Published:Updated:

ஈகோவால் வீழ்ந்துகொண்டிருக்கும் கால்பந்தின் பவர்ஹவுஸ் ஜெர்மனி!

ஈகோவால் வீழ்ந்துகொண்டிருக்கும் கால்பந்தின் பவர்ஹவுஸ் ஜெர்மனி!

டீம் செலக்ஷனில், ஃபார்மேஷனில், பிளேயிங் ஸ்டைலில் லோ செய்யும் தவறுகளை இடிக்கப்பட்ட ஜெர்மன் சுவர் முழுதாக எழுதலாம்.

ஈகோவால் வீழ்ந்துகொண்டிருக்கும் கால்பந்தின் பவர்ஹவுஸ் ஜெர்மனி!

டீம் செலக்ஷனில், ஃபார்மேஷனில், பிளேயிங் ஸ்டைலில் லோ செய்யும் தவறுகளை இடிக்கப்பட்ட ஜெர்மன் சுவர் முழுதாக எழுதலாம்.

Published:Updated:
ஈகோவால் வீழ்ந்துகொண்டிருக்கும் கால்பந்தின் பவர்ஹவுஸ் ஜெர்மனி!

'எப்படி இருந்த டீம் இப்படி ஆயிடுச்சு' என்று அனைவரின் அனுதாபங்களையும் சம்பாதித்துக்கொண்டிருக்கிறது ஜெர்மனி. உலகக் கோப்பை அதிர்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து அதிர்ச்சிகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. 'யூரோப்பியன் நேஷன்ஸ் லீக்' தொடரில் நெதர்லாந்து, ஃபிரான்ஸ் என அடுத்தடுத்து அடிவாங்கி அரண்டுபோய் நிற்கிறது ஜெர்மனி. உலகக் கோப்பை தோல்வியிலிருந்து ஜெர்மனி இன்னும் மீளவில்லை என்று மொத்த உலகமும் அவர்கள்மீது பரிதாபப் பார்வை வீசுகிறார்கள். பயிற்சியாளர் ஜோகிம் லோ மீது பல குற்றச்சாட்டுகள். ஜெர்மனிக்கு என்னதான் ஆச்சு..?!

12 ஆண்டுகள் ஜெர்மனியை கால்பந்தின் பவர் ஹவுஸாக வைத்திருந்த ஜோகிம் லோ, கடந்த ஓராண்டாக ரொம்பவே தடுமாறுகிறார். வீரர்கள் தேர்வு, அணுகுமுறை என அனைத்திலும் சொதப்புகிறார். தொடர்ச்சியாகத் தடுமாறும் கேப்டன் மானுவேல் நூயர், தாமஸ் முல்லர், ஜெரோம் போடங் போன்ற சீனியர் வீரர்களைத் தொடர்ந்து அணியில் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தாமஸ் முல்லர் அடித்திருப்பது இரண்டே கோல்கள். அதிலும் ஒன்று அஜர்பெய்ஜான் அணியோடு அடித்தது. 2014 உலகக் கோப்பை வென்ற அணியின் தன் ஃபேவரிட் வீரர்களை மாற்றுவதில் அவருக்கு மனமில்லை. ஃபார்மில் இல்லாத அந்த வீரர்களால் ஜெர்மனியின் எழுச்சிக்குக் கொஞ்சம்கூட உதவ முடியவில்லை. 

