Published:Updated:

60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி! #FRABEL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி! #FRABEL
60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி! #FRABEL

அரையிறுதி ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடிய பெல்ஜியம். எது தேவையோ அதைமட்டுமே கொடுத்த பிரான்ஸ். வெற்றி எப்படிச் சாத்தியமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடைபெற்ற உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் 1 கோல் அடித்து பிரான்ஸ் வெற்றிபெற்றது. 20 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது பிரான்ஸ். இதற்குக் காரணம், பிரான்ஸின் லெஜண்டுகள் இல்லை; பிரான்ஸின் வரலாறு இல்லை; அவர்கள் இளைஞர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை! இந்த இளைஞர்கள் பிரான்ஸுக்கு உலகக் கோப்பையை வென்றுதர பிறந்தவர்கள். ஆஸ்திரேலியாவையும், பெருவையும் ஒரு கோலில் ஜெயித்தது; டென்மார்க் உடன் டிரா செய்தது, 3 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவை வெளியேற்றியது, உருகுவேவின் அரணை உடைத்து இரண்டு கோல்கள் அடித்தது என பிரான்ஸ் இந்த உலகக் கோப்பையில் அதிரிபுதிரி ஃபார்ம். அதே சூட்டோடு நேற்று பெல்ஜியத்தையும் வென்றது. வெற்றிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்கிறது பிரான்ஸ்.  #FRABEL

பிரான்ஸ் ஒரு பக்கம் தன்னால் என்ன முடியும் என்பதைக் காட்ட, பெல்ஜியம் முடியாத விஷயங்களையும் முடித்து வைக்கும் திறனைப் பெற்றிருந்தது. எந்த அணிவந்தாலும் அதன் டிஃபென்ஸை உடைப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள் ஹசார்டு, லுகாகு, டிப்ருயின் கூட்டணி. ``நான் சாதாரணமானவன். ஆனால், கிரவுண்டுக்குள் நான் ஒரு போராளியாக இருப்பதையே விரும்புகிறேன். எத்தனை கோப்பைகள் இருக்கின்றனவோ எல்லாவற்றையும் வென்றுதருவேன்" என ரோமலு லுகாகு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். உண்மையிலேயே லுகாகு ஒரு போராளி. தேவையான நேரத்தில் கோல் அடிப்பதும், தேவையான நேரத்தில் விட்டுக்கொடுப்பதும் என்று பெல்ஜியம் போட்ட ஒவ்வொரு கோலிலும் அவர் பங்கு இருக்கிறது. ஆனால், கடைசி 2 போட்டிகளில் லுகாகுவின் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்று கற்றுக்கொண்டனர் எதிரணி டிஃபெண்டர்கள். அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக அவரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 

இரண்டு அணிகளுக்குமே அட்டாக்தான் முக்கிய ஆயுதம். இதுவரை நடந்த போட்டிகளில் பிரான்ஸ் வேகமாக கோல்களை அடித்துவிட்டு டிஃபென்ஸில் இறங்கிவிடும். பெல்ஜியம் தொடர்ந்து கோல்களை அடிப்பதிலேயே முனைப்பு காட்டும். முதல் நிமிடத்திலிருந்தே இரண்டு அணிகளுமே அட்டாக் செய்வதிலேயே தன் மொத்த வித்தையையும் காட்டின. 12-வது நிமிடத்தில் எம்பாப்பே ரயில் வேகத்தில் டிஃபெண்டர்களைத் தாண்டி ஓட, பந்து கோல் பாக்ஸ் அருகே வரும்போதே எதிரில் ஓடிவந்து பந்தை கட்டிப்பிடித்துக் காப்பாற்றினார் கோல்கீப்பர் கோர்ட்வா. பெல்ஜியம் டிஃபெண்டர்கள் ஆபத்தை உணர்ந்து பொறுமையாகவே விளையாடினர்.

பெல்ஜியமும் பிரான்ஸுக்கு இதுபோன்ற அதிர்ச்சிகளைக் கொடுத்தது. 16-வது நிமிடம் டிஃபெண்டர்களைத் தாண்டி கோல் பாக்ஸில் சென்று ஹசார்டு அடித்த அந்த வைடு ஷாட் கொஞ்சம் சுமார்தான். ஆனால், 2 நிமிடத்தில் மீண்டும் அதேபோல ஒரு சான்ஸ். இந்தமுறை கோலாக வேண்டிய பந்து வாரான் மேல் பட்டு கோல்போஸ்ட்டை அடித்தது வெளியே சென்றது. கிடைத்த கார்னரில் ஹெட்டர் எதுவும் விழவில்லை. ஆனால், பந்து எங்கு வரும் என்று உணர்ந்து பந்தை ஈஸியாக வாங்கி ஆல்டர்வீல்டு ஓர் அசத்தல் ஷாட் அடிக்க, ஹூகோ லோரிஸ் அதைப் பாய்ந்து தடுத்துவிட்டார். `நம்மிடம் லோரிஸ் இருக்கிறார் கவலைப்படவே வேண்டாம்' என பிரான்ஸ் ரசிகர்கள் சந்தோஷப் பெருமூச்சு விட்ட தருணம் அது.

தொடர்ந்து பிரான்ஸின் அட்டாக்கும் அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. மடூய்டி ஒரு லாங் ஷாட் அடித்து கோர்ட்வாவின் நீளமான கைகளுக்கு வேலை கொடுத்தார். ஹாஃப் டைம் வரவிருக்கும்போது, பெஞ்சமின் பவார்டு எம்பாப்பேவுடன் ஒன்- டூ பாஸ் கொடுத்து கோல் பாக்ஸுக்குள் நுழைந்து ஒரு curve ஷாட் முயற்சிக்க, அதை அற்புதமாகக் கால்களால் தடுத்து கோல் விழாமல் காப்பாற்றினார் கோர்ட்வா. ஆட்டத்தின் இரண்டாம் பாதியும் அட்டாக்கை மையமாக வைத்தே இருந்தது. ஜப்பான் உடனான ஆட்டத்தில் பெல்ஜியம் தனது மொத்த வித்தையையும் இரண்டாம் பாதியில்தான் இறக்கியது. இப்போதும், அப்படி ஓர் ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் பெல்ஜியம் ரசிகர்கள். பெல்ஜியமும் அப்படியோர் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், எதிரில் இருந்தது ஜப்பான் இல்லை பிரான்ஸ். 

51-வது நிமிடம் பரபரப்பான ஆட்டத்தின் முதல் கோல் விழுந்தது. கிரீஸ்மேனின் கார்னரை உம்டிட்டி முட்டி கோல் ஆக்கினார். கோர்ட்வா எதுவும் செய்யமுடியாமல் நின்றார். பிரான்ஸ் 1 கோல் அடித்து முன்னணியில் இருக்க, பெல்ஜியம் வெறித்தனமாக அட்டாக் செய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பொறுமையாக ஃபார்மேஷனில் எந்தச் சொதப்பல்களும் இல்லாமல் தன் நிலையான பழைய அட்டாக் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. பிரான்ஸுக்காக ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பு ஜிரோடுக்குக் கிடைத்தது. எம்பாப்பேவின் ட்ரிக்கியான பேக்ஹீல் பாஸ் ஜிரோடுக்கு கோல் வாய்ப்பை ஏற்படுத்த, ஜிரோடு அடித்த பந்து காற்றில் இருக்கும்போதே அதை ஓடிவந்து தடுத்துவிட்டார் கோர்ட்வா. பெல்ஜியத்தைக் காப்பாற்றிய அட்டகாசமான save அது. பெல்ஜியம் ஒரு கோல் அடிக்க எவ்வளவோ முயற்சி செய்தது.

65-வது நிமிடம் போக்பாவைத் தாண்டி ஃபெலாய்னி அடித்த ஹெட்டர், 81-வது நிமிடம் விட்செலின் லாங் ஷாட் என பெல்ஜியம் ஈகுவலைசருக்கான நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், கடைசி வரை பெல்ஜியம் கோலடிக்கவே இல்லை. வெற்றி, தோல்வியைக் கடந்து பெல்ஜியத்தின் ஆட்டம் ஒரு சாம்பியனின் விளையாட்டுபோலவே இருந்தது. பிரான்ஸ் வழக்கம்போல ஒரு கோல் முன்னிலை பெற்ற பிறகு தனது டிஃபென்ஸ் ஆட்டத்தை பலப்படுத்தியது. எது தேவையோ அதை மட்டுமே செய்து மீண்டும் ஒரு ஆச்சர்யப்படும் வெற்றியை அடைந்தது பிரான்ஸ். 60 சதவிகித பொசஷன், 594 பாஸ்கள், 5 கார்னர் கிக், 9 ஷாட்களில் 3 ஆன் டார்கெட் ஷாட்கள், 91 சதவிகித பாஸ் அக்யூரசி என ஆட்டத்தில் பெல்ஜியம் ஜொலித்தாலும், வெற்றிபெற்றது என்னவோ பிரான்ஸ்தான்.

2016 யூரோ கோப்பை ஃபைனலில் சொந்த மண்ணில் தோல்வியடைந்த பிரான்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் FIFA நடத்தும் இரண்டு பெரிய டோர்னமென்ட்களின் ஃபைனலில் முன்னேறுவது என்பது கால்பந்து உலகில் பெரிய விஷயம். 1998-க்குப் பின் உலகக் கோப்பை வென்று வரலாறு படைக்கக் காத்திருக்கிறது பிரான்ஸ். பிரான்ஸின் ஈஃபில் டவர் மட்டுமில்ல அதன் கால்பந்து அணியும் ஓர் அதிசயம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு