Published:Updated:

ரஷ்யாவில் கர்ஜித்த இளம் சிங்கங்கள்... இனி கால்பந்துக்கு பிரான்ஸ்தான் ராஜா! #WorldCupFinal

ரஷ்யாவில் கர்ஜித்த இளம் சிங்கங்கள்... இனி கால்பந்துக்கு பிரான்ஸ்தான் ராஜா! #WorldCupFinal
ரஷ்யாவில் கர்ஜித்த இளம் சிங்கங்கள்... இனி கால்பந்துக்கு பிரான்ஸ்தான் ராஜா! #WorldCupFinal

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் பிரான்ஸ், பலரது ஃபேவரிட் லிஸ்ட்டில் இல்லை. இந்த உலகக் கோப்பையின் மோசமான ஆட்டம் ஆடியதும் அவர்கள்தாம். ஆனால், நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் வேற லெவலில் ஆடியது.

பிரேசிலில் 2014-ல் உலகக் கோப்பை வென்ற ஜெர்மனியின் அப்போதைய கேப்டன் பிலிப் லாம், கோப்பையை சமர்ப்பிப்பதற்காக மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்துக்கு நேற்று வந்திருந்தார். இந்தமுறையும் கோப்பை ஐரோப்பாவில்தான் இருக்கப் போகிறது என்று தெரியும். ஆனால், பிரான்ஸ், குரோஷியா இரண்டில் எந்த ஐரோப்பிய நாட்டில், அந்தக் கோப்பை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது என்பதைப் பார்க்கத்தான், மாஸ்கோவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். உலகெங்கும் கோடிக்கணக்கான பேர் டிவி முன் அமர்ந்திருந்தனர்.

`ரெண்டுல யார் ஜெயிச்சாலும் சந்தோஷம்தான். பிரான்ஸ் ஸ்ட்ராங், குரோஷியா முதல்தடவை வேர்ல்ட் கப் ஃபைனல் வந்திருக்காங்க. அவங்க ஜெயிச்சா இன்னும் சந்தோஷம்’ என்பதே, 2018  கால்பந்து உலகக் கோப்பை ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு. இருபது ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை வெல்லும் கனவோடு வந்திருந்தது பிரான்ஸ். `Underdogs to World Champions’ எனும் சரித்திரம் படைக்கும் முனைப்பில் களமிறங்கியது குரோஷியா. இரு அணிகளும் செமி ஃபைனலில் ஆடிய பிளேயிங் லெவனை மாற்றவில்லை. முதல் நிமிடத்திலிருந்தே சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லை.

முதல் பத்து நிமிடம் குரோஷியாவின் கையே ஓங்கியிருந்தது.  பொசஷன் என்றால் என்னவென கேட்பது போல ஆடியது பிரான்ஸ். 17-வது நிமிடத்தில் கிரீஸ்மேனை, ப்ரோஸோவிச் பெளல் செய்ய, பிரான்ஸுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. கிரீஸ்மேன் எடுத்த அந்த செட் பீஸை ஹெட்டர் செய்து கிளியர் செய்கிறேன் என, மேண்ட்சுகிச் தலையில் முட்ட, அது எதிர்பாராதவிதமாக கோல் கம்பத்துக்குள் சென்றது. Own goal. உலகக் கோப்பை ஃபைனலில் அடிக்கப்பட்ட முதல் own goal. இந்த உலகக் கோப்பையில் 12-வது own goal. பிரான்ஸ் 1-0 என முன்னிலை. சென்டர் டிஃபண்டர் செய்ய வேண்டிய வேலையை சென்டர் ஃபார்வேர்டு செய்ததால் வந்த வினையை அனுபவித்தது குரோஷியா. ஆனால், அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே குரோஷியா பதிலடி கொடுத்தது. What a response!

 குரோஷியாவின் ஃப்ரீ கிக்கை கிளியர் செய்யாமல் தட்டுத்தடுமாறினர் பிரான்ஸ் டிஃபண்டர்ஸ். அந்த நேரத்தில் பந்தை அழகாக கன்ட்ரோல் செய்து லெஃப்ட் ஃபுட் மூலம் ஃபார் போஸ்ட்டை நோக்கி ஒரு ஷாட் அடித்தார் பெரிசிச். பிரான்ஸ் கோல் கீப்பர் தனக்கு இடதுபுறம் ஃபுல் லென்த் டைவ் அடித்தார். ஆனாலும், பந்தைத் தடுக்க முடியவில்லை. கோல். ஆட்டம் லெவல். Game on.

VAR உதவி இல்லாமல் ஃபைனல் முடிந்துவிடுமா என்ன? பெனால்டி பாக்ஸ் ஏரியாவில் குரோஷியா வீரர் பெரிசிச் கையில் பந்து பட்டுவிட்டதாகத் தெரியவந்ததும், VAR உதவியை நாடினார் ரெஃப்ரி. சைட் லைனில் இருந்த வீடியோவில் மூன்று நிமிடம் உன்னிப்பாக நடந்ததைக் கவனித்த ரெஃப்ரி, பிரான்ஸுக்கு பெனால்டி வழங்கினார். அப்போதே குரோஷியா வீரர்களின் உடல்மொழி மாறிவிட்டது. சிரமமே இன்றி அந்த ஸ்பாட் கிக்கை, கோல் அடித்து Dream 11-ல் தன்னைக் கேப்டனாக எடுத்தவர்களின் வயிற்றில் பால் வார்த்தார் கிரீஸ்மேன். முதல்பாதி முடிவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை.

ஸ்கோர்போர்டு தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது எப்படி ஆட வேண்டும் என்பது பிரான்ஸுக்கு அத்துப்பிடி. மிட்ஃபீல்டில் போக்பா லாங் பாஸ் போட்டு மிரட்ட, ரைட் விங்கில் இருந்து தன் வேகத்தாலும் டிரிபிளிங் திறமையாலும் கதறவிட்டார், 19 வயது இளைஞன் எம்பாப்பே. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ரைட் விங்கில் ஏறி வந்த எம்பாப்பேவ, 30 யார்டு பாக்ஸின் வலதுபுறம் வந்ததும், அங்கே இருந்த கிரீஸ்மேனுக்கு பாஸ் போட்டார். கிரீஸ்மேன் அதை பாக்ஸுக்கு வெளியே கோல் அடிக்க ஏதுவமான இடத்தில் இருந்த போக்பா வசம் செட் செய்து கொடுக்க, போக்பா வலது காலில் கம்பம் நோக்கி ஷாட் அடித்தார். பந்து ரீபவுண்டாகி வந்தது. மோட்ரிச் கோல் கீப்பரை மறைத்து நின்றார். இதுதான் சரியான நேரம் என, இந்தமுறை இடது காலில் ஒரு ஷாட் அடித்தார். இந்தமுறை தப்பவில்லை. குரோஷியா கோல் கீப்பர் சுபாசிச் செய்வதறியாது திகைத்து நின்றார். இது, இந்த உலகக் கோப்பையில் போக்பா அடிக்கும் முதல் கோல். ஒரு கோல் என்றாலும் உருப்படியான கோல். பிரான்ஸுக்கு மூன்றாவது கோல்.

கிரீஸ்மேன், போக்பா இருவரும் கோல் அடித்தபின் எம்பாப்பே மட்டும் சும்மா இருப்பாரா என்ன? 65-வது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து பெர்ணான்டஸ் கொடுத்த அட்டகாசமான பாஸை ஒரே டச்சில், கோல் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் இடம்பிடித்தார் எம்பாப்பே. ஆம், உலகக் கோப்பை ஃபைனலில் கோல் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமை பெற்றார் எம்பாப்பே. இதற்கு முன் 1958-ல் பிரேசில் ஜாம்பவான் பீலே அந்த சாதனையைப் படைத்திருந்தார்.

அரை மணி நேரமே இருக்கிறது. மூன்று கோல்கள் சாத்தியமா? குரோஷியா மனரீதியாக நம்பிக்கை இழந்திருந்தது. மாறாக, பிரான்ஸ் அதீத நம்பிக்கையில் இருந்தது. கிரீஸ்மேன் அட்டாக்கிங்கை தளர்த்தி, டிஃபன்ஸ் பக்கம் வந்தார். பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிப்பதைவிட, கோல் வாங்காமல் இருப்பதில் கவனம் செலுத்தினர். ஆனாலும் குரோஷியா கோல் அடித்தது. எப்படி?

 69-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் செய்த கிறுக்குத்தனம், குரோஷியாவுக்கு சாதகமாக அமைந்தது. டிஃபண்டர் கொடுத்த பேக் பாஸை தூரத்தில் இருக்கும் சக வீரருக்குக் கொடுப்பதற்கு பதிலாக தனக்கு இடதுபுறத்தில் இருப்பவருக்கு பாஸ் போட முயன்றார். அதற்குள் குரோஷியா ஸ்ட்ரைக்கர் மேண்ட்சுகிச், நேக்காக காலை நீட்ட, பந்து அவர் காலில் பட்டு கோலானது. சிரமமே இல்லாமல் குரோஷியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது. ஆனாலும், அடுத்த 20 நிமிடத்தில் அவர்களால் மேலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலக சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினா, உருகுவேயை அடுத்து இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் வரிசையில் பிரான்ஸ் இணைந்தது.

இந்த உலகக் கோப்பையில் குரோஷியாவின் பயணம் பாராட்டுக்குரியது என்றாலும், ஃபைனலில் பிரான்ஸ் போன்ற பெரிய அணியைச் சந்திக்க, அவர்கள் சரியான ஸ்ட்ரேட்டஜியுடன் வரவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. கவுன்ட்டர் அட்டாக்கில் பிரான்ஸ் கிங் என்பதைக் கணித்து அதற்கேற்ப வியூகம் அமைக்கவில்லை. பொசஷன், பால் கன்ட்ரோல், பாஸிங் அக்யூரஸி என டெக்னிக்கல் ரீதியாக பல விஷயங்களில் குரோஷியாவே முன்னிலையில் இருந்தது. ஆனால், ஆறில் நான்கு ஷாட்களை கோல் அடித்து, பிரான்ஸ் கோப்பையை வென்றுவிட்டது.

ரைட் விங்கில் அச்சுறுத்தும் எம்பாப்பேவை சமாளிக்க, குரோஷியா, உருகுவேயின் உத்தியைக் கடைப்பிடித்திருக்கலாம். எம்பாப்பேவயை நிழல்போல தொடர ஒரு வீரரை நியமித்திருக்கலாம். போக்பாவை லாங் பாஸ், கிராஸ் போட விடாமல் தடுத்திருக்கலாம். மிட் ஃபீல்டில் பிரான்ஸின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். இதையெல்லாம் செய்யத் தவறியதால், குரோஷியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்துவிட்டது.

பிரான்ஸ் முன்னிலை பெற்றதும், கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர், ஒரு பத்திரிகையை சந்தோஷத்துடன் காட்டினார். அதில், 1998-ல் பிரான்ஸ் உலக சாம்பியன் ஆன தருணம் ஜாம்பவான் ஜிடான் படத்துடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிரான்ஸ் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான பத்திரிகைகளில் கிரீஸ்மேன், எம்பாப்பே படம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவர்கள், 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1998-ல் உலகக் கோப்பை வென்ற பின் பிரான்ஸ் ஒரு வலுவான அணியைக் கட்டமைக்க சிரமப்பட்டது. இப்போதுதான் ஒரு இளம் வலுவான அணி அமைந்திருக்கிறது. பிரான்ஸ் முதன்முறையாக வேர்ல்ட் சாம்பியன் ஆனபோது, எம்பாப்பே பிறந்து 165 நாள்களே ஆகியிருந்தது. இன்று அவர் வேர்ல்ட் கப் வின்னர். பல டீன் ஏஜ் சிறுவர்களின் ரோல் மாடல். எம்பாப்பே மட்டுமல்ல போக்பா, கிரீஸ்மேன் என பிரான்ஸின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. ஆம், பிரான்ஸ் அணியில் இருந்தவர்களில் 14 பேருக்கு இது முதல் உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது இளமையான அணி பிரான்ஸ்தான்.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் பிரான்ஸ், பலரது ஃபேவரிட் லிஸ்ட்டில் இல்லை. இந்த உலகக் கோப்பையின் மோசமான ஆட்டம் ஆடியதும் அவர்கள்தான். (பிரான்ஸ் – டென்மார்க் கோல் லெஸ் டிரா). ஆனால், நாக் அவுட் சுற்றில்  பிரான்ஸ் வேற லெவலில் ஆடியது. பயிற்சியாளர் டிடியர் டிசாம்ப்ஸ் பல விஷயங்களில் பக்காவாக பிளான் செய்திருந்தார். அதனால்தான் அவரால், வீரராகவும், மேனேஜராகவும் உலகக் கோப்பை வென்றவர்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடிந்தது.

எப்படியோ, பிரான்ஸ் கால்பந்தில் ஒரு நல்லகாலம் பிறந்திருக்கிறது. 2016 யூரோ கோப்பை ஃபைனலில் போர்ச்சுகலிடம் தோல்வியடைந்தபின், நிலைகுலைந்து அழுதார் கிரீஸ்மேன். இன்று தன் மகளுடன் உலகக் கோப்பையை ஏந்தி புன்னகைக்கிறார். இரண்டு ஆண்டுகளில்தான் எத்தனை மாற்றங்கள்!

``இது இளம் படையின் வெற்றி. அணியில் உள்ள பல வீரர்களுக்கு இது முதல் உலகக் கோப்பை. ஆனாலும், பெரிய டோர்னமென்ட்களில் வெற்றிபெறுவதற்கேற்ற மனநிலையை அவர்கள் பெற்றிருந்தனர்.  மனரீதியாக, உளவியல் ரீதியாக நாங்கள் வலுவாக இருந்தோம். அதனால்தான், எந்தத் தாக்குதலும் இல்லாமலேயே முதல் பாதியில் முன்னிலை பெற முடிந்தது. இனி, சாம்பியன் பிரான்ஸின் ஆட்டம் பல விதங்களில் கேள்வி எழுப்பப்படும். இருக்கட்டும். என்ன இருந்தாலும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாங்கள்தான் சாம்பியன்’’ என்றார் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். அதுதான் உண்மையும் கூட!

அடுத்த கட்டுரைக்கு