Published:Updated:

6 போட்டிகளில் 5 தோல்வி... சென்னையின் எஃப்.சி பரிதாபங்கள்!

டெல்லியிடம் டிரா செய்தவர்கள், அடுத்து ATK, மும்பை அணிகளோடு மீண்டும் தோல்வி. தொடர் தொடங்கும்போது ஃபேவரிட்களில் ஒன்றாக இருந்த அணி ஏன் இப்படித் தடுமாறுகிறது? 

6 போட்டிகளில் 5 தோல்வி... சென்னையின் எஃப்.சி பரிதாபங்கள்!
6 போட்டிகளில் 5 தோல்வி... சென்னையின் எஃப்.சி பரிதாபங்கள்!

துணைப் பயிற்சியாளர்கள் குழு முழுதும் மாற்றப்பட்டது ஏன் என்று கேட்டதற்கு, ``வீரர்களுக்குப் பழகிய பயிற்சி முறைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் அதில் ஒரு முன்னேற்றமும் இருக்காது. அவர்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்வார்கள். பயிற்சிகள் சீரியஸாக இருக்கவேண்டும் என்பதற்காக புதிய குழுவை அமைத்துள்ளோம்" என்றார் சென்னையின் எஃப்.சி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரகரி. தொடர் தொடங்குவதற்கு முன்பு அவரது மாற்றங்கள் பாசிடிவ் ரிசல்ட் கொடுக்கும் என்று நம்பியிருந்தார். ஆனால், பயிற்சி முறையில் மட்டும் மாற்றம் செலுத்தி பயனில்லையே. கொஞ்சம்கூட மாறாத சென்னையின் எஃப்.சி கேம் ஸ்டைல் அவர்களை பின்னுக்குத்தள்ளிவிட்டது. 

நடப்பு சாம்பியனாக ஐந்தாவது சீசனைத் தொடங்கிய சென்னையின் எஃப்.சி, இப்போது கடைசி இடத்தில். 6 போட்டிகளில் 5 தோல்வி. முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் போராடித் தோற்றவர்கள், கோவா அணியிடம் மொத்தமாகச் சரணடைந்தனர். நார்த் ஈஸ்ட் அணிக்கெதிராக 3 கோல்கள் அடித்திருந்தும், டிஃபன்ஸில் சொதப்பி 4 கோல்கள் வாங்கி தோல்வியில் ஹாட்ரிக் அடித்தது. டெல்லியிடம் டிரா செய்தவர்கள், அடுத்து ATK, மும்பை அணிகளோடு மீண்டும் தோல்வி. தொடர் தொடங்கும்போது ஃபேவரிட்களில் ஒன்றாக இருந்த அணி ஏன் இப்படித் தடுமாறுகிறது? 

கடந்த சீசனில் சென்னை அணியின் 4-2-3-1 ஃபார்மேஷன், தடுப்பாட்டத்தில் மிகப்பெரிய பலமாக இருந்தது. 18 லீக் போட்டிகளில் அவர்கள் 8 ஆட்டங்களில் கோலே விடாத அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டனர். டிஃபண்டர்கள் மட்டுமல்லாது, இரண்டு ஹோல்டிங் மிட்ஃபீல்டர்களும் தடுப்பாட்டத்தில் சிறப்பாகப் பங்காற்றினர். அதிலும் குறிப்பாக தமிழக வீரர் தனபால் கணேஷ் மிகச்சிறப்பாக விளையாடினார். Aerial பால்களை டீல் செய்வது, எதிரணி ஸ்டிரைக்கர்களை மார்க் செய்வது என அனைத்திலும் கில்லியாகச் செயல்பட்டார். பிக்ரம்ஜித் சிங் அவருக்கு நன்றாக கைகொடுத்தார். ஆனால், இந்த சீசனில் இவர்கள் இருவரையுமே சென்னையின் எஃப்.சி இழந்துவிட்டது. 

அனிருத் தாபா நம்பிக்கை அளித்ததாலும், தமிழக வீரர் சீனிவாசன் பாண்டியனை வாங்கியதாலும், பிக்ரம்ஜித்தை இந்த முறை சென்னை ஒப்பந்தம் செய்யவில்லை. புதிதாக ஐசாக் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தொடர் தொடங்கும் முன் பெரிய அடி விழுந்தது. தனபால் கணேஷ் காயமடைந்தார். குறைந்தபட்சம் 6 மாதம் ஓய்வெடுக்கவேண்டிய நிலை. போதாக்குறைக்கு கேப்டன் செரேனோவும் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறினார். டிஃபன்ஸின் ஆணிவேர் முறிந்தது. செரேனோவுக்குப் பதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட எலி சாபியா கொஞ்சம் தடுமாறுகிறார். இதுபோன்ற தருணங்களில் கணேஷ் இருந்திருந்தால் மிகப்பெரிய உறுதுணையாக இருந்திருப்பார். இப்போது அது இல்லை. ஐசாக், ஜெர்மன்ப்ரீத், தாபா யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. விளைவு, முதல் 3 போட்டிகளில் 8 கோல்கள் வாங்கியது சென்னை.  

