Published:Updated:

`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி!

`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி!
`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி!

ஒடிசாவில் நடந்துவரும் பெண்களுக்கான தேசியக் கால்பந்துப் போட்டியில், நடப்புச் சாம்பியன் தமிழ்நாடு அணி 13 - 0 என சண்டிகரை வீழ்த்தி அசத்தியது. இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் 20 கோல்கள் அடித்து மிரட்டுகிறது நம் பெண்கள் அணி.

முதல் போட்டியில் மிசோரம் அணியை 7 - 0 என்று போட்டுத் தள்ளிய தமிழ்நாடு அணி, இன்று சண்டிகரையும் நசுக்கிவிட்டது. மிசோரம் அணிக்கெதிராக 4-2-3-1 ஃபார்மேஷனில் ஆடிய அணி, இன்று 4-4-2 ஃபார்மேஷனுக்கு மாறியது. முதல் பாதியில் ஆறு கோல்கள் அடித்த தமிழக வீராங்கனைகள், இரண்டாவது பாதியில் 7 கோல்கள் அடித்தனர். தமிழக அணியின் ஸ்டார் ஃபார்வேர்டு இந்துமதி இந்தப் போட்டியில் 5 கோல்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார். தேன்மொழி ஹாட்ரிக் கோல்கள் அடிக்க, மிசோரம் அணிக்கெதிராக ஹாட்ரிக் அடித்த சுமித்ரா இன்று 2 கோல்கள் அடித்தார். நந்தினி 2 கோல்களும், மாளவிகா 1 கோலும் அடித்தனர்.

`13 - 0'.. சண்டிகரை நொறுக்கிய தமிழகப் பெண்கள் கால்பந்து அணி!

இந்த வெற்றி குறித்துப் பேசிய தமிழகப் பயிற்சியாளர் முருகுவேந்தன், ``இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீராங்கனைகள் அனைவரும் சிறப்பாக, எதிர்பார்த்தபடியே விளையாடினர். முதல் போட்டியில் பலமான மிசோரம் அணியை எளிதாக வீழ்த்தியதால் அதிக நம்பிக்கையோடு களமிறங்கினோம். தொடர்ந்து மழை பெய்ததால், ஆடுகளம் ரொம்பவே ஈரமாக இருந்தது. அதனால் எங்களின் `ஆல் அவுட் அட்டாகிங்' ஆட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. கடந்த போட்டியில் சந்தியா காயமடைந்ததால், கவனமாக `சேஃப்' கேம்தான் ஆடினார்கள். அப்படியிருந்தும் 13 கோல்கள் அடித்து அசத்தியுள்ளனர். மஹாராஷ்டிரா அணியை அடுத்த போட்டியை டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்துவிடுவோம். ஆனால், டிராவுக்காக ஆடினால் அணியின் தன்மையை இழக்க நேரிடும். நம் அணி வெற்றிக்கு மட்டுமே ஆடும்" என்று கூறினார்.

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்று பெண்கள் கால்பந்து வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தமிழக அணி. அதற்கடுத்து சில வாரங்களுக்கு முன்பாக ஜூனியர் தேசிய சாம்பியன் ஆனது தமிழ்நாடு. தொடர்ந்து இந்த ஆண்டும் அசத்திவருகின்றனர்.