Published:Updated:

' 'மூலக்கொத்தளம்' நாகேஷ் மட்டும் பிரேசில்ல பிறந்திருந்தா...!’ - தமிழகத்தின் கால்பந்து ஜாம்பவான் #Tribute

``நாகேஷ் நல்ல பிளேயர். ஆனா, பிராக்டீஸுக்கு வர மாட்டான். டிரில் தாங்க மாட்டான். ட்ரெய்னிங் தாங்க மாட்டான். ட்ரெய்னிங் வராததால, மறுநாள் அவனை பெஞ்ச்ல உக்கார வைச்சேன். ஆடியன்ஸ் எல்லாம் நாகேஷை இறக்குனு கத்துறாங்க. கெட்ட வார்த்தையில என்னைத் திட்றாங்க.’’

' 'மூலக்கொத்தளம்' நாகேஷ் மட்டும் பிரேசில்ல பிறந்திருந்தா...!’ - தமிழகத்தின் கால்பந்து ஜாம்பவான் #Tribute
' 'மூலக்கொத்தளம்' நாகேஷ் மட்டும் பிரேசில்ல பிறந்திருந்தா...!’ - தமிழகத்தின் கால்பந்து ஜாம்பவான் #Tribute

இப்பெருநகரில் பக்கத்து வீட்டில் இருப்பவரின் பெயரைக் கேட்டாலே பலருக்கும் தெரியாது. ஆனால், வியாசர்பாடியில் பக்தவச்சலம் காலனியின் முதல் தெருவில் நுழைந்து, முனீஸ்வரன் கோவில் அருகே நின்று, `ஐ.சி.எஃப் கோச் சண்முகம் வீடு எது’ எனக் கேட்டால் எல்லோரும் சொல்கிறார்கள்... `அதோ அந்த சிவப்பு பெயின்ட் அடிச்ச வீடுதான், கோச் வீடு. இந்நேரம் அவர் வாசல்லதான் சேர்ல உக்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பாரு...’ - சொன்னதுபோலவே, `மாலைமலர்’ படித்துக் கொண்டிருந்தார் சண்முகம். இது அவரைப் பற்றிய கதை அல்ல.

அமைந்தகரையில் திரு.வி.க பள்ளியை ஒட்டியிருக்கும் கிரவுண்டில்தான், சிறுவர்களுக்கு இலவசமாக கால்பந்து பயிற்சியளித்து வருகிறார் சி.என்.மூர்த்தி. 50 ஆண்டுகளாகச் சென்னை கால்பந்தைக் கரைத்துக் குடித்தவர். சீனியர் டிவிஷன், சந்தோஷ் டிராபி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் வந்தால், எல்லோரும் தொடர்புகொள்ளும் ஒரே நபர். தமிழக கால்பந்தின் நடமாடும் என்சைக்ளோபீடியா. கோல் போஸ்ட்டுக்கு அருகே பந்தை நகர்த்திக்கொண்டே `இன் அண்ட் அவுட்’ பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம், திடீரென பந்தைத் தனக்கு பாஸ் போடச் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப் பந்தைச் சிறுவனை நோக்கி அடித்து, `அடி... அப்டியே கோல் அடி’ என கிராஸ் போட்டார். அவன் தலையால் முட்டி கோல் அடித்ததைப் பார்த்து, பூரிப்பில் நம் பக்கம் திரும்பி,  `இப்படித்தான் 1986-ல ஒரு மேட்ச்ல..’ என நினைவுகளில் மூழ்கினார் மூர்த்தி. இது மூர்த்தியைப் பற்றிய கதையும் அல்ல.

அது, சீனியர் டிவிஷனின் `கிளாசிகோ’ என வர்ணிக்கப்படும் ரயில்வே - ஐ.சி.எஃப் மேட்ச். ஆயிரம் பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள் என்றாலும், இருந்தவர்கள் அத்தனை பேரும் பரம எதிரிகள்.  ஐ.சி.எஃப் கோல் அடித்ததும், டமடமவென கொட்டுச் சத்தம் கும்மியடித்தது. மறுநிமிடமே கவுன்ட்டர் அட்டாக்கில் ரயில்வே கோல் அடித்ததும், விசில் சத்தம் சென்ட்ரல் ஸ்டேஷன் வரை எதிரொலித்தது. ஆட்டம் களை கட்டியது. ஒவ்வொருமுறை தவறு செய்தபோதும் ரெஃப்ரிக்கு அர்ச்சனை விழுந்தது. மேட்ச் முடிந்ததும் ஐ.சி.எஃப் கோச், ரயில்வே பிளேயர்களைக் குறை சொன்னார். பதிலுக்கு ரயில்வே கோச், ஐ.சி.எஃப் பிளேயர்களை வறுத்தெடுத்தார். ஆனால், இவர்கள் யாருமே `ஆட்ட நாயகன்’ தேர்வை மட்டும் குறைசொல்லவே இல்லை. ஏனெனில், ஆட்ட நாயகனைத் தேர்ந்தெடுத்தது ஒரு ஜாம்பவான். `ஏம்ப்பா... அந்தப் பத்தாம் நம்பருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் கொடுத்திருலாம்ல...’ என அவர்  சொன்னதும், `மறுபேச்சே இல்லை. அதான், அவரே சொல்லிட்டார்ல’ என எல்லோருமே ஏகமனதாக தலையசைத்தார்கள். ஆம், இது அவரைப் பற்றிய கதை. `சென்னையின் பீலே’ நாகேஷைப் பற்றிய கதை!

இதுவே ஒரு டாக்குமென்ட்ரியாக இருந்தால், நாகேஷ் லெஃப்ட் விங்கில் இருந்து, மடித்து மடித்து, டிஃபண்டர்களை ஏமாற்றி, பாக்ஸுக்குள் நுழைந்து, கோல் கீப்பரை ஏமாற்றி, தனி ஆளாக கோல் அடித்து, கார்னர் கிக் எடுக்கும் இடத்தை நோக்கி சறுக்கியபடியே சொல்லும் விஷுவலைக் காட்டி, `The legend’ என பில்டப் கொடுக்கலாம். என்ன செய்வது பல பொன்னான தருணங்கள் நம்மிடம் வீடியோவாக இல்லை. `சீக்கிரமே நாகேஷைப் பத்தி ஒரு டாக்குமென்ட்ரி எடுக்கணும்’ என்ற அந்த மூத்த நிருபரின் கனவும் கடைசிவரை பலிக்கவே இல்லை. 

அன்று வீடியோகிராபர்கள் ஸ்ட்ரைக். அதனால், கபில்தேவ் 175 ரன்களை எப்படி அடித்தார் என்பது பலருக்கும் தெரியாது. `கிரிக்கெட்டில் நாங்கள் ரன்கள் அடிப்பதைப் போல, ஹாக்கியில் நீங்கள் கோல்கள் அடிக்கிறீர்கள்’ என தயான் சந்தைப் புகழ்ந்தார் கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன். ஆனால், அந்த ஹாக்கி ஜாம்பவான் எப்படி விளையாடுவார் என்பதும் நமக்குத் தெரியாது. அதேபோலத்தான், 1970, 1980-களில் நாகேஷ் நிகழ்த்திய மேஜிக் கதைகளைப் பற்றியும் செவி வழியாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். 

நாகேஷ் இந்திய அணிக்காக விளையாடவில்லை.  தமிழ்நாட்டுக்காக சந்தோஷ் டிராபியும் ஜெயிக்கவில்லை. ஆனாலும், அவரை `சென்னையின் பீலே’ என்கிறார்கள்; `கரின்சாவின் ஜெராக்ஸ்’ என்கிறார்கள். அதனால்தான், அவர் இறந்த தகவல் அறிந்ததும்... (ஆம், கடந்த வாரம்) அவரது ஆட்டத்தைப் பார்த்தவர்களைச் சந்தித்துப் பேச நினைத்தோம். அதற்கு, எல்லோரும் பரிந்துரைத்த ஒரு நபர் ஐ.சி.எஃப் முன்னாள் கோச் சண்முகம். அவர், நாகேஷ் ஐ.சி.எஃப் கிளப்பில் விளையாடியபோது, அங்கு பயிற்சியாளராக இருந்தவர். மற்றொருவர், நாகேஷின் இளமைப் பருவத்திலிருந்து அவரை கவனித்து வரும் சி.என். மூர்த்தி. 

கால்பந்து எப்படி தன் வாழ்க்கையை மாற்றியது என உணர்வுப்பூர்வமாக சொல்லிக் கொண்டிருந்தார் சண்முகம். உணர்ச்சிப் பெருக்கில் நாற்காலியின் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் திடீரென, ஏதோ நினைவு வந்தவராக, `நீங்க நாகேஷைப் பத்தி பேச வந்திருக்கிங்க. இல்லையா...’எனச் சொல்லிவிட்டு, சற்று பின்பக்கம் நகர்ந்து, ஆசுவாசமாய் நாற்காலியில் அமர்ந்து, தலையைச் சுவரில் சாய்த்து, கண்களை இறுக மூடினார். ஒரு நிமிடம் ஆழ்ந்த அமைதி. இரண்டாவது நிமிடம் வலது கண்ணிலிருந்து கோடிழுத்து வழிந்த நீர் காது மடல்களை நனைத்தது.

பொதுவாக, பயிற்சியாளர்களுக்கென்று ஒரு திமிர் இருக்கும். அது இயல்பும் கூட. எப்பேர்ப்பட்ட வீரனையும் அவர்கள் `ஜாம்பவான்’ என ஒப்புக்கொள்வதே இல்லை. ஒன்றுமே இல்லாத போர்ட்டோ அணியை சாம்பியன்ஸ் லீக் ஜெயிக்க வைத்தவன் என்ற திமிர் ஜோஸே மொரினியோவுக்கு இன்றும் இருக்கிறது. அதனால்தான், இன்டர் மிலனில் இருந்தபோது இப்ராஹிமோவிச் அடித்த அந்த கோலை எல்லோரும் மெய் சிலிர்த்துப் பார்த்துக் கொண்டிருக்க, `இதெல்லாம் ஒரு கோலா...’ எனக் கடந்து போனார் மொரினியோ. கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பற்றி சர் அலெக்ஸ் பெர்குசனிடம் கேட்டால் கூட,  `greatest player for ever’ என ஒற்றை வரியில் கடந்து விடுவார். அப்படியிருக்க, ஒரு வீரனுக்காக ஒரு பயிற்சியாளர் கண்ணீர் சிந்துகிறார் எனில்,  நிச்சயம் அவர் லெஜண்டாக இருந்தால்தானே சாத்தியம்?!

``கோச்சிங்ல இருந்தவரைக்கும் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நாகேஷ் நல்ல பிளேயர். ஆனா, பிராக்டீஸுக்கு வர மாட்டான். டிரில் தாங்க மாட்டான். ட்ரெய்னிங் தாங்க மாட்டான். ட்ரெய்னிங் வராததால, மறுநாள் அவனை பெஞ்ச்ல உக்கார வைச்சேன். ஆடியன்ஸ் எல்லாம் நாகேஷை இறக்குனு கத்துறாங்க. `பர்மா நாயே’னு என்னைத் திட்றாங்க. செருப்பை வீசுறாங்க. நாகேஷுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருந்தாங்க. மேட்ச் முடிஞ்சதும், அவன் வீடு வரைக்கும் கூடவே ரசிகர்கள் நடந்து போவாங்க.  என்ன சொல்றது... நாகேஷ், தமிழ்நாட்டுக்குக் கிடைச்ச  ஒரு கிஃப்ட்!’ - பிடித்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதுபோல, நாகேஷைப் பற்றி `கிஃப்ட்’ என்ற ஒரே வார்த்தையில் திரும்பத் திரும்ப புகழ்கிறார் சண்முகம். 

`நாகேஷைப் பத்தி நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம்’ என்பது மூர்த்தியின் கருத்து. ``இந்த 50 வருஷத்துல நானும் எத்தனையோ பிளேயரைப் பார்த்துட்டேன். ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு பிளேயர் இன்னும் பிறக்கலை. பிறக்கவும் மாட்டான். நாகேஷ் பந்தைக் கொண்டு போறான்னா ஒரு பைய முன்ன நிக்க முடியாது. முதமுதல்ல, ஸ்லம்காக ஒய்.எம்.சி.ஏ-ல நடக்கிற டோர்னமென்ட்லதான் நாகேஷபை் பார்த்தேன். காலையில குவார்ட்டர் ஃபைனல் முடிஞ்சதும், `கறுப்பா ஒரு பையன் ஆடுறான். நல்லா ஆடுறான்’னு எங்க பசங்க சொன்னாங்க. சரி ஈவ்னிங், செமில பார்க்கலாம்னு சொன்னேன். ஒல்லியா இருந்தான். ஒரு மாதிரி ஆடுனான். ஃபுட்வொர்க்லாம் பாத்திங்கனா... அதெல்லாம் கடவுள் கிஃப்ட். சடர்னா டர்ன் பண்றது. பால் இந்தப் பக்கம் நிக்கும்; லெஃப்ட் சைட் மூவாகுற பாலை, அப்டியே இந்தப் பக்கம் மடிச்சி, டேரக்ஷனையே மாத்திருவான். அந்த மாதிரி பிளேயர் அவன்’’ என மெய் சிலிர்க்கும் மூர்த்திக்கு, நாகேஷ் கரியரில் ஒரு முக்கிய பங்கு உண்டு. 

``கார்ப்பரேஷன்ல நாகேஷ் ஆடுன ஆட்டத்தைப் பார்த்து, யூத் கிரியேசன் டீம்ல எடுத்தாங்க. அந்த வருஷம் அவன் அண்டர் 19 போறான். ஜுனியர் நேஷனல்ஸ் அது. அதுல செலக்ட் ஆனதும் கார்ப்பரேஷன் டீம்ல எடுத்தாங்க. அப்போதான் கார்ப்பரேஷன் டீம் ஃபார்ம் பண்றாங்க. தமிழ்நாடு முழுக்க எங்க பெஸ்ட் பிளேயர் இருந்தாலும், அவங்களை sign பண்றதுல ஐ.சி.எஃப் கில்லி. ஐ.சி.எஃப்ல இருந்தப்போ அவனுக்கு அடிபட்டுச்சு. ராயப்பேட்டை ஜி.ஹெச்ல வச்சி சர்ஜரி நடந்துச்சு. அப்போ ஐ.சி.எஃப்ல இருந்து யாரும் வந்து பார்க்கலைனு ஒரு சின்ன வருத்தம் இருந்துச்சு. அதனால, அங்கிருந்து போர்ட் டிரஸ்ட் போயிட்டான். அந்த சர்ஜரிக்கு ஹெல்ப் பண்ணதால கடைசி வரைக்கும் நன்றியா இருந்தான்’’ என பெருமைப்படும் மூர்த்தி, நாகேஷின் எளிமையைப் பார்த்து மெய் சிலிர்க்கிறார்.  

``பேர் சொல்ல விரும்பல. வேலை கிடைச்சதும் அந்த பிளேயர் தன்னோட கிட்டை சுமக்குறதுக்குன்னு ஒரு பையனை வேலைக்கு வச்சிகிட்டான். ஆனா, நாகேஷ் அப்படி இல்லை. அவனுக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும். ஆனா, அவன் ஷுவை ஒரு பாலித்தின் கவர்ல போட்டு, அதைக் கக்கத்துல இடுக்கி, வெறுங்காலோட ரோட்டுல நடந்து வருவான்’’ என மூர்த்தி சொல்வது அத்தனை உண்மை. சீனியர் டிவிஷன் போட்டிகளில் மேன் ஆஃப் தி மேட்ச் நோட்ஸ் எடுக்கும்போது, எந்த அலட்டலும் இல்லாமல் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார் நாகேஷ். 

``மரியாதை தெரிஞ்ச பையன். இந்த வயசுலயும் காலைத் தொட்டுக் கும்பிட்டு, கோச், கோச்னு உசுரா இருப்பான். என்ன... அவன் பிறந்த இடம் அப்படி. சேர்க்கை சரியில்லை. பழக்கவழக்கம் சரியில்லை. நாகேஷ் மட்டும் மூலக்கொத்தளத்துல பிறக்காம பிரேசில்ல பிறந்திருந்தா, எங்கயோ போயிருப்பான். இந்தியன் டீம் கேம்ப்ல எல்லாம் கூட இருந்தான். அங்க டிரில் தாங்க முடியாம, சுவரேறி குதிச்சு ஓடி வந்துட்டான். கொஞ்சம் கட்டுப்பாடோட இருந்திருந்தா, இந்தியாவுலயே நம்பர் -1 பிளேயரா வந்திருப்பான். பாய்சுங் பூட்டியாலாம் நாகேஷ் கால் தூசுக்கு சமம்’ என பெருமூச்சு விடுகிறார் சண்முகம்.

சண்முகம் பட்டும் படாமல் சொன்னதை, மூர்த்தி பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார். ``கேரளாவுல இவர் பெரிய பிளேயர். அங்க ரொம்ப செவன்ஸ் டோர்னமென்ட் நடக்கும். சும்மாவே இவனைப் பிடிக்க முடியாது. செவன்ஸ்ல ஆஃப் சைட் வேற இல்லையா... சிட்டா பறப்பான். இவன் படத்தை போஸ்டர் அடிச்சுத்தான், அங்க விளம்பரமே பண்ணுவாங்க. நல்லா ஆடுவான். ஆனா, டிசிபிளின் கிடையாது. வளர்ந்த இடம் அப்டி. மேட்ச் முடிஞ்சதும் ஹெவியா சாப்பிடக் கூடாது. ஆனா, ஒரு டோர்னமென்ட் முடிஞ்சதும் பைசா வாங்கிட்டு, நல்லா ஃபுல் கட்டு கட்டிட்டு, டிரெய்னல மறுநாள் வேற இடத்துக்கு டோர்னமென்ட் போவாங்க. இறங்குற ஸ்டேஷன் வர்ற வரைக்கும் சீட்டாட்டம். ரெஸ்ட் கிடையாது. பிராப்பர் ட்ரெய்னிங் கிடையாது. 

ஒரு புரஃபொஷனல் பிளேயருக்குரிய ஒழுங்கு கிடையாது. மத்த பிளேயர்லாம் மாங்கு மாங்குனு ட்ரெய்ன் பண்ணிட்டிருப்பான். இவன் ட்ரெய்னிங் எப்டினு பாருங்க... அப்டியே நிப்பான்; கையைக் காலை நல்லா உதறுவான், நின்ன இடத்துல இருந்தே ரெண்டு ஜம்ப்பு... அவ்ளோதான் வார்ம் அப் முடிஞ்சது.  எதிர்ல இருக்கிறவன்ட்ட பந்தை பாஸ் போடச் சொல்வான். ரெண்டு பாஸ் போடுவான். அப்டியே தோளைச் சிலுப்பிட்டே, `அந்த பிளேயர் வந்தாச்சா, இந்தப் பிளேயர் வந்தாச்சா’னு கேட்பான். ரைட். போலாம்னு கிளம்பிருவான். இவ்ளோதான் அவன் ட்ரெய்னிங். ஆனா, மேட்ச்னு வந்துட்டா, `ரெண்டு கோல் என்து’னு சொல்லி அடிப்பான்.  மதுரை கோல் கீப்பர் ஒருத்தன். ராஜபாண்டினு பேரு.  `ஏன் நாகேஷ்... அவ்ளோ இடம் இருக்கே. என் காலுக்கு இடையிலதான் கோல் அடிக்கணுமா’னு கதறுவான் அந்தக் கோல் கீப்பர். இவன் சிரிச்சிட்டே போயிடுவான். நாகேஷ் எதிர்ல வந்தா ஆப்பனன்ட் பிளேயர் அப்படி பயப்படுவாங்க. கிளாசிக் பிளேயர்ங்க...’’ என்றார் மூர்த்தி. 

நாகேஷின் ட்ரெய்னிங் செஷனை மூர்த்தி சொல்லிக் காட்டியது ஒரு வேடிக்கை எனில், நாகேஷின் டிரிபிளிங் திறமையைப் பற்றி சண்முகம் சொல்லிக் காட்டியது அல்ட்டிமேட். `லெஃப்ட், ரைட்னு ரெண்டு கால்லயும் கோல் அடிப்பான். 1986 உலகக் கோப்பைல மாரடோனா ஒரு கோல் அடிப்பாரே... அது மாதிரி அத்தனை டிஃபண்டரையும் ஏமாத்தி, மடிச்சி மடிச்சி போவான்’’ என, சண்முகம் சொல்லும்போது அவரது வலது முழங்கை பாம்பு போல நெளிந்து நெளிந்து செல்கிறது. 

பழைய கார்ப்பரேஷன் கிரவுண்டில் நாகேஷ், பெனால்டி பாக்ஸில் டிரிபிள் செய்து முன்னேறுவது மனக் கண்ணில் விரிகிறது!