Published:Updated:

மெஸ்ஸி மேஜிக், நெய்மர், டிபாலா ஹாட்ரிக்... சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் அப்!

மெஸ்ஸி மேஜிக், நெய்மர், டிபாலா ஹாட்ரிக்... சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் அப்!
News
மெஸ்ஸி மேஜிக், நெய்மர், டிபாலா ஹாட்ரிக்... சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் அப்!

மெஸ்ஸி மேஜிக், நெய்மர், டிபாலா ஹாட்ரிக்... சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் அப்!

லகின் டாப் கிளப்கள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சமிருக்காது. சாம்பியன் அணிகளும் சமயங்களில் மண்ணைக் கவ்வும்; கத்துக்குட்டி அணிகளும் சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும். அந்த வகையில் இந்த வாரம் நடந்த போட்டிகளில், நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட், கடந்த சீஸனின் ரன்னர்-அப் லிவர்பூல் அணிகள் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்திருக்கின்றன. மறுபுறம் பார்சிலோனா, பி.எஸ்.ஜி, யுவென்டஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள் தங்கள் வெற்றி நடையைத் தொடர்கின்றன. ஸ்பர்ஸ் அணிக்கெதிரான மெஸ்ஸியின் மேஜிக், டிபாலா, நெய்மரின் ஹாட்ரிக்தான் இந்தவார ஹைலைட்ஸ். இதோ சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது `மேட்ச் வீக்’ ரவுண்ட்-அப்.

தொடரும் `ரியல்' சொதப்பல்

`குரூப்-ஜி’-ல் இடம்பெற்றிருக்கும் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட், ரஷ்யாவின் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்றது. அந்த அணியின் ஸ்டார் பிளேயர்களான கெராத் பேல், மார்செலோ மற்றும் இஸ்கோ ஆகியோர் காயங்களால் அவதிப்பட, கேப்டன் செர்ஜியோ ரமோஸுக்கு ஓய்வளித்தார் பயிற்சியாளர் லொபொடூகி. விளைவு, போட்டி தொடங்கிய 65 நொடிகளிலேயே நிகோலா விளாசிச் அடித்த கோலால் முன்னிலை பெற்றது சிஎஸ்கேஏ மாஸ்கோ. கடைசிவரை போராடிப் பார்த்த ரியல் மாட்ரிட்டால் பதில் கோல் திருப்ப முடியாமல் போக, இறுதியில் பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது. ஏற்கெனவே லா லிகாவில் நடந்த இரண்டு ஆட்டங்களுடன் சேர்த்து, தொடர்ந்து 3 வது முறையாக இந்தப் போட்டியிலும் வெற்றியடையாத ரியல் மாட்ரிட், இந்த 3 போட்டிகளிலும் சேர்த்து ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பதுதான், தோல்வியைக் காட்டிலும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தபோது, மாட்ரிட் தொடர்ந்து 3 போட்டிகளாக கோல் அடிக்காமல் இருந்ததே கிடையாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிபாலாவின் `ஹாட்ரிக்’ 

இத்தாலியின் சாம்பியனான யுவென்டஸ், சுவிட்சர்லாந்தின் யங் பாய்ஸை எளிதாக வீழ்த்தி `குரூப் எச்’ ல் ஆதிக்கம் செலுத்துகிறது. சீரி ஏ தொடரில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த யுவென்டஸின் `பிளேமேக்கர்’ பாலோ டிபாலா, `ரொனால்டோ இல்லைனா என்ன அதான் நான் இருக்கேன்ல' என்பதுபோலப் பொங்கியெழுந்து ஹாட்ரிக் கோல்களை அடித்து, யுவென்டஸுக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். `வெலன்சியா அணிக்கெதிரான கடந்த போட்டியில் சிவப்பு அட்டை பெற்ற சூப்பர் ஸ்டார் ரொனால்டோ’, தடை காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. ஆனால், அவர் இல்லாத குறையை டிபாலா தனது ஹாட்ரிக்கால் நிவர்த்தி செய்ய, அனைத்து வகையான போட்டிகளிலும் தொடர்ந்து 9 வது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது யுவென்டஸ். மேலும், தடை முடிந்துவிட்டதால் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான அடுத்த போட்டியில், ரொனால்டோவின் `ஆக்‌ஷனை’ ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

மெஸ்சியின் `மேஜிக்’

லா லிகாவில் தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெறாமல் சொதப்பி வந்த பார்சிலோனா, சாம்பியன்ஸ் லீக்கில் இங்கிலாந்தின் ஸ்பர்ஸை வீழ்த்தி, ஒருவழியாக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. `குரூப் ஆஃப் டெத்’ என்றழைக்கப்படும் கடினமான `குரூப் பி’ ல் இடம்பெற்றுள்ள பார்சிலோனா மற்றும் டாட்டென்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள், லண்டனில் உள்ள `வெம்ப்ளே’ மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இறுதிவரை விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 2-4 என்ற கோல்கணக்கில் ஸ்பர்ஸைத் தோற்கடித்து, குருப்பில் முதலிடத்தைப் பிடித்தது பார்சிலோனா. டெலே அல்லி, ஜேன் வெர்டோங்ஹன், கிறிஸ்டியன் எரிக்சன், மௌசா டெம்பெலே உட்பட ஸ்பர்ஸ் அணியின் மிகமுக்கியமான வீரர்கள் காயத்தால் ஆடாமல் போக, அதைப் பயன்படுத்திய பார்சிலோனா முதல்பாதி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி 2 அற்புதமான கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் சுதாரித்துக் கொண்ட ஸ்பர்ஸிற்கு, கேப்டன் ஹாரி கேன் மற்றும் லமேலாவின் கோல்கள் நம்பிக்கையளித்தன. ஆனாலும் கூட, இரண்டாம் பாதியில் நிகழ்ந்த `மெஸ்ஸி மேஜிக்கில்’ ஸ்பர்ஸ் வீரர்கள் கொஞ்சம் மெய்மறந்து போயினர். விளைவு இரண்டு கோல்களை தனக்கென்று பதிவு செய்துகொண்ட பார்சிலோனா கேப்டன் லியோனல் மெஸ்சி, இறுதியில் வெற்றியைத் தங்கள் வசமாக்கினார். முன்னதாக முதல் பாதியில் பார்சிலோனாவின் பிலிப்பே கொடினியோ மற்றும் இவான் ரகிடிச் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தத் தோல்வியின் மூலம் கடந்த முறை ரியல் மாட்ரிட்டைச் சமாளித்து குரூப் சுற்றில் முதலிடம் பிடித்த ஸ்பர்ஸின் அடுத்த சுற்று வாய்ப்பு, இம்முறை இன்னொருபடி கீழே சரிந்துவிட்டது.

பி.எஸ்.ஜி `கோல்மழை’

`குரூப் சி’ ல் கடந்த போட்டியில் லிவர்பூல் அணியிடம் கடைசி நிமிடத்தில் வெற்றியைக் கோட்டை விட்ட பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், இந்த முறை செர்பிய நாட்டு கிளப்பான ரெட் ஸ்டார் பெல்க்ரடை துவம்சம் செய்து தனது பலத்தை நிரூபித்துள்ளது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிஎஸ்ஜி, எளிதாகப் பெற்ற இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ்லீக் தொடரில் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது. நெய்மார், எடின்சன் கவானி, டி மரியா மற்றும் எம்பாப்பே என பி.எஸ்.ஜி-யின் அட்டாகிங் லைனில் உள்ள அனைவருமே கோல் அடித்தாலும் கூட, `உலகின் காஸ்ட்லி மேன்’ நெய்மார் காட்டியது `தனி ஒருவன் ஷோ’. குறிப்பாக, நெய்மார் அடித்த ஹாட்ரிக்கில் அட்டகாசமான இரண்டு ஃப்ரீ-கிக் கோல்களும் அடக்கம். ரெட் ஸ்டார் வீரர் மரின் அடித்த ஒரே கோல் அவர்களுக்கு ஆறுதல் தந்தாலும், ஆட்டத்தின் இறுதியில் பிஎஸ்ஜி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

லிவர்பூல், பேயர்ன் ஷாக்

`குரூப் சி’ ல் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் லிவர்பூல் இத்தாலியின் நெபொலியிடம் தோல்வியைத் தழுவியது. டிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இந்த ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார், நெபொலியின் லொரென்ஸோ இன்ஸிக்னே. அன்டோனி கிரீஸ்மேன் இரண்டு கோல்களும், இறுதிக்கட்டத்தில் கோகே ஒரு கோலும் அடிக்க, குருப் ஏ பிரிவில் பெல்ஜியத்தின் க்ளப் ப்ரஜ் அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது அட்லெடிகோ மாட்ரிட். முன்னதாக மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனியின் ஹோஃபென்ஹாம் அணியை வென்றதும், ஜெர்மனியின் சாம்பியன் பேயர்ன் முனிச் நெதர்லாந்தின் அயாக்ஸுடன் அதிர்ச்சி டிரா கண்டது.