Published:Updated:

முதல் போட்டியிலேயே மன்ஸி ஹாட்ரிக்... சென்னை சிட்டி அட்டகாச வெற்றி! #ILeague

ஹாட்ரிக் அடித்து அசத்திய மன்ஸி இந்தியாவில் விளையாடும் முதல் போட்டி இதுதான். கடந்த மே மாதம்தான் இந்த ஸ்பெய்ன் வீரரை ஒப்பந்தம் செய்தது சென்னை சிட்டி அணி. புதிய அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார் மன்ஸி.

முதல் போட்டியிலேயே மன்ஸி ஹாட்ரிக்... சென்னை சிட்டி அட்டகாச வெற்றி! #ILeague
முதல் போட்டியிலேயே மன்ஸி ஹாட்ரிக்... சென்னை சிட்டி அட்டகாச வெற்றி! #ILeague

2018-19 ஐ லீக் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது சென்னை சிட்டி எஃப்.சி அணி. 12-வது ஐ-லீக் சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மோகன் பகான்,பெங்களூரு எஃப்.சி போன்ற இந்தியாவின் 11 கால்பந்து கிளப்கள் பங்குபெறும் இத்தொடர், நாட்டின் பல்வேறு நகரங்களில் மார்ச் மாதம் வரை நடக்கவிருக்கிறது. கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை சிட்டி FC மற்றும் இந்தியன் ஆரோஸ் அணிகள் மோதின.

கடந்த வருடம் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் இந்தியா சார்பாக பங்குபெற்ற பெரும்பாலான வீரர்கள் அடங்கிய அணி, இந்தியன் ஏரோஸ். அனைத்திந்திய கால்பந்து இயக்கம்(AIFF) மூலம் உருவாகிய இந்தியன் ஏரோஸ் அணியும், மைக்கேல் சூசைராஜ் போன்ற நட்சத்திர வீரர் இல்லாமல் களமிறங்கும் சென்னை அணியும் மோதிய இந்த போட்டியைப் பார்க்க போதிய அளவில் ரசிகர்கள் குவியவில்லை என்றாலும் போட்டியை காண வந்த சிறுவர்கள், கால்பந்து ரசிகர்கள் இரு அணிகளுக்கும் ஆதரவு தந்தனர்.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே சென்னை சிட்டி FC செய்த தவறினால் இந்தியன் ஏரோஸ் அணியின் கை ஓங்கியது. எதிரணி வீரர் ஒருவர் கூட டி பாக்ஸ் உள்ளே இல்லாத பட்சத்திலும் ரைட் விங்கிலிருந்து ராகுல் போட்ட கிராஸை தேவையில்லாமல் தடுக்க முயன்ற  சென்னை அணி கோல் கீப்பரின் க்ளவுசில் பட்டு பந்து ரீ பௌண்ட் ஆனது. அதை ஏரோஸ் அணி கேப்டன் அமர்ஜித் சிங் கியாம் லாகவமாக கோலாக மாற்றினார். அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட சென்னை அணி கவுன்ட்டர் அட்டாக் செய்ய, மீண்டும் எதிரணி கை ஓங்க அனுமதிக்கவில்லை.

ஆனால்,பல முறை சென்னை அணியினர் ஆன் டார்கெட்டில் ஷாட் அடித்தும் கோலாக மாறவில்லை. 17-வது நிமிடத்தில் ரமோரியா போட்ட அட்டகாசமான கிராஸை பெனால்டி ஏரியாவில் நின்றிருந்த நெஸ்டர் ஹெட்டிங் செய்ய, துரிதிருஷ்ட வசமாகப் பந்து போஸ்டுக்கு வெளியே சென்றது. பின் 31-வது நிமிடம் ரெஸ்டர் போட்ட த்ரூ பாஸை சரியாக வாங்கி கோல் கீப்பரை மடக்கி கோலாக்கியதுடன் சென்னையின் துருதிருஷ்டவசத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார் பெட்ரோ மன்ஸி. அந்த நாள் அவருக்குச் சொந்தம் என்று அப்போது தெரிந்திருக்காது.

முதல் பாதியின் எக்ஸ்ட்ரா டைமில் சென்னை வீரர் நெஸ்டர் டிஃபெண்டர்களைத் தாண்டி அலேக்காக பந்தை மன்ஸிக்கு ‘சிப்’ செய்து, அவரும் அலேக்காக கோல் கீப்பரைத் தாண்டித் தூக்கிவிட்டார். ஆனால், பந்து கோல் கம்பியில் பட்டுத் திரும்பிவிட்டது. அதோடு முதல் பாதி முடிந்து இரு அணிகளும் 1-1 என சமமாக இருந்தாலும் முதல் பாதியை பெரும்பாலும் சென்னை சிட்டி அணியினரே ஆதிக்கம் செலுத்தினர்.

முதல் பாதியைப் போல் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலும் சுறுசுறுப்பைக் காட்டியது ஏரோஸ். 45-வது நிமிடத்தில் ஏரோஸ் அணி வீரர் ரஹிம் அலி பாக்ஸ் உள்ளே கிடைத்த அற்புதமான வாய்ப்பை வீணடித்தார். லெப்ட் பேக்கிலிருந்து வந்த பாஸை சென்டர் ஃபார்வெர்டில் இருக்கும் ரஹிம் செய்த சொதப்பலால் கோல் வாய்ப்பு போனது மட்டுமில்லாமல் பந்து பொசஷனும் சென்னை அணியிடம் சென்றது. அதன் பிறகு சென்னை அணியின் கோல் பக்கம், பந்து எட்டிப்பார்க்கவே இல்லை. 49-வது நிமிடத்தில் சாண்ட்ரோ போட்ட பாஸை, மன்ஸி லாவகமாக தலையால் தட்டி இரண்டு டிஃபெண்டர்களை மடக்கி இடது காலால் வேகமாக ஒரு கிக்……கோல் கீப்பரால், ஆடாமல் அசையாமல் பந்து வலையின் உள்ளே போகும் காட்சியைப் பார்க்க மட்டும்தான் முடிந்தது.

அதோடு நிற்கவில்லை மன்ஸியின் அதிரடி. 64-வது நிமிடத்தில் சென்னை அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் போட்டு ஹாட்ரிக் அடித்தார். ஆட்டம் முழுக்க நல்ல கிராஸ்களாலும், துடிப்பான ஓட்டத்தாலும் கவனம் ஈர்த்த தமிழக வீரர் ரமோரியாவும் ஸ்கோர் கார்டில் இடம் பிடித்தார். சாண்ட்ரோ அடித்த ஷாட், கோல் கீப்பரால் தடுத்து பந்து ரீபவுண்ட் ஆகி வரும்போது ஜஸ்ட் ஒரு சிம்பில் டச்…பந்து வலைக்குள் சென்றது. முடிவில் சென்னை சிட்டி எஃப்.சி 4-1 என்று வென்று மூன்று புள்ளிகளைப் பெற்றது. 

ஹாட்ரிக் அடித்து அசத்திய மன்ஸி இந்தியாவில் விளையாடும் முதல் போட்டி இதுதான். கடந்த மே மாதம்தான் இந்த ஸ்பெய்ன் வீரரை ஒப்பந்தம் செய்தது சென்னை சிட்டி அணி. புதிய அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார் மன்ஸி. கடந்த சீசன்களில் சென்னை அணிக்கு இப்படி அட்டகாசமான ஸ்ட்ரைக்கர்கள் இல்லை. இப்போது மன்ஸி போன்ற வீரர் இருப்பது, அணிக்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துள்ளது. சென்னை சிட்டி எஃப்.சி வருகிற நவம்பர் 1-ம் தேதி சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.