திரை பதித்தார். சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் ஏற்பட்ட காயத்தால், அவர் விளையாட கொஞ்சம் நாளாகும். ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் `சலா’ட்டாவுக்குப் பஞ்சமிருக்காது!

கால்பந்து நிபுணர்களின் சாய்ஸ்!

32 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளாக கால்பந்து நிபுணர்கள், புக்கீஸ் கருதும் டாப் 5 அணிகள் இவை.

 ‘கோல்’லாகலம் 2018!

ஜெர்மனி

பயிற்சியாளர் ஜொயாகிம் லோ தலைமையில் மூன்றாவது உலகக் கோப்பையில் களமிறங்குகிறது நடப்பு சாம்பியன் ஜெர்மனி. கடந்த நான்கு உலகக்கோப்பை களிலும் குறைந்தபட்சம் அரை இறுதியாவது சென்றிருக்கும்  ஜெர்மனிதான், இந்த முறை விமர்சகர்களின் முதல் சாய்ஸ். ஆனால், கடந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் நடப்பு சாம்பியன்கள், லீக் சுற்றோடு வெளியேறியிருப்பதால் கவனம் தேவை.

 பலம்  டோனி குரூஸ், கெதிரா, முல்லர், டிரேக்ஸ்லர், மெசூட் ஒசில் என ஆட்டத்தை கன்ட்ரோல் செய்யும் வீரர்கள் ஜெர்மனியின் நடுகளத்தில் அணிவகுக்கின்றனர்.

 பலவீனம்  தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் இல்லை. கேப்டன் நூயர் காயத்திலிருந்து மீண்டு முழு ஃபார்மில் களமிறங்குவது சந்தேகம்தான்.

 ‘கோல்’லாகலம் 2018!

ஸ்பெயின்

2014 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது ஸ்பெயின். இந்த முறை அப்படியேதும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். ஸ்டார் வீரர்களையெல்லாம் ஓரம்கட்டும் அளவுக்கு இளம் நட்சத்திரங்கள் எழுச்சியடைந்தி ருப்பது அணிக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து மூன்று சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் வென்ற ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ், ஸ்பெயின் அணியையும் சாம்பியனாக்குவார் என்று பெரிதும் நம்பியிருக்கிறார்கள் ஸ்பெயின் ரசிகர்கள்.

 பலம்   மிட்ஃபீல்டு, டிஃபன்ஸ் இரண்டு ஏரியாக்களிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களும், அவர்களுக்கு சற்றும் குறையாத பேக்-அப் ஆப்ஷன்களும் இருக்கின்றன.

 பலவீனம்  பிரதான ஸ்ட்ரைக்கர்கள் நல்ல ஃபார்மில் இல்லை.

 ‘கோல்’லாகலம் 2018!

அர்ஜென்டினா

பெரும்பாலானோர் அர்ஜென்டி னாவை `ஒன் மேன்’ டீம் என்றே கருது கிறார்கள். ஆனால், மெஸ்ஸியைத் தவிர்த்து ஹிகுவெயின், அகுவேரோ, டிபாலா, டி மரியா என எக்கச்சக்க நட்சத்திரங்கள் அந்த அணியில் குவிந்துகிடக்கின்றனர். ஆனால், இதுவரை அவர்கள் ஓர் அணியாக க்ளிக் ஆகவில்லை என்பதுதான் சோகம். ‘கோபா அமெரிக்கா’ வின்போதே ஓய்வுபெற்ற மெஸ்ஸிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை.  தன் தேசத்துக்காக இந்த முறை கோப்பையை வென்று கொடுக்கும் வேட்கையோடு காத்திருக்கிறார்.

 பலம்  மெஸ்ஸி, ஹிகுவெயின், அகுவேரோ, டிபாலா ஆகியோர் அடங்கிய ஃபார்வேர்டு லைன்.

 பலவீனம்  டிஃபன்ஸ், பயிற்சியாளர் சாம்போலி அவ்வப்போது எடுக்கும் முடிவுகள்.

 ‘கோல்’லாகலம் 2018!

பிரேசில்

சொந்த மண்ணில் ஜெர்மனியிடம் அடைந்த அவமானத்தை இந்த முறை கோப்பை வென்றால் மட்டுமே துடைக்க முடியும். ஆனால், பயிற்சியாளர் டிடே பதவியேற்ற பிறகு வெற்றிப்பாதைக்கு பிரேசில் அணி திரும்பிவிட்டது. மிட்ஃபீல்டு, டிஃபன்ஸ், ஃபார்வேர்டு என எல்லா ஏரியாக்களிலும் சிறப்பான வீரர்களைக் கொண்டிருக்கும் பிரேசில் அணி, நெய்மர் என்னும் ஒற்றை ஆயுதத்தைத்தான் இந்த முறையும் பெரிதாக நம்பியிருக்கிறது.

 பலம்  நெய்மர், கொடினியோ, ஃபிர்மினோ, கேப்ரியல் ஜீசஸ் என அற்புதமான முன்களத்தைக் கொண்டிருக்கிறது பிரேசில்.

 பலவீனம்  நெய்மரை அதிகமாக நம்பியிருப்பது.

 ‘கோல்’லாகலம் 2018!

பெல்ஜியம்

இந்த உலகக்கோப்பையின் டார்க் ஹார்ஸ். இந்தத் தலைமுறையின் சிறந்த அணி, ஆனால், பெரிய தொடர்களில் சொதப்பிவிடுகிறார்கள். கொம்பனி, ஹசார்ட், டி ப்ருய்னே, லுகாகு என பிரீமியர் லீகில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் இந்த அணிக்கு அசுரபலம் சேர்க்கிறார்கள். குரூப் பிரிவு ஈஸியாக இருப்பதால், நாக் அவுட் தொடரில்தான் இவர்களின் உண்மையான பலம் தெரியும்.

 பலம்   ஹசார்ட், லுகாகு, மெர்டன்ஸ் ஆகியோரோடு டி ப்ருய்ன் இணைவது எதிரணிகளுக்கு சிம்மசொப்பனம்.

 பலவீனம்  பெல்ஜியம் வீரர்கள் சமீபமாக அடிக்கடி காயத்தால் அவதிப்படுகின்றனர். கேப்டன் கொம்பனி இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை.