21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 'டி' பிரிவில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதிய ஆட்டம் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில், குரோஷியா துவம்சம் செய்தது.
தனது முதல் போட்டியில் நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 'டி' பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த குரோஷியா இன்று அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஐஸ்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனதால், வெறும் ஒரு புள்ளி மட்டுமே பெற்றிருந்த அர்ஜென்டினா இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆக்ரோஷமாக ஆடியது.
முதல் போட்டியில் பெனால்டி கிக் வாய்ப்பு உள்பட 11 ஷாட்கள் அடித்தும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இப்போட்டியில் அவர் ஒரு கோலாவது அடிப்பார் என அவர்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரால் இந்தப் போட்டியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
முதல்பாதியில் இரு அணிகளின் டிஃபன்ஸூம் கடுமையாக இருந்தன. இதனால் எவ்வளவு முயன்றும் இரு அணிகளாலும் முதல்பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாம் பாதி தொடங்கி சிறிது நேரத்தில் (53'-வது நிமிடத்தில்) சக வீரர் பேக்-பாஸ் செய்த பந்தை, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து தவறுதலாக குரோஷியா அணியின் ஆன்ட்டி ரெபிச் பக்கம் பாஸ் செய்தார் அர்ஜென்டினா கோல் கீப்பர் கேபயாரோ. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ரெபிச், அதனை அற்புதமான கோல் ஆக்கினார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே குரோஷியா முன்னிலை பெற்றது.
80-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் லூகா மோட்ரிச் மேலும் ஒரு கோல் அடித்து, அந்த அணியின் வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தார். ஆட்டநேர இறுதியில் இவான் ராகிடிச் மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர இறுதிவரை அர்ஜென்டினா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் 3-0 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா அணியை துவம்சம் செய்தது குரோஷியா.
இப்போட்டியில் வென்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் 'டி' பிரிவில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது குரோஷியா. வெறும் ஒரு புள்ளியுடன் அர்ஜென்டினா அணி தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.