Published:Updated:

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL
News
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL

2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது.

இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பிலுள்ள `ஃபேவரைட்’ அணிகளைப் பற்றிய அலசல். #UCL

ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)

கடந்த 3 வருடங்களாக கோப்பையைக் கைப்பற்றி, சாம்பியன்ஸ்லீக் தொடரை `குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ரியல் மாட்ரிட், இந்தமுறையும் கோப்பையைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சீஸனில் இருந்த பலமிக்க அணி இப்போது இல்லை. ஏனென்றால், பயிற்சியாளர் ஜிடேன் கடந்த சீஸனின் இறுதியிலேயே விடைபெற்றுவிட, இந்த சீஸனின் தொடக்கத்தில், மாட்ரிட்டின் `சூப்பர்ஸ்டார்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ  யுவென்டஸ் அணிக்குச் சென்றுவிட்டார். ரொனால்டோ இல்லாவிட்டாலும் கேரத் பேல், பென்சிமா, மற்றும் இஸ்கோ கூட்டணி இருப்பதால் அட்டாக்கிற்கு பஞ்சம் இருக்காது. நடுகளத்தில் லூகா மோட்ரிச் மற்றும் குரூஸ் நம்பிக்கையளிக்கின்றனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்களின் இப்போதைய பிரச்னை டிஃபன்ஸ். செர்ஜியோ ரமோஸ், மார்செலோ ஆகியோர் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்துவதால், அது அவ்வப்போது எதிரணியினருக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. உலகக் கோப்பையின் சிறந்த கோல்கீப்பர் கோர்ட்வாவை வாங்கியிருப்பதால், கொஞ்சம் நம்பிக்கை கூடியுள்ளது. `குரூப்-ஜி’ ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் ரோமாவை சமாளித்தாலே போதும். ரோமாவைத் தவிர மற்ற இரு அணிகளையும் எளிதாக வென்று, அடுத்த சுற்றுக்கு மாட்ரிட் முன்னேறுவது உறுதி.

பார்சிலோனா (ஸ்பெயின்)

கடந்த சீஸனில் இத்தாலியின் ரோமாவிடம் அடிவாங்கி, காலிறுதியில் வெளியேறி அதிர்ச்சியளித்த பார்சிலோனா, இம்முறை சாம்பியன்ஸ்லீக் கோப்பையை முத்தமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டனாகப் பதவியேற்றபோது, ``சாம்பியன்ஸ்லீக் கோப்பையினை வெல்ல எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என சூளுரைத்திருக்கிறார் `லிட்டில் மாஸ்டர்’ லியோனல் மெஸ்ஸி. ஆர்தர், மால்கம், அர்டுரோ விடால் மற்றும் லெங்லெட் என புதுவரவுகள் பார்சிலோனாவுக்குப் போதுமான பலம் சேர்க்கின்றனர். முன்களத்தில் மெஸ்சி, சுவாரஸ், டெம்பெலே என மூவரும் `சூப்பர் ஃபார்மில்’ இருக்கிறார்கள். இனியஸ்டா எனும் மாபெரும் ஜாம்பவான் இல்லாமல் களமிறங்குகிறது அந்த அணி. ஒரு வீரராக கொடினியோ அவரது இடத்தை நிரப்பினாலும், ஒரு லீடராக இனியஸ்டாவை பார்சிலோனா மிஸ் செய்யும். லீடர் எனும் மிகப்பெரிய ரோலை மெஸ்ஸியால் நிரப்ப முடியுமா. ரசிகர்களின் கேள்விக்கு மெஸ்ஸி பதில் சொல்லவேண்டிய தருணம் இது. 

பார்சிலோனாவின் ஒரே பலவீனம் பீக்கே, உம்டிடி, ஆல்பா அடங்கிய டிஃபென்ஸ் லைன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தவறாவது செய்துவிடுகின்றனர். கோப்பையை வெல்ல அவர்கள் தடுமாறாமல் இருக்க வேண்டியது அவசியம். `குரூப் ஆஃப் டெத்’ என்றழைக்கப்படும் குரூப்-பி ல், பலமிக்க டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் மற்றும் இண்டர் மிலன் அணிகளுடன் இடம்பெற்றிருக்கும் பார்சிலோனா, குரூப் சுற்றைக் கடக்க கடினமாகப் போராட வேண்டியிருக்கும்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்)

புதிய பயிற்சியாளர் தாமஸ் டுகெல்லின் வருகையால் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு, இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்குகிறது பிஎஸ்ஜி. இந்த சீஸனில், இத்தாலியின் யுவென்டஸிலிருந்து வந்திருக்கும் `லெஜெண்ட்’ கோல்கீப்பர் ஜிஜி புஃபோன் மிகவும் அனுபவசாலி. தியாகோ சில்வா, மர்க்யுன்ஹொஸ், டேனி ஆல்வஸ் ஆகிய டிஃபண்டர்களும் போதுமான அனுபவம் கொண்டவர்களே. இதுவரை பின்களத்தில் கொஞ்சம் கோட்டைவிட்டுக்கொண்டிருந்த அணிக்கு, இந்த சீசன் மிகப்பெரிய மாற்றமாய் அமையக்கூடும். 

இன்றைய தேதிக்குக் கால்பந்து உலகின் மிகச்சிறந்த அட்டாக்கிங் பார்ட்னர்ஷிப் கொண்ட அணி பி.எஸ்.ஜி தான். எடின்சன் கவானி, நெய்மர் மற்றும் `யங்ஸ்டார்’ எம்பாப்பே அடங்கிய அட்டாக் எதிரணிகளைப் பந்தாடப்போவது உறுதி. பி.எஸ்.ஜி இருக்கும் `குரூப்-சி’ ல் லிவர்பூல், நெபோலி ஆகிய அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். கடந்த முறை நெய்மர் காயமடைந்தது போல, இந்தமுறை யாரும் காயமடையாமல் இருந்தாலேபோதும், பிஎஸ்ஜி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

யுவென்டஸ் (இத்தாலி)

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது அசுர பலத்தில் இருக்கிறது யுவென்டஸ். காரணம் ரொனால்டோ என்னும் `ஒன் மேன் ஆர்மியின்’ வருகை. 2017-ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்தமுறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தமுறை சாம்பியன்ஸ் லீக் வென்றால், 3 வேறு அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் வென்றவர் என்ற மகத்தான சாதனையையும் அவர் படைப்பார். பாலோ டிபாலா, மண்ட்சுகிச், டக்லஸ் கோஸ்டா ஆகியோர் அட்டாக்கில் ரொனால்டோவுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நடுகளத்தில் மடூடி, ஜானிச், கெதிரா மற்றும் எம்ரே சேன் என நிறைய வீரர்கள் இருந்தாலும், மோட்ரிச், கொடினியோ பொன்ற அட்டாக்கிங் ஜீனியஸ்கள் இல்லை. அதனால் அட்டாக் பெரும்பாலும் விங்கர்களை நம்பியே இருக்கிறது. டிஃபென்ஸில் செலினியோடு, மிலனிலிருந்து மீண்டும் அணிக்கு வந்திருக்கும் பொனுச்சி கைகோப்பது அணிக்கு பெரிய பூஸ்ட். ஆனால் புஃபோன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை சீக்கிரம் நிரப்பினால் மட்டுமே யுவென்டஸ் இந்தத் தொடரில் நீடிக்கமுடியும்.

`குரூப்-ஜி’ ல் மான்செஸ்டர் யுனைடெட் தான் யுவென்டஸிற்கு தலைவலியை ஏற்படுத்தும். 2013-ல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ அடித்த கோல்கள், மான்செஸ்டர் யுனைடெட்டை தொடரிலிருந்து வெளியேற்றியது வரலாறு. இந்நிலையில் மீண்டும் ரொனால்டோ தனது முன்னாள் அணியுடன் மோதப் போகிறார் என்பதால் எதிர்பார்ப்புக்குப் பஞ்சமில்லை. அவர் மட்டுமல்லாமல் உலகக் கோப்பை நாயகன் போக்பாவும் இந்தப் போட்டியில் தன் முன்னாள் அணியை எதிர்கொள்ளப்போகிறார். 

பேயர்ன் முனிச் (ஜெர்மனி)

தொடர்ந்து 6 முறை புண்டஸ்லிகா டைட்டிலைக் கைப்பற்றியிருக்கும் பேயர்ன் முனிச், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் சமீக காலமாக முத்திரை பதிக்க முடியாமல் தடுமாறுகிறது. நிகோ கோவக் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சாம்பியன்ஸ்லீக் கோப்பையை வென்று ஐரோப்பிய அரங்கிலும் ஆதிக்கத்தைச் செலுத்தும் முனைப்பிலுள்ளது. ஆனால், இந்த மாற்றத்தை ஏற்படுத்த பயிற்சியாளர் ரொம்பவே மெனக்கெடவேண்டும். அடிக்கடி அணிக்குள் ஈகோ மோதல் வெடித்துள்ளது. அதைச் சமாளிக்கவேண்டும். முல்லர் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பும்போது அவர்களை பெஞ்சில் அமர்த்தும் துணிவான முடிவு எடுக்கவேண்டும். முந்தைய பயிற்சியாளர்களைப் போல் தொடர்ச்சியாக ரொடேஷன் செய்யாமல் ஓரளவு நிலையான பிலேயிங் லெவனை அமைக்க வேண்டும். போதாக்குறைக்கு நடுகளவீரர் டொலிஸோ காயத்தால் 6 மாதங்களுக்கு ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் விரைவில் தீர்வு ஏற்படுத்தினால் பேயர்ன் மறுபடி வெல்லும். 

இந்த அணிகள் தவிர்த்து, கடந்த சீஸனின் `ரன்னர்-அப்’ லிவர்பூல், இந்தமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற கடினமாகப் போராடும். வழக்கத்துக்கு மாறாக அந்த அணியின் நடுகளமும், டிஃபன்ஸும் பலமாக இருக்கிறது. சாலா, மனே மற்றும் ஃபிர்மினோ அடங்கிய படையைக் கொண்டிருப்பதால் நிச்சயம் எதிரணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும். பெப் கார்டியோலாவின் தலைமையில் கடந்த சீஸனின் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் இந்தமுறை தங்களை நிரூபிக்கக் காத்திருக்கிறது. டேவிட் சில்வா, டி புருய்னே மற்றும் செர்ஜியோ அக்வேரோ போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்த சிட்டி, ஒலிம்பிக் லியான், ஹோஃபென்ஹெய்ம் போன்ற அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு எப்படியும் முன்னேறிவிடும்.

2014 மற்றும் 2016 வருடங்களின் `ரன்னர்-அப்’ அத்லெடிகோ மாட்ரிட், கடந்த சீஸனின் `யூரோப்பா லீக் சாம்பியன்’ என்ற பெருமையுடன், இம்முறை சாம்பியன்ஸ்லீக் தொடரில் கலந்துகொள்கிறது. கடந்த 2 சீஸன்களாக அவர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாதபோதும், சிமியோனின் ஜாலத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.