Published:Updated:

ஒவ்வொரு நொடியும் பரபரப்பு... பெருவை போராடி வென்ற டென்மார்க்! #Worldcup #PERDEN

ஒவ்வொரு நொடியும் பரபரப்பு... பெருவை போராடி வென்ற டென்மார்க்! #Worldcup #PERDEN

முதல் போட்டியில் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தன. குரூப் 'சி'-யில் நடந்த இந்தப்போட்டி நடந்த அரங்கமே திருவிழாக் கோலமாகத்தான் காட்சியளித்தது.

ஒவ்வொரு நொடியும் பரபரப்பு... பெருவை போராடி வென்ற டென்மார்க்! #Worldcup #PERDEN

முதல் போட்டியில் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தன. குரூப் 'சி'-யில் நடந்த இந்தப்போட்டி நடந்த அரங்கமே திருவிழாக் கோலமாகத்தான் காட்சியளித்தது.

Published:Updated:
ஒவ்வொரு நொடியும் பரபரப்பு... பெருவை போராடி வென்ற டென்மார்க்! #Worldcup #PERDEN

ரஷ்யாவின் மார்டோவியா அரங்கம்... கிழித்துப் பறக்கவிட்ட வண்ணத்தாள்களின் குவியல் காற்றில் அங்குமிங்கும் அசைவதைப்போல இருந்தது அங்கு கூடியிருந்த நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் கூட்டம். சிவப்பு மற்றும் வெள்ளை நிற உடைகள் அணிந்த ரசிகர்களும், ஹாரன் ஒலிகளும் அரங்கத்தை நிரப்பியிருந்தது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையில் விளையாடத் தகுதிபெற்ற 'பெரு' அணியும், கடந்த உலகக்கோப்பையில் விளையாடத் தகுதிபெறத் தவறிய 'டென்மார்க்' அணியும், முதல் போட்டியில் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தன. குரூப் 'சி'-யில் நடந்த இந்தப்போட்டி நடந்த அரங்கமே திருவிழாக் கோலமாகத்தான் காட்சியளித்தது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் உள்பட தென் அமெரிக்க அளவில் கால்பந்தில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், உலகக்கோப்பைக்கும் பெரு அணிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. உலகக்கோப்பை தகுதிப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது அந்த அணி வீரர்கள் சர்ச்சையில் சிக்குவதும், அந்த அணி போட்டிகளில் சொதப்பி வீடு திரும்புவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. தங்கள் மீதான அவதூறுகளைக் களைந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஷ்ய உலகக்கோப்பையில் ஆட ஒருவழியாக பெரு தகுதிபெற்றது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் அந்த அணியின் கேப்டனும், லீடிங் ஸ்கோரருமான பாலோ குரேரோ ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி, அவர் கால்பந்து போட்டிகளில் விளையாட 14 மாத தடை விதிக்கப்பட்டது பெருவியன்ஸ் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் உலக விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து அவர் தண்டனையில் இருந்து தற்காலிகமாக விலக்கு பெற்றதும் தான், 'குரேரோ இருந்தாப்போதும்' என அந்நாட்டினர் உலகக்கோப்பை கனவைத் தொடர்ந்தனர். கிறிஸ்டியான் கோய்வா, ஃபர்ஃபான், அக்கீனோ, எடிசன் ஃப்ளோர்ஸ், யோஷிமார் யோடான் போன்ற ஸ்டார் ப்ளேயர்களோடுதான் பெரு அணி களமிறங்கியது.

பயிற்சியாளர் ஓகே ஹாராய்தின் வழிகாட்டுதலில், கடந்த 15 போட்டிகளில் ஒன்றில்கூட டென்மார்க் அணி தோல்வி பெறவில்லை. கிறிஸ்டியன் எரிக்சன், வில்லியம் க்விஸ்ட், தாமஸ் டெலானி,  ப்ரெய்த்வெய்ட், காஸ்பர் டால்பெர்க், பால்சன் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களோடு களம் கண்டது டென்மார்க்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது பெரு. இத்தனை ஆண்டுகாலத்திற்கும் சேர்த்து தங்களது வெறியைத் தீர்த்துக்கொள்ளும் முனைப்பில், பால் கிடைத்ததும் டென்மார்க் பாக்சுக்குள் க்ராஸ் செய்துகொண்டிருந்தது. ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே டென்மார்க்கின் பாக்ஸூக்குள் நுழைந்து ஷூட் செய்யத் தொடங்கியது பெரு. யோடான் ஷூட் செய்த பந்தை டென்மார்க்கின் கோல்கீப்பர் லாவகமாகத் தடுத்தார். அடுத்த நிமிடத்திலேயே வலது பக்கத்திலிருந்து கோய்வா அடித்த பந்து கோல் கம்பத்துக்கு அருகே வெளியே சென்றது. அடுத்தடுத்த நிமிடங்களும் டென்மார்க் அணியினரால், பெருவின் ஷூட்களையும், பாஸ்களையும் டிஃபன்ஸ் மட்டுமே செய்யமுடிந்தது. பாஸ் செய்வதற்கான வாய்ப்பை பெரு அணி வீரர்கள் தவறியும் கூட டென்மார்க் அணிக்குத் தரவில்லை.

18வது நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு முதல் கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை கோல் ஆக்க முடியவில்லை. 27வது நிமிடத்தில் டென்மார்க் அணியின் மிட்ஃபீல்டர் க்விஸ்ட்க்கு காயமேற்பட்டது. கொஞ்சநேரம் ஆடிப்பார்த்த அவர் அதன்பின் 33வது நிமிடத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

38வது நிமிடம்... பெருவின் டாபியாவுக்கு ஆட்டத்தின் முதல் யெல்லோ கார்டு தரப்பட்டது. டென்மார்க் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக்க முடியவில்லை.  முதல் பாதியிலேயே யெல்லோ கார்டு, கார்னர் கிக், ஃப்ரீ கிக், காயம் காரணமாக மாற்றுவீரர் களமிறங்கியது என பரபரப்பிலேயே நகர்ந்தது ஒவ்வொரு நிமிடமும். முதல்பாதி முடிய ஒரு நிமிடம் இருக்கும்போது இதோடு பெனால்டியும் சேர்ந்தது. ஆம் 44வது நிமிடத்தில் டென்மார்க் பெனால்டி ஏரியாவில் கோய்வாவை கீழே தள்ளிவிட... ரெஃபரியிடம் பெரு வீரர்கள் பெனால்டி வாய்ப்பு கேட்டனர். முதலில் தர மறுத்த அவர், Video Assistant Referee (VAR) சிஸ்டத்தில் காட்சிகளைப் பார்த்து அதன்பின் பெருவுக்கு பெனால்டி வாய்ப்பளித்தார். பெருவியர்களின் கால்கள் தரையில் இல்லை... ஏனென்றால் இதுவரை பெனால்டி வாய்ப்பை பெரு அணி தவறவிட்டதேயில்லை. 1-0 என முதல்பாதியில் முன்னிலை பெற்றுவிடலாம் என்பதே பெரு ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்தது.

ரசிகர்கள் ஆரவாரத்தின் மத்தியில் கோய்வா பெனால்டி லைனுக்கு வந்தார். ஆனால் அவரால் அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. பந்து கோலுக்கு மேலே எங்கோ சென்றது. இதனால் இரு அணிகளுக்கும் கோல் எதுவும் இன்றி முதல்பாதி முடிந்தது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் ஐஸ்லாந்துக்கு எதிராக அர்ஜென்டினாவின் மெஸ்சியும் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாதியில் தங்கள் கேம் ப்ளானை மாற்றியது டென்மார்க். அட்டாக்கிங்கை டென்மார்க் தொடங்கியது. ஆனாலும் அவ்வப்போது பந்து கிடைத்தபோது பெரு வீரர்கள் டென்மார்க் எல்லைக்குள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர். 57வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பாஸை, மிக எளிதில் கோல் போடும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார் கோய்வா.

தங்கள் பாக்ஸூக்குள் எதிரணி வீரர்கள் இருந்த நிலையில், தங்கள் பாக்ஸிலிருந்து பாஸ் செய்து டிஃபன்ஸ் செய்ய ஆளில்லாத பெருவின் பாக்ஸூக்குள் நுழைந்தது டென்மார்க். எரிக்சன் பந்தை பால்சனுக்கு பாஸ் செய்ய... பந்தைத் தடுக்க கோல் கீப்பர் முன்னே ஓடிவர... பத்து யார்டுக்கு முன்னிருந்து 59வது நிமிடத்தில் மிகக்கவனமாக ஷூட் செய்தார் பால்சன். கோல்! டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

டென்மார்க்கின் கோலால் பெரு தளர்ந்தது. அவர்களுக்கு நம்பிக்கை தேவைப்பட்டது. 63வது நிமிடத்தில் களமிறங்கினார் பாலோ குரேரோ. பெருவியர்கள் எழுப்பிய கூச்சலில் மைதானமே அதிர்ந்தது. ரசிகர்கள் ஒன்றுசேர்ந்து பாடத்தொடங்கினர். அதற்காகத்தான் காத்திருந்ததுபோல பெரு அணி உற்சாகமானது. தனது ஆட்டத்தில் வேகத்தைக் கூட்டியது. களத்திற்குள் வந்த ஒரே நிமிடத்தில் குரேரோவுக்கு பாஸ் கிடைக்க, ஹெட்டர் அடித்தார். ஆனால் கோல் தடுக்கப்பட்டது.

ஆட்டம் இரு அணிகளின் பக்கமும் மாறி மாறி சென்றுகொண்டிருந்தது. 79வது நிமிடத்தில் டென்மார்க்கின் பெனால்டி ஏரியாவில், டிஃபண்டர்களுக்கு மத்தியில் இருந்த குரேரோ தனக்குக் கிடைத்த பந்தை செம க்ளெவராக பின்பக்கமாக சற்றே குறைந்த வேகத்தில் உதைத்தார். கோல் கீப்பர் உள்பட யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. பந்து உருண்டு சென்றது... ஆனால் கோல் கம்பத்தை உரசிக்கொண்டு வெளியே. ஒரு கோல் போட்டாகிவிட்டது... இனி எப்படியாவது பெருவை கோல் எதுவும் போடாதவாறு டிஃபன்ஸ் செய்துவிட்டால் வெற்றி நிச்சயம் என்பதால் டென்மார்க் மிகக்கவனமாக விளையாடியது.

இரண்டாம் பாதி முடிந்தது. 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆட்டம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. டென்மார்க் அணியின் பால்சனுக்கு யெல்லோ கார்டு வழங்கப்பட்டு, கார்னர் கிக் வாய்ப்பு பெருவுக்குக் கிடைத்தது. ஆனால் அதையும் கோலாக்க முடியவில்லை. ஆட்டம் முடிந்தது. 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி, பெருவை வீழ்த்தி மூன்று புள்ளிகள் பெற்றது.

பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்ட கோய்வா அழத்தொடங்கினார். குரேரோ, ரோட்ரிகஸ் போன்றோரும் சோகத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறத்தொடங்கினர். பெரு ரசிகர்களுக்கும் சோகம் தான். ஆனால் தங்கள் அணியைத் தளரவிடவில்லை. அவர்களின் கால்பந்துக்கான பாடலைப் பாடினர். இதுதான் பெருவின் வெற்றி. ஒட்டுமொத்த கால்பந்தின் வெற்றி.