Published:Updated:

கோல்கீப்பரின் அந்தத் தவறு... உருகுவேயை `நாக்-அவுட்’ செய்த ஃபிரான்ஸ்! #URUFRA

கோல்கீப்பரின் அந்தத் தவறு... உருகுவேயை `நாக்-அவுட்’ செய்த ஃபிரான்ஸ்! #URUFRA
News
கோல்கீப்பரின் அந்தத் தவறு... உருகுவேயை `நாக்-அவுட்’ செய்த ஃபிரான்ஸ்! #URUFRA

உருகுவேயின் ரோட்ரிகஸ் லேசாகத் தொட்டதில் எம்பாப்பே கீழே விழ, உருகுவே வீரர்கள் கலகம் செய்தனர். போக்பா மற்றும் டியாகோ கோடினும் தங்கள் பங்குக்கு வார்த்தைகளை விட, நிலைமை மோசமானது. முடிவில் எம்பாப்பே மற்றும் ரோட்ரிகஸ் இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

ஆட்டம் கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் ஒருசில நிமிடங்களில் இறுதி விசில் சத்தம் கேட்கப்போகிறது. தோல்வி மிக அருகில் நெருங்கி விட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. இப்போது நம்மால் என்ன செய்துவிட முடியும்? எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், இப்படிப்பட்ட நிலையில் தோல்வி நம்மை நிச்சயமாக அழவைத்துவிடும். போட்டி முடிவதற்கு முன்னரே உருகுவேயின் ஜோஸ் கிமெனெஸ் கண்ணீர் சிந்தியது, அந்த வகையில்தான். #URUFRA

2-0 என்ற கோல்கணக்கில் உருகுவே பின்தங்கியிருக்கும் நிலையில், ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு ஒரு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைக்கிறது. கிரீஸ்மேன் பந்தை உதைக்க வரும் முன்னரே, உருகுவே டிஃபெண்டர் கிமெனெஸ் அழுதுவிட்டார். ஆம், கூடுதலாக எத்தனை நிமிடங்கள் கிடைக்கிப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இல்லை. ஏன், எந்தவோர் உருகுவே வீரரிடமுமே இல்லை. இன்னும் சில நிமிடங்களில் தங்கள் அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறப்போகிறது. தோல்வி உறுதியாகிவிட்டது. ஆனால், மற்றவர்கள் தங்களது சோகத்தை, உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை; கிமெனெஸ் வெளிப்படையாக அழுதுவிட்டார், அவ்வளவுதான். 

காலிறுதி தொடங்கிவிட்டது. 2018 கால்பந்து உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ரஷ்யாவின் நிஷ்னி நோவகரோட் மைதானத்தில், 43,000 ரசிகர்கள் முன்னிலையில் நேற்று நடந்த முதல் காலிறுதியில், பிரான்ஸ் அணி உருகுவே அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் செய்தது. தீப்பிடிக்கும் அட்டாக்கிங் லைனைக் கொண்டிருந்த பிரான்ஸ் அணிக்காக ரஃபேல் வரானே மற்றும் கிரீஸ்மேன் கோல் அடிக்க, தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த, டிஃபென்ஸிவ்லி ஸ்டிராங் உருகுவேயைத் தோற்கடித்து, ஆறாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ். முந்தைய சுற்றில் போர்ச்சுகலை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழைந்த உருகுவே, கவானி இல்லாததால் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் திணறி, இறுதியில் பரிதாபமாகத் தோற்று வெளியேறியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆட்டத்தின் தொடக்கத்தில், இரு அணிகளுமே போட்டிபோட்டுக் கொண்டு அட்டாக் செய்தன. பிரான்ஸின் அட்டாக் லைன் மற்றும் உருகுவேயின் டிஃபென்ஸிவ் லைன் இரண்டுமே சம பலத்துடன் இருந்தாலும், பிரான்ஸ் வீரர்கள் அளவுக்கு, உருகுவே வீரர்களால் `டஃப்’ கொடுக்க முடியவில்லை. ஒருபுறம் எம்பாப்பே `Show’ ஓட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் கான்ட்டே `டிஃபன்ஸ்’ மற்றும் `அட்டாக்’ எனக் களத்தின் எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தார். 4-2-3-1 ஃபார்மேஷனில் களமிறங்கிய பிரான்ஸ், இரண்டாம் பாதியில் அவ்வப்போது 4-4-2 ஃபார்மேஷனுக்கும் மாறியது. கான்ட்டே, பால் போக்பா, கிரீஸ்மேன் மற்றும் டோலிசோ என பிரான்ஸின் மிட்ஃபீல்ட் வலுவாக இருக்க, மிட்ஃபீல்டர்கள் எதற்கு இருக்கிறார்கள் எனத் தெரியாததுபோல், அட்டாக்கர்களை தனித்துவிட்டிருந்தது 4-1-2-1-2 ஃபார்மேஷனில் களமிறங்கிய உருகுவே. விளைவு, உருப்படியாக கோல் அடிக்கும் வாய்ப்புகள் ஏதும் அந்த அணிக்கு அமையவில்லை.

அவ்வப்போது, உருகுவே கோல் பாக்ஸில் வித்தை காட்டினார் எம்பாப்பே. 15-வது நிமிடத்தில் அவர் அடித்த `ஹெடர்’ கோல்கம்பத்துக்கு மேலே சென்றது. இருந்தாலும், 1998 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதற்குப் பின்னர் பிறந்த எம்பாப்பே, தனது அசாத்திய வேகத்தால் உருகுவே டிஃபெண்டர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தார்.

உருகுவேயும் கோல் அடிக்க எவ்வளவோ முயன்றது. ஆனால், போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் `இரட்டை கோல்’ அடித்த ஸ்ட்ரைக்கர் எடின்சன் கவானி காயத்தால் பெஞ்சில் அமர்ந்திருக்க, அவர் இடத்தில் களம் கண்ட ஸ்டுவானி சொதப்பிக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே `சைலன்ட் மோடுக்குப்’ போன நட்சத்திரவீரர் லூயிஸ் சுவாரஸ், இறுதிவரை விழித்துக்கொள்ளவே இல்லை. 

முதல்பாதி கோல்கள் ஏதுமின்றி முடிந்துவிடும் என நினைக்க, 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் முதல் கோல் அடித்தது. கிடைத்த ஃப்ரீகிக் வாய்ப்பில், உருகுவே கோல்பாக்ஸுக்குள் கிரீஸ்மேன் உதைத்த `கிராஸை’, தனது அற்புதமான `ஹெட்டரால்’ கோலாக்கினார் பிரான்ஸ் டிஃபெண்டர் வரானே. தன் கண்முன்னே வந்த பந்தை, உருகுவேயின் டியாகோ கோடின் கிளியர் செய்வதற்குள், பாய்ந்துவந்த வரானே `பாட்டம் லெஃப்ட் கார்னருக்கு’ அனுப்பிவைக்க, 1-0 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

எப்படியாவது பதில்கோல் திருப்பவேண்டும் என முயற்சித்த உருகுவே அணி, 44-வது நிமிடத்தில் கிடைத்த அந்த வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது. காரணம், பிரான்ஸின் `சூப்பர் கீப்பர்’ இயுகோ லோரிஸ். முதல்பாதி முடிவில் 1-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.

முதல்பாதியில் கோல் அடித்த எந்த உலகக் கோப்பை போட்டியிலும் பிரான்ஸ் தோற்றதில்லை என்பதே வரலாறு. அதைத் தொடரும் நோக்கில் பிரான்ஸும், எப்படியாவது பிரான்ஸின் அட்டாக்கைத் தடுத்து நிறுத்தி, தொடர்ந்து எட்டாவது போட்டியில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உருகுவேயும் இரண்டாம் பாதியில் களமிறங்கின. ஆனால், இரண்டாம் பாதி உருகுவே அணிக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. 

`வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல’ 61-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார் கிரீஸ்மேன். இந்தமுறை கோல் விழுந்தது கிரீஸ்மேன் அடித்த ஷாட்டின் பவரால் அல்ல; உருகுவே கோல்கீப்பர் ஃபெர்னாண்டோ முஸ்லெரோ செய்த தவறால்! ஆம், ஃபெர்னாண்டோ தனது கரியரில் ஒரு கெட்ட கனவாக நினைத்து, நிச்சயம் மறந்துவிட வேண்டிய ஒரு நாளாக நேற்றிரவு அமைந்தது. 

டோலிசோ கொடுத்த பாஸை பெற்றதும், உருகுவே கோல் பாக்ஸுக்கு வெளியே இடப்புறத்தில் ’25 யார்டுகள்’ தொலைவில் நின்றிருந்த கிரீஸ்மேன், பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். எளிதாகப் பிடித்துவிடுமளவு சாதாரணமாக வந்த பந்தை, உருகுவே கீப்பர் ஃபெர்னாண்டோ தடுக்க முயற்சிக்க, அது எதிர்பாராமல் வலைக்குள் சென்று கோலானது. இதன்மூலம், இந்த உலகக்கோப்பையில் எளிதான வாய்ப்புகளை கோட்டைவிட்ட கோல்கீப்பர்கள் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்டார் ஃபெர்னாண்டோ. இந்த கோல் மூலம் உற்சாகமடைந்த பிரான்ஸ் வீரர்கள், மேலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். மறுபுறம் உருகுவே வீரர்கள் சோர்வடைந்தனர்.

ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் உருகுவேயின் ரோட்ரிகஸ் லேசாகத் தொட்டதில் எம்பாப்பே கீழே விழ, உருகுவே வீரர்கள் கலகம் செய்தனர். மேலும், போக்பா மற்றும் டியாகோ கோடினும் தங்கள் பங்குக்கு வார்த்தைகளை விட, நிலைமை மோசமானது. முடிவில் எம்பாப்பே மற்றும் ரோட்ரிகஸ் இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

மேற்கொண்டு உருகுவே எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும் கூட, ஆட்டத்தின் 90-வது நிமிடத்திலும் உருகுவே ரசிகர்கள் தங்களது வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால், உருகுவே வீரர்களின் மனங்கள் எப்போதோ உடைந்துவிட்டன. அதைத்தான் அவர்களது ஆட்டமும் வெளிப்படுத்தியது. கிமெனெஸ் அழுதேவிட்டார். ஆம், ஆட்டம் முடிவதற்கு முன்னரே, அவர்கள் தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

ஒரு கோல்கீப்பர் முதல்பாதியில் ஒரு சூப்பரான `save’ மூலம் ஹீரோவானார். மற்றொரு கோல்கீப்பர் இரண்டாம்பாதியில் ஒரு மறக்கமுடியாத தவறு செய்ததன் மூலம் வில்லனானார். எது எப்படியோ, இந்த உலகக் கோப்பையிலிருந்து உருகுவே வெளியேறிவிட்டது. மெஸ்சி மற்றும் ரொனால்டோவைத் தொடர்ந்து, இப்போது சுவாரஸும் வெளியேறிவிட்டார். ஒரு முழுமையான அணியாகச் செயல்பட்ட பிரான்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதியில் பிரான்ஸ், பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. எதிர்பார்க்கப்பட்ட அணிகள் எல்லாம் வெளியேறிவிட, இப்போது எல்லோரின் ஃபேவரிட்டாகி இருக்கிறது பிரான்ஸ்!