Published:Updated:

`It's not coming home’... இங்கிலாந்தின் கலைந்த கனவு... உலகக் கோப்பை ஃபைனலில் குரோஷியா! #CROENG

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`It's not coming home’... இங்கிலாந்தின் கலைந்த கனவு... உலகக் கோப்பை ஃபைனலில் குரோஷியா! #CROENG
`It's not coming home’... இங்கிலாந்தின் கலைந்த கனவு... உலகக் கோப்பை ஃபைனலில் குரோஷியா! #CROENG

``உலகக் கோப்பைக்கு முன் யாராவது எனக்கு மூன்றாம் இடத்துக்கான வெண்கலப் பதக்கத்தை வழங்கியிருந்தால் நானும் வாங்கியிருப்பேன். ஆனால்... இப்போது கண்டிப்பாக என்னால் அது முடியாது"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பைத் தொடர்தான் இதுவரை நடந்த உலகக்கோப்பைகளில் பெஸ்ட் எனக் கால்பந்து ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். காரணம்... இதுவரை இல்லாத அளவுக்கு இத்தொடரில் பல அதிர்ச்சி முடிவுகளும், ஆச்சர்ய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. லூஸ்னிகி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா நேற்று மோதிய இரண்டாவது அரை இறுதிப்போட்டியும் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளிக்கத் தவறவில்லை. #CROENG

இங்கிலாந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும், குரோஷியா 20 ஆண்டுகளுக்குப் பிறகும் கால்பந்து உலகக்கோப்பை அரை இறுதிக்குத் தகுதிபெற்றிருக்கின்றன என்பதால் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

நேற்று இரண்டாம் அரை இறுதிப்போட்டி நடைபெற்ற லூஸ்னிகி மைதானம், இந்த உலகக்கோப்பைத் தொடரின் பல்வேறு ட்விஸ்ட்களை சந்தித்திருக்கிறது. முதல் போட்டியில், தனது சொந்த மண்ணில் 5-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை ரஷ்யா பந்தாடியதும் இங்கேதான். நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோ அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கியதும் இங்கேதான். இத்தொடரின் `டல்'-லான மேட்ச் எனக் கருதப்படும், பிரான்ஸ் டென்மார்க் இடையேயான மேட்ச் கோல்-லெஸ் டிராவில் முடிந்ததும் இங்கேதான். உலகக் கோப்பையை வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான ஸ்பெயின், `ரவுண்டு ஆஃப் 16' சுற்றில் ரஷ்யாவிடம் வீழ்ந்ததும் இங்கேதான். நேற்றைய போட்டியும் விதி விலக்கல்ல.

``உலகக் கோப்பைக்கு முன் யாராவது எனக்கு மூன்றாம் இடத்துக்கான வெண்கலப் பதக்கத்தை வழங்கியிருந்தால் நானும் வாங்கியிருப்பேன். ஆனால்... இப்போது கண்டிப்பாக என்னால் அது முடியாது" - இது, `செமி ஃபைனலில் குரோஷியா ஜெயிக்குமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டேலிச் சொன்ன பதில். குரோஷியா செமி ஃபைனல் வரை தகுதிபெறும் என உலகக் கோப்பைக்கு முன் யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இதே நிலைமைதான் இங்கிலாந்து அணிக்கும். `வாழ்நாளின் ஒரே வாய்ப்பு' என்ற எண்ணத்தில்தான் இரு அணிகளும் செமி ஃபைனலில் களமிறங்கின.

போட்டி தொடங்கியதுமே இங்கிலாந்து அட்டாக்கிங் ஆட்டத்தை ஆரம்பித்தது. விறுவிறுவென குரோஷியாவின் எல்லையை இங்கிலாந்து ஆக்கிரமித்தது. யாரும் எதிர்பார்த்திராத வகையில் மேட்ச் தொடங்கி 5-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து முதல் கோல் போட்டு குரோஷியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அற்புதமான கோல் ஆக மாற்றினார் ட்ரிப்பியர். மைதானம் முழுவதும் `Its coming home' பாடல் உரக்க கேட்கத் தொடங்கியது. 1-0 என ஐந்து நிமிடத்திலேயே முன்னிலை பெற்ற இங்கிலாந்து, முதல்பாதியில் உற்சாகமாக ஆடியது. இங்கிலாந்தின் அட்டாக்கிங் ஆட்டத்தை சமாளிப்பதற்கே குரோஷியா மொத்த உழைப்பையும் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில்தான் குரோஷியாவால் தனது முதல் ஆன் டார்க்கெட் ஷாட்டையே அடிக்க முடிந்தது. அதை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் அருமையாக save செய்தார். முதல்பாதி முடிவில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது.

குரோஷியா மீண்டு வருமா என மற்றவர்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால், அந்த அணி வீரர்கள் துளிகூட தன்னம்பிக்கை இழக்கவில்லை. சொல்லப்போனால் கடைசிவரை போராடுவதும், கொஞ்சமும் பிரஷ்ஷரை தலையில் ஏற்றிக்கொள்ளாததும்தான் அந்த அணி வீரர்களின் பலம். 

இரண்டாம் பாதி தொடங்கியது. இந்த முறை ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குரோஷியாவின் பக்கம் திரும்பியது. முதல் காரியமாக ஒரு கோல் போட்டு சமன் செய்துவிட வேண்டும் என்ற துடிப்போடு விளையாடியது குரோஷியா. பார்வை வேறெங்கும் விலகிவிடாதபடி ஒவ்வொரு நிமிடமும் மேட்சில் அனல் பறந்தது. இரு அணி வீரர்களின் ஃபவுல் எண்ணிக்கையும் உயர்ந்தது. பாக்ஸை குரோஷியா நெருங்குவதும், இங்கிலாந்து டிஃபண்டர்கள் அதைத் தடுப்பதும் அடுத்தடுத்து நடந்துகொண்டிருந்தது. இங்கிலாந்தின் தடுப்பரணைத் தாண்டி அவ்வப்போது ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகளை கோல் போடத் தவறிக்கொண்டிருந்தார் பெரிசிச். அப்போதுதான் அந்த ட்விஸ்ட் நடந்தது.

68-வது நிமிடத்தில் பாக்ஸூக்கு வெளியே இருந்து வெர்சால்ஜ்கோ அடித்த கிராஸை, தலையால் முட்டிமோதித் தடுக்க இங்கிலாந்து டிஃபண்டர் வாக்கர் குனிய, அவரின் தலைக்கு மேலே பின்னாலிருந்து ஓடிவந்து காலை நீட்டி அதை கோல் போஸ்ட் நோக்கி உதைத்தார் பெரிசிச். இந்த முறை அவரின் குறி தப்பவில்லை. முதன்முறை பார்த்தபோது ஹெட்டர் கோல் போல தெரிந்தது. திரும்பத் திரும்ப ரீப்ளே பார்த்தபோதுதான் தெரிந்தது அது ஹெட்டர் கோல் அல்ல, பாதத்தை வைத்து அடிக்கப்பட்ட கோல் என்று. இந்த டோர்னமென்ட்டின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் கோல். குரோஷியாவுக்கு முதல் கோல். ஸ்கோர் போர்டு 1-1 எனச் சமனடைந்தது. ஆட்டம் சூடுபிடித்தது.

இரண்டாம் பாதியின் கடைசி 20 நிமிடங்கள் முழுக்க முழுக்க குரோஷியாவின் ராஜ்ஜியம்தான்! இரு அணிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான கோல்கீப்பர்களான இங்கிலாந்தின் பிக்ஃபோர்ட், குரோஷியாவின் சுபாசிச் இருவரையும் தாண்டி கோல் போடுவதென்ன அவ்வளவு எளிதான காரியமா?! இரண்டாம் பாதி 1-1 என்ற சம நிலையில் முடிவுக்கு வந்தது. எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. முதல் எக்ஸ்ட்ரா டைமில் கோல் எதுவும் விழவில்லை. ஆனால், பந்தை எதிரணியிடமிருந்து கைப்பற்றும் முயற்சியில் வீரர்கள் பலரும் முட்டிமோதி விழுந்தனர்.

எக்ஸ்ட்ரா டைமின் இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் ஆட்டம் குரோஷியாவின் பக்கம் சென்றது. லெஃப்ட் விங்கிலிருந்து வந்த கிராஸை, இங்கிலாந்து டிஃபண்டர் வால்கர் சரியாக கிளியர் செய்யத் தவறினார். அதை பெரிசிச் பெனால்டி ஏரியாவுக்குள் ஹெட் செய்துவிட, மாண்ட்ஸூகிச் அதைத் தாமதிக்காது கோல் அடித்தார். 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா முன்னிலை பெற்றது. இன்னும் சில நிமிடங்களைக் கடத்திவிட்டால் போதும் வரலாற்று வெற்றியைப் பெற்றுவிடலாம் என்ற முனைப்பில் ஆடியது குரோஷியா. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நேரத்தை வீணடிக்கவும் செய்தது. இதனால் இரு அணி வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது கைகலப்பு ஏற்பட்டது. ரெஃப்ரி தலையிட்டு மேட்ச் தடைபடாமல் பார்த்துக்கொண்டார். தனது அணிக்காக மேட்ச் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே கோல் போட்ட ட்ரிப்பியர் காயம் காரணமாக மைதானத்தை விட்டு சோகத்துடன் வெளியேறினார்.

ஆட்டத்தை முடிப்பதற்கான ரெஃப்ரியின் விசில் சத்தம்... சுமார் நாற்பது லட்சம் மக்கள் தொகையே கொண்ட சின்ன நாடான குரோஷியா முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் சோகத்தில் கண்ணீர் மல்க வெளியேறினர். 1982-க்குப் பிறகு உலகக் கோப்பையில் இரண்டு ஐரோப்பிய நாடுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதில்லை என்ற இங்கிலாந்தின் சோக வரலாறு நேற்றும் தொடர்ந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் 14-ம் தேதி நடக்கவிருக்கும் மூன்றாவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன. பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதவிருக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, இதே லூஸ்னிகி மைதானத்தில் 15-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

``எங்களைப் போன்ற நாடும் இருக்கிறது... சிவப்பு வெள்ளை கட்டங்கள் கொண்ட டி-ஷர்ட் குரோஷியாவினுடையது. இவர்களின் கலாசாரம் இதுதான் என்பதை உலக மக்களுக்குக் காண்பிக்க வேண்டும். இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றதோடு உலகக் கோப்பையை வென்று குரோஷியாவின் பெயரை உலகக் கோப்பை வரலாற்றில் நிலை நிறுத்துவோம்" - போட்டி முடிந்ததும் குரோஷியா ரசிகர் ஒருவர் தொலைக்காட்சியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் சொன்னது இது. அவருக்கு மட்டுமல்ல... குரோஷியா போன்ற அத்தனை நாடுகளுக்கும் அதுதான் ஆசை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு