Published:Updated:

ரொனால்டோவிடம் வீழ்ந்துவிட்டார் மெஸ்ஸி! போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே? #WorldCup

ரொனால்டோவிடம் வீழ்ந்துவிட்டார் மெஸ்ஸி! போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே? #WorldCup

உண்மையில் வீரர்களாக இருவரும் அந்த சமநிலையில் நிற்கும் தராசில்தான் நிற்கிறார்கள். ஆனால், ஒரு தலைவனாக ரொனால்டோ தன்னை வேறுபடுத்திக்கொண்டார். மெஸ்ஸி அங்கு தேங்கிவிட்டார். 

ரொனால்டோவிடம் வீழ்ந்துவிட்டார் மெஸ்ஸி! போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே? #WorldCup

உண்மையில் வீரர்களாக இருவரும் அந்த சமநிலையில் நிற்கும் தராசில்தான் நிற்கிறார்கள். ஆனால், ஒரு தலைவனாக ரொனால்டோ தன்னை வேறுபடுத்திக்கொண்டார். மெஸ்ஸி அங்கு தேங்கிவிட்டார். 

Published:Updated:
ரொனால்டோவிடம் வீழ்ந்துவிட்டார் மெஸ்ஸி! போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே? #WorldCup

அர்ஜென்டினா ரசிகர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் நொறுக்கிக்கொண்டிருக்கிறார்கள் குரோஷிய வீரர்கள். முகத்தில் வரைந்திருந்த அர்ஜென்டினா கொடியின் நீல நிறம், வடியும் கண்ணீரால் அழிந்துகொண்டிருக்கிறது. சர்ச்சைக்குறிய கோலால் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை வென்றுதந்த டீகோ மரடோனாவின் கைகள் பதற்றத்தில் நகங்களைக் காவு கொடுத்துக்கொண்டிருக்கின்றன. மொத்த அர்ஜென்டினாவும் அந்த ஒருவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது... மரடோனா உள்பட. 22 ஆண்டுகள் முன்பு அர்ஜென்டினாவுக்கு கோப்பை வென்றுதந்த அந்த 10-ம் நம்பர் ஜெர்சி இன்று கையறு நிலையில். லயோனல் மெஸ்ஸி - உலகின் தலைசிறந்த வீரர் தலை நிமிர முடியாமல் மைதானத்தின் புற்களைப் பார்த்தபடியே நிற்கிறார். அவர் முகத்தைப் பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் அந்தக் கேள்வி எழுந்திருக்கும் : 'Is Messi Greatest Of All Time?'

Greatest Of All Time (GOAT) என்ற விஷயத்தை அணுகும்போது  அந்தத் தராசின் இன்னொரு புறம் இந்த வீரரையும் வைக்க வேண்டியிருக்கிறது - கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இந்த ரைவல்ரி, இப்போது முடிவுரையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கோல் எண்ணிக்கை, டெக்னிக், ஸ்கில், விருதுகள் தாண்டி, GOAT என்ற அந்தஸ்தை அவர்கள் வென்ற பட்டங்களும் சேர்த்துத்தான் நிர்ணயிக்கிறது. அதனால்தான் ஜோயன் க்ரயுஃப், டி ஸ்டெஃபானோ போன்ற வீரர்களைவிட பீலே, மரடோனா ஆகியோர் அதிகம் பிரசித்தி பெற்றனர். ஏனெனில் அவர்கள் உலகக் கோப்பை வின்னர்கள்! அப்படிப் பார்த்தால் ரொனால்டோ, இந்த ரேஸின் கடைசி சுற்றில் முந்திக்கொண்டிருக்கிறார்.

அர்ஜென்டினா - குரோஷியா ஆட்டத்தின் 80-வது நிமிடம்... அதுவரை தன் வேற லெவல் ஆட்டத்தால் அர்ஜென்டினாவை அடக்கி வைத்திருந்த குரோஷியா கேப்டன் மோட்ரிச், ஒரு லாங் ரேஞ்ச் கோல் அடித்து அனைவரையும் அசரடிக்கிறார். "The legend have taken Croatia to the next round" என்கிறார் வர்ணனையாளர். 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் வென்ற ரியல் மாட்ரிட் அணியின் மிகமுக்கிய கருவி. இதுவரை அவர் ஒவ்வொரு சாகசம் செய்யும்போதும் 'ஜீனியஸ்' என்றுதான் பாராட்டப்பட்டுள்ளார். இன்று, முதல் முறையாக 'லெஜண்ட்' என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. காரணம் - மிகப்பெரிய அணிக்கு எதிராக பெற்றுத்தந்த எதிர்பாராத வெற்றி... தேசிய அணிக்குப் பெற்றுத்தந்த வெற்றி! மெஸ்ஸியின் இமேஜ் இதே புள்ளியில்தான் சரியத் தொடங்குகிறது. ஏனெனில், அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி பெற்றுத்தந்த பட்டங்கள் - 0! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரொனால்டோ யாருமே எதிர்பார்க்காத வகையில் யூரோ கோப்பையை வென்றுவிட்டார். மெஸ்ஸி, கோபா அமெரிக்காவில் பெனால்டியை தவறவிட்டு ஓய்வுதான் பெற்றார். இந்த இடத்தில் எல்லோரும் வைக்கும் ஒரு வாதம் 'அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்ஸிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, அந்த வீரர்கள் சுமார்' என்பது. சீரி - ஏ தொடரின் டாப் ஸ்கோரருக்கே இடமில்லாத அளவுக்கு நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் அணி அது. மறுபுறம் போர்ச்சுகல்..? ரொனால்டோவைத் தவிர கொஞ்சம் டெக்னிக்கலாக ஆடக்கூடியவர்கள் இரண்டே பேர் - வில்லியம், பெர்னார்டோ சில்வா. அவ்வளவுதான். மற்றபடி, வாய்ப்புகள் உருவாக்கவோ, பயன்படுத்திக்கொள்ளவோகூட அந்த அணியில் ஆள் இல்லை. அவர்களை வைத்துக்கொண்டு 194 நிமிடங்களில் ரொனால்டோ அடித்த கோல்கள் - 4. அகுவேரோ, ஹிகுவெய்ன், டி மரியா, டிபாலா போன்ற ஸ்டார்களுடன் விளையாடி 190 நிமிடங்களில் மெஸ்ஸி அடித்த கோல்கள் - 0!

இத்தனை வருடங்கள் இருவரிடத்திலும் தெரியாத இந்த மிகப்பெரிய வித்தியாசம், இப்போது மட்டும் புலப்படுவது எப்படி? சொல்லப்போனால் ரொனால்டோவைவிடவும் மெஸ்ஸி டெக்னிக்கலி கொஞ்சம் ஸ்ட்ராங். ஆனால் அவர் சறுக்கியது எங்கே? கிளப் போட்டிகளில் இருவரும் தராசில் சரிசமமாய் நிற்கும்போது, சர்வதேசப் போட்டிகளில் மெஸ்ஸி தடுமாறுவது ஏன்? சுயநல வீரர் என்று பலராலும் கருதப்பட்ட ரொனால்டோ எப்படி இந்த வெற்றிகளை சாத்தியமாக்கினார்? உண்மையில் வீரர்களாக இருவரும் அந்த சமநிலையில் நிற்கும் தராசில்தான் நிற்கிறார்கள். ஆனால், ஒரு தலைவனாக ரொனால்டோ தன்னை வேறுபடுத்திக்கொண்டார். மெஸ்ஸி அங்கு தேங்கிவிட்டார். 

