Election bannerElection banner
Published:Updated:

'எல் கிளாசிகோ'வின் கிளாசிக் மெஸ்ஸி, ரொனால்டோவை நம்பி இல்லை! #ElClasico

'எல் கிளாசிகோ'வின் கிளாசிக் மெஸ்ஸி, ரொனால்டோவை நம்பி இல்லை! #ElClasico
'எல் கிளாசிகோ'வின் கிளாசிக் மெஸ்ஸி, ரொனால்டோவை நம்பி இல்லை! #ElClasico

"மெஸ்ஸி. ரொனால்டோ வருவதற்கு முன் எல் கிளாசிகோவில் பன்றித் தலையெல்லாம் பறந்திருக்கிறது..!" 

"மெஸ்ஸி, ரொனால்டோ இல்லாத எல் கிளாசிகோ எப்படி இருக்கும்?"

போட்டிக்கு முந்தைய பிரஸ் மீட்டில், பார்சிலோனா பயிற்சியாளர் எர்னஸ்டோ வெல்வெர்டே இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தார். இது அந்த ஒரு நிருபருடைய கேள்வி மட்டுமல்ல. கிட்டதட்ட இது மொத்த கால்பந்து உலகத்தின் கேள்வியாகத்தான் இருந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி யுவன்டஸ் கிளப்புக்கு ஆடிக்கொண்டிருக்கிறார். தோள்பட்டை காயத்துக்காக சிகிச்சையில் இருக்கிறார் லயோனல் மெஸ்ஸி. 10 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய போட்டி, மிகப்பெரிய இரண்டு வீரர்கள் இல்லாமல் நடக்கப்போகிறது. ஆட்டத்தில் அதே பரபரப்பும் விருவிருப்பும் இருக்குமா, கோல் மழை பொழியுமா, இது எல் கிளாசிகோவாக இருக்குமா... இந்த ஒற்றை ஆட்டம் குறித்து கடந்த ஒரு வாரமாக எக்கச்சக்க உரையாடல்கள். எல்லாமே அந்த இரு வீரர்கள் இல்லாததால்தான்.

உண்மையில் அவர்கள் இருவரும்தான் முக்கியமா? அவர்கள் மட்டும்தான் எல் கிளாசிகோவின் பேசுபொருளா? இல்லை அவர்கள்தான் எல் கிளாசிகோவா? எல்லா உரையாடல்களும் இந்தக் கேள்விகளைத்தான் முன்வைத்தன. இந்த 10 ஆண்டுகளில் கால்பந்து பார்க்கத் தொடங்கிய எல்லோரும் அப்படித்தான் நினைத்திருந்தனர். ஆனால், எல் கிளாசிகோ இரண்டு வீரர்களுக்குள் சுருங்கிவிடும் விஷயம் இல்லை. அது ஸ்பெய்னின் அரசியல். ஒரு இனத்தின் சுதந்திரம். கால்பந்துக் களத்தில் நடக்கும் கௌரவப் போர் அது. அங்கு அந்த இருவருக்கும் பெரிய ரோல் இல்லை. அவர்களுக்கு முன்பு எல் கிளாசிகோ இன்னும் உக்கிரமாக நடந்திருக்கிறது. எத்தனையோ கலவரங்களைச் சந்தித்திருக்கிறது. பல ரசிகர்கள் அதை உணர மறந்தனர். வெல்வெர்டே தன் பதிலில் அதை உணர்த்தினார். "மெஸ்ஸி. ரொனால்டோ வருவதற்கு முன் எல் கிளாசிகோவில் பன்றித் தலையெல்லாம் பறந்திருக்கிறது..!" 

கேம்ப் நூ அரங்கமும் அதைத்தான் உணர்த்தியது. ஆங்காங்கே 'et perdis messi' (மிஸ் யூ மெஸ்ஸி)என்ற பதாகைகளைப் பிடித்து நின்றனர் சில ரசிகர்கள். ஆனால், பெரும்பாலான மக்களின் கைகளில் இருந்தது கேடலோனியாவின் சுதந்திரக் கொடிதான். 93,000 ரசிகர்கள் அமர்ந்திருந்த அந்த மைதானம், நீலம், சிவப்பு, மஞ்சள் என கேடலோனிய கொடியின் நிறத்தில் அலையாக ஆடியது. அதற்கு நடுவே கேடலோனியாவின் கொடிகளும், அந்தச் சுதந்திரக் கீதமும்! எல் கிளாசிகோ எப்போதும்போல், அதே பரப்புடன், அதே உணர்வுடன், அதே வேட்கையுடன் தொடங்கியது. 

10-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது பார்சிலோனா. 30-வது நிமிடத்தில் இரண்டாவது கோல். அது மட்டுமல்லாமல் முதல் பாதியில் மேலும் சில வாய்ப்புகள் மிஸ்ஸானது. பார்சிலோனாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர்கள் ஆட்டத்தில் பெர்ஃபெக்ஷன் இருந்தது. அதை இன்னும் பெரிதுபடுத்திக் காட்டியது என்னவோ ரியல் மாட்ரிட் கொடுத்த அபத்தமான பெர்ஃபாமன்ஸ்தான். கடந்த சீசன்வரை ரியல் மாட்ரிட் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். திடீரென்று ஒரு லாங் பால் - கோல்; மின்னல் வேகத்தில் ஒரு கவுன்ட்டர் அட்டாக் - கோல்; கார்னர், ஃப்ரீ கிக் என கிடைக்கும் செட்பீஸ்களில் தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இந்த ரியல் மாட்ரிட் ஆடியது முற்றிலும் வேறு ஆட்டம். 

ஜூலியன் லோபடூகி பயிற்சியாளர் ஆனதிலிருந்து 'டிகா டாகா' ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த வீரர்களுக்கு செட் ஆகவே இல்லை. லெவன்டே, அலாவ்ஸ் போன்ற சின்ன அணிகளிடமும் கோல் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. குரூஸ், மோட்ரிச் போன்ற லாங் பால் ஸ்பெஷலிஸ்ட்கள், ஷார்ட் பாஸ்கள் போட்டு, அதிலும் தோல்வியடைந்து, பொசஷன் இழப்பது, இவர்கள் கால்களிலேயே பந்தை வைத்து பேல் போன்ற அற்புதமான விங்கரை வீணடிப்பது, மாட்ரிட்டின் டிரேட் மார்க் கவுன்ட்டர் அட்டாக்குகளை மொத்தமாக மறந்தது... இது ரியல் மாட்ரிட்டே இல்லை. எல்லாவற்றையும்விட, தன்னை இனியஸ்டா என்று நினைத்து இஸ்கோ ஆடும் ஆட்டம் அதைவிடக் கொடுமை. 'ரொனால்டோ இருந்திருந்தா' என்று சில CR7 ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர் ஜூலையில் போகாமல் இருந்திருந்தால், இவர்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ஜனவரியில் போயிருப்பார். அவரையும் மாட்ரிட்டின் இந்த சிஸ்டம் கேரத் பேல் போல் விங்கில் நின்று வேடிக்கை பார்க்க வைத்திருக்கும். 

தொடக்க காலத்தில் பார்சிலோனா டிகி டாகா ஆடியபோது, அந்த அணுகுமுறைக்குப் பொருத்தமான வீரர்கள் அணியில் இருந்தார்கள். மெஸ்ஸியைக் காட்டிலும், இனியஸ்டா, ஜாவி என்று 'மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ'க்களை மையமாகக் கொண்டுதான் அந்த சிஸ்டம் இயங்கியது. அவர்கள் இருவரும் அப்படியே ஸ்பெய்ன் அணிக்கு ஆடியது உலகக் கோப்பையில் அவர்களைச் சாம்பியனாக்கியது. அவர்களைப் போன்ற ஜீனியஸ் மிட்ஃபீல்டர்களால் மட்டுமே அந்த சிஸ்டத்துக்கு உயிர் கொடுக்க முடியும். மோட்ரிச், குரூஸ் சிறந்த மிட்ஃபீல்டர்கள் என்றாலும், அந்த ஸ்பெய்ன் இணையின் தரத்தில் இல்லை. அதை உணராமல் மாட்ரிட் இன்னும் அதை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. 

தொடர்ச்சியான 'ஒன் டச்' பாஸிங்கால் தங்கள் பகுதியிலேயே பொசஷனை அடிக்கடி இழந்தது. அதுமட்டுமல்லாமல், வீரர்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி இருக்கவேண்டும் என்ற ஃபார்முலாவை, பந்து தங்கள் வசம் இல்லாதபோதும் கடைப்பிடித்தது. அதனால் ஃபுல் பேக் ஆடிய மார்செலோ, நாசோ இருவரும் சென்டர் பேக் வீரர்களுக்கு அருகிலேயே இருந்தனர். அது விங்கில் அட்டாக் செய்ய, பார்சிலோனா வீரர்களுக்குத் தோதாக அமைந்தது. குறிப்பாக மாட்ரிட் ஏரியாவின் வலது விங்கை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஜோர்டி ஆல்பா. முதல் கோல், அவர் செய்த கிராஸால் வந்தது. இரண்டாவது கோல், அங்கிருந்த வந்த கிராஸை தடுக்கும்போது கொடுத்த பெனால்டியால் வந்தது. ஐந்தாவது கோலும், அந்த விங்கில் இருந்து ஓஸ்மான் டெம்பளே கொடுத்த கிராஸால்தான். 90 நிமிடமும் அங்கிருந்த பிரச்னையை மாட்ரிட் சரிசெய்யவே இல்லை. 

முதல் பாதி ஒன் சைட் கேமாக இருந்ததால், புது யுக்தியுடன் வந்தது மாட்ரிட். ரஃபேல் வரேன் நீக்கப்பட்டு, லூகாஸ் வஸ்க்யூஸ் களமிறங்க, அவரது வேகம் பழைய மாட்ரிட்டை உயிர்ப்பித்தது. வரிசையாக கோல் அட்டெம்ப்ட்கள். முதல் பாதியில் மாட்ரிட்டின் ஷாட் ஆன் டார்கெட் இரண்டே இரண்டுதான் (அதுவும் டிஃபண்டர்கள் மார்செலோ, செர்ஜியோ ரமோஸ் அடித்தது). ஆனால், இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாக பார்சிலோனா போஸ்ட்டைக் குறிவைத்தனர். பென்சிமா இரண்டு அட்டம்ப்ட்களைத் தவறவிட்டார். மார்செலோ ஒரு கோல் திருப்பினார். மோட்ரிட் கோல்கம்பத்தில் அடித்தார். 2-1 என்ற நிலையில், மாட்ரிட் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட, ஆட்டம் சூடு பிடித்தது. 

ஆனால், கடைசி 15 நிமிடங்களில் மொத்தமாக மாட்ரிட்டைப் போட்டுத் தள்ளியது பார்சிலோனா. போட்டுத் தள்ளினார் லூயிஸ் சுவாரஸ். ஹாட்ரிக் கோல் அடித்து நானும் சூப்பர் ஸ்டார்தான் என்பதை கேம்ப் நூ அரங்கத்தில் பதியவைத்தார். ஒரு பெனால்டி, ஒரு சிப், ஒரு ஆசம் ஹெடர் என மூன்று கோல்களும் ஒவ்வொரு டைப். ஆனால், அதைவிட செர்ஜி ராபெர்டோவின் கிராஸில் அவர் செய்த 'சைட் வாலி' சிலிர்க்க வைத்தது. ஆனால், போஸ்ட்டில் பட்டுத் திரும்பிவிட்டது. கோலாகியிருந்தால் அதுதான் ஆட்டத்தின் பெஸ்ட் மொமன்ட். ரமோஸ், நாசோ என ஒவ்வொருவரும் தவறு செய்ய, அதையெல்லாம் பயன்படுத்திக்கொண்டது பார்கா. 

லோபடூகியின் சப்ஸ்டிட்யூஷன்கள் இன்னும் ஒரு படி மேல். அநியாத்துக்கும் சொதப்பிய நாசோவை விட்டுவிட்டு, பெனால்டி பாக்ஸில் ஒரு தவறு செய்த வரேனை வெளியே எடுத்தார். பாஸிங், ட்ரிப்ளிங், டெலிவரி என அனைத்து ஏரியாவிலும் சொதப்பிய இஸ்கோவை விட்டுவிட்டு, கேரத் பேலை வெளியே எடுத்தார். இதற்கு மத்தியில், கொஞ்சம் நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்த மார்செலோ காயத்தால் வெளியேற, அது அணியை இன்னும் பாதிக்கத் தொடங்கியது. அவர் ஆடிய இடது விங்கிலும் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. மொத்தத்தில் தன் சொதப்பல் சிஸ்டத்தால் 5-1 என்ற மிகப்பெரிய தோல்வியை மாட்ரிட்டுக்குப் பரிசளித்துள்ளார் லோபடூகி. மெஸ்ஸி இல்லாத பார்சிலோனா மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. 

மெஸ்ஸி இருந்திருந்தால் நிச்சயம் இரண்டு, மூன்று கோல்கள் அதிகமாக அடிக்கப்பட்டிருக்கும். ஆனால், அங்கு இன்னொரு நட்சத்திரம் உருவாகிவிட்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில், கேலரியில் அமர்ந்திருந்த மெஸ்ஸியை சில முறை காட்டிய கேமராக்கள், அதன்பின் சுவாரஸ் பக்கம் திரும்பிவிட்டன. கேடலோனியக் கொடிகள் அசைவதைப் படம் பிடிக்கத் தொடங்கிவிட்டன.  வர்ணனையாளர்கள் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணியாகத்தான் அதைப் பார்த்தார்கள். அங்கு கூடியிருந்த 93,000 ஸ்பெய்ன், கேடலோனிய ரசிகர்களுக்கும் அப்படித்தான். எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும் போனாலும் இந்தக் களம் மாறப்போவதில்லை. அதற்கான மதிப்பு குறையப் போவதில்லை. இந்தக் களம் பன்றித் தலைகளை மட்டுமல்ல, ரத்தங்களையும் பார்த்த களம். இதைக் கொண்டாட மெஸ்ஸியும், ரொனால்டோவும் தேவையில்லை. இது எல் கிளாசிகோ! இன்றைய டிரெண்டில் சொல்லவேண்டுமானால், El clasico is not just a game... It's an emotion!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு