Published:Updated:

கிரிஸ்மேன் , எம்பாப்வே... - நேற்றைய அகதிகள் இன்றைய சாம்பியன்கள்! #WorldCup2018

கிரிஸ்மேன் , எம்பாப்வே... - நேற்றைய அகதிகள் இன்றைய சாம்பியன்கள்! #WorldCup2018
கிரிஸ்மேன் , எம்பாப்வே... - நேற்றைய அகதிகள் இன்றைய சாம்பியன்கள்! #WorldCup2018

பிறந்து வளர்ந்த நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் எனும் வெறியை விட, அன்னியர்களான தங்களை அரவணைத்த நாட்டுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனும் அன்புதான் பேரன்பு...

பிரான்ஸ் என்றதும் ஈஃபில் டவரும், காதலும்தான் நினைவுக்கு வரும். பிரான்ஸின் மதம், பிரான்ஸின் கலாச்சாரம், பிரான்ஸின் பூர்வ குடிகள், பிரான்ஸின் விடுதலை இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இனி பிரான்ஸ் என்றால் உலகக் கோப்பையும் நினைவுக்கு வரும். கூடவே, பிரான்ஸ் எப்படிப் பல தேசங்களை ஒருங்கிணைத்து இந்த உலகக் கோப்பையை வென்றது என்பதும் நினைவுக்கு வரும். இந்த உலகக் கோப்பை அகதிகளாக வந்து பிரான்ஸின் அரவணைப்பில் சாதித்த மக்களுக்குச் சொந்தமானது. கிரீஸ்மேன் ஜெர்மானிய தந்தைக்கும், போர்ச்சுகீஸ் தாய்க்கும் பிறந்தவர், எம்பாப்பே கேமரூன் தந்தைக்கும் அல்கேரிய தாய்க்கும் பிறந்தவர். போக்பா ஆப்பிரிக்காவின் கினி நகரத்தில் இருந்து வந்தவர், உம்டிட்டி கேமரூனில் பிறந்தவர். இவர்கள் மட்டுமல்ல ஜிடேன் அல்கேரிய தாய் தந்தைக்குப் பிறந்தவர்.

பிரான்ஸ் இப்போது வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு அகதிகளே காரணம். இந்தக் கதை இரண்டாம் உலகப்போரில் ஆரம்பமாகிறது. 1945-ல் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்த சமயம் ஒட்டுமொத்தமாக அழிந்திருந்தது பிரான்ஸ். தனது தேசத்தை மீண்டும் கட்டமைக்க மக்கள் தேவை என்பதால் அருகில் இருந்த அல்ஜீரியா, ஜெர்மனி, போலந்து, போர்ச்சுகீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து அகதிகளை வேலைக்கு எடுத்தது ஃபிரென்சு அரசு. 1950-ல் உலகப்போரின் துயரத்தில் இருந்து மீண்டுவந்தும் அகதிகளை அனுமதிப்பதை நிறுத்தவில்லை. போர் முடிந்த பிறகு, 1940-ல் இருந்து 1965 வரை மொத்தம் 27 லட்சம் அகதிகளை அனுமதித்திருந்தார்களாம். இக்காலகட்டத்தில் பிரான்ஸின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொழிலாளர்கள் பற்றாக்குறை வந்தது. அதற்காக மீண்டும் அரபு நாடுகளிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் போரில் அகதிகளானவர்களை பிரான்ஸ் அனுமதித்தது. இவர்களில் பெரும்பாலானோர் பாரிஸ், மார்செல், லியான் போன்ற நகரங்களில் குடிபெயர ஆரம்பித்தனர். 

ஒரு வழியாகப் பொருளாதார ரீதியான வளர்ச்சியை அடைந்தது ஆனால், உலக அரங்கில் மரியாதையைப் பெற பிரான்ஸுக்கு விளையாட்டு சார்ந்த வளர்ச்சி தேவைப்பட்டது. 1960-ல் இருந்து 74 வரை நடைபெற்ற 3 உலகக் கோப்பையிலும், 3 யூரோ கோப்பையிலும் பிரான்ஸின் கால்பந்து அணி தேர்ச்சி பெறவே இல்லை. இந்தக் சிக்கலை தீர்க்க பிரான்ஸ் முதல் முறையாக தேசிய அளவிலான ஒரு கால்பந்து அகாடமியை தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களுக்குள் மறைந்திருக்கும் கால்பந்து திறமைகளைக் கண்டுபிடிப்பதுதான். விசி எனும் இடத்தில் முதல் முறையாகத் கால்பந்தை பயிற்றுவிக்கக் கல்லூரி திறக்கப்படுகிறது. 4 ஆண்டுகள் கழித்து பிரான்ஸின் அனைத்து பெரிய கால்பந்து அணிகளுடனும் பேசி, ஒவ்வொரு ஊரில் இருக்கும் திறமையான இளைஞர்களை வளர்த்தெடுக்க அங்கங்கு துணை கல்லூரியை நிறுவுகிறது பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம்.

பிரான்ஸின் தேசிய கால்பந்து கல்லூரி பாரிஸின் புறநகர்ப் பகுதியான கிளாரிஃபோன்டேனுக்கு மாற்றப்பட்டது. 1990, பிரான்ஸ் கால்பந்து அகடெமி உலகின் சிறந்த வீரர்களை உருவாக்கிக்கொண்டிருந்தது.1998 பிரான்ஸ் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. வெகுகாலமாக ஆசைப்பட்ட அந்த மரியாதை கிடைத்ததை நாடே கொண்டாடியது. பிரான்ஸின் பன்முக கலாச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அதைக் கருதினார்கள். உலகக் கோப்பையை வென்ற அணியில் பலர் அகதிகளாகவும், அகதிகளுக்குப் பிறந்தவர்களாகவும் இருந்தார்கள். பிரான்ஸின் மூவர்ண கொடிபோல அதன் கால்பந்து அணியும் பல நிறங்களால், கலாச்சாரங்களால் நிறைந்தாகவே இருந்தது. இந்த அணியை  black-blanc-beur என்றுதான் அழைத்தார்கள். கறுப்பு, வெள்ளை, அரபு என்பது இதன் அர்த்தம். .

வெற்றிக்கு பிறகும் இனவாத கமென்டுகளால் குத்திக் கிழிக்கப்பட்டார்கள் பிரான்ஸின் சாம்பியன்கள். ஆனால், அகதிகளாக வந்தவர்கள் பிரான்ஸ் நாட்டின் கால்பந்து உலகத்தை மாற்றினார்கள். பிரான்ஸ் நாட்டுக்குள் வந்தவர்களில் 38 சதவிகிதம் பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் வசித்தவர்கள்தான். இந்த இடத்தை பான்லியூ என்றார்கள். போராட்டம், வருமை, வேலைவாய்ப்பின்மை என கடினங்கள் சூழ்ந்தபோதும் பான்லியூதான் பிரான்ஸின் சிறந்த கால்பந்து வீரர்ளை உருவாக்கிய பூமி. இந்த ஆண்டு விளையாடிய 50 வெளிநாட்டு பிளேயர்களில் 16 பேர் பாரிஸில்  பிறந்து வளர்ந்தவர்கள். 19 வயது கிலியன் எம்பாப்பே, ஆட்டோனி கிரீஸ்மேன், உம்டிட்டி உட்பட ரஷ்ய உலகக் கேப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் 8 பேர் பான்லியூவில் இருந்து வந்தவர்கள். பிரான்ஸ் அணிக்கு மட்டுமில்லை, மற்ற உலகநாடுகளின் வீரர்களும் பாரிஸில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்.  செனகல் அணியில் இருக்கும் 4 பிளேயர்கள் பாரிஸில் பிறந்து வளர்ந்தவர்கள், துனிஸியாவின் சயிஃப் எடினே பாரிஸ் நகரில் பிறந்தவர், போர்ச்சுகளின் ரஃபேல் குரேரோ, மொராக்கோவின் மெஹதி பெனாடியா பாரிஸ் நகரில் வளர்ந்தவர்கள்தான். 

பிரான்ஸின் தனித்துவமான கால்பந்து அணியும், மற்ற நாடுகளில் இருந்து வரும் திறமைகளை அரவணைத்து வளர்க்கும் பண்பும்தான் பிரான்ஸை வெற்றியாளர்களாக மாற்றியுள்ளது. அகதிகளை வெறுத்து ஒதுக்கும் இந்த உலகில், அகதிகளை வைத்தே தன்னை கட்டமைத்துக்கொண்டு, தனக்கான மரியாதையை அவர்களை வைத்தே பெற்றுக்கொண்டது பிரான்ஸ். இது அகதிகளை வெறுக்கும் தேசங்களை தலைகுனிய வைக்கும். இது அகதிகளுக்கு கிடைத்த வெற்றி.

அடுத்த கட்டுரைக்கு