Published:Updated:

ஜெர்மனி வெளியேறியது ஏன்? உலகச் சாம்பியனின் 5 தவறுகள்! #WorldCup

ஜெர்மனி வெளியேறியது ஏன்? உலகச் சாம்பியனின் 5 தவறுகள்! #WorldCup

சொல்லப்போனால் மெக்சிகோ அணிக்கெதிரான போட்டிக்கு முன்பே ஜெர்மனிக்கு வார்னிங் சிக்னல் அடிக்கப்பட்டுவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது ஜெர்மனி. லோ - எதையுமே மாற்றாமல் களமிறங்கினார்.

Published:Updated:

ஜெர்மனி வெளியேறியது ஏன்? உலகச் சாம்பியனின் 5 தவறுகள்! #WorldCup

சொல்லப்போனால் மெக்சிகோ அணிக்கெதிரான போட்டிக்கு முன்பே ஜெர்மனிக்கு வார்னிங் சிக்னல் அடிக்கப்பட்டுவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது ஜெர்மனி. லோ - எதையுமே மாற்றாமல் களமிறங்கினார்.

ஜெர்மனி வெளியேறியது ஏன்? உலகச் சாம்பியனின் 5 தவறுகள்! #WorldCup

உலகக் கோப்பை கால்பந்தின் மிகப்பெரிய சாபக்கேடு இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மீண்டும்... ஆம், மீண்டும் ஓர் உலகச் சாம்பியன் குரூப் சுற்றுடன் வெளியேறியிருக்கிறது. ஜெர்மனி - 1954-ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வோர் உலகக்கோப்பையிலும் கால் இறுதிக்குள் நுழைந்த அணி, கடந்த நான்கு உலகக் கோப்பைகளிலும் குறைந்தபட்சம் 3-ம் இடம் பெற்ற அணி, இப்போது மூன்றில் இரண்டு போட்டிகளில் தோற்று, குரூப் பிரிவில் கடைசி இடம் பிடித்து வெளியேறியுள்ளது. கடந்த ஐந்து உலகக் கோப்பைகளில், நடப்புச் சாம்பியன்களில் லீக் சுற்றோடு வெளியேறுவது இது நான்காவது முறை. ஜெர்மனியின் தோல்விக்கு இந்த சென்டிமென்ட் முட்டுக்கொடுத்தாலும், அவர்களை வெளியேற்றியது அவர்களின் திட்டமும் ஆட்டமும்தான். நடப்புச் சாம்பியன் ஏன் வெளியேறியது? அவரை வெளியேற்றிய காரணங்கள் என்னென்ன? ஓர் அலசல்...

`நம்பர் 6' ஃபெயிலியர்

இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பின்னடைவுக்கு முதல் முக்கியக் காரணம் `நம்பர் 6' பொசிஷனில் சொதப்பியதுதான். கால்பந்தில் டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர்களைத்தான் `நம்பர் 6' பிளேயர்கள் எனக் குறிப்பிடுவார்கள். முன்கள வீரர்களையும் டிஃபண்டர்களையும் இணைக்கும் பாலம் இவர்கள். இரண்டு ஏரியாக்களிலும் இவர்கள் பங்களிக்கவேண்டும். ஓர் அணியின் மிகமுக்கியத் தூண் இந்த பொசிஷன். 2014 உலகக் கோப்பையில் ஜெர்மனி அணி வென்றபோது, இந்த பொசிஷனில் விளையாடியவர் ஃபிலிப் லாம். 2 பாக்ஸ் -டு - பாக்ஸ் மிட்ஃபீல்டர்கள் ஆடியபோது அந்த இடத்தில் ஆடியவர்கள் ஸ்வைன்ஸ்டீகர் மற்றும் கெதிரா.

லாம் - ஒரு டிஃபண்டர். `நம்பர் 6' பொசிஷனில் அவர் விளையாடும்போது, டிஃபன்ஸுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். ஸ்வைன்ஸ்டீகர் - கெதிரா கூட்டணி விளையாடியபோது, ஸ்வைன்ஸ்டீகர் டிஃபன்ஸுக்கும், கெதிரா ஃபார்வேர்டுக்கும் சப்போர்ட் செய்து ஆடுவார்கள். ஸ்வைன்ஸ்டீகரின் அனுபவம் டிஃபண்டர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்தான் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன்கூட. ஆனால், இந்தத் தொடரில் இந்த பொசிஷனில்தான் ஜெர்மனி பெரிய ஓட்டைவிட்டது. கடந்த உலகக் கோப்பையில் பெரும்பாலும் பிளேமேக்கர் ரோலில் ஆடிய டோனி குரூஸ், கெதிராவுடன் கூட்டணி சேர்ந்தார். 

இருவரில் `யார் டிஃபண்டர்களுக்கு சப்போர்டிவாக விளையாடுவது' என்று திட்டமிட்டார்களா எனத் தெரியவில்லை. இருவருமே அட்டாக்கில் ஆர்வம்கொண்டு எதிர் அணியின் பாக்ஸுக்கு அருகிலேயே ஆடிக்கொண்டிருந்தனர். ஃபுல் பேக் இருவரும் விங்கில் இருந்ததால், இரண்டு சென்ட்ரல் டிஃபண்டர்கள் மட்டும் பல நேரங்களில் தனித்துவிடப்பட்டனர். மெக்ஸிகோ அணி, கவுன்ட்டர் அட்டாக்கில் இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி கோலடித்துவிட்டது. மேலும் மேலும் கோலடிக்க முயன்றது. ஆனால், அந்தப் பிரச்னை சரிசெய்யப்படவே இல்லை. எதிர் அணி இப்படி இரண்டு மூன்று முறை வந்தாலே, ஆட்டத்தின் கெமிஸ்ட்ரி முற்றிலுமாக மாறிவிடும். ஸ்வீடன் அணிக்கு எதிராகவும் பலமுறை இந்தத் தவறு நிகழ்ந்தது. கடைசிவரை அட்டாக்கில் மட்டுமே ஆர்வம்காட்டிய ஜெர்மனி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருந்தால் முடிவு நிச்சயம் மாறியிருக்கும். 

`நம்பர் 9' சொதப்பல்

ஜெர்மனி இத்தனை காலம் உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்த முக்கியக் காரணமாக விளங்கியது, அந்த அணியின் ஸ்ட்ரைக்கர்கள். கடந்த சில ஆண்டுகளாக ஜர்ஜன் க்ளின்ஸ்மேன், மிரோஸ்லேவ் குளோஸ் போன்ற டாப் க்ளாஸ் ஸ்ட்ரைக்கர்களுடன் விளையாடிய அணி ஜெர்மனி. குளோஸ் `போச்சர்' வகை வீரர். பந்தை கோலுக்குள் திணிக்கக் காத்துக்கொண்டிருப்பார். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் கோலாக்க முயல்வார். உலகக் கோப்பையின் டாப் கோல் ஸ்கோரர்! ஆனால், அப்படிப்பட்ட வீரர்கள் யாரும் இந்த ஜெர்மனி அணி இல்லை. நம்பிக் களமிறக்கப்பட்டவர்களும் பெரிதாகச் சோபிக்கவில்லை. 

ஜெர்மனியின் பிரதான ஸ்டிரைக்கரான டிமோ வெர்னர், ஒரு ஸ்ட்ரைக்கர் கொடுக்கவேண்டிய பங்களிப்பை அணிக்குக் கொடுக்கவேயில்லை. இந்த மூன்று போட்டிகளிலும் 252 அட்டாக்குகள் செய்துள்ளது ஜெர்மனி. அதில் அவர்கள் அடித்தது வெறும் இரண்டே கோல்கள். 288 நிமிடம் விளையாடிய வெர்னர், மொத்தம் அடித்ததே 6 ஷாட்கள் என்பதுதான் மிகப்பெரிய சோகம். ஒரு ஷாட் அடிக்க, அவர் எடுத்துக்கொண்டது 48 நிமிடம். அதாவது, ஒவ்வொரு ஹால்ஃப் டைமுக்கும் ஒரு ஷாட். இதைவிட மிகப்பெரிய கொடுமை என்னவெனில், அந்த 6 ஷாட்களில், இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட ஷாட்களின் எண்ணிக்கை - 1! 

மரியோ கோமஸ் களமிறங்கினால் விங்கில் சென்று விளையாடத் தொடங்குகிறார். 32 வயதான மரியோ கோமஸிடம் அதிகம் எதிர்பார்ப்பதும் தவறுதான். அவர்களைத் தவிர்த்து அணியில் ஸ்ட்ரைக்கர்களே இல்லை என்பதுதான் அடுத்த சோகம். ஒரு நடப்பு சாம்பியன் 11 பொசிஷன்களிலும் சிறந்த பிளேயர்கள் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், சாம்பியன் ஆகவேண்டிய அணி, கட்டாயம் 11 பொசிஷன்களிலும் சிறந்த வீரர்களை வைத்திருக்கவேண்டும். 

`நம்பர் 10' யார்... எதற்கு? 

4-2-3-1 ஃபார்மேஷனின் மிகப்பெரிய பலமே `நம்பர் 10' பொசிஷனில் விளையாடும் பிளேமேக்கர்கள்தாம். ஆட்டத்தை, அதன் போக்கை நொடியில்  மாற்றக்கூடிய ஒசில், முல்லர் போன்ற பிளேமேக்கர்களை வைத்துக்கொண்டும் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை ஜெர்மனியின் கேம் ப்ளான். ஆனால், அவர்களும் அதைத் தாண்டி எந்தப் பங்களிப்புமே செய்யவில்லை. 

மூன்று போட்டிகளிலும் ஜெர்மனி அணியின் ஆட்டம் ஒரே மாதிரிதான் இருந்தது. பாஸ்... பாஸ்... பாஸ்... என பொசிஷன் வைத்திருப்பதில் ரொம்பவே குறியாக இருந்தார்கள். தொடர்ச்சியான பாஸ்களுக்குப் பிறகு விங்குகளிலிருந்து அட்டாக் தொடங்கும். ஆம், ஜெர்மனியின் பெரும்பாலான அட்டாக்குகள் விங்கிலிருந்தே தொடங்கின. நேரடியாக பாக்ஸுக்குள், பெனால்டி ஏரியாவுக்குள் பாஸ்கள் போகவே இல்லை. எதிரணி வீரர்கள் அனைவருமே பாக்ஸுக்குள் நிரம்பி நின்று டிஃபண்ட் செய்தபோதும், ஜெர்மனி இந்த ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. 

மெக்சிகோ அணியுடனான போட்டியில், ரியூஸ் களமிறங்கியதும், டிஃபன்ஸிவ் கவராக வந்துவிட்டார் ஒசில். ரியூஸ் முழுக்க முழுக்க விங்கில்தான் விளையாடினார். இரண்டாவது போட்டியில் ஒசில் இடத்தில் ஸ்டார்டிங் லெவனிலேயே களமிறங்கினார் ரியூஸ். அந்தப் போட்டியில் ரியூஸ் - டிராக்ஸ்லர் கூட்டணி இடது விங்கிலேயே ஆடிக்கொண்டிருந்தது. அங்கேயும் நம்பர் 10 பொசிஷனுக்கான வேலை இல்லை. தென் கொரியாவுடனான இரண்டாவது பாதியில்தான் நம்பர் 10 பொசிஷனின் தாக்கமே தெரிந்தது. அந்த 55 நிமிடங்களில் 5 முறை பெனால்டி ஏரியாவுக்குள் பால் கொடுத்த ஒசில், முதல் பாதியில், நெருக்கடி குறைவாக இருந்தபோது ஒன்றுகூடக் கொடுக்கவில்லை. 

அந்த முதல் பாதியில் அவரின் மனநிலையும், `விங்கிலிருந்து அட்டாக்' என்பதுபோலத்தான் இருந்தது. இந்த ஆட்டத்தில் 84 பாஸ்களை நிறைவு செய்த ஒசில், ஸ்ட்ரைக்கர் வெர்னருக்கு 7 பாஸ்கள் கொடுத்துள்ளார். ஆனால், இடது விங்கில் ஆடிய ரியூஸ் - ஹெக்டார் கூட்டணிக்கு 16 பாஸ்களும், வலது விங்கில் ஆடிய கிம்மிச் - கொரேட்ஸ்கா கூட்டணிக்கு 19 பாஸ்களும் கொடுத்தார். சமயங்களில் அவர் விங்குகள் நோக்கிப் பிரிந்து ஆடுவதுதான் இதற்குக் காரணம். ஜெர்மனியின் கேம் பிளான் முழுக்க முழுக்க `நம்பர் 10' எனும் ரோலை பயனற்றதாக்கி, எதிரணியின் கவனத்தை ஒரே திசையில் குவித்துவிட்டது. 

கேப்டன் இருந்துச்சு... ஆனால், லீடர் இல்லை..!

ஜெர்மனி அணியின் தோல்விக்கு இன்னொரு மிகமுக்கியக் காரணம் - ஒரு நல்ல லீடர் இல்லாதது. லாம், ஸ்வைன்ஸ்டீகர் போல் `commanding' வீரர்கள் ஜெர்மனியில் இல்லாதது ஒரு பலவீனமாக அமைந்துவிட்டது. நூயர் கேப்டனாக இருந்தாலும், கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. ஆட்டம் கையை மீறிப் போகும்போது, அங்கு உடனடியாக ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டும். ஆட்டத்தின் அணுகுமுறையில், கேம் பிளானில் கொஞ்சம் பட்டி டிங்கரிங்க செய்யவேண்டும். அதற்கு ஓர் அனுபவமுள்ள தலைவன் இருக்கவேண்டும். அப்படியாரும் அந்த அணியில் இல்லாததால், 45 நிமிடம் முடிந்து டக் அவுட் போகும்வரை அதே பிளானோடுதான் ஆடுகிறார்கள். 

தென் கொரியாவுடனான ஆட்டத்தில் பலமுறை வெர்னர் மிகவும் ஃப்ரீயாக போஸ்டின் முன் இருக்கிறார். ஆனால், வழக்கம்போல் பாஸ் கிம்மிச் நோக்கியே பயணிக்கிறது. அந்த இடத்தில் ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, ஆப்ஷன்களை அதிகரித்திருக்கவேண்டும். ஆட்டத்தின் வேகத்தையும், ஃப்லோவையும் நன்றாக கன்ட்ரோல் செய்யக்கூடிய ஸ்வைன்ஸ்டீகர், லாம் போன்ற வீரர்கள் ஒருவர்கூட அணியின் நடுகளத்தில் இல்லை. அப்படி அந்த இடத்துக்கு வந்திருக்கவேண்டிய முல்லர், கெதிரா போன்ற வீரர்கள், ஒரு சாதாரண வீரர்களாகவே நடந்துகொண்டனர். 

பயிற்சியாளர் லோ - தவறுகளின் தொடக்கம்!

சொல்லப்போனால் மெக்சிகோ அணிக்கெதிரான போட்டிக்கு முன்பே ஜெர்மனிக்கு வார்னிங் சிக்னல் அடிக்கப்பட்டுவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது ஜெர்மனி. லோ - எதையுமே மாற்றாமல் களமிறங்கினார். குண்டோகன், ரியூஸ் போன்றவர்களை அமரவைத்துவிட்டு தன் ஃபேவரிட்களான கெதிரா, ஒசில் ஆகியோரைக் களமிறக்கினார். ஸ்வீடனுடன் இருவரையும் வெளியே அமர்த்தினார். ஆனால், ஒரு வெற்றி, அதீத நம்பிக்கை கொடுத்த அந்தத் தவற்றை மீண்டும் செய்யவைத்தது. கெதிரா - குரூஸ் இருவருமே பெரிதாக வேகம் இல்லாதவர்கள். எப்படி அது செட் ஆகும்?

தலைசிறந்த ஸ்ட்ரைக்கர்கள் இல்லாதபோது, வெறும், இரண்டு ஸ்ட்ரைக்கர்களை மட்டுமே ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்றார். அணி முழுக்க நடுகள வீரர்கள். அணியில் தேர்வு செய்யப்படாத கோபத்தில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து நீல் வேக்னர் ஓய்வே அறிவித்தார். அவர் பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கப் போவதில்லை. ஆனால், ஒரு கூடுதல் ஆப்ஷன் கொடுத்திருப்பார். அதை ஜெர்மனி தொலைத்திருந்தது. அதேபோல், கடைசிவரை அட்டாகிங் அணுகுமுறையை மாற்றவே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும், வீரர்கள் மாற்றப்பட்டார்களே தவிர, அணுகுமுறை மாற்றப்படவில்லை. Aerial threat கொடுக்ககூடிய ஹம்மல்ஸ், முல்லர், போடங் போன்றவர்களை வைத்துக்கொண்டு குரூஸ் கடைசிவரை ஷார்ட் பாஸ்கள்தாம் எடுத்துக்கொண்டிருக்கிறார். எதையுமே லோ மாற்றவில்லை. சாம்பியன்களின் தலையெழுத்தும் மாறவில்லை. 

இத்தனை டெக்னிக்கல் பிரச்னைகள் ஜெர்மனியின் ஆட்டங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், அவர்கள் எதையும் சரிசெய்துகொள்ளவே இல்லை. இந்த முறை சாம்பியனாகும் அணி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் அணிகளின் ஆட்டத்தோடு, இந்த ஜெர்மனியின் ஆட்டத்தையும் 'case study'-ஆக எடுத்துக்கொண்டு 'சாம்பியன்கள் எப்படி வெளியேறினார்கள்' என்று பாடம் படிக்கவேண்டும். இந்த நிலை மாறவில்லையெனில், உலகக் கோப்பையின் பரபரப்பில் மிகப்பெரிய பகுதியை இழக்க நேரிடும்!