Election bannerElection banner
Published:Updated:

அண்டர்டாக்ஸ் ஆட்டம் ஆரம்பம்... உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி ஏன்?! #GERMEX

அண்டர்டாக்ஸ் ஆட்டம் ஆரம்பம்... உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி ஏன்?! #GERMEX
அண்டர்டாக்ஸ் ஆட்டம் ஆரம்பம்... உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி ஏன்?! #GERMEX

2010 உலகக் கோப்பையில் ஸ்பெயின் முதல் ஆட்டத்தில் தோற்று, கடைசியில் சாம்பியன் பட்டம் வென்றது. ஜெர்மனிக்கும் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும் எனச் சொல்ல முடியாது. தென் கொரியா, ஸ்வீடனுக்கு எதிரான அடுத்த ஆட்டங்களில் ஜெர்மனி வேற மாதிரி ஆட வேண்டும்.

அண்டர்டாக்ஸின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆச்சர்யம் நிகழ்ந்தேவிட்டது. 1990-ல் கேமரூன், 2002-ல் செனகல், 2014-ல் நெதர்லாந்து அணிகள் வரிசையில் இந்தமுறை மெக்ஸிகோ நடப்பு சாம்பியனை வீழ்த்தி விட்டது. ஹிர்விங் லொசானோ கோல் அடித்ததும் மெக்சிகோ சிட்டியில் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்ததும் அங்கு செயற்கை பூகம்பம் வந்துவிட்டது. இரண்டு முறை உலகக் கோப்பையை நடத்தியும் காலிறுதியைக் கடந்து முன்னேற முடியாத மெக்ஸிகோ வரலாற்றுச் சாதனை படைத்துவிட்டது. உலகக் கோப்பையில் மெக்ஸிகோ முதன்முறையாக ஜெர்மனியை தோற்கடித்து விட்டது. 1982-க்குப் பின் உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே ஜெர்மனி தோற்றுவிட்டது. #GERMEX

ரெஃப்ரி விசில் அடித்து முடித்ததும் மெக்ஸிகோ வீரர்கள் உலக சாம்பியன் பட்டம் வென்றது போல ஆர்ப்பரித்தனர். அந்தக் கொண்டாட்டத்தில் தவறேதும் இல்லை. அவர்கள் உலக சாம்பியனை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திவிட்டனர். உண்மையில், கவுன்ட்டர் அட்டாக் இன்னும் கிளியராக இருந்திருந்தால் அவர்கள் 2-0 அல்லது 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றிருப்பர். ஆனாலும், இது நடப்பு சாம்பியனுக்கு… ஐந்தாவது முறையாக உலக சாம்பியனாகும் கனவில் ரஷ்யாவுக்கு வந்த ஜெர்மனிக்கு அவமானம். ஆறு அட்டாக்கிங் பிளேயர்களை வைத்திருந்தும் அவர்களால், மெக்ஸிகோவின் டிஃபன்ஸைத் தகர்க்க முடியாதது பெரும் சோகம்.

குரூப் ஸ்டேஜில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி - மெக்ஸிகோ மேட்ச் மாஸ்கோவில் நேற்று நடந்தது. கில்லி படம் போல விசில் அடித்த முதல் நிமிடத்தில் இருந்தே அவ்வளவு விறுவிறுப்பு. உலக சாம்பியனை எப்படி மடக்க வேண்டும் என்பது மெக்ஸிகோ கோச்சுக்கு அத்துப்படி. "ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே, துடிதுடிப்பான இரண்டு வீரர்களை விங்கில் தயார்படுத்தியிருந்தேன். அதற்கு பலனும் கிடைத்தது.பார்த்தீர்களே... முதல் பாதியில் நாங்கள்தானே அதிக வாய்ப்புகளை கிரியேட் செய்தோம்" என போட்டி முடிந்த பின் சொன்னார் மெக்ஸிகோ பயிற்சியாளர் ஒசாரியோ.  

அவர் சொன்னதுபோல, ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே மெக்ஸிகோவுக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. ஜெர்மனி சென்டர் பேக் ஜெரோம் போடங் அட்டகாசமாக அதை க்ளியர் செய்தார். அடுத்த நிமிடமே கிம்மிச் பிரமாதமான ஒரு பாஸ் கொடுத்தார். வெர்னர் அதை வெளியே அடித்தார். பதிலுக்கு மெக்ஸிகோ கவுன்ட்டர் அட்டாக் கொடுத்தது. மெக்ஸிகோ இப்படி திருப்பி அடிக்கும் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இரு அணிகளும் உக்கிரமாக, கவுன்டர் அட்டாக்கில் கவனம் செலுத்தியதால், இந்த மேட்ச் `கோல் லெஸ்' டிராவாக முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. 8-வது நிமிடத்தில் மெக்ஸிகோவுக்கு பாக்ஸ் அருகே கிடைத்த டைரக்ட் ஃப்ரீ கிக்கை bar-க்கு மேலே அடித்து வீணடித்தார் மிஜுவல் லாயுன். ஜெர்மனியின் கோல் கீப்பரை 10 நிமிடத்துக்குள் மூன்று முறை சோதித்து விட்டனர் மெக்ஸிகோ ஸ்ட்ரைக்கர்ஸ். ஆனால், ஜெர்மனி வீரர்கள் வட்டமடித்துக்கொண்டே இருந்தனரே தவிர, ஊடுருவித் தாக்கவில்லை.

மெக்ஸிகோவின் தாக்குதலுக்கும், வேகத்துக்கும், ஊடுருவலுக்கும், மிரட்டலுக்கும், துல்லியத்துக்கும் அவர்கள் எப்போதோ கோல் அடித்திருக்க வேண்டும். ஆட்டம் தொடங்கி அரைமணி நேரம் கழித்துத்தான் அந்த வாய்ப்பு வந்தது. அதுவும் அடுத்தடுத்த நிமிடங்களில்… 34-வது நிமிடத்தில் வேலா ஒரு மரண மாஸ் பாஸ் கொடுத்தார். லாயுன் அதை மிஸ் செய்தார். பரவாயில்லை பார்த்துக்கலாம் என அடுத்த நிமிடமே வேர்ல்ட் சாம்பியனின் டிஃபன்ஸை சுக்குநூறாக உடைத்தது ஒரு பாஸ் கொடுத்தார் ஜேவியர் ஹெர்ணான்டஸ். முற்றிலும் இடதுபுறம் கொடுத்த பாஸை, உள்ளே கட் செய்து, வலதுபுறம் கொண்டுவந்து ஜெர்மனி கோல் கீப்பர் நூயருக்கு பெப்பே காட்டி அட்டகாசமாக கோல் அடித்தார் லொசானோ. மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெக்ஸிகோ ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். அவர்களைப் பொறுத்தவரை இந்த ஒரு கோலே போதும். முதல்பாதி முடிவில் 1-0 என மெக்ஸிகோ முன்னிலை. கடைசிவரை ரிசல்ட் அதுவே என்பது வேறு விஷயம்.

மெக்ஸிகோ பயிற்சியாளர் ஒசாரியோ ஆறு மாதமாக திட்டமிட்டதை, ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் லோ 15 நிமிட இடைவெளியில் திட்டமிட வேண்டிய இக்கட்டான சூழல். பிளான் `பி’-யை அரங்கேற்ற வேண்டிய நேரம். டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்ததோ, இரண்டாவது பாதியில் ஜெர்மனி மேலும் கோல் வாங்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால், வெற்றிக்கு அது மட்டும் போதாதே. கடைசி வரை அவர்கள் கோல் அடிக்கவே இல்லை. இரண்டாவது பாதியில் ஆட்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. 76, 84-வது நிமிடங்களில் டோனி குருஸுக்கு சான்ஸ் கிடைத்து. அடுத்தடுத்த நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் மெக்ஸிகோ எல்லையை முற்றுகையிட்டனர். கோமஸ், முல்லர், போடங் மூவரும் கோல் அடிக்க முயன்றனர். ம்ஹும்… ஜெர்மனி வீரர்கள் மொத்தம் 26 ஷாட்கள் அடித்தனர். அதில் ஒன்பது மட்டுமே இலக்கை நோக்கிய ஷாட்கள். அதில் ஒன்றுகூட மெக்ஸிகோ கோல் கீப்பர் கிலர்மோ ஒசோவுக்கு சங்கடம் ஏற்படுத்தவில்லை.

இந்த இடத்தில் கிலர்மோ ஒசோவ் பாராட்டுக்குரியவர். கடந்த உலகக் கோப்பையில் பிரேசிலுக்கு எதிராக 6 கோல்களை save செய்தவர். இந்தமுறை உலக சாம்பியனுக்கு எதிராக தடுத்த கோல்கள் எட்டு. நூயர், ஒசோவ் இரண்டு கோல் கீப்பர்களில் நூயர்தான் பிசியாக இருந்தார் என்றாலும், கிடைத்த வாய்ப்பில் ஒசோவ் தன் மீது கவனம் ஈர்க்கத் தவறவில்லை . குறிப்பாக, முதல் பாதியில் டோனி க்ரூஸ் அடித்த ஃப்ரீ கிக்கை அந்தரத்தில் பறந்து தடுத்தாரே... அது அட்டகாசமான save. கிட்டத்தட்ட பந்து டாப் கார்னரில் விழுந்துவிட்டதுபோலவே தெரிந்தது. ஆனால், ஒசோவ் அதைத் தடுத்தது மட்டுமல்லாது, ஜெர்மனியின் ஈக்வலைசர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். கடைசி நிமிடங்களில் ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் கூட, பெனால்டி பாக்ஸில் நின்று கார்னர் கிக்குகளை ஹெட்டர் கோல் அடிக்க முயற்சித்தார். அவர் மட்டுமல்ல கடைசிவரை வேறெந்த ஜெர்மனி வீரரும் ஒசோவ் நின்ற கோட்டைத் தாண்டி பந்தை அடிக்க முடியவில்லை. கடைசிவரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. மெக்ஸிகோவை வெல்லமுடியவில்லை.

2010 உலகக் கோப்பையில் ஸ்பெயின் முதல் ஆட்டத்தில் தோற்று, கடைசியில் சாம்பியன் பட்டம் வென்றது. ஜெர்மனிக்கும் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும் எனச் சொல்ல முடியாது. தென் கொரியா, ஸ்வீடனுக்கு எதிரான அடுத்த ஆட்டங்களில் ஜெர்மனி வேற மாதிரி ஆட வேண்டும். இல்லையெனில் இத்தாலி, ஸ்பெயினைத் தொடர்ந்து ஜெர்மனியும் அடுத்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறிய உலக சாம்பியன்கள் வரிசையில் இடம்பிடித்துவிடும். பிளானை மாத்துங்க ஜோகிம் லோ!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு