Published:Updated:

`ஆஃப் சைடு' ரூல்ஸ் கம்ப சூத்திரம்லாம் இல்லை... சிம்பிள்தான்..! #OffSide

`ஆஃப் சைடு' ரூல்ஸ் கம்ப சூத்திரம்லாம் இல்லை... சிம்பிள்தான்..! #OffSide
`ஆஃப் சைடு' ரூல்ஸ் கம்ப சூத்திரம்லாம் இல்லை... சிம்பிள்தான்..! #OffSide

இந்த ஆஃப் சைடு விதி கொஞ்சம் சிக்கலான ஒன்றுதான் என்றாலும், புரிந்துகொள்ளக்கூடியதே. டக்வொர்த் - லூயிஸ் (இப்போ டக்வொர்த் - லூயிஸ் - ஸ்டெர்ன் விதி!) அளவுக்குப் புரியாத விஷயம் ஒன்றுமில்லை.

இத்தனை நாளாக கிரிக்கெட்டே கதியென்று கிடந்தவர்கள் இப்போது கால்பந்துப் பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் தவிர்த்துச் சில வீரர்களைத் தெரிந்து, எந்த அணி எப்படி ஆடும் என்பதைப் புரிந்து, உலகக் கோப்பையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கால்பந்து புரியத் தொடங்கியிருக்கும். ஆனால், அந்த லைன் மேன்களை மட்டும் அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு வீரர் கோல் போட்டுவிட்டு கொண்டாடப் போகும்போது இவர்கள் கொடியைத் தூக்கி நிற்க, `கோல் இல்லை' என்று அறிவித்துவிடுவார் ரெஃப்ரி. கேட்டால் ஆஃப் சைடு ! #OffSide

``ஆஃப் சைடு ... ஆஃப் சைடு... இந்த ஆஃப்சைடுனா என்னடா" என்று கதறுவார்கள் கால்பந்தைப் பின்தொடராதவர்கள். உடனே கால்பந்து வெறியர்களான தங்கள் நண்பர்களிடம் கேட்க, அவர்களும் பேப்பரில் கோடுகள் கிழித்து விளக்க, புரிந்த மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். இந்த ஆஃப் சைடு விதி கொஞ்சம் சிக்கலான ஒன்றுதான் என்றாலும், புரிந்துகொள்ளக்கூடியதே. டக்வொர்த் - லூயிஸ் (இப்போ டக்வொர்த் - லூயிஸ் - ஸ்டெர்ன் விதி!) அளவுக்குப் புரியாத விஷயம் ஒன்றுமில்லை. 

எதற்காக இந்த விதி? 

நம் ஊரில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். நடு களத்தில் எல்லோரும் பந்துக்காக அடித்துக்கொண்டிருப்பார்கள். ஒருவன் மட்டும் எதிரணி கோல்கீப்பருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பான். பந்து தூரத்தில் இருக்கும்வரை கோல்கீப்பரிடம் பேசிக்கொண்டிருந்தவன், பந்து அருகில் வந்ததும் போஸ்டுக்குள் உதைத்துவிடுவான். இப்படி நோகாமல் போஸ்டுக்குப் பக்கத்திலிருந்து கோலடிப்பதே வேலையாக வைத்திருப்பார்கள் சிலர். ஒருசிலர் இன்னும் பயங்கரமாகத் திட்டமிடுவார்கள். ``நீங்க ரெண்டு பேரு கோல் போஸ்ட் பக்கத்துலயே நில்லுங்க. நான் அங்க இருந்து லாங் ஷாட் அடிக்கிறேன். நீ கோல்கீப்பர மறச்சிடு... நீ கோல் அடிச்சிடு" எனச் சொல்லி, இருவரை அங்கேயே பார்க் செய்துவிடுவான். இது பல காலமாக ஐரோப்பிய அளவில் தொடர்ந்துகொண்டிருக்க, கால்பந்தை ஒழுங்காக்க அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த விதி. 1848-ம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் கால்பந்து விதிகளை இயற்றியபோது இந்த விதியும் சேர்த்து எழுதப்பட்டது. FIFA விதிகளில் இது 12-வது விதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முன் குறிப்பு : 

* ஆஃப் சைடு விதி கால்பந்து விதிகளில் உள்ளபடியே விளக்கப்படவில்லை. எளிதில் புரிந்துகொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது. 

* ஆஃப் சைடு விதியைக் கொஞ்சம் எளிமையாக அறிந்துகொள்ள இரண்டு அணிகள் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன - அர்ஜென்டினா & ஸ்பெயின். 

இந்த ஆஃப் சைடு விதியைப் புரிந்துகொள்ள சில அடிப்படை terminology தெரிந்துகொள்வதும் முக்கியம்.  

* கால்பந்தைப் பொறுத்தவரை, ஓர் அணி எங்கிருந்து ஆட்டத்தைத் தொடங்குகிறதோ அது அவர்களின் half என்று அழைக்கப்படும். அப்படிப் பார்க்கையில் அர்ஜென்டினாவின் half-ல் ஸ்பெயின் கோல் போடவேண்டும். ஸ்பெயின் half-ல் அர்ஜென்டினா கோல் போடவேண்டும். 

* ஸ்பெயின் half-ல் இருக்கும் கடைசி ஸ்பெயின் வீரர் last man எனப்படுவார். பெரும்பாலான நேரங்களில் கோல்கீப்பர்கள்தான் last man-களாக இருப்பார்கள். ஆனால், அப்படி இருக்கவேண்டும் என்ற விதி ஏதுமில்லை. last man-க்கு முன்னால் இருக்கும் ஸ்பெயின் வீரர் second last man எனப்படுவார். இவர்தான் ஆஃப் சைடு விதியின் மிகமுக்கிய நபர். 

* On-side - ஒரு வீரர் ஆஃப் சைடு பொசிஷனில் இல்லாமல், சரியான இடத்தில் இருக்கிறாரெனில் அது On-side.

சில இடங்களில் ஆஃப் சைடு விதி செல்லுபடியாகாது. முதலில் அதைத் தெரிந்துகொள்வோம்

* ஒரு வீரர் பாஸை, தன் அணியின் பாதியில் (own half) வாங்கினால், அங்கு ஆஃப் சைடு விதி செல்லாது. உதாரணமாக மெஸ்ஸி அர்ஜென்டினா half-ல் பாஸ் வாங்கினால் அங்கு ஆஃப் சைடு விதி செல்லாது. ஸ்பெயின் half-ல் வாங்கினால் மட்டுமே செல்லுபடியாகும். 

* பாஸ் கொடுக்கும் வீரரை விட, பாஸ் வாங்கும் வீரர் எதிரணியின் கோல் போஸ்ட்டுக்குத் தொலைவில் இருந்தால் ஆஃப் சைடு  கணக்கில் கொள்ளப்படாது. 

* கோல் கிக், கார்னர் கிக் இரண்டுக்கும் ஆஃப் சைடு கிடையாது. 

* த்ரோ இன் - டச் லைனைத் தாண்டிச் செல்லும் அவேக்களுக்கு த்ரோ இன் எடுக்கப்படும். த்ரோ செய்யும்போது ஆஃப் சைடு  பார்க்கப்படாது. 

* ஆஃப் சைடு பொசிஷனில் இருக்கும் வீரர், எதிரணி வீரர் கொடுக்கும் மிஸ்பாஸை எடுத்தால் அது ஆஃப் சைடு கிடையாது.

இப்போது ஆஃப் சைடுக்கு வருவோம்... ஸ்பெயின் half-ல் அர்ஜென்டினா அணி கோல் போட முயற்சி செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். last man-ஆக ஸ்பெயின் கோல் கீப்பர் டீ கே இருக்கிறார். அவருக்கு முன்னால் சில ஸ்பெயின் டிஃபண்டர்கள் நிற்கிறார்கள். அவர்களுள் டீ கேவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் second last man ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ். அர்ஜென்டினாவின் டி மரியா பாஸ் செய்கிறார். மெஸ்ஸி அந்த பாஸை வாங்குகிறார். 

டி மரியா அந்த பாஸை செய்யும்போது மெஸ்ஸி எங்கு இருந்தார் என்பதுதான் இங்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். டி மரியா பந்தை உதைக்கும்போது மெஸ்ஸி செர்ஜியோ ரமோஸைத் தாண்டி நின்றிருந்தால் அது ஆஃப் சைடு. ரமோஸுக்கு முன்னால் நின்றிருந்தால் அது ஆஃப் சைடு இல்லை. ஒருவேளை மெஸ்ஸி, ரமோஸைத் தாண்டிக்கூடப் பந்தைப் பெற்றிருக்கலாம். பந்தை அடிக்கும் முன்பு, ரமோஸுக்கு முன்னால் நின்றிருந்து, அடித்த பிறகு அவரைத் தாண்டி ஓடி பந்தைப் பெற்றால் அது ஆஃப் சைடு இல்லை. இங்குக் கணக்கில் கொள்ளப்படுவது - டி மரியா பந்தை அடித்தபோது மெஸ்ஸி எங்கு இருந்தார் என்பதுதான். 

 ஆஃப் சைடு பார்க்கும்போது ஒரு வீரரின் மொத்த உடலும் கணக்கில் கொள்ளப்படாது. ரமோஸின் உடலை மெஸ்ஸியின் தலை மட்டுமே தாண்டியிருந்தாலும் அது ஆஃப் சைடுதான். மொத்த உடலும் தாண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தலை, உடல், கால்கள் மட்டுமே இங்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. டி மரியா பந்தை அடிக்கும்போது, மெஸ்ஸியின் கைகள் மட்டும் ரமோஸின் உடலைத் தாண்டி இருந்து, மற்ற பாகங்கள் அவருக்கு முன்னால் இருந்தால் அது ஆன் சைடுதான்.

இதில் `attempting the ball' என்ற இன்னொரு குழப்பமான விஷயத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஆஃப் சைடு பொசிஷனில் இருக்கும் வீரர், அந்த பாஸை விளையாட முயற்சி செய்தால் மட்டுமே ஆஃப் சைடு கொடுக்கப்படும். அவர் அந்த பாஸை வாங்கினால் ஆஃப் சைடு. வாங்க முயற்சி செய்து நகர்ந்தால் ஆஃப் சைடு. ஆனால், அந்தப் பந்தை எடுக்க அவர் முயற்சி செய்யவே இல்லை எனும்போது, அவர் ஆஃப் சைடு பொசிஷனில் இருந்தாலும், அங்கு ஆஃப் சைடு தரப்படாது. 

இன்னோர் உதாரணம் எடுத்துக்கொள்வோம். டி மரியா பாஸ் போடும்போது மெஸ்ஸி, ரமோஸைத் தாண்டி ஆஃப் சைடு பொசிஷனில் நிற்கிறார். டி மரியாவின் பாஸ் கொஞ்சம் தள்ளிப் போகிறது. தனக்கு அருகில் இருந்தாலும் அந்த பாஸை வாங்க மெஸ்ஸி முயற்சி செய்யவே இல்லை. அதேவேளையில், மெஸ்ஸி நகராமல் இருக்கும்போது, மற்றோர் அர்ஜென்டின வீரர் ஹிகுவெய்ன் வந்து அந்த பாஸை எடுக்கிறார். இப்போது ஹிகுவெய்ன் நின்ற பொசிஷன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவர் ஆன் சைடில் இருந்தால் அது பிரச்னை இல்லை. மெஸ்ஸியின் பொசிஷன் அங்குக் கண்டுகொள்ளப்படாது. ஆனால், ஹிகுவெய்ன் பாஸை எடுக்கிறார்... மெஸ்ஸியும் அதற்கு முயற்சி செய்கிறாரெனில் அங்கு ஆஃப் சைடு வழங்கப்படும். 

இங்கு இன்னொரு விஷயமும் கணக்கில் கொள்ளப்படும். இப்போது டி மரியா கோல் நோக்கி ஷாட் அடிக்கிறார். மெஸ்ஸி ஆஃப் சைடு  பொசிஷனில் நிற்கிறார். ஆனால், அவர் அந்த ஷாட்டை வாங்க எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறார். முன்பு சொன்னதுபோல் இதுவும் ஆன் சைடுதான். ஆனால், இப்போது மெஸ்ஸி, ஸ்பெயின் கோல்கீப்பர் டீ கேவின் பார்வைக்கு இடையூறு விளைவிக்கும் இடத்தில் நின்றாலோ, அல்லது மற்ற ஸ்பெயின் வீரர்கள் அதைத் தடுக்க முற்படும்போது, அவர்களுக்குக் குறுக்கே நின்றாலோ, அங்கு ஆஃப் சைடு வழங்கப்படலாம். அந்த வீரர் அந்த பாஸுக்கு முயற்சி செய்யாமல் இருந்தாலும், எதிரணி வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும். 

ஆஃப் சைடைப் பொறுத்தவரை பாஸ்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இங்கு ஷாட்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஹிகுவெய்ன் ஷாட் அடிக்கிறார். அதை டீ கே தடுப்பதாலோ, அல்லது கோல் போஸ்டில் பட்டோ `ரீ பௌண்டு' ஆவதாலோ மெஸ்ஸியிடம் செல்கிறது. பந்து ரீ பௌண்டு ஆகித்தான் மெஸ்ஸி வசம் வந்துள்ளது. ஆனாலும், அந்த ஷாட் அடிக்கப்பட்டபோது மெஸ்ஸி எந்த இடத்தில் இருந்தார் என்பது முக்கியம். ஹிகுவெய்ன் உதைத்தபோது அவர் ஆஃப் சைடு பொசிஷனில் நின்றிருந்தால் இதுவும் ஆஃப் சைடுதான். இங்கு எதிரணி கோல்கீப்பர் save செய்ததும் கணக்கில் கொள்ளப்படாது. இதுவே ஒரு பாஸ், எதிரணி வீரரின் காலில் `தெரியாமல் பட்டு' ஆஃப் சைடு பொசிஷனில் இருக்கும் வீரருக்குச் சென்றால் அதுவும் ஆஃப் சைடுதான். 

ஒருவேளை பாஸ் செய்யும் வீரரும் second last opponent-யைத் தாண்டி நின்றால்? கோல் போஸ்ட்டுக்கும், பாஸ் வாங்குபவருக்கும் இடையே பாஸ் கொடுப்பவர் இருந்தால் ஆஃப் சைடு இல்லை. 

இவ்வளவுதான் ஆஃப் சைடு. கொஞ்சம் குழப்பம்தான். இன்னும் புரியவில்லையெனில் சில வீடியோக்கள் பாருங்கள். இந்த விதிகளோடு ஒப்பிடுங்கள். புரிந்துவிடும். நம்மவர்களில் பலரும் இந்த விதி புரியாததால்தான் கால்பந்தை முழுமையாக ரசிக்க விரும்புவதில்லை. முன்பு சொன்னதைப்போல் இந்த விதி ரணகொடூரமானதெல்லாம் இல்லை. பார்க்க பார்க்கப் புரிந்துவிடும். 

அடுத்த கட்டுரைக்கு