Published:Updated:

கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ் அணியின் 19 வயது பாயும்புலி! #WorldCup

கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ் அணியின் 19 வயது பாயும்புலி! #WorldCup

கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ் அணியின் 19 வயது பாயும்புலி! #WorldCup

கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ் அணியின் 19 வயது பாயும்புலி! #WorldCup

கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ் அணியின் 19 வயது பாயும்புலி! #WorldCup

Published:Updated:
கிலியன் எம்பாப்பே - பிரான்ஸ் அணியின் 19 வயது பாயும்புலி! #WorldCup

உருகுவே - இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறந்த டிஃபன்ஸிவ் ரெக்கார்டு கொண்டுள்ள அணி. 4 போட்டிகளில் இதுவரை ஒரே ஒரு கோல் மட்டும்தான் விட்டுள்ளது. சொல்லப்போனால் 2018-ம் ஆண்டில் அவர்கள் விட்டுள்ளது அந்த ஒரே கோல்தான். அவ்வளவு பலமாக இருக்கிறது அவர்களின் டிஃபன்ஸ். ரவுண்டு ஆஃப் 16 சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அவர்கள் சந்திக்கும் முன்பு `அவரைத் தடுக்க திட்டங்கள் இருக்கிறதா?' என்ற கேள்வி எழுந்தது. `நிச்சயமாக இருக்கிறது'. மைக்கில் சொன்ன பதிலை, களத்திலும் சொன்னார்கள். ரொனால்டோ வெளியேறினார். இப்போதும் அவர்கள் முன்னால் இப்படியொரு கேள்வி வைக்கப்படும். ஆனால், உருகுவே அதே பதிலை அதே உறுதியோடு சொல்லிட முடியாது.  ஏனெனில், அந்தக் கேள்விக்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன. கேள்விக்கான காரணிக்கும் பல பரிமாணங்கள் இருக்கின்றன. அவர்கள் சந்திக்க இருப்பது கிலியன் எம்பாப்பே!

`மெஸ்ஸி மாயம் நிகழ்த்துவாரா', `மெஸ்ஸி அர்ஜென்டினாவைக் கரைசேர்ப்பாரா' என மெஸ்ஸியும் மெஸ்ஸி நிமித்தமாகவும் தொடங்கிய பிரான்ஸ் vs அர்ஜென்டினா போட்டியில், ரசிகர்களின் கவனத்தையும், ஆட்டத்தின் முடிவையும் தனி ஆளாக மாற்றினார் எம்பாப்பே. குரூப் பிரிவில் சுமாராக ஆடிய பிரான்ஸ் அணி, அந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் எடுத்தது விஸ்வரூபம். அந்த மாற்றத்துக்கான அச்சாணி - எம்பாப்பே. 4 நிமிட இடைவெளியில் 2 கோல்கள் அடித்து, அர்ஜென்டினா வசமிருந்த ஆட்டத்தை மொத்தமாக தங்கள் பக்கம் எடுத்துவந்தார். மிக இளம் வயதில் உலகக் கோப்பை கோல் அடித்த பிரான்ஸ் வீரர். ஓர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த இரண்டாவது இளைஞர் என அடுத்தடுத்து சாதனைகளை வசப்படுத்தியவர், இன்று எதிரணிகளின் முக்கிய டார்கெட்டாகவும் மாறியிருக்கிறார். 

சென்ட்ரல் ஸ்ட்ரைக்கர் ரோலில் வெளுத்து வாங்கக்கூடிய எம்பாப்பேவை, அவர் PSG அணிக்கு ஆடும் ரைட் விங் ரோலிலேயே களமிறக்கினார் பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்காம்ப்ஸ். ஒரு ஸ்ட்ரைக்கருக்கான தேவையான பெர்ஃபெக்ஷன், ஒரு விங்கருக்குத் தேவையான வேகம், அவற்றோடு சேர்ந்து ட்ரிபிளிங் ஸ்கில், விஷன், ஏரியல் த்ரெட், ஃபிசிக் என அனைத்து ஆயுதங்களையும் கொண்டுள்ள முழுமையான ஃபார்வேர்டு இவர். அர்ஜென்டினா அணியுடனான போட்டி...பிரான்ஸ் half-ல் கிடைத்த பந்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அர்ஜென்டினாவின் பாக்ஸுக்குள் நுழைந்து பெனால்டியைப் பெற்றுக்கொடுத்தார். 

பிரான்ஸ் அடித்த மூன்றாவது கோல்.. எம்பாப்பே காட்டியது அசாத்திய முதிர்ச்சி. பல பிரான்ஸ் வீரர்களும், அர்ஜென்டினா வீரர்களும் சூழ்ந்து அர்ஜென்டினா பாக்ஸுக்குள் கும்பலாக நின்றிருக்கிறார்கள். லூகாஸ் ஹெர்னாண்டஸிடமிருந்து கிராஸ் வருகிறது. மடூய்டி அடித்த ஷாட் ப்ளாக் செய்யப்படுகிறது. பந்து இப்போது எம்பாப்பேவின் கால்களில். இன்னும் கும்பல் களையவில்லை. அடித்தால் நிச்சயம் அவர்களைத் தாண்டி கோல் போகாது. பெரெஸ் அவரிடமிருந்து பந்தைப் பறிக்க வருகிறார். நொடிப்பொழுதில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பெரெஸ் நின்றிருந்த `கேப்'பில் பந்தைத் தட்டி, அந்தக் கும்பலிலிருந்து விலகினார் எம்பாப்பே. ஒரு 19 வயது வீரர், அவ்வளவு அருகில் நின்றிருந்தும் ஷாட் அடிக்காமல் பொறுமை காட்டியதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். அதற்கு மத்தியில் தன் பார்வையைப் பந்தின் மீதும் வைத்துக்கொண்டு 180 டிகிரி தன் எதிரணியையும் கவனித்து, அதற்கு ஏற்ப முடிவெடுத்த அந்தச் சாதுர்யம், பல ஆண்டு அனுபவம் கொண்ட வீரர்களிடமே காண முடியாத ஒன்று. பிறகு, அந்த பவர்ஃபுல்லான ஷாட், அதிலிருந்த பெர்ஃபெக்ஷன்... அற்புதம்!

நான்காவது கோலிலும் அந்த வேகம், பெர்ஃபெக்ஷன் எல்லாம் அப்படியே. மடூய்டியின் பாஸில் கவுன்ட்டர் அட்டாக் தொடங்கியதும் மிட் லைனில் இருந்தவர் புயலெனப் பாய்ந்து பாக்ஸுக்கு வந்து கோலடித்தார். எந்த நேரமும் அட்டாக்குக்குத் தயாராக இருப்பார் எம்பாப்பே. இளமைத் துடிப்பும், ஓர் அனுபவ வீரரின் திறமையும் சேர்ந்து இன்று அவரை மிகப்பெரிய ஸ்டாராக்கியுள்ளது. சர்வதேச அரங்கில் இப்போதுதான் பேசப்பட்டாலும், கிளப் போட்டிகளில் ஏற்கெனவே தன் கொடியை உயரத்தில் பறக்கவிட்டுவிட்டார் எம்பாப்பே.

அரபு முதலாளிகளால் வாங்கப்பட்டதும், மிகப்பெரிய அணியாக விஸ்வரூபம் எடுக்கவேண்டும் என்பதை அஜெண்டாவாகக் கொண்டிருந்தது பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி. அதற்காக ஸ்டார் வீரர்களாக வாங்கிக் குவித்தார்கள். இப்ராஹிமோவிச், கவானி, தியாகோ சில்வா, வெரட்டி, டேவிட் லூயிஸ் என வாங்கிக் குவித்தது. அந்த லிஸ்டில் கடந்த ஆண்டு பலநூறு கோடி கொட்டி நெய்மரையும் சேர்த்தது. இப்படி வாங்கியது அனைத்துமே வெளிநாட்டு வீரர்கள். மற்றபடி, பிரான்ஸ் வீரர்களை அகாடெமி மூலம் அணியில் சேர்ப்பார்கள். இல்லையேல், மிகக் குறைந்த தொகைக்கு வாங்குவார்கள். ஆனால், முதன்முறையாக 180 மில்லியன் பவுண்டுகளுக்கு (முதல் சீசன் லோன்) எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்தது PSG. அந்த ஒப்பந்தம் செய்தபோது எம்பாப்பேவின் பெயரில் இரண்டு சாதனைகள் எழுதப்படுகின்றன. 1) உலகின் இரண்டாவது காஸ்ட்லி கால்பந்து வீரர். 2) கால்பந்து உலகின் காஸ்ட்லி இளைஞர். ஆம், அந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது அவரின் வயது - 18! 

18 வயதில் 180 மில்லியன் பவுண்டு... இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 1600 கோடி. அப்படி என்ன செய்துவிட்டார் அவர்? மொத்த உலகையும் வியக்கவைக்க எம்பாப்பேவுக்குத் தேவைப்பட்டது ஒரே ஒரு ஆண்டுதான். 2015-16 சீசனில் மொனாகோ அணியில் ஸ்குவாட் பிளேயராக இருந்தவர், அடுத்த சீசனில் ஃபால்காவோவின் ஸ்ட்ரைக் பார்ட்னரானார். லீக் -1 தொடரில் 15 கோல்கள், சாம்பியன்ஸ் லீகில் 6 கோல்கள் என அசத்தினார். ஒவ்வொரு கிளப்பும் இவரைக் கண்காணிக்கத் தொடங்கியது. PSG எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று வாங்கியும் விட்டது. இப்போதுகூட ரியல் மாட்ரிட் அவரை வாங்க முயற்சி செய்வதாகப் பேச்சு அடிபடுகிறது. இனி சில ஆண்டுகளில் கால்பந்து உலகை ஆளப் போகும் இந்த இளைஞனுக்காகப் போட்டி போடுவதில் தவறில்லை.

ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் வரிசையில் எம்பாப்பே இணைவார் என்று ஆருடம் சொன்னார்கள் நிபுணர்கள். மெஸ்ஸியை, அர்ஜென்டினாவை தன் கோல்களால் வெளியேற்றினார். ரொனால்டோவை வெளியேற்றியவர்கள் இவருக்காக இப்போது திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிலியன் எம்பாப்பே - கால்பந்தின் சிகரத்தில் ஏறத் தொடங்கிவிட்டார்.