தன் வாழ்நாளின் உச்சகட்ட ஃபார்மில் இருந்த லெராய் சனேவை உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாமல் அதிர்ச்சி கொடுத்தார். 'யூரோப்பியன் நேஷன்ஸ் லீக்' தொடரில் ஃபார்மில் இல்லாத மார்க் உத் பிளேயிங் லெவனில் களமிறக்கப்பட்டார். கோல் அடிக்கத் தடுமாறும் டிமோ வெர்னரை தொடர்ந்து களமிறக்குவதோடு, ஸ்டிரைக்கரான அவரை விங்கில் ஆடவிட்டு, மொத்தமாக அவரையும், அந்த பொசிஷனையும் வீணாக்கிக்கொண்டிருக்கிறார். உலகக் கோப்பையில் ஜொலித்த ஒரே ஜெர்மன் வீரர் ஜொஷுவா கிம்மிச்சை, ரைட் பேக் பொசிஷனிலிருந்து, மிட்ஃபீல்டில் களமிறக்கி மொத்த கெமிஸ்ட்ரியையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படி டீம் செலக்ஷனில், ஃபார்மேஷனில், பிளேயிங் ஸ்டைலில் லோ செய்யும் தவறுகளை இடிக்கப்பட்ட ஜெர்மன் சுவர் முழுதாக எழுதலாம். ஆனால், ஜெர்மனியின் வீழ்ச்சி உலகக் கோப்பைக்குப் பிறகுதான் தொடங்கியதா? உண்மையில் பயிற்சியாளரின் அணுகுமுறை மட்டும்தான் இந்தத் தோல்விகளுக்குக் காரணமா? இரண்டுக்கும் 'இல்லை' என்பதுதான் பதில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2017 ஜூன், ஜூலை மாதங்கள் நடந்த கான்ஃபெடரேஷன் கோப்பையில் இரண்டாம் தர அணியை வைத்து ஜெர்மனியை சாம்பியனாக்கினார் லோ. 'இரண்டாம் தர அணியை வைத்தே சாம்பியன் ஆன அணி, உலகக் கோப்பையில் என்ன செய்யும்' என்று பிரமித்தார்கள் கால்பந்து ரசிகர்கள். ஆனால், நடந்ததெல்லாம் தலைகீழ் மாற்றங்கள். நவம்பரிலேயே தொடங்கிவிட்டது ஜெர்மனியின் சரிவு. இங்கிலாந்து, ஃபிரான்ஸ் அணிகளுடனான நட்புறவு போட்டிகளை டிரா செய்தது. உலகக் கோப்பைக்கு முன்பான ஆட்டங்களில் ஸ்பெய்னுடன் டிரா, பிரேசிலுடன் தோல்வி என திண்டாடியது. சரி, பெரிய அணிகளுக்கு எதிராகத்தான் தடுமாறுகிறதோ என்று பார்த்தால் ஆஸ்திரியாவிடமும் அடிவாங்கியது. சவூதி அரேபியாவை மட்டும் வென்று, கடைசி 6 ஆட்டங்களில் வெறும் ஒரேயொரு வெற்றியோடுதான் உலகக் கோப்பைக்குள் நுழைந்தது ஜெர்மனி. இதற்கும் லோவின் அணுகுமுறைகள் மட்டும்தான் காரணமா? இல்லை. 

ஜெர்மனி வீரர்களின் மனநிலை பற்றி கட்டாயம் பேசவேண்டிய நேரம் இது. ஒரு அணியாக, ஒரே அணியாக ஜெர்மனி இருக்கிறதா என்றால் கட்டாயம் இல்லை. சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் இடையே குழுவாக ஈகோ பிரச்னை. ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட ஈகோ பிரச்னை என்று அணியின் உளவியல் படுமோசமாக இருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன்பாக, "இப்போதெல்லாம் ஜூனியர் வீரர்களின் நடத்தை மிகமோசமாக இருக்கிறது. சீனியர் வீரர்கள் முன்பு மரியாதையாக நடந்துகொள்வதில்லை. நாங்களெல்லாம் அவ்வளவு எளிதில் எங்கள் சீனியர்களிடம் பேசிவிட மாட்டோம். ஆனால், இப்போது அப்படியில்லை. ஏதோ அவர்களின் கிளாஸ்மேட்கள் போல் வந்து பழகுகிறார்கள்" என்று சொல்லியிருந்தார் டிஃபண்டர் மேட்ஸ் ஹம்மல்ஸ். 

அப்படி இதனால் அவருக்கு என்ன பிரச்னை வந்துவிட்டது என்று தெரியவில்லை. 19 வயது ஃபிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பேவிடம் அத்தனை ஃபிரான்ஸ் வீரர்களும் சரிசமமாகத்தான் பழகுகிறார்கள். ஃபிரான்ஸ் டிரெஸ்ஸிங் ரூமில் அப்படி எந்த பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. 27 வயது கிரீஸ்மேனின் தோள்களில் கைபோடுகிறார். கோலைக் கொண்டாட கண்ணத்தில் அடிக்கிறார். அவர்களுக்குள்ளான உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. அந்த நல்ல கெமிஸ்ட்ரிதானே ஃபிரான்ஸை சாம்பியனாக்கியது. கால்பந்து எனும் டீம் கேமில், வேறு எந்த மாதிரியான மரியாதையை ஹம்மல்ஸ் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. அப்படி ஜூனியர் வீரர்களிடம் பிரச்னை இருந்தாலும் டிரெஸ்ஸிங் ரூம் விஷயங்களை அப்படி ஓப்பனாக மீடியாவிடம் சொல்வது என்ன மாதிரியான எதிக்ஸ்? 

லெரோய் சனே அணியில் சேர்க்கப்படாததற்குக் காரணமே ஈகோ பிரச்னைகளாக இருக்கலாம் என்று அப்போது ஜெர்மன் பத்திரிகைகள் எழுதியிருந்தன. உலகக் கோப்பைக்குப் பிறகும்கூட இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. 'சனே தன் பாடி லாங்குவேஜை சரிசெய்துகொள்ளவேண்டும்' என்று மீடியாவில் பேசினார் டோனி குரூஸ். ஜோகிம் லோ பதவி விலகவேண்டுமென்று முன்னாள் கேப்டன் மைக்கேல் பாலக் சொன்னது பற்றிக் கேட்டதற்கு, "ஒருவேளை அந்தப் பதவியில் அவர் உட்காரப் பார்க்கிறாரோ என்னவோ" என்று ஓப்பனாகவும் பேசினார் குரூஸ். ஜூனியர் வீரர், ஒரு முன்னாள் கேப்டன், என யாரைப் பற்றியும் மீடியாவில் எதுவும் பேசலாம் என்ற மனநிலையில் இந்த 'சீனியர்' ஜெர்மனி வீரர்கள் இருக்கிறார்கள். 

இப்படி ஒருபுறம் மற்றவர்களைக் குறைசொல்லி, தங்கள் தவறுகளை மறைப்பதில் சிறப்பாகச் செயல்பட்டார்கள். உலகக் கோப்பை தொடரில், எதிரணியின் அபார ஆட்டத்தால் ஒன்றும் ஜெர்மனி வெளியேறிவிடவில்லை. மிகமோசமாக அவர்கள் செய்த தவறுகள், அந்த அணியை முதல் சுற்றோடு வெளியேற்றியது. ஆனால், தவறு செய்த ஒருவர்கூட தன் தவறை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எல்லோரும் தங்களை பெர்ஃபெக்டாக கூச்சமின்றி காட்டிக்கொண்டார்கள். மெக்ஸிகோ அணியுடனான முதல் போட்டியில் குரூஸ் பல இடங்களில் ஆளே காணவில்லை. சீனியர் வீரர் என்பதால் தன் இஷ்டத்துக்கு அட்டாகிங் கேம் ஆடிக்கொண்டு, டிஃபன்ஸுக்கு சப்போர்ட் செய்ய மறந்தார். ஹம்மல்ஸ் செய்த மிகப்பெரிய தவறுதான் மெக்ஸிகோ வின்னிங் கோல் அடிக்க உதவியது. ஆனால், அதையெல்லாம் எந்தத் தருணத்திலும் உணர்ந்து இவர்கள் வருந்தவில்லை. ஒரு 22 வயது வீரரின் ஈகோதான் இவர்களுக்குப் பிரச்னை!

இதையெல்லாம் விட பெரிய கதை மெசூட் ஒசில் ஓய்வுக் கதை. இவர் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதாலும், தொடக்க காலத்திலேயே ஜெர்மனிக்கு வெளியே கிளப் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்ததாலும், ஒசில் எப்போதுமே ஜெர்மனி ரசிகர்களுக்கு விளையாட்டு பொம்மைதான். சரியாக இந்த உலகக் கோப்பைக்கு முன், அவர் துருக்கி அதிபரைச் சந்தித்த விஷயம் பெரிதாக, உலகக் கோப்பை தோல்வி அதை இன்னும் வலுப்படுத்தியது. கடைசியில் இவரையே எல்லோரும் பகடையாக்க, இவரும் ஒருபக்கம் ஜெர்மனி கால்பந்து சங்கம் மீது இனவெறி புகார் அளித்து நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். கடைசியில் ஓய்வையும் அறிவித்துவிட்டார். இதற்கு நடுவில் யாரும் அவரது உலகக் கோப்பை பெர்ஃபாமன்ஸ் பத்திப் பேசவில்லை. புதுப் புதுப் பிரச்னைகளாக எழும்போது எப்படிப் பேச முடியும்?

உலகக் கோப்பை முடிந்த சில வாரங்களிலேயே சிக்கல்களை உணர்ந்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டுக் குறை சொல்வதிலேயே மூழ்கியிருக்க, இப்போது நெதர்லாந்திடம் கூட 3-0 என தோற்றிருக்கிறது. உலகக் கோப்பைக்கே தேர்வாகாத, அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நெதர்லாந்திடம் ஜெர்மனி ஆடிய ஆட்டம்... நினைத்துக்கூடப் பார்க்காத ஒன்று. கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகள். 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இப்படி எந்த முன்னேற்றமும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் ஜெர்மன் கால்பந்து அணி, மாற்றிக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. நிர்வாகம், பயிற்சியாளர், சீனியர்கள், ஜூனியர்கள் என அனைவரும் மாறவேண்டும். டீம் செலக்ஷன், அணுகுமுறை, கேம் ஸ்டைல், கேரக்டர் என அனைத்துமே மாறவேண்டும். நிர்வாகமும் பயிற்சியாளரும் தங்களை மாற்றிக்கொள்ளும் முன் வீரர்களிடம் மாற்றம் ஏற்படவேண்டும். இல்லையேல் ஜெர்மனி கால்பந்தின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிடும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism