ஐரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் மூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமியர் லீக் (இங்கிலாந்து), லா லிகா (ஸ்பெய்ன்), சீரி - ஏ (இத்தாலி), புண்டஸ்லிகா (ஜெர்மனி), லீக் 1 (ஃபிரான்ஸ்) தொடர்களின் சம்மரி...
பிரீமியர் லீக் (இங்கிலாந்து)
பிரீமியர் லீக் எப்போதும்போல் இப்போதே ஆச்சர்யங்களை அடுக்கத் தொடங்கிவிட்டது. அட்டகாசமான 2017/18 சீசனுக்குப் பிறகு அதே உத்வேகத்தில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, இரண்டு அசத்தல் வெற்றிகளுக்குப் பிறகு இந்த வாரம் ஓர் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சீசன் ப்ரமோட் ஆன வோல்ஸ்பெர்க் அணியுடன் மோதிய சிட்டி, எதிரணியின் அரணை உடைக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ டி ப்ருய்னே காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது பின்னடைவாக அமைந்துவிட்டது. ஒருகட்டத்தில் 1-0 என பின்னிலையில் இருந்த அந்த அணி, டிஃபண்டர் ஆய்மரிக் லபோர்ட் போட்ட அசத்தல் ஹெட்டரால் டிரா செய்தது.
மற்ற முன்னணி க்ளப்களான லிவர்பூல், செல்சீ தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தன. அந்த இரண்டு அணிகளும்கூட பலம் குறைந்த எதிரணிகளுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறவே செய்தன. லிவர்பூல் அணி முகம்மது சலா அடித்த ஒற்றை கோலின் உதவியால் ப்ரிட்டன் அண்ட் ஹோவால்பியான் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. கடந்த சீசன் வரை மிக மோசமான டிஃபன்ஸ் கொண்டிருந்த லிவர்பூல் இந்த சீசனில் இதுவரை ஒரு கோல்கூட விடவில்லை! செல்சீ 2-1 என்ற கோல் கணக்கில் நியூ கேசில் யுனைடட் அணியைப் போராடி வென்றது.
பிரீமியர் லீகின் இன்னொரு ஆச்சர்யம் வாட்ஃபோர்ட்! கடந்த சீசனில் 14-ம் இடம் பிடித்திருந்த வாட்ஃபோர்ட் அணி, இந்த முறை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக இந்த சீசனைத் தொடங்கியுள்ளது. கிறிஸ்டல் பேல்ஸ் அணியுடனான போட்டியில் 2-1 என வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் அமர்ந்துள்ளது. மற்றொரு முன்னணி அணியான அர்செனல் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. புதிய பயிற்சியாளர் யுனாய் எமரி தலைமையில் ஆரம்பத்தில் சொதப்பியவர்கள், அவர்களைவிட மோசமாக விளையாடிய வெஸ்ட் ஹாம் யுனைடட் அணியை 3-1 என வீழ்த்தினர். இந்த வாரத்தின் மிகப்பெரிய போட்டியான மான்செஸ்டர் யுனைடட் vs டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆட்டம் செவ்வாய் அதிகாலை நடக்கவுள்ளது.
லா லிகா (ஸ்பெய்ன்)
கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். அதேபோல் அவர்களின் இள ரத்தங்கள் அஸேன்சியோ, இஸ்கோ இருவரும் மிகச் சிறப்பாக 'Post - Ronaldo' சீசனுக்கு பங்களிக்கின்றனர். பென்சிமா 2 கோல்களும், ரமோஸ், பேல் இருவரும் தலா 1 கோல் அடிக்க மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.
ரியல் வலோலாய்ட் அணியுடன் மோதிய நடப்பு லா லிகா சாம்பியன் பார்சிலோனா 1-0 என போராடி வென்றது. மெஸ்ஸி, சுவார்ஸ், டெம்பளே, ரகிடிச், கொடினியோ என முழு பலத்துடன் களமிறங்கியபோதும் எதிரணியின் டிஃபன்ஸை அவர்களால் உடைக்க முடியவில்லை. 57-வது நிமிடத்தில் ஓஸ்மான் டெம்பளே அடித்த கோல் அந்த அணியி வெற்றி பெறச் செய்தது. மற்றொரு முன்னணி அணியான அத்லெடிகோ மாட்ரிட் 1-0 என ரியல் வலோசேனோ அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட், பார்சிலோனா இரண்டு அணிகளும் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தில் இருக்கிறது.
சீரி - ஏ (இத்தாலி)
யுவன்டஸ் அணிக்காக விசித்திரமான முறையில் அசிஸ்ட் செய்து கணக்கைத் தொடங்கியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. வலது விங்கில் இருந்த கோல் போஸ்ட் நோக்கி கிராஸ் வர, அதை கோலாக்க விரைந்தார் சி.ஆர்.7. லேஸியோ கோல்கீப்பரின் கையில் பட்டுவிட, அவரக்கு சரியாக சிக்காமல் காலின் பின்புறம் பட்டு பந்து எழும்பியது. அதை மாண்ட்சுகிச் கோலாக்கினார். யுவன்டஸ் அணிக்காக தன் இரண்டாவது போட்டியில் ஆடும் ரொனால்டோ, கோலுக்கு செய்த முதல் பங்களிப்பு இது. அதற்கு முன்பு மிரேலம் ஜேனிக் கோலடிக்க, 2-0 என வெற்றி பெற்றது யுவன்டஸ்.
நெபோலி அணியின் புதிய பயிற்சியாளராகப் பதவியேற்றுள்ள கார்லோ ஆன்சலோட்டி, தான் முன்பு பயிற்சியாளராக இருந்த ஏ.சி.மிலன் அணிக்கு எதிரான 'எமோஷனல்' ஆட்டத்தில் தன் அணியை வெற்றி பெறவைத்தார். இந்த ஆட்டத்தில் நெபோலி 3-2 என வெற்றி பெற்றது. நெபோலி அணியின் ஜீலின்ஸ்கி இரண்டு கோல்கள் அடித்தார். டொரினோ, இன்டர் மிலன் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது. ஃபியோரன்டினா அணி சீவோவை 6-1 எனப் போட்டுத் தள்ளியது. அந்த அணியின் ஆறு வீரர்கள் தலா 1 கோல் அடித்தனர்.
புண்டஸ்லிகா (ஜெர்மனி)
ஜெர்மனியின் புண்டஸ்லிகா தொடர் சனிக்கிழமை ஆரவாரத்தோடு தொடங்கியது. நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச், ஹோஃபன்ஹேம் அணியை 3-1 என வீழ்த்தி,புதிய பயிற்சியாளர் நிகோ கோவக் தலைமையிலான சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது. உலகக் கோப்பையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து, ஜெர்மனியின் முன்னணி வீரர்கள் புத்துணர்ச்சியோடு சீசனைத் தொடங்கினார்கள். அந்த அணியின் முதல் கோலை தாமஸ் முல்லர் அடித்தார். ராபர்ட் லெவண்டோஸ்கி, அயன் ராபன் ஆகியோரும் தங்கள் கோல் கணக்கைத் தொடங்கினர்.
பேயர்ன் மூனிச் அணியைவிட ஒரு கோல் அதிகமாக அடித்ததால், கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடம் பிடித்தது பொருஷியா டார்ட்மண்ட். ஆர்.பி.லீப்சிக் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 4-1 என வெற்றி பெற்றது. ஜீன் கெவின் அகஸ்டின் முதல் நிமிடத்திலேயே கோலடித்து டார்ட்மண்ட் அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அதன்பிறகு சுதாரித்து ஆடிய 'பி.வி.பி' அணியினர் முதல் பாதியிலேயே 3 கோல்கள் திருப்பினர். இரண்டாவது பாதியில் ஆட்டம் விருவிருப்பாக இருந்தாலும் லீப்சிக் அணியால் பதில் கோல் போட முடியவில்லை. ஆட்டம் முடியும் நேரத்தில் டார்ட்மண்ட் கேப்டன் ரியூஸ் கோலடித்து அணியின் கணக்கைக் கூட்டினார்.
லீக் - 1 (ஃபிரான்ஸ்)
பி.எஸ்.ஜி அணியின் ஆதிக்கம் லீக் - 1 தொடரில் கொஞ்சமும் குறையவில்லை. தாமஸ் டக்கல் தலைமையில் அந்த அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கவானி, நெய்மர், எம்பாப்பே அடங்கிய முன்களத்தை எந்த அணியாலும் சமாளிக்க முடியவில்லை. சனிக்கிழமை ஏங்கர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் இவர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. மூன்று பேருமே ஆளுக்கொரு கோல் அடித்து பி.எஸ்.ஜி அணியை வெற்றிபெறவைத்தனர். உலகக் கோப்பை நாயகன் கிலியன் எம்பாப்பே இதுவரை 3 கோல்கள் அடித்துள்ளார்.
கடந்த சீசனில் 11-வது இடம் பெற்றிருந்த டிஜோன் அணி இந்த முறை பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. நைஸ் அணியை 4-0 எனத் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜூலியஸ் கீட்டா இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 2016/17 சீசனின் சாம்பியன் மொனாகோ, பார்டியாக்ஸ் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.