Published:Updated:

குட்பை மெஸ்ஸி! எம்பாப்பே யூ பியூட்டி! #FRAARG #WorldCup

குட்பை மெஸ்ஸி! எம்பாப்பே யூ பியூட்டி! #FRAARG #WorldCup

குட்பை மெஸ்ஸி! எம்பாப்பே யூ பியூட்டி! #FRAARG #WorldCup

குட்பை மெஸ்ஸி! எம்பாப்பே யூ பியூட்டி! #FRAARG #WorldCup

குட்பை மெஸ்ஸி! எம்பாப்பே யூ பியூட்டி! #FRAARG #WorldCup

Published:Updated:
குட்பை மெஸ்ஸி! எம்பாப்பே யூ பியூட்டி! #FRAARG #WorldCup

அர்ஜென்டினா ரசிகர்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். கேலரியில் கட்டப்பட்டிருந்த அந்தக் கடவுளின் படம்... கடவுளின் உருவத்தில் மெஸ்ஸி நிற்கும் படம் கசங்கிவிட்டது. களத்தின் நடுவே மெஸ்ஸி துவண்டுபோய் நிற்கிறார். வழக்கம்போல் தலைதொங்கி நிற்கிறார்.  அதே குற்றவுணர்வோடு திக்கத்து நிற்கிறார்கள் மற்ற அர்ஜென்டினா வீரர்கள். ஜாம்பவான் மரடோனாவின் நடுவிரல்கள் மடங்கிவிட்டன.  அர்ஜென்டினா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. 

ஆட்டத்தின் 48-வது நிமிடம். அர்ஜென்டினா கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மெர்சடே அடித்த கோலால் 2-1 என முன்னிலையில் இருக்கிறார்கள். தங்களைச் சந்தேகித்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்லியாகிவிட்டது. 'மெஸ்ஸி இந்த முறை கோப்பை வென்றுவிடுவார்' என்று கஸன் அரேனாவில் கூடியிருந்த அத்தனை அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் நம்பிக்கை பிறந்துவிட்டது. ஃபிரான்ஸ் ரசிகர்கள் மனமுடைந்து நிற்கிறார்கள். மெஸ்ஸியைத் தடுக்க முடியுமா?  இனி கோல் போட முடியுமா? யார் கோல் அடிப்பது? சந்தேகங்கள் மட்டுமே அவர்களிடம், சந்தோஷம் இல்லை. ஆனால், சரியாக 20 நிமிடங்கள் கழித்து... மேலே சொன்னவை அனைத்தும் நிகழ்ந்தன. ஒட்டுமொத்த ஃபிரான்ஸும் ஈஃபிள் டவர் உயரத்திற்குப் பறந்துகொண்டிருந்தது. கிலியன் எம்பாப்பே - 19 வயது இளைஞன்... மெஸ்ஸியின் கனவுகளை, அர்ஜென்டினர்களின் ஆசைகளை சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டார்!

முதல் பாதியில் 35 யார்டு தூரத்திலிருந்து டி மரியா அடித்த வொண்டர் கோலின் மயக்கத்திலிருந்த அரங்கத்தைத் தட்டி எழுப்பி, ஃபிரெஞ்சு ஸ்பெஷல் விருந்து படைத்தார் பெஞ்சமின் பவார்ட். அட்டாக்கிங்கிங் தேர்டில் அர்ஜென்டினா பொசஷனை இழக்க, இரண்டு சூப்பர் பாஸ்கள் மூலம், புயல்வேக கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடுத்தது ஃபிரான்ஸ். எங்கோலோ கான்டே - மடூய்டி. அடுத்து, மடூய்டி - ஹெர்னாண்டஸ். அர்ஜென்டினாவின் அட்டாக்கிங் தேர்டில் இருந்து ஃபிரான்ஸ் அட்டாக்கிங் தேர்டுக்கு பந்து விரைந்தது. லூகாஸ் ஹெர்னாண்டஸ் இடது விங்கில் இருந்து கிராஸ்... அதை எடுக்க பாக்ஸில் யாரும் இல்லை. பாக்ஸுக்கு வெளியே நின்றிருந்த பவார்ட், half volley-ல் அதை உதைக்க, நொடியில் கோலுக்குள் நுழைந்தது  'டெல்ஸ்டார்'. 2-2!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் பிறகுதான் 'தி எம்பாப்பே ஷோ'. ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே அர்ஜென்டினாவுக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருந்தார் எம்பாப்பே. அவரது வேகம், உடல்திடம், டெக்னிக் என எல்லாமே சிறப்பாக இருந்ததால், அந்த இளம் புயலுக்கு, அர்ஜென்டினாவின் சீனியர் ஸ்குவாடால் பதில் சொல்ல முடியவில்லை. கவுன்ட்டர் அட்டாக்கில் கோலை நெருங்கவதாகட்டும், கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்குவதாகட்டும், விங்கில் வித்தை காட்டுவதாகட்டும், கோல் போடாத வரையிலும்கூட அந்தக் களத்தின் சிறந்த பெர்ஃபாமர் அவர்தான். ஆட்டம் ஒரு மணி நேரத்தைக் கடந்தபிறகு, தன்னிடம் இருந்த 'நைட்ரோ' பேக்கைப் பயன்படுத்தினார் கிலியன். வேகம் இரட்டிப்பானது. பெர்ஃபெக்ஷன் இருநூறைத் தொட்டது. அர்ஜென்டினா சிதைந்துபோனது. 

64-வது நிமிடம்... இடது விங்கில் இருந்த ஹெர்னாண்டசுக்கு பாஸ் கொடுக்கிறார் போக்பா. ஹெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கிராஸ். பாக்சுக்குள் ஜிரௌட், மடூய்டி, எம்பாப்பே மூவரும் நிற்க, மடூய்டியிடம் செல்கிறது பந்து. இடது காலில் உதைக்கிறார். சக வீரர் ஜிரௌட் மீது பட்டு ரீபௌண்ட் ஆகிறது. சட்டென சுதாரித்த எம்பாப்பே, அங்கே கூடியிருந்த அர்ஜென்டினா டிஃபண்டர்களுக்கு அப்பால் பந்தை எடுத்துச் செல்கிறார். கோல் போஸ்டுக்குக் கொஞ்சம் இடதுபுறம் வருகிறார். நடுவே டிஃபண்டர்கள் இல்லை. Angle சரியாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் ஒரு ஷாட். கோல் கீப்பர் அர்மானி ஏமாற்றப்படுகிறார். அர்ஜென்டினா ஏமாற்றப்படுகிறது. 3-2.

ஆட்டத்தை சமன்படுத்த அர்ஜென்டினா வீரர்கள் அட்டாக்கில் கவனம் செலுத்த, ஸ்கோர்லைன் மீண்டும் அடிவாங்கியது. 68-வது நிமிடத்தில் வலது விங்கில் இருந்து வந்து, ஜிரௌட் கொடுத்த பாஸை அட்டகாசமாக கோலாக்கினார் எம்பாப்பே. அர்ஜென்டினா மொத்தமாக நொறுங்கியது. ஒரு 19 வயதுச் சிறுவன் ஆட்டம் காட்ட, செய்வதறியாது நின்றிருந்தார் லயோனல் மெஸ்ஸி. ஆட்டம் அவர் கையில் இல்லை. அர்ஜென்டினாவின் கையில் இல்லை. மொத்தமாக தாரை வார்த்துவிட்டார்கள். இனி மீட்பது கடினம். எல்லாம் 20 நிமிடம் முன்பாகவே முடிந்துவிட்டது. 

அதன் பிறகு ஃபிரான்ஸ் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. பந்து அவர்கள் வசம் இருந்தாலும், அட்டாக் செய்யாமல், பொசஷனைத் தக்கவைப்பதில் கவனம் செலுத்தினர். ஆட்டத்தின் முதல் கோலை (14-வது நிமிடம்) அடித்த கிரீஸ்மேன் கூட நடுகள வீரராக மாறியிருந்தார். மெஸ்ஸியின் தாக்கத்தை முற்றிலுமாக குறைத்துக்கொண்டிருந்தது எங்கோலோ கான்டே எனும் எஞ்சின்! மெஸ்ஸியால் முடியவில்லை. மற்ற அர்ஜென்டினா வீரர்களால் முடியவில்லை. எல்லாம் முடியும்போது ஸ்டாப்பேஜ் டைமில் ஒரு கோல் அடித்து பரபரப்பைக் கூட்டினார் அகுவேரோ. ஆனால், அது போதவில்லை. எல்லாம் அதற்கு முன்பே முடிந்துவிட்டது.

இந்தத் தோல்வியில் ஆச்சர்யம் ஏதுமில்லை. பயிற்சியாளர் சாம்போலி செவ்வென பணியைச் செய்து, அர்ஜென்டினாவை வெளியேற்றிவிட்டார். மெஸ்ஸி உள்பட மற்ற வீரர்கள் அனைவருமே தங்கள் நாட்டவர்களை ஏமாற்றிவிட்டனர். இந்தத் தோல்வி இப்போது இன்னுமொரு கேள்வியை எழுப்பியுள்ளது : 'மெஸ்ஸி ஓய்வு பெறப் போகிறாரா?' இப்போது 31 வயதுதான். அடுத்த உலகக் கோப்பையில் ஆட முடியும். ஆனால், 'நான் கஷ்டப் படறேன். எனக்கு யாரும் சப்போர்ட் பன்றது இல்ல என்ற மனநிலையோடு அவர் ஓய்வை அறிவித்தால் அது முற்றிலும் தவறு.அவர் ஓய்வு பெறப்போவதாக செய்திகளும் கசியத் தொடங்கிவிட்டன.  அவர் உலகக் கோப்பையை வென்றாலும் இல்லாவிட்டாலும் ஜாம்பவான். தலைசிறந்த வீரர்களுள் ஒருவர். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், இன்னமும் அணிக்குள் நெகடிவிடியைப் பறப்பும் அந்த ஓய்வு முடிவை மீண்டும் பரிசீலித்தால் தாராளமாக சென்றுவிடலாம். குட்பை மெஸ்ஸி! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism