ஆபத்பாந்தவான் கொடினியோ மீண்டும் ஒருமுறை கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து உதவ, நெய்மர் தன் கோல் கணக்கைத் தொடங்க, கோஸ்டா ரிகாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது பிரேசில். #BRACRC
குரூப் இ பிரிவில் உள்ள பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையிலான மேட்ச், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் இன்று நடந்தது. ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியைப் பிரேசில் டிரா செய்திருந்தது. செர்பியாவிடம் கோஸ்டா ரிகா 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், கடந்தமுறை கோல் அடிக்கவில்லை. முக்கியமான இந்தப் போட்டியில் அவர் கோல் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, லெஃப்ட் விங்கில் இருந்த நெய்மருக்கே பாஸ் கொடுக்கப்பட்டது. கொடினியோ வழக்கம்போல லாங் ரேஞ் ஷாட் மூலம் கோல் அடிக்க முயன்றார். கோஸ்டா ரிகா டிஃபன்ஸில் ஸ்ட்ராங்காக இருந்ததால், பிரேசில் வீரர்களின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இடைவேளைக்குப் பின், பொசஷன் விகிதம், ஷாட் ஆன் டார்கெட் என பிரேசில் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 72 வது நிமிடத்தில் நெய்மருக்கு அட்டகாசமான வாய்ப்பு கிடைத்தது. அதை வெளியே அடித்து வீணடித்தார். அதற்கு அடுத்தடுத்து நிமிடங்களிலும் அவருக்கு லட்டு மாதிரி வாய்ப்புகள் வந்தன. செகண்ட் லாஸ்ட் ஆப்பனன்ட்டை பீட் செய்து கோல் அடிக்க வேண்டிய சான்ஸை எல்லாம், பாக்ஸுக்கு வெளியே இருந்து தூக்கி அடித்து வீணடித்தார்.
ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருந்தபோது, எப்படியும் கோல் அடிக்க வேண்டும் எனப் பெனால்ட்டி பாக்ஸில் நின்று மேஜிக் செய்தார். கோஸ்டா ரிகா டிஃபண்டர் ஒருவர் நெய்மரை மடக்க, கீழே விழுந்து பெனால்ட்டி கோரினார் நெய்மர். VAR உதவிக்குப் பின் ரெஃப்ரி நோ பெனால்ட்டி என்றார். அடுத்த நிமிடமே ஆத்திரத்தில் பந்தை ஓங்கி தரையில் அடித்ததற்காக, நெய்மருக்கு எல்லோ கார்டு கொடுத்தார் ரெஃப்ரி.
நேரம் நெருங்க நெருங்க கோஸ்டா ரிகா பாக்ஸுக்குள் புகுந்து விளையாடினர். ஆனால், கோஸ்டா ரிகா கோல் கீப்பர் கெய்லர் நவாஸ், ஒரு ஷாட்டைக்கூட தன்னை மீறிச் செல்ல அனுமதிக்கவில்லை.
இஞ்சுரி டைம். லெஃப்ட் விங்கிலிருந்து வந்த கிராஸை, பாக்ஸின் வலது ஓரத்தில் 6 யார்டு தூரத்தில் இருந்த ஃபிர்மினோ தலையால் முட்டி உள்ளே தள்ள, கேப்ரியல் ஜீசஸ் அதைக் கோல் அடிக்க முயற்சி செய்ய, பந்து அவர் காலில் பட்டு விலக, உடனடியாகப் பாக்ஸுக்குள் பாய்ந்து வந்த கொடினியோ அட்டகாசமாக கோல் அடித்தார். இந்தமுறை நவாஸ் தோற்கடிக்கப்பட்டார். பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. மீண்டும் ஒருமுறை பிரேசிலின் மானம் காத்தார் கொடினியோ. எல்லோரும் நெய்மர் மீது எதிர்பார்த்துக்கொண்டிருக்க, கொடினியோ இந்தத் தொடரில் சைலன்ட்டாக இரண்டு கோல்கள் அடித்துவிட்டார்.
விசில் அடிப்பதற்கு ஒரு நிமிடமே இருந்தபோது, டக்ளஸ் கோஸ்டா ரைட் விங்கிலிருந்து கொடுத்த பாலை, ஒரே டச்சில் கோல் அடித்தார் நெய்மர். யாரும் எதிர்பார்க்காத கோல். இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் முதல் கோல். ஆட்ட நேர முடிவில் பிரேசில் 2-0 என வெற்றிபெற்றது. இரண்டு போட்டிகளில் தோற்ற கோஸ்டா ரிகா , உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறது.