Published:Updated:

`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்!' - நிரூபித்த ஜெர்மனி #GERSWE

`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்!' - நிரூபித்த ஜெர்மனி #GERSWE
News
`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்!' - நிரூபித்த ஜெர்மனி #GERSWE

அன்று மான்செஸ்டர் யுனைட்டெட் ரசிகர்கள் சொன்னது போலவே, இன்று ஜெர்மனி ரசிகர்கள் சொல்கிறார்கள்… `சாம்பியன்களுக்கு எப்போது ஜெயிக்க வேண்டும், எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெரியும்!’

கால்பந்து அரங்கில் ஒப்பீடுகள் ஒருபோதும் ஓயவே ஓயாது. இதோ இன்று புதிய ஒப்பீடு. 1999 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்கும், நேற்று நடந்த ஜெர்மனி – ஸ்வீடன் மேட்ச்சுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாகச் சொல்கிறார்கள் கால்பந்து நிபுணர்கள். #GERSWE

கேம்ப் நூ, பார்சிலோனாவின் ஹோம் கிரவுண்ட். இங்கு, 90,245 ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அது பார்சிலோனாவுக்கு சம்பந்தமில்லாத மேட்ச். மான்செஸ்டர் யுனைட்டெட் – பேயர்ன் மியூனிச் கிளப்கள் மோதும், 1999 சாம்பியன்ஸ் லீக் ஃபைனல். ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே பேயர்ன் மியூனிச் விங்கர் மரியோ பேஸ்லர் கோல் அடித்துவிட்டார். 90 நிமிடம் வரை மான்செஸ்டர் யுனைடெட் இதற்கு பதிலடி கொடுக்கவில்லை. ஸ்டாப்பேஜ் டைம்… 3 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்தால் வெற்றி. வாய்ப்பிருக்கிறதா? 90 நிமிடங்களில் அடிக்காத கோல்களை கடைசி 3 நிமிடத்தில் அடிக்க முடியுமா?  `ரெட் டெவில்’ ரசிகர்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்.

இஞ்சுரி டைம் 90+1… 18 யார்டு பாக்ஸுக்கு அருகே நின்றிருந்த ஷெரிங்ஹம் காலுக்கு வருகிறது பந்து. அதை அப்படியே கோல் போஸ்ட்டின் லெஃப்ட் கார்னரில் கோல் அடிக்கிறார் ஷெரிங்ஹம். ஸ்கோர் 1-1. மான்செஸ்டர் யுனைட்டெட் ரசிகர்களால் நம்பமுடியவில்லை. இன்னும் இரண்டு நிமிடங்கள். ஒரேயாரு கோல்… ஏதோ ஓர் ஒளி தெரிகிறது. அவசர அவசரமாக கேம் ரீஸ்டார்ட் ஆகிறது. 90+3 நிமிடம்… அதாவது மேட்ச் முடியப் போகும் கடைசி 60 நொடிகள். மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப்புக்கு கார்னர் கிக் கிடைக்கிறது. அந்த கிராஸை ஷெரிங்ஹம் ஹெட்டர் செய்ய, அது 6 யார்டு பாக்ஸில் கோல் போஸ்ட்டுக்கு மிக அருகில் நின்றிருந்த Solskjær காலுக்கு ஏதுவாக வருகிறது. அதை அவர் அப்படியே நேக்காக ஒரே டச்சில் வலைக்குள் செலுத்தினார். கோல்… அதுவும் 3 நிமிடத்தில் இரண்டு கோல்கள். பேயர்ன் மியூனிச் வீழ்ந்தது. 90 நிமிடம் கட்டிக் காப்பாற்றிய டிஃபன்ஸ் கடைசி 3 நிமிடங்களில் சுக்குநூறாக உடைந்தது. உடைத்தது மான்செஸ்டர் யுனைட்டெட்!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே, அந்த சீசனில் பிரிமியர் லீக், எஃப்.ஏ கோப்பை வென்றிருந்த மான்செஸ்டர் யுனைடெட், போனஸாக சாம்பியன்ஸ் லீக் பட்டமும் வென்றது. டிரிபிள் சாம்பியன். இந்த வெற்றிக்குப் பின் சாம்பியன்களுக்கு எந்த நேரத்தில் வெற்றிபெற வேண்டும் என்பது அத்துப்படி என, சர் அலெக்ஸ் பெர்குசன் அணியை ஏகத்துக்கும் பாராட்டினர்... நேற்று, ஜோகிம் லூவின் ஜெர்மனி அணியைப் பாராட்டியது போல!

மேன் யூ ரசிகர்கள் போலவே, ஜெர்மனி ரசிகர்களும் நேற்று நம்பிக்கையிழந்துவிட்டனர். ஆட்டம் 1-1 டிராவில் முடியும். ரவுண்ட் ஆஃப் 16 கனவு கலைந்து விடும் என ஃபிஷ்ட் ஸ்டேடியத்தில் இருந்த ஒவ்வொரு ஜெர்மனி ரசிகனும் சோகத்தில் இருந்தான். சிலருக்கு அழுகையும் வந்தது. இதே மைதானத்தில் எட்டு நாள்களுக்கு முன் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில், கடைசி நிமிடத்தில் ஃப்ரீ கிக்கை கோல் அடித்து, ஆட்டம் டிராவில் முடிய காரணமாக இருந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அது கிறிஸ்டியானோ ரொனால்டோ… இது டோனி க்ரூஸ்… ரியல் மாட்ரிட் வீரர்கள் என்பதைத்தாண்டி, இருவருக்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆனால், அந்த லாஜிக்கெல்லாம் இந்த நேரத்தில் எடுபடாது.

இப்போது, பாக்ஸின் வலதுபுறம் ஜெர்மனிக்கு ஃப்ரீ கிக் கிடைத்திருக்கிறது. இஞ்சுரி டைம் 90+6… ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. ரொனால்டோ மீது எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது டோனி க்ரூஸ் மீது யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  ஃப்ரீ கிக்கை எடுக்க ஆயுத்தமாகிறார் க்ரூஸ். அருகில் நிற்கிறார் ரியூஸ். ஒட்டுமொத்த ஸ்வீடன் வீரர்களும் 6 யார்டு பாக்ஸ் அருகே அடைத்து நிற்கிறார்கள். பொதுவாக, கிராஸ் போடுவதில் க்ரூஸ் வல்லவர். கார்னர் கிக் எடுப்பதில் கிங். இப்போது கார்னர் கிக்கும் இல்லை. கிராஸ் போட்டாலும், அதை எந்தளவு ஹெட்டர் கோல் அடிப்பார்கள் என்றும் தெரியாது. குழப்பம். Clock is ticking…

அருகில் இருந்த ரியூஸ், டோனி க்ரூஸிடம் சொல்கிறார். `கிராஸ் போட வேண்டாம்… டேரக்ட்டா அடிச்சிரு…!’ அதுதான் சரி எனப்பட்டது. பந்தை லேசாக ரியூஸிடம் தட்டிக் கொடுக்கிறார் க்ரூஸ். ரியூஸ் மீண்டும் அதை டோனி க்ரூஸ் பக்கம் தட்டி விடுகிறார். இவர்கள் ஏதோ வித்தை காட்டுகிறார்கள் என ஸ்வீடன் வீரர்கள் இருந்த இடத்தில் இருந்து அசையவில்லை. இதுதான் நமக்குத் தேவை. கோல் கீப்பரும் லெஃப்ட் கார்னரில் இருக்கிறார். கோல் போஸ்ட்டின் டாப் ரைட் கார்னரில் கொஞ்சம் இடைவெளி தெரிகிறது. கோல் கீப்பரால் டைவ் அடித்துத் தடுக்கவும் வாய்ப்பில்லை. ஒரு கர்வ் போட்டால் போதும். கோலாகி விடும். க்ரூஸ் அடுத்து யோசிக்கவே இல்லை; தாமதிக்கவும் இல்லை. அந்த கேப்பில் அடித்தார். கோல் அடித்தார். அது வெற்றிக்கான கோல். ஜெர்மனியை மீட்டெடுத்த கோல். ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைத்த கோல். ஜோகிம் லூவை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த கோல். மொத்தத்தில் கொண்டாட்டத்துக்கான கோல்.

அன்று மான்செஸ்டர் யுனைட்டெட் ரசிகர்கள் சொன்னது போலவே, இன்று ஜெர்மனி ரசிகர்கள் சொல்கிறார்கள்… `சாம்பியன்களுக்கு எப்போது ஜெயிக்க வேண்டும், எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெரியும்!’