Published:Updated:

உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்ல... சுவீடன் அணியிடம் பணிந்த தென்கொரியா! #SWEKOR

உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்ல... சுவீடன் அணியிடம் பணிந்த தென்கொரியா! #SWEKOR
News
உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்ல... சுவீடன் அணியிடம் பணிந்த தென்கொரியா! #SWEKOR

நடப்பு சேம்பியனை வென்ற மெக்சிகோவும், முதல் போட்டியில் மெக்சிகோவிடம் தோற்ற வெறியில் இருக்கும் ஜெர்மனியும் இதே பிரிவில்தான் இருக்கின்றன. சுவீடனும், தென்கொரியாவும் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால் வச்சு செய்யப்படுவது உறுதி.

ரஷ்யாவின் நீஸ்னி நோவ்கராட் மைதானத்தில், 2018 உலகக்கோப்பை கால்பந்து குரூப் 'F' பிரிவில் நடந்த இரண்டாவது மேட்சில் சுவீடன் மற்றும் தென்கொரியா அணிகள் மோதின. தென்கொரியாவுடன் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட சுவீடன் தோல்வியடையவில்லை. ஒப்பீட்டளவில் சுவீடன் பலம்வாய்ந்த அணி என்றாலும், தென்கொரியா கடுமையான சவால் அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இதே பிரிவில் நடப்புச் சேம்பியன் ஜெர்மனியை, மெக்ஸிகோ 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது. இன்றைய மேட்சில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்பதால், சுவீடன் மற்றும் தென்கொரியா அணிகள் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்ததோ வேறு!

எந்த அணியும் தனது எதிரணியின் கேம் பிளானைத் தெரிந்துகொண்டு, அதன்படி தனது அணியைக் கட்டமைக்கும். அதில் தவறேதும் இல்லை. ஆனால், ஆஸ்திரியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தென்கொரிய அணியின் கேம் பிளானைத் தெரிந்துகொள்வதற்காக, அந்த அணியை உளவு பார்த்ததாக சுவீடன் மீது புகார் எழுந்தது. 'எங்கள் கோச் ஸ்டாஃப் அவர்கள் ஆட்டத்தை பார்க்கச் சென்றது உண்மை. ஆனால், அந்த அணி பிரத்யேகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியாது. அதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்' என சுவீடன் பயிற்சியாளர் இச்சம்பவத்துக்காக மன்னிப்பும் கேட்க வேண்டி வந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஆசியர்களின் முகத்தை ஐரோப்பியர்களால் எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பதால், தனது அணி வீரர்களைப் பயிற்சிக்கு வரும்போது ஜெர்ஸி எண் மாற்றி விளையாடும்படி தென்கொரிய அணியின் பயிற்சியாளர் உத்தரவிட்டார்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில்தான் இரு அணிகளும் மோதும் போட்டி தொடங்கியது. ஆனால், களத்தில் சுவீடன் அணிக்காக தென்கொரியாவும் சேர்ந்தே விளையாடியது. ஆம்... சுவீடன் வீரர்கள் உருவாக்கிய வாய்ப்புகளைவிட, தென்கொரிய வீரர்களே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகள் தாம் அதிகம். பந்தை பாஸ் செய்வதிலேயே ஏகத்துக்கும் குழம்பினர் தென்கொரிய வீரர்கள். எதிரணியினருக்கு எளிதாக பந்தை விட்டுக்கொடுத்தனர். பந்தைக் கடத்திக்கொண்டு வரும்போதே பின்னாலிருந்து ஓடிவந்து எளிதாக அவர்களிடமிருந்து பறித்தது சுவீடனின் டிஃபன்ஸ். பந்து தங்களிடம் வந்தபோது அதை பாஸ் செய்வதைக் காட்டிலும், ஒற்றை ஆளாக எதிரணியின் எல்லைக்குள் அட்டாக் செய்ய முயன்றது தென்கொரிய அணியின் மற்றொரு மைனஸ். மேலும், ஒரு ஆன் டார்கெட் ஷாட் கூட தென்கொரிய அணியிடமிருந்து வரவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுவீடனும் 'எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல' என தென்கொரியாவுக்கு கடும் நெருக்கடி அளித்தது. எதில்? மோசமாய் விளையாடுவதில்! முதல் பாதியில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திணறியது சுவீடன். நான்குமுறை உலகக்கோப்பை சாம்பியனாக வலம்வந்த இத்தாலியை, தகுதிப்போட்டிகளில் வென்று அவர்களின் உலகக்கோப்பைக் கனவை காலி செய்துவிட்டு உள்ளே வந்த அணிதானா இது என யோசிக்க வைக்கும் அளவுக்கு சுவீடன் அணி விளையாடியது.

ஆட்டம் தொடங்கி 12-வது நிமிடத்திலேயே கொரிய வீரர் கிம் ஷின்வூக் யெல்லோ கார்டு வாங்க... 15 நிமிடத்துக்குள்ளாக சுவீடன் 6 ஃபவுல்களும், தென்கொரியா 4 ஃபவுல்களும் செய்திருந்தன. 21-வது நிமிடத்தில் தென்கொரிய பாக்ஸ் வரை பந்தை பாஸ் செய்துகொண்டு சென்றபோதும் அதை சுவீடனால் கோல் ஆக்க முடியவில்லை. 29-வது நிமிடத்தில் சுவீடனின் கார்னர் கிக்கும் எளிதாக டிஃபண்ட் செய்யப்பட்டது. சுவீடன் அணி முதல் பாதியில் முன்னிலை பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கோல் எதுவும் இன்றி முடிவடைந்தது.

இரண்டாம் பாதி தொடங்கியும் இரு அணிகளும் மாறி மாறித் தவறுகளைத் தொடர்ந்தன. ஆட்டம் 'டல்' அடிக்கிறதோ என நினைக்கத் தோன்றியது. 63-வது நிமிடத்தில் டிஃபண்டர் செய்த தவறு காரணமாக, சுவீடன் பெனால்டி வாய்ப்பு கேட்டது. முதலில் பெனால்டி தரமறுத்த ரெஃப்ரி, வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரி (VAR) சிஸ்டத்தில் வீடியோ ஃபுட்டோஜ்களைப் பார்வையிட்டு, பின்னர் சுவீடன் அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்தார். தொழில்நுட்பம் சுவீடனுக்கு உதவிக்கரம் நீட்டியது. இந்த உலகக்கோப்பையில் மூன்றாவது முறையாக VAR மூலமாக தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது.

தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சுவீடன் இந்தமுறை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. 65-வது நிமிடத்தில் அந்த அணியின் ஆண்ட்ரே கிரான்க்விஸ்ட் (Andreas Granqvist) மிக எளிதாக பெனால்டி கோல் அடித்தார். இதனால் சுவீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டநேரம் முடியும் வரை தென்கொரிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் தென்கொரியா தோற்கும் முதல் மேட்ச் இது. 1958-க்குப் பிறகு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் சுவீடன் பெறும் வெற்றி இது.

நடப்பு சேம்பியனை வென்ற மெக்ஸிகோவும், முதல் போட்டியில் மெக்ஸிகோவிடம் தோற்ற வெறியில் இருக்கும் ஜெர்மனியும் இதே பிரிவில் தான் இருக்கின்றன. சுவீடனும், தென்கொரியாவும் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால் வச்சு செய்யப்படுவது உறுதி.