டிஃபண்டர்கள் போட்டி போட்டு சொதப்ப, முன்களமும் அவர்களோடு சேர்ந்து சொதப்புகிறது. ஃபிரான்சிஸ் ஃபெர்னாண்டஸ் ஐடியாவே இல்லாமல் களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். ரஃபேல் அகஸ்டோ ஃப்ரீ ஸ்டைல் மூவ்கள் எல்லாம் செய்து காட்டுகிறாரே தவிர கால்பந்து ஆடுவதில்லை. ஒழுங்காக பாஸ் செய்வதில்லை. ஸ்கில் செய்கிறேன் என்ற பேரில் கவுன்டர் அட்டாக்கின் வேகத்தையும்கூட குறைத்துவிடுகிறார். நடுகள வீரர்கள் இப்படியென்றால், கோலுக்கு முன்பு `ஸ்னைப்பர்' ஜீஜே தடுமாறுகிறார். தோட்டாக்கள் பாய்வதே இல்லை. பின்பு எப்படி அணிக்கு கோல் வரும். இதுவரை அடித்த 4 கோல்களில், இரண்டை டிஃபண்டர் எலி சாபியாவும், இரண்டை தோய் சிங்கும் அடித்துள்ளனர். நெல்சன், சலோம் போன்ற வெளிநாட்டு வீரர்களும்கூடத் தடுமாறுகிறார்கள். 

வீரர்கள் இப்படித் தடுமாற, அணியை மீட்டெடுக்க கிரகரியும் தடுமாறுகிறார். அவருக்கான ஆப்ஷன்கள் ரொம்பவே குறைவாக இருக்கின்றன. எந்த பொசிஷனிலும் ஒரு வீரரை மாற்ற நினைத்தால், அங்கு ஒரு வெளிநாட்டு வீரரைத்தான் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய நம்பிக்கையான இந்திய வீரர்கள் இல்லை. முதல் போட்டியில் பின்னணியில் இருந்தபோது கேப்டன் மெயில்சனை வெளியே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். கோவாவுக்கு எதிராக இனிகோவை மாற்றினார். நார்த் ஈஸ்ட் போட்டியில் மீண்டும் மெயில்சனுக்குப் பதில் முன்கள வீரரைக் களமிறக்கினார். இப்படி ஒரு வெளிநாட்டு டிஃபண்டரை எடுத்து இன்னொரு வெளிநாட்டு அட்டாக்கரை களமிறக்கவேண்டிய நிலையில்தான் சென்னையின் எஃப்.சி இருக்கிறது. ஆனால், அப்போதும்கூட அகஸ்டோவை எடுப்பதில்லை!

முதல் இரண்டு போட்டிகளிலும் 4-2-3-1 வேலைக்கு ஆகாது என்று தெரிந்து, அடுத்த போட்டியில் 4-4-1-1 போன்றதொரு ஃபார்மேஷனைக் கையாண்டார். விங்கர் ஃபிரான்சிஸ் டிஃபன்ஸில், டிஃபண்டர் இனிகோ மிட்ஃபீல்டில், சென்டர் மிட்ஃபீல்டர் ஐசாக், இடதுபுறத்தில் எனப் புரியாத புதிராக இருந்தது அந்த ஃபார்மேஷன். ஐசாக் - ஜெர்ர் - எலி சாபியா கூட்டணியிடம் சுத்தமாக கெமிஸ்ட்ரி இல்லாததைப் புரிந்து, சென்னையின் இடது விங்கிலேயே அட்டாக்கைத் தொடர்ந்தது நார்த் ஈஸ்ட் யுனைடட். அதற்கு அவர்களுக்குப் பலனும் கிடைத்தது. கடைசி வரை கிரகரி அதை சரிசெய்யவில்லை. aerial பால்களுக்குத் தடுமாறிய ஃபிரான்சிஸ் இடத்தில் இனிகோவை மாற்றியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. அவர் செய்தது - மெயில்சனை வெளியே எடுத்துவிட்டு ஓர்லாண்டியைக் கொண்டுவந்தது! என்ன செய்கிறீர்கள் கிரகரி?!

இப்படி எதுவுமே புரியாமல்தான் சென்னை அணியின் ஆட்டத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது. 4-2-3-1 வேலைக்கு ஆகவில்லை. சில பிளேயர்கள் அணிக்குள் செட்டாகவில்லை. ஒற்றை ஸ்டிரைக்கர் ஃபார்மேஷனில் ஜீஜேவால் ஆட முடியவில்லை. இதையெல்லாம் அவர் சரிசெய்யவேண்டும். புனேக்கு எதிரான போட்டியில் 4-2 என வெற்றிபெற்றிருப்பது மட்டுமே ஆறுதல். இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்த சீசனில் கடைசி இடம்தான் மிஞ்சும்.