Published:Updated:

இங்கிலாந்தின் முதல் வெற்றி... உடைந்த ஆப்பிரிக்க இதயங்கள்! #TUNENG

இங்கிலாந்தின் முதல் வெற்றி... உடைந்த ஆப்பிரிக்க இதயங்கள்! #TUNENG

இங்கிலாந்தின் முதல் வெற்றி... உடைந்த ஆப்பிரிக்க இதயங்கள்! #TUNENG

இங்கிலாந்தின் முதல் வெற்றி... உடைந்த ஆப்பிரிக்க இதயங்கள்! #TUNENG

இங்கிலாந்தின் முதல் வெற்றி... உடைந்த ஆப்பிரிக்க இதயங்கள்! #TUNENG

Published:Updated:
இங்கிலாந்தின் முதல் வெற்றி... உடைந்த ஆப்பிரிக்க இதயங்கள்! #TUNENG

வோல்வோகிராட் மைதானத்தில் நிமிடத்திற்கு நிமிடம் ஆரவாரம் கூடிக்கொண்டே போனது. ஆட்டம் சம நிலையில் இருக்கிறது. பெரிதாக பரபரப்பில்லை. இரண்டு அணிகளும் மிகவும் சுமாராகவே விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால், இரு அணிகளின் ஆதரவாளர்களும் தொடர்ந்து தங்கள் அணிகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு இந்தப் போட்டியின் முடிவு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

இங்கிலாந்து அணிக்கு என்னவோ இங்கிலாந்துக்காரர்கள் மட்டும்தான் ஆதரவு அளித்துக்கொண்டிருந்தனர். ஆனால், துனிசியாவுக்கு மொத்த ஆப்பிரிக்க கண்டமும் ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தது. ஆப்பிரிக்கா எப்போதுமே அப்படித்தான். 21-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை தங்களை மேற்கத்திய உலகம் எப்படி நடத்தியது என்பதை அறிந்தவர்கள், அவர்களுக்குள் யார் வெற்றி பெற்றாலும் கொண்டாடும் மனநிலை கொண்டவர்கள். 2010 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்காதான் நடத்தியது. அதை மற்ற 53 நாடுகளும் சேர்த்தே கொண்டாடின. உருகுவே அணியுடன் காலிறுதியில் கானா மோதியபோது, மொத்த ஆப்பிரிக்க கண்டமும் ஜோகன்னஸ்பெர்க் வந்து கானாவை ஆதரித்தது. இது ஆப்பிரிக்காவின் கால்பந்து காதல்!

அதனால்தான் நேற்று துனிசியாவுக்கு அதீத ஆதரவு. ஆனால், நேற்றைய போட்டியில் அவர்களின் கௌரவமும் கலந்திருந்தது. இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 3 ஆப்பிரிக்க அணிகளுமே தோற்றிருந்தன. அதிலும், எகிப்து மற்றும் மொராக்கோ அணிகள் கடைசி நிமிட கோல்களால் தோற்றிருந்தன. அதனால் இந்தப் போட்டியில் துனிசியாவாவது வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தனர். சொல்லப்போனால், அந்த 3 போட்டிகளிலும் சேர்த்து ஆப்பிரிக்க அணிகள் அடித்த கோல்களின் எண்ணிக்கை - 0! அதனால்தான் பெனால்டி வாய்ப்பில் ஃபெர்ஜானி சஸ்ஸி கோல் அடித்ததும் அப்படியொரு கொண்டாட்டம். அந்தக் கொண்டாட்டம் போட்டி முடியும்போதும் இருக்கவேண்டுமே..! அதற்கு இங்கிலாந்து இரண்டாவது கோலை அடிக்காமல் இருக்கவேண்டும். தங்கள் அணியின் தடுப்பாட்டம் பலமாக வேண்டி, ஆர்ப்பரித்துக்கொண்டே இருந்தார்கள். 

மறுபுறம் இங்கிலாந்து ரசிகர்களுக்கு வேறொரு கவலை. துனிசியா போன்ற சிறிய அணியிடம் வெற்றி பெறப் போராடிக்கொண்டிருக்கிறது அவர்களின் அணி. டிராவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மனம் முழுக்க கவலை. டிரா போதாது. வெற்றி அவசியம். ஏனெனில், உலகக் கோப்பை அரங்கில் தங்கள் அணி வெற்றி பெற்றதைப் பார்த்து 8 ஆண்டுகளாகிவிட்டதே! கடைசியாக 2010 உலகக் கோப்பையில் ஸ்லொவேனியாவிடம் வென்றது. அதன்பிறகு 3 தோல்விகள், 1 டிரா. அதனால் போட்டி டிராவை நோக்கிப் போவதை இங்கிலாந்து ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும். ஆர்ப்பரித்தார்கள், பாடினார்கள்... வோல்கா நதிக்கரை இங்கிலாந்தின் ஆர்ப்பரிப்பாலும், ஆப்பிரிக்க கானங்களாலும், அதற்கு மத்தியில் விளையாடப்பட்ட கால்பந்தாலும் அழகானது!

90 நிமிடங்கள் முடிந்துவிட்டது. ஸ்டாப்பேஜ் டைமாக 4 நிமிடங்கள் அறிவிக்கப்படுகிறது. இன்னும் 240 விநாடிகளைக் கடத்திவிட்டால் 1 புள்ளி பெற்றுவிடலாம். கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் துனிசிய வீரர்கள். ஆனால், ஹேரி கேன் - ஆட்டத்தை, அதன் முடிவை மாற்றிவிட்டார். ஏஷ்லி யங் அடித்த கார்னரை, ஹேரி மெகுயர் 'ஹெட்' செய்ய, இரண்டாவது போஸ்டுக்குப் அப்பால் சென்றது பந்து. துனிசிய வீரர்கள் யாரும் மார்க் செய்யப்படாமல் விட, தனியாய், சுதந்திரமாய் நின்றிருந்த ஹேரி கேன், அதை அழகாக ஹெட் செய்து கோலாக்க, இங்கிலாந்து 8 ஆண்டுகளில் தங்களின் முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பதிவு செய்தது. ஹேரி கேன் - இங்கிலாந்தின் கேப்டன், இங்கிலாந்தின் நம்பிக்கை - இங்கிலாந்தின் கதாநாயகன் ஆனார். 

இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடினர். கொண்டாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக 'Chokers' பட்டத்தோடுதான் பெரிய தொடர்களில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறது இங்கிலாந்து. பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. கேரத் சௌத்கேட் பயிற்சியாளர் ஆனபிறகு, இளரத்தம் பாய்ச்சப்பட்டு, இதற்கு முன்பு இல்லாததுபோன்ற புதிய இங்கிலாந்து அணி உருவானது. வேகம், டெக்னிக், ஸ்கில் ஆகியவற்றோடு, கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து கால்பந்து வீரர்களிடம் இல்லாமல் இருந்த 'வெற்றித் தாகம்' இந்த இளைஞர்களிடம் நிறைந்திருந்ததால், இந்த உலகக் கோப்பை இங்கிலாந்துக்குப் புதியதோர் சகாப்தத்தை தொடக்கிவைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இங்கிலாந்து அணி வெற்று பெற்றுவிட்டது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் நிச்சயமாக இல்லை!

முதல் 15 நிமிடங்கள் மிகவும் சுறுசுறுப்பாக ஆடி, அடிக்கடி துனிசிய கோல்கீப்பருக்கு சவால் தந்துகொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள், கொஞ்சம் கொஞ்சமாக சோடை போனார்கள். அதிலும் இரண்டாவது பாதியில் அட்டாக்கிங் மூவ்கள் எதுமே துனிசியாவை கஷ்டப்படுத்தவில்லை. பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து பட்டையைக் கிளப்பிய ரஹீம் ஸ்டெர்லிங் சில நல்ல வாய்ப்புகளை வீணடித்தார். இங்கிலாந்து அணியின் கேம்பிளானில் முக்கியப் பங்கு வகித்த அவர், சரியாகக் கொடுத்தது மொத்தமே 10 பாஸ்கள்தான். அந்த அளவுக்கு மோசமாக இருந்தது அவரது ஆட்டம். இரண்டு ஸ்ட்ரைக்கர்களுடன் விளையாடியதால், ஹேரி கேன், இந்த  ஆட்டத்தில் தன்னுடைய 'ரோல்' என்னவென்பது தெரியாததுபோல் உலாவிக்கொண்டிருந்தார். சொல்லப்போனால் அந்த முதல் கோலைக் கூட, கார்னர் மூலமாகவும், ஜான் ஸ்டோன்சின் அற்புத ஹெட்டரின் உதவியாலும்தான் இவரால் அடிக்க முடிந்தது. 

போட்டியின் தொடக்கத்தில் , நடுகளத்தில் ஆட்டம் காட்டிய ஹெண்டர்சன், லிங்கார்ட் கூட்டணியும் போகப்போக ஏனோதானோ ஆட்டம்தான் ஆடியது. ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே ஒரு வெறித்தனமான aerial through ball போட்டு அட்டாக்கை மிக அற்புதமாகத் தொடங்கிய ஹெண்டர்சன், இரண்டாவது பாதியில் சரியாக பாஸ்போடத் திணறினார். அவர் கொடுத்த 61 பாஸ்களில் 36 பாஸ்கள் டிஃபண்டர்களுக்குக் கொடுத்ததுதான். அட்டாக்கைத் தொடக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கவேண்டிய அவர், அதைச் செய்யத் தவறினார். டிஃபண்டர்கள் கைல் வால்கர், ஹேரி மகுயர் இருவரும் அதே குரூப்தான். அதிலும் வால்கர், தேவையில்லாமல் பாக்சுக்குள் கையைத் தூக்கி, பெனால்டி கொடுத்து, ஆட்டத்தின் போக்கையே மொத்தமாக மாற்றிவிட்டார். 

27-வது நிமிடத்தில் தங்களின் பாக்சுக்குள் இருவரும் அடுத்தடுத்து சொதப்பி, மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். 3 டிஃபண்டர்கள் ஆடும் சிஸ்டத்தில், ஒருவர் சொதப்பினாலும், மற்ற இருவரும் பெர்ஃபெக்டாக இருக்கவேண்டும். ஆனால், ஒரு நொடி இடைவெளியில் இருவரும் சொதப்பிக்கொண்டிருந்தால், பெல்ஜியம் போன்ற அணியோடு மோதும்போது மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் இங்கிலாந்து வீரர்களில், கீரன் ட்ரிப்பியர் மட்டுமே 94 நிமிடங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு விளையாடினார். மற்ற இங்கிலாந்து வீரர்கள் சோடை போயிருந்தபோதும், வலது விங்கில் தன்னால் முடிந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். அவரைத் தவிர்த்து ஜான் ஸ்டோன்ஸ் பெர்ஃபெக்டாக விளையாடினார். 

மாற்று வீரர்களாகக் களமிறங்கிய மார்கஸ் ரேஷ்ஃபோர்ட், லோஃப்டஸ் சீக் இருவரும் கூட கடைசி 10 நிமிடங்களில் போராடினார்கள். ஆனால், மற்ற வீரர்களிடம் பெரிதாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து பயிற்சியாளர் சௌத்கேட், தன் வீரர்களின் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து அதற்கேற்ப, அடுத்த போட்டியில் சில மாற்றங்களை செய்தே தீரவேண்டும். மாற்றங்கள் செய்யப்படாவிடிலும் இங்கிலாந்து அணியினர், அவர்களின் ரசிகர்களின் எதிர்பார்க்கும் வெற்றித் தாகத்தோடு விளையாடவேண்டும்.