Published:Updated:

லுகாகு டபுள் கோல்... பனாமாவுக்கு செக் வைத்த பெல்ஜியம்! #BELPAN

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லுகாகு டபுள் கோல்... பனாமாவுக்கு செக் வைத்த பெல்ஜியம்! #BELPAN
லுகாகு டபுள் கோல்... பனாமாவுக்கு செக் வைத்த பெல்ஜியம்! #BELPAN

ஃபிஷ்ட் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் பெருவாரியாக திரண்டிருந்த பனாமா ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றம் அளித்தாலும், முதல் பாதியில் அவர்கள் பெல்ஜியத்தை கோல் அடிக்க விடாமல் தடுத்தது பெரிய விஷயம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பனாமா மேனேஜர் ஹெர்னன் டேரியோ கோமஸ், இந்த உலகக் கோப்பை தொடங்கும் முன், ஒவ்வொரு போட்டியின் முடிவிலும்,  நான்கு விஷயங்களில் ஒன்று நடக்க வாய்ப்பிருப்பதாக தன் அணியினரிடம் எச்சரித்திருந்தார். அது… வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம் அல்லது டிராவில் முடியலாம் அல்லது சிதைக்கப்படலாம்…! லுகாகுவின் இரட்டை கோல், மெர்டன்ஸின் அற்புத volley கோல் மூலம்  3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றிபெற்றது. இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணிக்கு சாதகமான ரிசல்ட் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், பனாமா கோச் கோமஸ் பயந்ததுபோல, அவர்கள் முழுமுற்றாக தோற்கடிக்கப்படவில்லை.  #BELPAN

ஏனெனில், பனாமா முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றது. அதற்காக பனாமாவை பெல்ஜியம் குறைத்து மதிப்பிடவில்லை. இந்த உலகக் கோப்பையில் இதுவரை பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி என கோப்பை வெல்லும் பட்டியலில் இருந்த அணிகள் எல்லாம் தங்கள் முதல் போட்டியில் அஜாக்கிரதையாக ஆடியதை பெல்ஜியம் நன்கு உணர்ந்திருந்தது. விசில் அடித்த முதல் நொடியில் இருந்தே அட்டாக், அட்டாக், அட்டாக் எனும் தாரக மந்திரத்தைக் கையில் எடுத்தது பெல்ஜியம். ஹசார்டு,  டி ப்ருய்ன், லுகாகு என மும்முனைத் தாக்குதல் நடத்தினர்.

அரைமணி நேரத்துக்குப் பின் ஒரு வழியாக பெல்ஜியம் பாக்ஸுக்குள் ஊடுருவியது பனாமா. முதல் கார்னர் கிக் கிடைத்தது. 37-வது நிமிடத்தில் ஈடன் ஹசார்டு வழக்கம்போல டிரிபிளிங் மூலம் ஊடுருவி, இலக்கை நோக்கி ஷாட் அடித்தார். அது கோலாகவில்லை. அடுத்தடுத்த நிமிடங்களில் பெல்ஜியம் தாக்குதலைத் துரிதப்படுத்தியது. பனாமா கோல்கீப்பரும் சரி, டிஃபண்டர்களும் சரி லுகாகு மற்றும் ஹசார்டின் ஷாட்களை கிளியர் செய்துகொண்டே இருந்தனர்  கிட்டத்தட்ட, 5 சான்ஸ்கள் கிடைத்தும் அதை அவர்கள் கோலாக மாற்றமுடியவில்லை. அதற்கு பனாமா கோல் கீப்பர் பெனிடோ பறந்து பறந்து தடுத்ததும் ஒரு காரணம். குறிப்பாக, போஸ்ட்டுக்கு அருகில் இருந்து ஹசார்டு அடித்த ஷாட்டைத் தடுத்து அப்ளாஸ் அள்ளினார் பெனிடோ. இடைவேளை வரை பெல்ஜியத்தை கோல் அடிக்க விடாமல் தடுத்ததே பனாமாவைப் பொறுத்தவரை பெரிய விஷயம்.

இடைவேளைக்குப் பின் பெல்ஜியத்துக்கு விடிவுகாலம் பிறந்தது. 48-வது நிமிடத்தில் பனாமா பாக்ஸுக்குள் நடந்த களேபரத்தின்போது, பாக்ஸின் வலது ஓரத்தில் நின்றிருந்த மெர்டன்ஸ் பக்கம் வந்தது பந்து. அதை பெர்ஃபெக்ட் வாலி மூலம் கோல் அடித்தார் மெர்டன்ஸ். அட்டகாசமான கோல். ஒரு வழியாக பெல்ஜியம் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அடுத்த ஐந்து நிமிடத்தில் பனாமாவுக்கு கணக்கை நேர் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. லாங் ரேஞ் பாஸை வாங்கி பாக்ஸுக்குள் ஊடுருவி மைக்கேல் முரிலோ அடித்த ஷாட்டை, நல்ல வேளையாக பெல்ஜியம் கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.

69-வது நிமிடத்தில் பெல்ஜியம் அடுத்த தாக்குதலைத் தொடுத்தது. பெனால்டி ஏரியாவின் இடதுபுறத்தில் இருந்து கெவின் டி ப்ருய்ன் கொடுத்த கிராஸை ஆறு யார்டு தூரத்தில் இருந்து டைவிங் ஹெட்டர் மூலம் கோலாக்கினார் லுகாகு. இந்த சூடு தணிவதற்குள் லுகாகு அடுத்த கோலை அடித்தார். 75–வது நிமிடத்தில் கவுன்டர் அட்டாக்கில் ஈடுபட்ட பெல்ஜியத்துக்கு கைமேல் பலன் கிடைத்தது. தனி ஆளாக டிரிபிளிங் செய்து வந்த ஹசார்டு, பாக்ஸுக்கு அருகே வந்ததும் தனக்கு இடதுபுறம் இணையாக ஓடி வந்த லுகாகு வசம் நேர்த்தியாக பாஸ் செய்தார். பாக்ஸின் இடதுபுறத்தில் 6 யார்டு தூரத்தில் இருந்து கோல் கீப்பரை பீட் செய்து கோல் அடித்தார் லுகாகு. ஆறு நிமிட இடைவெளியில் இரண்டு கோல்கள். 75 நிமிடத்தில் மொத்தம் மூன்று கோல்கள். இன்னும் 15 நிமிடங்களே இருப்பதால், பனாமாவால் மூன்று கோல்கள் அடிப்பது சாத்தியமில்லை என்பதால், பெல்ஜியத்தின் வெற்றி அப்போதே உறுதிசெய்யப்பட்டுவிட்டது.  கடைசி வரை பனாமா அணியால் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஃபிஷ்ட் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் பெருவாரியாக திரண்டிருந்த பனாமா ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றம் அளித்தாலும், முதல் பாதியில் அவர்கள் பெல்ஜியத்தை கோல் அடிக்க விடாமல் தடுத்தது பெரிய விஷயம். அதேநேரத்தில், முதல் பாதியில் தடுமாறி, இரண்டாவது பாதியில் மூன்று கோல்கள் அடித்து, ஃபேவரிட்ஸ்களின் மானம் காத்தது பெல்ஜியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு