Published:Updated:

வெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு!

வெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு!
News
வெற்றி, அதிர்ச்சி, கண்ணீர், இயலாமை... உலகக் கோப்பை கால்பந்து ஒரு ரீவைண்டு!

இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவே பிரான்ஸ் கருதப்பட்டது. குரோஷியாதான் எதிர்பாராமல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய அணி. இறுதி ஆட்டத்தில் குரோஷியாவுக்கு துரதிருஷ்டம் துரத்தி வந்தது என்றே சொல்ல வேண்டும்.

ரு மாத காலம் உற்சாகத்தைத் தந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவுக்கு வந்துள்ளது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. இந்தத் தொடரில் பிரான்ஸ் தோல்வியைச் சந்திக்காமல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. நாக்-அவுட் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் எதிர் அணியை வீழ்த்தி சாதித்துள்ளது பிரான்ஸ். உலகச் சாம்பியன் ஆடிய ஓர் ஆட்டம் கூட கூடுதல் நேரத்துக்குச் செல்லவில்லை. பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ், பிரேசில் ஜாம்பவான் மரியோ சகல்லோ, ஜெர்மனி ஜாம்பவான் பெக்கன்பர் ஆகியோருக்கு அடுத்தபடியாக வீரராகவும் பயிற்சியாளராகவும் உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவே பிரான்ஸ் கருதப்பட்டது. குரோஷியாதான் எதிர்பாராமல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய அணி. இறுதி ஆட்டத்தில் குரோஷியாவுக்கு துரதிருஷ்டம் துரத்தி வந்தது என்றே சொல்ல வேண்டும். மரியோ மான்ட்சூகிச் அடித்த `சேம்சைட் கோல் ' அணியின் உறுதியைக் குலைக்கவில்லை. சேம்சைட் கோலால் பிரான்ஸ் முன்னிலை பெற்றாலும் இவான் பெரிசிச் அடித்த அற்புதமான கோல் குரோஷியாவுக்குப் பெரும் உற்சாகத்தை தந்தது. பிரான்ஸுக்கு அடுத்தும் ஒரு பெனால்டி கிடைத்தது குரோஷியாவுக்கு உண்மையிலேயே போதாத காலம்தான். கிரீஸ்மேன் அடித்த இந்த பெனால்டி கோல் பிரான்ஸுக்கு 2-1 என முன்னிலைப் பெற்றுத் தந்தது. 

இடைவேளைக்குப் பிறகு குரோஷியாவின் தடுப்பாட்டத்தில் சற்றுத் தொய்வு காணப்பட அதைப் பயன்படுத்தி பால் போக்பாவும், கிலியன் எம்பாப்பேவும் அடுத்தடுத்து இரு கோல்கள் அடிக்க கிட்டத்தட்ட பிரான்ஸ் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 6 நிமிடங்களுக்குள் விழுந்த இந்த இரு கோல்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. பல கோல் வாய்ப்புகளை அற்புதமாகத் தடுத்த பிரான்ஸ் கோல்கீப்பர் லாரீஸ் ஒரு `சில்லி' கோல் விழவும் காரணமாக இருந்தார். 3 கோல்கள் முன்னணி பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் பெனால்டி ஏரியாவுக்குள் மரியோ மான்ட்சூகிச் காலுக்குள் பந்தை போட்டு எடுக்க முயற்சிக்க அது வினையாக முடிந்தது. பந்து மான்ட்சூகிச் காலுக்குள் கிடைக்க அதை எளிதாக கோலாக மாற்றினார் அவர். குரோஷியாவுக்குச் சற்று தெம்பு வந்தாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் `லெஸ் ப்ளுஸ்' மீண்டும் உலகக் கோப்பையை வென்றது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை உலகக் கோப்பையில் ஆடிய அனுபவமிக்கவர் என்று பார்த்தால் `ஸ்ட்ரைக்கர்' கிரீஸ்மேன் மட்டுமே. டிஃபென்ஸிவ் மிட்ஃபீல்டர் கான்டேவின் பணியும் அருமை. களத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் கான்டேவை மீறி முன்கள வீரர்கள் செல்வது சிரமம்தான். பிரெஞ்சு அட்டாக்கிங் ஆட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்தார் கான்டே என்பதில் சற்றும் சந்தேகமில்லை. கிரீஸ்மேன் தன் அனுபவத்தை தன் பார்ட்னர் எம்பாப்பேவுடன் நன்கு பகிர்ந்து கொண்டார். பிரான்ஸ் அணியின் பல கோல்கள் தடுப்பாட்டக்காரர்கள் அடித்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது பெஞ்சமின் பாவட் அடித்த கோல்தான் ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தது. உருகுவேக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 40-வது நிமிடத்தில் ரஃபேல் வெரான் அடித்த கோல் பிரான்ஸுக்கு முன்னிலை பெற்றுத்தந்தது. பெல்ஜியத்துக்கு எதிரான அரையிறுதியில் சாமுவேல் உம்மிட்டியின் ஒரே கோல்தான் பிரான்ஸ் அணியை இறுதி ஆட்டத்துக்கு அழைத்து வந்தது. அதனால்... பிரான்ஸ் அணியில் பின்கள வீரர்களும் முக்கிய ஆட்டங்களில் கோல் அடித்து அணிக்குப் பெரும் பலமாக இருந்துள்ளனர். 

லூகா மாட்ரிட்ச் அணியையும் குறை சொல்ல முடியாது. 1998-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் குரோஷியா வீழ்ந்தது. தற்போது மீண்டும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸிடம் தோற்றுள்ளது. இந்தத் தொடரில் அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா துவம்சம் செய்தது. நாக்-அவுட்டில் டென்மார்க் காலிறுதியில் ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது குரோஷியா. இறுதி ஆட்டத்தில் கண்ட தோல்வியால் குரோஷியா வருத்தப்பட அவசியமில்லை. அடுத்து வருகிற யூரோ தொடரில் குரோஷியா முத்திரை பதிக்க வாய்ப்புள்ளது. 

ஜெர்மனி அணி கண்ட தோல்விதான் இந்த உலகக் கோப்பையில் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி. லீக் சுற்றில் கடைசி இடத்தைப் பிடித்து பரிதாகமாக வெளியேறியது நடப்புச் சாம்பியன் அணி. நடப்பு உலகக் கோப்பையில் அனைவரின் மனதையும் கவர்ந்த மற்றோர் அணி பெல்ஜியம். ராபர்ட்டோ மார்டினஸின் பாய்ஸ் அற்புதமாகக் கால்பந்தை விளையாடிக் காட்டினர். நாக் -அவுட்டில் பின்தங்கியிருந்த நிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பெல்ஜியம் வீழ்த்திக் காட்டியது. காலிறுதியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணியே... பெல்ஜியத்திடம் மண்ணைக் கவ்வியது. பெல்ஜியத்தின் `கோல்டன் ஜெனரேஷன் ' என்று தற்போதையை அணியைச் சொல்கிறார்கள். மூன்றாவது இடத்தை பெற பெல்ஜியம் தகுதியான அணியே..

ரஷ்யா உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்குச் சற்று ஆறுதல் அளித்துள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி வேர்ல்டு கப் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது. கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வீட்டுக்கு நடை கட்டியது இங்கிலாந்து. 2016-ம் ஆண்டு யூரோவின் நாக்- அவுட்சுற்றில் குட்டி அணியான ஐஸ்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை விரட்டி அடித்தது. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு டை-பிரேக்கர் என்றாலே அலர்ஜி. இந்த உலகக் கோப்பையில் டை-பிரேக்கரில் கொலம்பியாவை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அந்தக் குறையை நிவர்த்தி செய்து கொண்டது. இங்கிலாந்து அணி. இதற்காக கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டுக்குத் தாராளமாக விசில் அடிக்கலாம். அடுத்த யூரோவில் காரத் சவுத்கேட் அணி கூடுதல் தன்னம்பிக்கையுடன் களம் இறங்கும் என்று நம்பலாம். 

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கலாம். அடுத்த தொடரின் போது மெஸ்ஸி 35 வயதை எட்டியிருப்பார். ரொனால்டோவுக்கு 37 வயதாகியிருக்கும். இவர்களுக்கு இனிமேல் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறைவே. பல முன்னாள் ஹீரோக்களுக்கும் கூட இதே நிலை ஏற்பட்டுள்ளது. பரெங் புகாஸ் தலைமையில் 1954-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஹங்கேரி கலக்கியது. லீக் சுற்றில் 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை துவம்சம் செய்தது. ஆனால், இறுதி ஆட்டத்தில் அதே ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்று கோப்பையை நழுவ விட்டார் பரெங் புகாஸ். ஒவ்வொர் ஆண்டும் சிறந்த கோல் அடித்த வீரருக்கு ஃபிஃபா இவரின் பெயரில்தான் விருது வழங்குகிறது. போர்ச்சுகல் முன்னாள் கேப்டன் எஸ்பியோவும் ஒரு காலத்தில் ஹீரோ. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரையிறுதியில் எதிர்பாராமல் எஸ்பியோ அணி இங்கிலாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியது. 1974-ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு `டோட்டல் ஃபுட்பால் ' என்ற நிக் நேம் உண்டு. ஜோகன் க்ரைஃப் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியிடம் 2-1  என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் நெதர்லாந்து வீழ்ந்தது. இதனால், ஜோகன் க்ரைஃப்பும் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போய் விட்டது. ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் இந்த வரிசையில் இணைந்து விட்டனர். அர்ஜென்டினாவின் ஆட்டம் இயலாமை போலவே தோன்றுகிறது. 

அடுத்த உலகக் கோப்பை கத்தாரில் நடைபெறுகிறது. 2022 வரை பொறுத்திருப்போம்!