Published:Updated:

ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி...இப்போ பிரேசில்! தொடரும் உலகக் கோப்பை அதிர்ச்சிகள்! #WorldCup

ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி...இப்போ பிரேசில்! தொடரும் உலகக் கோப்பை அதிர்ச்சிகள்! #WorldCup
News
ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி...இப்போ பிரேசில்! தொடரும் உலகக் கோப்பை அதிர்ச்சிகள்! #WorldCup

ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி...இப்போ பிரேசில்! தொடரும் உலகக் கோப்பை அதிர்ச்சிகள்! #WorldCup

நொடிக்குநொடி பரபரப்போ, இல்லை பெனால்டி மிஸ் செய்த விறுவிறுப்போ, எதுவும் இந்த ஆட்டத்தில் இல்லை. ஆனால், `யார் சாமி இவன்' என்று, உலகத்தையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது சுவிட்சர்லாந்து. உலகின் தலைசிறந்த அட்டாக்கிங் லைன், `ஷோ பூட்’ நெய்மர், `பிளேமேக்கர்’ கொடினியோ, அனுபவ டிஃபெண்டர்கள் என `பக்கா பேக்கேஜோடு’ களமிறங்கிய பிரேசிலை, வெற்றிபெறவிடாமல் தடுத்து நிறுத்தி, இறுதிவரை போராடி, டிரா செய்வதென்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன! ஆனால், அந்த அசாதாரண விஷயத்தை, அந்தவோர் அதிசயத்தை, நேற்று நிகழ்த்திக்காட்டியிருக்கிறது சுவிட்சர்லாந்து. ஆம், கொடினியோவின் `வொண்டர்’ கோலை, ஸுபரின் `ஈக்வலைசர்’ ஒன்றுமில்லாமல் செய்துவிட, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது பிரேசில் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம். 

கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளெல்லாம், தங்கள் முதல் போட்டியைத் தடுமாற்றத்தோடு தொடங்கியிருப்பதுதான், இந்த உலகக் கோப்பையின் `டிரெண்டே’. அந்த வகையில், ஸ்பெயின், அர்ஜென்டினா. ஜெர்மனி அணிகளைத் தொடர்ந்து, பிரேசிலும் அதே தடுமாற்றத்தைத் தொடர்ந்திருக்கிறது. சுவிட்சர்லாந்தை எளிதில் தோற்கடித்துவிடும் என எல்லோரும் பிரேசிலைப் பற்றி கண்டிருந்த கனவில், `டன்’ கணக்கில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றனர், சுவிஸ் வீரர்கள். முதலில் பிரேசிலின் அட்டாக்கை சமாளித்த அவர்கள், பின்னர் பிரேசிலையே அட்டாக் செய்து ஆச்சர்யப்படுத்தினர். ஆட்டத்தின் முதல்பாதியில் கோல் அடித்து பிரேசில் முன்னிலை பெற்றிருந்த போதிலும், மனம் தளராமல் போராடிய சுவிட்சர்லாந்து வீரர்கள், இரண்டாம் பாதியில் பதில்கோல் திருப்பி, போட்டியை அட்டகாசமாக டிரா செய்தனர். 

ரஷ்யாவின் ரோஸ்டோவ் மைதானத்தில், `குரூப் ஈ’ பிரிவு அணிகளான பிரேசிலும், சுவிட்சர்லாந்தும் நேற்றிரவு மோதிக்கொண்டன. ஆட்டத்தின் முதல்பாதி முழுவதும் பிரேசிலின் கைகளில். சில நல்ல சான்ஸ்கள் மிஸ் ஆன போதும், பிரேசிலின் இடைவிடாத அட்டாக்கிற்கு கைமேல் பலன்கிடைத்தது. ஆட்டத்தின் 20 வது நிமிடத்தில், மார்செலோ `கிராஸ்’ செய்த பந்தை சுவிஸ் டிஃபெண்டர் கிளியர் செய்ய, அது இடப்புறம் கோல்பாக்ஸுக்குச் சற்று வெளியே நின்றிருந்த கொடினியோவிடம் சிக்கியது. நொடியும் தாமதிக்காத அவர், பந்தை `கர்ல்’ செய்து, சுவிஸ் கீப்பர் சோம்மரின் கைக்கு எட்டாதவாறு கோலுக்குள் அனுப்பி, அசத்தினார். தொடர்ந்த பிரேசிலின் அட்டாக்கையும் தாண்டி, பதில்கோல் திருப்ப நினைத்த சுவிட்சர்லாந்து வீரர்களின் முயற்சிகள் ஏதும் எடுபடவில்லை. அதனால் முதல்பாதி முடிவில் பிரேசில் 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டாம் பாதியில் நிலைமையோ தலைகீழாக இருந்தது. இரண்டாம்பாதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட சுவிஸ் வீரர்கள், பிரேசிலுக்குத் தண்ணி காட்டினர். 50 வது நிமிடத்தில் பதில்கோல் திருப்பியது சுவிட்சர்லாந்து. `கார்னர் கிக்கில்’ ஷக்கிரி கொடுத்த துல்லியமான `கிராஸை’, அருமையான ஹெட்டரால் கோலாக்கி அசத்தினார், பிரேசில் வீரர்கள் மார்க் செய்ய மறந்த, சுவிஸ் மிட்ஃபீல்டர் ஸ்டீவன் ஸுபர். மேலும், அட்டாக்கில் தொடர்ந்து ஈடுபட்ட சுவிட்சர்லாந்து, தனது டிஃபன்ஸ் லைனையும் பலமாகக் கட்டமைத்துக்கொண்டது. அதை உடைக்க வழி தெரியாமல் திண்டாடிப் போயினர் பிரேசில் வீரர்கள். ஆட்டத்தின் கடைசி நிமிடங்களிலிருந்து, கூடுதல் நிமிடங்கள் முடியும் வரை போராடிப்பார்த்த பிரேசில் வீரர்களால், மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியாமல் போக, போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐந்து முறை உலகக் கோப்பையை வென்றிருக்கும் பிரேசில், மார்செலோ மற்றும் கொடினியோவின் சிறந்த ஆட்டத்தால் முதல்பாதியில் முன்னிலை பெற்றது. அனுபவம் வாய்ந்த தியாகோ சில்வா சுவிட்சர்லாந்து வீரர்களின் முயற்சிகளையெல்லாம் தவிடுபொடியாக்கினார். ஆனால், இரண்டாம் பாதியில் பிரேசில் வீரர்கள் ஏனோ சோரம் போனார்கள். ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் மிராண்டா, ஃபிர்மினோ, நெய்மர் ஆகியோர் சில வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். குறிப்பாக நெய்மார் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை, முக்கால்வாசி நேரங்களில் விழுந்து வாரிக்கொண்டிருந்தார்.

அவரை எல்லா முறையும் வீழ்த்தியது, சுவிட்சர்லாந்தின் டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர் பெராமி. ஒவ்வொரு முறையும், நெய்மரிடமிருந்து பந்தை லாகவமாகப் பறித்து, பிரேசில் அட்டாக்கை ஒருகை பார்த்தார் அவர். அவருக்குத் துணையாக நின்ற சுவிஸ் டிஃபெண்டர்கள் முடிந்தவரை போராடி, கோல் ஏதும் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

எல்லாப் பக்கங்களிலும் மஞ்சளே பூசியிருந்த, 45,000 பேர் நிறைந்திருந்த அரங்கில், எல்லோரும் `பிரேசிலியன் மேஜிக்கை’ எதிர்பார்த்து காத்திருக்க, சத்தமே இல்லாமல் `சுவிஸ் மேஜிக்’ ஒன்று நிகழ்ந்துவிட்டது. ஆம், கடந்த 40 வருட உலகக் கோப்பைத் தொடர்களில், தனது முதல் போட்டியில் வெற்றியை மட்டுமே பெற்றுவந்த பிரேசில் அணி, இந்தப் போட்டியில் வெற்றியடையாமல் போயிருக்கிறது. அதற்கு ஒரே காரணம், சுவிட்சர்லாந்து! இனி பிரேசில் தனது அடுத்த போட்டியில் கோஸ்டாரிகாவையும், சுவிட்சர்லாந்து தனது அடுத்த போட்டியில் செர்பியாவையும் எதிர்கொள்ளவுள்ளன.