ஐந்தரை அடி உயர ஆள் ஒருவன், மூன்று வயது குழந்தையிடம் முத்தம் கேட்கிறான். அந்தக் குழந்தையின் உதடுகளால் அவன் கன்னத்தை அடைய முடியாது. குதித்துப் பார்க்கிறது, அப்போதும் முடியவில்லை. அவனோ குனிய மறுக்கிறான். "நீ என் உயரத்துக்கு வா. என்னால் குனிய முடியாது" என்கிறான். இப்போது அந்தக் குழந்தை பாவம் என்ன செய்யும்? குதிப்பதையும் நிறுத்திவிடும். அர்ஜென்டினா வீரர்கள் போராடுவதை, புதிய நுணுக்கங்களைப் பயன்படுத்துவதை, தங்களை மெருகேற்றிக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள். கோப்பை கடைசி வரை மெஸ்ஸிக்குக் கிடைக்கப்போவதில்லை. 

ரொனால்டோ - செல்ஃபிஷ் பிளேயர், ஆட்டிட்யூட் காட்டுபவர், ஈகோ கொண்டவர் என்று அவர் பெர்சனாலிட்டி மீது ஓரப்பார்வை கொண்டிருக்கிறது இந்த உலகம். ஆனால், ரொனால்டோவின் பார்வை வேறு மாதிரியானது: இந்தக் குழந்தை ரியல் மாட்ரிட் போல் சீக்கிரம் வளரக்கூடியது அல்ல. இது போர்ச்சுகல். வளர ஆண்டுகள் அல்ல, யுகங்களே ஆகும். புரிந்துகொண்டார். குனிந்து, அதைத் தன் தோள்களில் தூக்கிவைத்துப் பயணிக்கத் தொடங்கினார். முத்தங்கள் கிடைத்தது. யூரோ கோப்பை வசமானது, இந்த உலகக் கோப்பையில் நினைத்துப் பார்க்க முடியாத அசத்தல் துவக்கம், அதுமட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த வீரனாக தன்னை... தன்னை மட்டும் உலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ஸ்பெய்ன், மொராக்கோ அணிகளுக்கு எதிரான போட்டிகள் இரண்டிலுமே 'கேப்டன்' ரொனால்டோவின் ஆட்டமும் அணுகுமுறையும் ஆச்சர்யமளித்தது. ரியல் மாட்ரிட் அணிக்கு ஆடும்போது, ஒவ்வொரு வீரரின் பாஸும் தன்னையே டார்கெட்டாகக் கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார் ரொனால்டோ. தான் கோலடிக்கவேண்டும் என்ற எண்ணம் கடைசி நிமிடம் வரை இருந்துகொண்டே இருக்கும். பாக்ஸுக்குள் சென்றுவிட்டால் சமயங்களில் பாஸ் எனும் ஆப்ஷன் இருப்பதையே மறந்துவிடுவார். ஏனெனில், குரூஸ், மோட்ரிச், இஸ்கோ, மார்செலோ என ஸ்டார்கள் நிறைந்த மாட்ரிட் அணியால், தான் தவறவிட்டாலும் வாய்ப்புகளை அடுத்தடுத்து உருவாக்கிட முடியும். ஆனால், போர்ச்சுகல் அணியால் நிச்சயம் முடியாது. ஒவ்வொரு வாய்ப்புக்கும் தவம் கிடக்கவேண்டும். ரொனால்டோவின் பிளான்... ரொனால்டோவின் போர்ச்சுகல் பிளான் ரொம்பவே மாறியிருந்தது. 

ஸ்பெய்ன் அணியுடனான போட்டியில் பாக்ஸுக்குள் ஒரு டிஃபண்டர் மட்டுமே இருக்கும்போது, கோலடிக்கத் தனக்கு 50 சதவிகித வாய்ப்பு இருக்கும்போது, இளம் வீரர் கிடஸுக்குப் பாஸ் கொடுத்தார் ரொனால்டோ. ஏனெனில், கோல் அடிக்க அவருக்கு தன்னைவிட வாய்ப்பு அதிகம். இதைத் தவறவிடக் கூடாது. யோசிக்காமல் மறு நோடியே பாஸ் செய்தார். ரசிகர்கள், போர்ச்சுகல் வீரர்கள், இவ்வளவு ஏன் கிடஸ் கூட அந்தப் பாஸை எதிர்பார்க்கவில்லை. அதேபோல் தான் கோல் அடிப்பதற்காக 'கிராஸ்கள் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும்' என்ற அஜெண்டாவை தன் அணிக்கு அவர் முன்வைக்கவில்லை. விங்குகளை விட போர்ச்சுகல் அணி சென்ட்ரல் மிட்ஃபீல்ட் வழியேதான் தன் ஆட்டத்தைக் கட்டமைத்திருந்தது. அதற்கு ஏற்றார்போல், தான் இடது விங்கில் ஆடாமல், சென்ட்ரல் ஸ்ட்ரைக்கர் பொசிஷனில் விளையாடினார் CR7. அதுமட்டுமல்ல, கார்னர் கிக்குளில் அசால்டாக கோலடிக்கும் அவர், மொராக்கோ அணிக்கெதிராக கடைசி நிமிடத்தில் கிடைத்த கார்னரைக் கூட எடுக்கவிடவில்லை. பொசஷனை இழந்துவிடக்கூடாது என்பதற்காக கார்னர் கொடிக்கு அருகிலேயே பாஸிங் செய்யவைத்தார்.

அதுமட்டுமல்ல, வழக்கமாக மாட்ரிட் வீரர்கள் கொஞ்சம் சொதப்பும்போது, முகத்தைச் சுளித்து தன் சங்கடத்தை வெளிப்படுத்துவார். ஆனால், இங்கு அதுவும் இல்லை. மிகப்பெரிய தவறுகள் செய்தாலும், அதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார். 'உன்னால முடிஞ்சது நீ பண்ணு, மத்தத நான் பாத்துக்குறேன்' என்பதுதான் அவர் தன் வீரர்களிடம் சொல்வது. இதுதான் ரொனால்டோ என்னும் கேப்டன் செய்தது. இங்கு போர்ச்சுகல் வீரர்கள் எந்த இடத்திலும் தங்களின் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ரொனால்டோவும் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவில்லை. தன் அணுகுமுறையை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொண்டார். சக்சஸ்! சரியான திட்டமிடல், ரொனால்டோவுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையில் ஒரு பாலமாய் அமைந்தது. இது இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமல்ல, கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. அதனால்தான் இந்தப் போர்ச்சுகல் அணியால் யூரோ கோப்பை வெல்ல முடிந்தது. பலமான ஸ்பெய்ன் அணியின் டிஃபன்ஸுக்கு ஆட்டம் காட்ட முடிந்தது. 

மெஸ்ஸி..? தன் தரத்துக்கு தன் அணியினர் விளையாடவேண்டும் என்று எதிர்பார்த்தார். இன்னமும் எதிர்பார்க்கிறார். மெஸ்ஸி எல்லோரும் சொல்வதுபோல் 'Came from a different planet' தான். அவரது ஆட்டம் ஏலியன் லெவலில் இருக்கும். இந்த அர்ஜென்டினா வீரர்கள் மிகச்சிறந்த வீரர்கள்தான். ஆனால், அந்தத் தரத்துக்கு அவர்களால் ஆட முடியாது. பார்சிலோனாவின் ஜாவி, இனியஸ்டா போன்ற மகத்தான ஜாம்பவான்கள் மெஸ்ஸியின் ஆட்டத்தை நுணுக்கமாக அறிந்தவர்கள், மெஸ்ஸி எப்படிப் பாஸ் செய்வார், ஒரு பாஸுக்கு எப்படி நகர்வார் என்று நன்கு உணர்ந்தவர்கள். டி மரியாவோ, பனேகாவோ அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அவர்களால் அப்படி ஆகவும் முடியாது. ஆனால், அவர்கள் அப்படி ஆடவேண்டும் என்று மெஸ்ஸி எதிர்பார்க்கிறார். 

அர்ஜென்டினா அணியின் ஒவ்வொரு திட்டமும் அவரைச் சுற்றியே வகுக்கப்படுகிறது. அது தவறில்லை. ஆனால், அதற்காக மற்ற வீரர்கள் தங்களின் ஸ்டைலை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில்தான் பிரச்னை. மெஸ்ஸி இருப்பதால், மற்ற முன்கள வீரர்கள் செய்யக்கூடிய டிரிபிளிங், ஷாட்ஸ் என அனைத்தின் விகிதமும் குறையும். ஏனெனில், மெஸ்ஸிக்குப் பாஸ் போடுவதுதான் அவர்களின் வேலை. அந்த அணி இங்கேயே பாதி தோற்றுவிட்டது. சரி, களத்திலாவது ஒரு உத்வேகம் கொடுக்கிறாரா? அதுவும் இல்லை. எதிரணி ஒவ்வொரு கோல் அடிக்கும்போதும் தரையை குனிந்து பார்க்கிறார். தன் ஜெர்சியால் முகம் துடைக்கிறார். அவ்வளவுதான். பெஞ்சில் அமர்ந்திருந்த மார்கோஸ் ரோயோ கொடுத்த அளவுக்குக்கூட வீரர்களுக்கு கேப்டன் மெஸ்ஸி உத்வேகம் தரவில்லை.

குரோஷிய வீரர் ரகிடிச்சுடன் ஒடமெண்டி மோதலில் ஈடுபட, இரண்டு அணி வீரர்களும் மொத்தமாக வாக்குவாதம் செய்துகொண்டிருக்க, அதிலும் ஈடுபாடு காட்டாமல் ஓரமாக நிற்கிறார். ஆட்டம் முடிந்ததும் எந்த வீரரையும் பார்க்காமல்  வேகவேகமாக வெளியேறுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தார். நேற்றுக்கூட குரோஷிய வீரர் ஸ்ட்ரினிச் ஃபௌல் செய்தபோது, அவரிடம் தன் ஆதங்கத்தைக் கோபமாகக் காட்டினார் 'மிஸ்டர் கூல்'. ஒரு கேப்டன் என்ன செய்யவேண்டும். மோசமான தருணங்களில் தன் அணியின் பின்னால் நிற்கவேண்டும்.  ஆனால் நிற்பதில்லை.  இப்படியெல்லாம் தன் நடத்தையின் மூலமாகவே, தன் அணியினரின் மனதில் ஒரு குற்றவுணர்ச்சியை விதைத்துவிட்டார் மெஸ்ஸி.  

மெஸ்ஸி கோப்பை வென்று தரவில்லை என்று குற்றம் சொல்லும் ஒவ்வொரு அர்ஜென்டின ரசிகனின் கருத்தோட்டம் இதுதான்: 'எந்த அர்ஜென்டினா வீரரும் தேசிய அணிக்காக ஜொலிப்பதில்லை. ஆனால், பார்சிலோனா அணிக்கு ஒற்றை ஆளாக போட்டியை வென்றுதரும் மெஸ்ஸியால் ஏன் அர்ஜென்டினாவுக்கு வென்று தர முடியவில்லை'. இந்த எண்ணம் உள்ளவர்கள் நாளையும் மெஸ்ஸியைத்தான் நம்புவார்கள். மெஸ்ஸி மீது கோபம் இருந்தாலும், நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மற்றவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையே இல்லை. வென்று தந்தால் மெஸ்ஸிதான் வென்றுதரவேண்டும் என்று நினைப்பவர்கள். மற்ற வீரர்களின் இமேஜ் மெஸ்ஸியின் நடத்தைகளினால் சுக்குநூறாகி வருடங்கள் ஆகிறது. இனி அர்ஜென்டினா எனும் குழந்தை வளரப்போவதில்லை. அதைக் கூட்டாகத் தூக்கிச் சுமக்க, சில புதிய வீரர்கள் வரவேண்டும். அவர்கள் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களாக இல்லாமல் இருக்கவேண்டும். இல்லையேல் ரொனால்டோபோல்  Greatest Of All Time-ஆக இருக்கவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism